பொங்கலோ பொங்கல்!

 

pongal-festival1

 

இந்த இரவு நிசப்தமாயிருக்கிறது.
அவளும் குழந்தைகளும் தூங்கி விட்டனர்.
எங்கோ தொலைவில் கூர்க்காவின் விசில் சத்தமும்,
குளிரில் நடுங்கிய ஒரு தெரு நாயின் குரலும் கேட்கின்றன.

 

விடிந்தால் பொங்கல் என்று
ஃபேன் காற்றில் சலசலக்கும்
காலண்டர் சொல்கிறது.

 

என்னிலிருந்து
அம்மாவின் நடமாட்டமும்,
சமையலறையின் வெளிச்சமும்
கோலம் போடும் பக்கத்து வீட்டுப் பெண்களின் சிரிப்பும்
சுகமாய்ப் பிறந்து
என்னையே தாலாட்டுகின்றன

 

தூரத்தில்
குலவைச்சத்தம் கேட்கிறது
என் கிராமத்தில்
பொங்கல் பொங்கி விட்டது.

 

பொங்கலோ பொங்கல்!

கருத்துகள்

22 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. \\என்னிலிருந்து
    அம்மாவின் நடமாட்டமும்,
    சமையலறையின் வெளிச்சமும்
    கோலம் போடும் பக்கத்து வீட்டுப் பெண்களின் சிரிப்பும்
    சுகமாய்ப் பிறந்து
    என்னையே தாலாட்டுகின்றன \\

    ஆஹா, சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. எங்கு கோலங்கள் பார்த்தாலும்
    அம்மாவின் ஞாபகங்கள் பொங்கி வருகிறது.
    திரும்பிப் பார்த்தால் பால்யம் தவிர எல்லாமே
    மங்கலாக மட்டுமே தெரிகிறது.

    குக்கரில் பொங்கும் சக்கரைப்பொங்கலை விட
    புகை வாசனையோடு தின்ற நாட்கள்
    கூடுதல் இனிமையானது.

    உலகம் முழுவதும் பழைய நினைவோடு
    வாழும் தமிழருக்கு வாழ்த்துச் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
  3. எங்கு கோலங்கள் பார்த்தாலும்
    அம்மாவின் ஞாபகங்கள் பொங்கி வருகிறது.
    திரும்பிப் பார்த்தால் பால்யம் தவிர எல்லாமே
    மங்கலாக மட்டுமே தெரிகிறது.

    குக்கரில் பொங்கும் சக்கரைப்பொங்கலை விட
    புகை வாசனையோடு தின்ற நாட்கள்
    கூடுதல் இனிமையானது.

    உலகம் முழுவதும் பழைய நினைவோடு
    வாழும் தமிழருக்கு வாழ்த்துச் சொல்வோம்.

    பதிலளிநீக்கு
  4. கடைசி எட்டுவரிகள், ஒருவித ஏக்கத்தை தருகின்றன. காலம் மாறிக் கொண்டு இருக்கிறது.
    இன்னும் ஐம்பது வருடங்களுக்கு பின் நம் சந்ததியினர் எப்படி கவிதை எழுதுவார்கள்? இது
    மாதவராஜ்க்கு சவால் :-)

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. கவிதையைப்படித்தால் ஏக்கமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. bye gone is bye gone-Never to return.Always past is remembered as best thing.Really every present became past.So let bye gone be bye gone..Make the present as best one...R.Vimalavidya-Namakkal

    பதிலளிநீக்கு
  7. காமராஜ்!

    உண்மைதான்.

    //திரும்பிப் பார்த்தால் பால்யம் தவிர எல்லாமே
    மங்கலாக மட்டுமே தெரிகிறது.//

    ஆஹா.....!

    பதிலளிநீக்கு
  8. உஷா அவர்களுக்கு!

    சவால்தான்.
    முதலில் யோசிக்கவே தயக்கமாயிருக்கிறதே...

    பதிலளிநீக்கு
  9. சின்ன அம்மணி!

    ஏக்கத்தில் பிறந்த கவிதைதானே!

    பதிலளிநீக்கு
  10. விமலா வித்யா!

