சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 6ம் அத்தியாயம்

castro அக்டோபர் 18ம் தேதி கியூபாவில் ஒரு மிகப் பெரிய அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. மார்ட்டியின் நினைவுச்சின்னத்திற்கு கீழே மேடை போடப்பட்டிருந்தது. பிடல் காஸ்ட்ரோ, உதவி பிரதமர் ரால் காஸ்ட்ரோ, அதிபர் டோர்ட்டிகாஸ், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆர்மண்டோ ஹார்ட் மற்றும் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். கியூபாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

 

கியூப கவிஞர் நிக்கோலஸ் கியுல்லன் சேகுவாராவிற்கு அஞ்சலி செலுத்தி கவிதை வாசிக்க நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. பிளாசாவின் பெரிய திரையில், முக்கிய நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டிருந்த சேகுவாராவின் அசைவுகள் காண்பிக்கப்படுகின்றன. பின்னணியில் அவரது பேச்சு இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கொண்ட வியட்நாமின் வெற்றிகளை, இதர நாடுகளின் விடுதலை போராட்டங்களை அவர் பேசுகிறார். பத்திரிக்கைகளில் வந்த அவரைப் பற்றிய செய்திகள் காட்டப்படுகின்றன. முடிவில் சேகுவாராவின் முகம் மிக நெருக்கத்தில் காட்டப்படுகிறது. கூட்டம் உறைந்து போயிருக்கிறது. 21 குண்டுகள் முழங்க அந்த நிசப்தம் மேலும் அடர்த்தியாகிறது.

 

பிடல் காஸ்ட்ரோ எழுந்து வருகிறார். மைக்கின் முன் நின்று பேச ஆரம்பிக்கிறார்.

 

"1955ம் ஆண்டு, ஜூலையிலோ, ஆகஸ்டிலோ ஒருநாள் நாங்கள் சேவை சந்தித்தோம். பின்னாளில் நடந்த கிரான்மா பயணத்தில் தன்னையும் ஒருவராக அவர் அந்த ஒரு இரவில் இணைத்துக் கொண்டார். கப்பலோ, ஆயுதங்களோ, போராளிகளோ அப்போது இல்லை. இப்படித்தான் ரால் காஸ்ட்ரோவும் அவரும் நமது பயணத்தில் இணைந்த முதல் இருவராக இருந்தனர்.

 

12 வருடங்கள் ஓடிவிட்டன. போராட்டங்களும், வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஆண்டுகள். மதிப்புமிக்க, ஈடுசெய்ய முடியாத பல தோழர்களை மரணம் இந்த காலத்தில் நம்மிடமிருந்து பிரித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் புரட்சியால் வார்க்கப்பட்ட பல அற்புதமான தோழர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், நமது மக்களுக்கும் இடையில் நட்பும், பரிவும் மலர்ந்திருக்கிறது. அவைகளை வெளிப்படுத்துவது என்பது மிகவும் கஷ்டமானது.

 

இன்று நீங்களும், நானும் இங்கு அப்படியொரு உணர்வை வெளிப்படுத்தவே கூடியிருக்கிறோம். நம் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான, மிகவும் பிடித்தமான, மிகவும் பிரியமான மனிதர் அவர். நமது புரட்சியின் தோழர்களில் சந்தேகமே இல்லாமல் மகத்தானவர் அவர். வரலாற்றின் ஒளிபொருந்திய பக்கத்தை எழுதியிருக்கிற அந்த மனிதருக்கும், அவரோடு இறந்து போன சர்வதேச படையின் நாயகர்களுக்கும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.

 

எல்லோருக்கும் சேகுவாராவை உடனே பிடித்துவிடும். அவரது தனித்தன்மைகள் வெளிப்படும் முன்னரே எளிமையால், இயல்பான தன்மையால், தோழமையால், ஆளுமையால் பிடித்துவிடும். ஆரம்ப காலத்தில் நமது போராளிகளுக்கு மருத்துவராக இருந்தார். அப்படித்தான் நமது உறவு மலர்ந்தது. உணர்வுகள் பிறந்தன. விரைவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அவருக்குள் கருக்கொள்ள ஆரம்பித்தது. இதற்கு பக்குவம் பெற்றிருந்த அரசியல் பார்வை மட்டும் காரணமல்ல. கவுதமாலாவில் புரட்சியை நசுக்கிட ஏகாதிபத்தியம் படையை அனுப்பி தலையிட்டதை நேரடியாக பார்த்தவராக இருந்தார்.

 

அவரைப் போன்ற மனிதர்களுக்கு விவாதங்களே தேவையில்லை. அதே போன்று கியூபா இருந்தது என்பதே போதுமானது. அதே போன்று மனிதர்கள் கைகளில் ஆயுதந்தாங்கி போராட முன்வந்திருக்கிறார்கள் என்பதே போதுமானது. அந்த மனிதர்கள் புரட்சிகரமானவர்களாகவும், தேச பக்தர்களகவும் இருப்பதே போதுமானது. இப்படித்தான் அவர் 1955ல் நம்மோடு கியூபாவை நோக்கி புறப்பட்டார். பயணத்தின்போது அவருக்குத் தேவையான மருந்துகளைக் கூட அவர் எடுத்து வராததால் மிகவும் சிரமப்பட்டுப் போனார். மொத்த பயணத்தின் போதும் ஆஸ்துமாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். சிறு முணுமுணுப்பு கூட அதுகுறித்து அவரிடம் இல்லை.

 

வந்து சேர்ந்தோம். முதல் அணிவகுப்பை நடத்தினோம். பின்னடைவை சந்தித்தோம். தப்பிப்பிழைத்த நாங்கள் சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்தோம். அதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். வெற்றிகரமான முதல் சண்டை நடத்தப்பட்டது. அப்போது சே போர்வீரராக உருவெடுத்தார். இரண்டாவது வெற்றிகரமான சண்டை நடந்தது. சே என்னும் அந்த மருத்துவர் மிகச் சிறப்பான போர்வீரராகி இருந்தார். ஒரு தனிப்பட்ட மனிதரிடம் சகல திறமைகளும் வெளிப்பட்டன.

 

நமது வலிமை பெருகியது. மிக முக்கியத்துவம் பெற்ற சண்டைகள் நடந்தன. நிலைமை மாறியது. வந்த தகவல்கள் பல வகையிலும் தவறாக இருந்தன. கடற்கரையில் மிகுந்த ஆயுதபலத்தோடும், பாதுகாப்போடும் இருந்த எதிரியின் முகாமை ஒரு காலையில், நல்ல வெளிச்சத்தில் தாக்க திட்டமிட்டோம். எங்களுக்கு பின்னால், மிக அருகில் எதிரியின் துருப்புகள் இருந்தன. குழப்பமான நிலைமையில், நமது ஆட்கள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியாக வேண்டும். தோழர்.ஜான் அல்மைடா தேவையான ஆட்கள் இல்லாதபோதும், கடினமான பாதையை தனக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டார். தாக்குதலுக்கான படை இல்லாமல் எங்கள் திட்டம் ஆபத்திலிருந்தது.

 

மருத்துவராயிருந்த சே மூன்று அல்லது நான்கு ஆட்களை தனக்கு கேட்டார். அதில் ஒருவரிடம் தானியங்கி துப்பாக்கி இருந்தது. சில வினாடிகளில் தாக்குதலை ஆரம்பிக்க அந்த திசையில் சென்றார். காயம்பட்ட நமது தோழர்களை மட்டுமல்ல, எதிகளின் வீரர்களையும் அவர் கவனித்துக் கொண்டார். அனைத்து ஆயுதங்களையும் கைப்பற்றிய பிறகு எதிரிகளின் கண்காணிப்பிலிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. காயம்பட்டவர்களோடு யாராவது இருக்க வேண்டி இருந்தது. சே அங்கு சில வீரர்களோடு தங்கிக் கொண்டார். நன்றாக பார்த்துக் கொண்டார். அவர்களின் உயிரைக் காப்பாற்றி எங்களோடு பிறகு வந்து சேர்ந்து கொண்டார்.