    ஒப்புக் கொள்கிறேன்.
    கடந்தகாலம் சுகமானதுதான்
    ஆனால் இழந்தது வலி நிறைந்ததாய் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  11. அன்பின் மாதவராஜ்

    இன்னும் இளமைக்கால, மகிழ்வான நிகழ்வுகளை நினைத்து, அசைபோட்டு ஆனந்தித்து, இந்நிகழ்வுகள் காலத்தின் கோலத்தினால், இத் தலைமுறை யினருக்கும் ஏன் நமக்கும் கூட கிட்டாத ஏக்கத்தினை, ஆதங்கத்தினை, வெளிப்படுத்துகின்ற கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறோம். காலம் மாறுகிறது. நாமும் மாற வேண்டாமா ? மாற்றங்கள் தேவை இல்லையா ? மாற்றங்கள் நம்மை மாற்றுகின்றன இல்லையா ?

    கிராமப்புரத்திலிருந்து நகர்ப்புரம் வந்த நாமே சலித்துக் கொண்டால் - அயலகம் சென்ற அன்பர்களின் கதி என்ன ஆவது ?

    கிராமங்களிலும் அன்றைய நிகழவுகள் அன்று நடந்த படியே நடக்கின்றனவா ? சிந்திக்க வேண்டும். காரணம் என்ன ? பல்வேறு காரணங்கள். ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  12. சீனா!

    மாற்றங்கள் தேவைதான்...
    அதற்காக மனிதன் இயந்திரமாக மாற முடியாதல்லவா...?
    வாழ்வின் மென்மையான, அற்புதமான கணங்களை நம்மைப் போல நம் சந்ததியினரும் பெற வேண்டும் என் ஆசைப்படுவது தப்பில்லையே?
    அதற்கான சூழலை நகரமய வாழ்விலும் கொண்டு வர சிந்திப்பதும் தப்பில்லையே?
    இதோ...காலையிலிருந்து டி.வி முன்னால் உட்கார்ந்திருக்கும் நம் குழந்தைகள் பிற்காலத்தில் பொங்கல் குறித்து சிந்திக்க, நினைத்துப் பார்க்க என்ன இருக்கும்?

    பதிலளிநீக்கு
  13. குளிரிலிருந்து மறைத்துக் கொள்ள கைகளை குறுக்கே கட்டியபடி, ஒவ்வொரு வீட்டு வாசல் கோலத்தையும் வேடிக்கை பார்த்துச் செல்வது மார்கழி மாசத்து காலை நேரங்களை ரசனைக்குறியதாய் மாற்றியிருந்தது. அதுவும் பொங்கல் தினத்தன்று ஸ்பெஷல் கோலங்கள் இன்னும் பெரியதாய் நிறைய வண்ணங்களுடன் காட்சித்தரும். ஆட்கள் நடமாட்டம் தொடங்கியபின்னும் வியர்த்த நெற்றிகளோடு கோலமிடும் பெண்களின் ஆர்வம் கண்டு அதிசயித்ததுண்டு. பெரிய கோலம் போடும் அளவுக்கு முற்றம் இல்லாதது குறித்து வீட்டின் அமைப்பு மேலும், நடவடிக்கை எடுக்காத அப்பாவின் மீதுமான அக்காவின் கோபங்கள் ஒவ்வொரு வருடமும் உண்டு.
    நகரங்களில் இரவிலேயே கோலம் போட்டு வைத்து விடுகிறார்கள். காலையில் பார்ப்பதற்கு பண்டிகை தினத்தில் பழைய சோற்றை சாப்பிடுவது போல் இருக்கிறது. தெருக்களில் வழக்கமாய் கிடக்கும் குப்பைகள்தான் கிடக்கிறது. கரும்புச் சக்கைகளால் குப்பையான தெருக்கள் தேடினால் கிடைக்குமோ என்னவோ.


    \\வாழ்வின் மென்மையான, அற்புதமான கணங்களை நம்மைப் போல நம் சந்ததியினரும் பெற வேண்டும் என் ஆசைப்படுவது தப்பில்லையே?
    அதற்கான சூழலை நகரமய வாழ்விலும் கொண்டு வர சிந்திப்பதும் தப்பில்லையே?\\ வாழ்கையை எப்படி வாழ்வது என்று கற்றுகொடுப்பதாய் கதையளந்து காசு பார்க்கும் ஸ்ரி...ஸ்ரி..சாமியார்க் கூட்டங்களை துரத்தியடித்து விட்டு, எத்தனை ரசனையானது வாழ்க்கை என்று எல்லோருக்கும் எடுத்து சொல்வதாய் இருக்க வேண்டும் நம் எழுத்துக்கள். இழப்பதும் தெரியாமல், இழப்பது எது என்றும் தெரியாமல் இழந்து கொண்டிருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லும் வேலையைச் செய்தே ஆக வேண்டும். மாற்றங்கள் மரபுகளை இன்னும் அழகானதாய் புதுமையானதாய் ஆக்க வேண்டியவை. மரபுகளை மொத்தமாய் உடைத்து போடுபவை அல்ல.
    சீனாவின் கடைசி இரண்டு பாராக்கள் முக்கியமானவை.