 

அந்த சமயத்திலிருந்து பிரமாதமான, தகுதியான, தைரியம் மிகுந்த தலைவராக விளங்கினார். எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலும்,  நீ போய் இதை முடிக்க வேண்டும் என்று கேட்பதற்கு காத்திருக்க மாட்டார். உவேராவில் நடந்த சண்டையில் இதைச் செய்தார். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு எதிரிகள் திடீரென்று விமானத் தாக்குதல் நடத்திய போதும் இதைச் செய்து காட்டினார். தப்பி கொஞ்சதூரம் வந்த பிறகுதான் எங்களோடு இணைந்து போரிட்ட விவசாயத் தோழர்கள் தங்கள் குடும்பங்களைப் பார்க்க அனுமதி கேட்டு சென்றபோது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்று விட்டனர் என்பது தெரிந்தது. துப்பாக்கிகளை இழந்து விட்டோம் என்றே நினைத்தோம். கொஞ்சங்கூட தாமதிக்காமல் சே விமானங்களின் குண்டுமழைக்கு அடியில் தானாகவே ஒடிப்போய் துப்பாக்கிகளை திரும்பக் கொண்டு வந்துவிட்டார்.

 

இந்த மண்ணில் பிறக்காதபோதும் எங்களோடு இணைந்து போராடினார். தெளிந்த கருத்துக்களை கொண்டிருந்தார். கண்டத்தின் இதர பகுதிகளிலும் விடுதலை போராட்ட கனவுகளோடு இருந்தார். கொஞ்சங்கூட சுயநலமில்லாமல் இருந்தார். தொடர்ந்து தனது உயிரை பணயம் வைக்கிறவராக இருந்தார். இதனால் அவர் மீதான மதிப்பும் மரியாதையும் கூடிக்கொண்டே இருந்தது. இப்படித்தான் அவர் சியராவில் அமைக்கப்பட்ட நமது படையின் இரண்டாவது பிரிவுக்கு கமாண்டராக உயர்ந்தார். இப்படித்தான் அவரது புகழ் கூடியது. இதுவே போர் நடந்து கொண்டிருக்கும் போது அவரை உயர்ந்த பதவிகளில் கொண்டு போய் சேர்த்தது.

 

சே தோற்கடிக்க முடியாத வீரர். கமாண்டர். ஒரு இராணுவத்தின் பார்வையில் அவர் மிக தைரியமான மனிதர். அசாதாரணமாக தாக்குதல் நடத்துபவர். அவருடைய மரணத்திலிருந்து எதிரிகள் முடிவுகளை எடுக்க முயற்சிக்கின்றனர். சே போர்க்கலையில் சிறந்தவர். கொரில்லப்போரில் ஒரு நுட்பமான கலைஞர். இதை அவர் எத்தனையோ முறை காட்டி இருக்கிறார். மிக முக்கியமாக இரண்டு தடவைகள். ஒருமுறை கொஞ்சங்கூட பழக்கமில்லாத, சமவெளியான ஒரு இடத்தில் காமிலே என்னும் அற்புதமான தோழருடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான எதிரிப் படைவீரர்களை தாக்கி அழித்தார். லா விலாஸ் பிரதேசத்தில் நடந்த தாக்குதலின்போதும் அதை நிருபித்தார். டாங்கிகள், ஏராளமான ஆயுதங்களை வைத்திருந்த ஏழாயிரம் தரைப்படை வீரர்களை 300 படைவீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சாந்தா கிளாராவில் நடத்திய தாக்குதல் மகத்தானது.

 

இப்படிப்பட்ட ஒருவரின் வீர மரணத்திற்குப் பிறகு, அவரின் கொள்கைகள், கொரில்லக் கோட்பாடுகளின் மீது புழுதிவாரி இறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அந்தக் கலைஞர் வேண்டுமானால் இறந்திருக்கலாம். ஆனல் எந்த கலைக்காக தனது வாழ்க்கையையும் அறிவையும் அர்ப்பணித்துக் கொண்டாரோ, அது ஒரு போதும் அழிந்து போகாது.

 

இப்படிப்பட்ட கலைஞர் போரில் இறந்தார் என்பதில் என்ன விசித்திரம் இருக்கிறது. நமது புரட்சிகரமான போராட்டத்தில் இது போல பலமுறை தனது உயிருக்கு ஆபத்தான காரியங்களில் இறங்கி இருக்கிறார். அப்போதெல்லாம் இறக்காமல் இப்போது இறந்ததுதான் விசித்திரம். கியூப விடுதலைக்கான போராட்டத்தில், முக்கியத்துவமற்ற காரியங்களில் ஈடுபட்டு ஆபத்தை விலைக்கு வாங்க முன்வந்த பலசமயங்களில் அவரை தடுத்து நிறுத்த பெருமுயற்சி செய்ய வேண்டி இருந்தது. அவர் போராடிய எத்தனையோ போர்க்களங்களில் ஒன்றில் உயிரிழந்திருக்கிறார். எந்த சூழலில் இறந்தார் என்பதை அறிந்துகொள்ள நம்மிடம் சாட்சிகள் இல்லை. ஆனால் ஒன்றை திரும்பவும் சொல்கிறேன். உயிரைத் துச்சமாய் மதிக்கும் எல்லை மீறிய அவரது போர்க்குணமே காரணமாய் இருந்திருக்கும்.

 

இந்த இடத்தில்தான் அவருடன் ஒத்துப் போக முடியவில்லை. நமக்குத் தெரியும். அவருடைய வாழ்க்கை, அவரது அனுபவம், அவரது தலைமை, அவரது புகழ், அவரது வாழ்வில் முக்கியமான எல்லாம் மிகவும் மதிப்புமிக்கவை என்பது நமக்குத் தெரியும். அவர் அவரைப் பற்றி வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டிலும் அவை ஒப்பிடமுடியத அளவுக்கு உயர்ந்தவை. தனிமனிதர்களுக்கு வரலாற்றில் மிகச் சிறிய பாத்திரமே உள்ளது என்பதிலும், மனிதர்கள் வீழ்ந்துவிடும்போது அவர்களோடு சேர்ந்து அவர்களது கொள்கைகளும் வீழ்ந்து விடுகிறது என்பதில் நம்பிக்கை இல்லாததாலும், மனிதர்கள் வீழ்வதால் வரலாற்றின் தொடர்ச்சி முடிந்துவிடுவதில்லை என்பதையறிந்ததாலும் அவர் இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இது உண்மை. சந்தேகமே தேவையில்லை.

 

இது மனிதகுலத்தின் மீதிருக்கும் அவரது நம்பிக்கையை காட்டுகிறது. சிந்தனைகளில் இருந்த அவரது நம்பிக்கையை காட்டுகிறது. ஒருசில நாட்களுக்கு முன்பு கூறியபடி அவரது தலைமையின் கீழ், அவர் காட்டிய திசையில் வெற்றிகள் வந்து குவிய மனப்பூர்வமாக விரும்பினோம். அவருடைய அனுபவமும், தனித்திறமையும் அப்படிப்பட்டது. அவருடைய முன்னுதாரனத்தின் முழுமதிப்பினையும் நாம் பாராட்டுகிறோம். பூரணமான ஈடுபாட்டுடன் திகழும் அவரது முன்னுதாரணம், அவரைப் போன்ற மனிதர்களை சமூகத்திலிருந்து உதித்தெழச்செய்யும்.