    பதிலளிநீக்கு
  14. anonymous!

    தங்கள் வருகைக்குக் கருத்துக்கும் நன்றி.

    //நகரங்களில் இரவிலேயே கோலம் போட்டு வைத்து விடுகிறார்கள். காலையில் பார்ப்பதற்கு பண்டிகை தினத்தில் பழைய சோற்றை சாப்பிடுவது போல் இருக்கிறது.//

    மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    // மாற்றங்கள் மரபுகளை இன்னும் அழகானதாய் புதுமையானதாய் ஆக்க வேண்டியவை. மரபுகளை மொத்தமாய் உடைத்து போடுபவை அல்ல.//

    உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. //நகரங்களில் இரவிலேயே கோலம் போட்டு வைத்து விடுகிறார்கள். காலையில் பார்ப்பதற்கு பண்டிகை தினத்தில் பழைய சோற்றை சாப்பிடுவது போல் இருக்கிறது.
    //மாதவராஜ்:மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//


    என்னால் இதை ஏற்றுக்கொள்ள‌ முடிய‌வில்லை. கோல‌ம் போடுவது ந‌ம‌து அழ‌கான‌ பார‌ம்ப‌ரிய‌ம். அதை பெண்க‌ள் இன்றும் (ந‌‌க‌ர‌மானாலும் ச‌ரி, கிராம‌மானாலும் ச‌ரி) ஆசையுட‌ன் ப‌ரிம‌ளிக்க‌ச் செய்து தான் வ‌ருகிறார்க‌ள். விடிய‌ற் காலையில் ப‌னியில் இருளில் கோல‌ம் போடுவ‌து ந‌க‌ர்ப் புற‌ங்க‌ளில் அவ்வ‌ள‌வு பாதுகாப்பு இல்லை. முன்னிர‌வில் ஓர‌ள‌வு சாலையிலும் ந‌ட‌மாட்ட‌ம் இருக்கும். வீடுக‌ளும் உற‌ங்குவ‌த‌ற்கு முன் கோல‌ம் போடுகிறார்க‌ள். அதில் என்ன‌ த‌வ‌று?

    பதிலளிநீக்கு
  17. ச‌க‌ட்டு மேனிக்கு எல்லா மாற்ற‌ங்க‌ளையும் குறை சொல்ல‌ வேண்டாம். அது ந‌ம்மை ப‌த்தாம்ப‌ச‌லிக‌ளாக‌த்தான் ஆக்கும். நம் பெண்களால் தான் பாரம்பரியம் ஓரளவேனும் வாழ்ந்து வருகிறது என்பதை மறக்க வேண்டாம்.
    நம் அம்மா உரலில் மாவு ஆட்டும் போது பின்னால் இருந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு ஆடியது கூடத்தான் நமக்கு இன்பமாக இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? நம் வீட்டுப் பெண்களை இம்சித்து அந்த விளையாட்டு நம் குழந்தைகளுக்குத் தேவை இல்லை அல்லவா? ஆனால் மஞ்சள் பூசிக் கொள்வதையும் பூத்தொடுத்தலையும் அவர்கள் மறக்காமல் இருக்கிறார்களா, அதுவே பெரிய விஷயம்.

    புதுமை ப‌ழ‌மை இர‌ண்டிலும் "குண‌ம் நாடி குற்ற‌ம் நாடி அவ‌ற்றுள் மிகை நாடி மிக்க‌ கொள்வோம்." ஏதாவ‌து பிழையாக‌ச் சொல்லி இருந்தால் பொறுத்த‌ருள்க‌.

    பதிலளிநீக்கு
  18. தீபா!

    கோபமும், கருத்துக்களும் நியாயமானவை.
    பாரம்பரியங்களை, மரபுகளை தொலைப்பதற்கு வீட்டிலுள்ள பெண்கள் காரணம் என்று நான் எங்கும் சொல்ல வில்லையே.
    எல்லோரும், முக்கியமாக ஆண்களும் சேர்ந்த இந்த அமைப்புத்தான் காரணம்.
    ஒருவித கையாலாகாத்தனத்தோடு அசை போட்ட நினைவுகள் தான் அவை.
    பண்டிகை என்பதும், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பதும் மனிதர்கள் தீவுகளாய் இருப்பதை உடைத்து
    சமூகத்தோடு இணைக்கிறது. அதை நாம் காப்பாற்றத்தான் வேண்டும்.
    அதை எப்படி, என்று ஆணும், பெண்ணும் எல்லோரும் சேர்ந்து சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.
    அதெல்லாம் சரி, அதென்ன..//நம் அம்மா உரலில் மாவு ஆட்டும் போது பின்னால் இருந்து கழுத்தைப் பிடித்துக் கொண்டு ஆடியது கூடத்தான் நமக்கு இன்பமாக இருந்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்க முடியுமா? நம் வீட்டுப் பெண்களை இம்சித்து அந்த விளையாட்டு நம் குழந்தைகளுக்குத் தேவை இல்லை அல்லவா? //

    இதை நான் ஒப்புக் கொள்ள முடியாது.
    குழந்தையின் விளையாட்டுக்கும் இப்படி அர்த்தம் காண்பது ரொம்பவே ஓவர்.

    பதிலளிநீக்கு
  19. தவிர்க்க முடியாத நியங்கள்.

    சொன்ன விதம் அழகு

    பதிலளிநீக்கு
  20. Uncle!

    "இரவில் கோலம் போட்டு வைத்து விடுகிறார்கள்" என்று ஆதங்கப்பட்ட அந்த நண்பருக்கு பதில் கூறும் விதமாகத்தான் எனது பின்னூட்டத்தை எழுதி இருந்தேன்.மேலும் காமராஜ் கூறிய படி புகை வாச‌னையுட‌ன் தின்ற‌ பொங்க‌ல் இனிமையாக‌ இருந்த‌து என்ப‌த‌ற்காக‌ அந்த‌ இன்ப‌ம் ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இப்போது புகை அடுப்பில் ச‌மைக்க‌ச் சொல்ல‌ முடியுமா? (அந்த‌க் க‌ருத்தை அப்ப‌ட்ட‌மாக‌ எதிர்க்காம‌ல் இன்னொரு எடுத்துக்காட்டின் மூல‌ம் சொல்ல‌ வ‌ந்தேன்!)

    நான் குழ‌ந்தையாக‌வே இருந்து யோசித்த‌தால் அம்மாக்கள் மீது ப‌ரிவு வ‌ந்த்து. நீங்க‌ள் தாய் ஸ்தான‌த்தில் இருந்து யோசித்துக் குழ‌ந்தைக‌ளை இப்ப‌டி சொல்லி விட்டாளே என்று வ‌ருந்தி இருக்கிறீர்க‌ள்! ச‌ரி தானே?!

    பதிலளிநீக்கு
  21. //திரும்பிப் பார்த்தால் பால்யம் தவிர எல்லாமே
    மங்கலாக மட்டுமே தெரிகிறது.//

    நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் யோசித்துப் பார்க்கும் போது விரும்பத்த்காத மாற்றங்கள் பல வந்தது போலவே மாற‌ வேண்டிய‌ எவ்வ‌ள‌வோ விஷ‌ய‌ங்க‌ள் இன்னும் மாறாமலேயும் இருக்கின்ற‌ன‌. அவ‌ற்றைப் ப‌ற்றியும் நாம் சிந்திக்க‌ வேண்டும். குறிப்பாக‌ப் பெண்க‌ள் நிலை ப‌ற்றி. இவ்வ‌ள‌வு தூர‌ம் பால்ய‌ கால‌ நினைவுக‌ளில் ம‌கிழும் நாம் அப்பொது ந‌ம் அன்னைய‌ர் ப‌ட்ட‌ க‌ஷ்ட‌ங்க‌ளை ந‌ம் ம‌னைவிய‌ர் ப‌ட‌க் கூடாது என்று நினைக்கிறோமா என்று சிந்தித்துப் பாருங்க‌ள். இத்துட‌ன் நிறுத்திக் கொள்கிறேன் எனென்றால் இந்த விவாதத்துக்கு இது க‌ள‌ம‌ல்ல‌. பாதை மாற‌ வேண்டி வ‌ந்த‌மைக்கு ம‌ன்னிக்க‌வும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!