 

அப்படிப்பட்ட அற்புத குணங்கள் எல்லாம் ஒரு மனிதனிடம் ஒருசேர நிறைந்திருப்பதை காணமுடியாது. தானாகவே அவைகளை தனக்குள் வளர்த்துக் கொண்ட ஒரு மனிதனை காணமுடியாது. அவருக்கு ஈடாக நடைமுறையில் தன்னை வளர்த்துக் கொள்வது எளிதான விஷயம் அல்ல. தன்னை போன்ற மனிதர்களை உருவாக்குவதற்கான ஆதர்ச புருஷர் அவர் என்பதையும் சொல்ல வேண்டும்.

 

சே ஒரு போராளி என்பதால் மட்டும் நாம் அவர் மீது மதிப்பு வைக்கவில்லை. அசாதாரண சாதனைகளை செய்து காட்டக் கூடியவர். ஏகாதிபத்தியத்தால் பயிற்சியளிக்கபட்டு, ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட ஒருநாட்டின் ஆளுங்கட்சியின் இராணுவத்தை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரை வைத்துக்கொண்டு எதிர்த்த செயலே அசாதாரணமானது. வரலாற்றின் பக்கங்களில் இவ்வளவு குறைவான தோழர்களை வைத்துக் கொண்டு, இவ்வளவு முக்கியமான காரியத்தில் ஈடுபட்ட ஒரு தலைவனை பார்க்க முடியாது. இது அவரது தன்னம்பிக்கையின் அடையாளம். மக்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். அவரது போராளிகளின் திறமைகள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளம். இதனை வரலாற்றின் பக்கங்களில் எங்கு தேடினாலும் கிடைக்காது.

 

அவர் வீழ்ந்து விட்டார். எதிரிகள் அவரது கருத்துக்களை தோல்வியுறச் செய்து விட்டதாக நம்புகிறார்கள். கொரில்லாக் கொள்கைகளை தோல்வியுறச் செய்துவிட்டதாக நம்புகிறார்கள். ஆயுதந்தாங்கிய புரட்சியின் கண்ணோட்டதை தோல்வியுறச் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். அவரது உடலை அழித்துவிட்டது மட்டுமே அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். யுத்தத்தில் அவர்கள் எதிர்பாராத ஒரு சாதகத்தை ஏற்படுத்திகொண்டது மட்டுமே மிச்சம். ஒரு யுத்தத்தில் இது நடக்கக் கூடியதே. ஆபத்தை துச்சமாக மதிக்கக்கூடிய சேகுவாராவின் மிதமிஞ்சிய போர்க்குணம் அவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவிசெய்து இருக்கும் என்பது தெரியவில்லை. நமது சுதந்திரப் போராட்டத்திலும் இது போல நடந்தது. டாஸ் ரியோசில் அவர்கள் அப்போஸ்டலஸைக் கொன்றனர். நூற்றுக்கணக்கான களங்களைக் கண்ட அண்டோனிய மாரியோவைக் கொன்றனர். நமது தலைவர்கள் பலரும் தேசபக்தர்களும் கொல்லப்பட்டனர். அதனால் கியூபாவின் சுதந்திரப் போராட்டம் பின்னடைந்து போகவில்லை. அதிர்ஷ்டத்தின் குண்டுகளால் கொன்றவர்களைக் காட்டிலும் அவர் பல்லாயிரம் மடங்கு மேன்மையானவர்.

 

இருந்தாலும் இத்தகைய கடுமையான பின்னடைவை புரட்சியாளர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வது? சே இருந்திருந்தால் அவர் என்ன ஆலோசனைகள் சொல்லியிருப்பார்? லத்தீன் அமெரிக்க ஒருமைப்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்றில் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். 'நமது போர்க்குரல் இன்னொரு மனிதனின் காதில் விழுமனால், நமது ஆயுதங்களை இன்னொரு கை எடுத்துக்கொள்ளுமானால், நமது இறுதிச்சடங்கில்  இயந்திரத்துப்பாக்கியின் உறுமல்களோடும் புதிய போர்க்குரல்களோடும் இன்னும் பலர் கலந்துகொள்வார்களேயானால் மரணம் திடீரென ஆச்சரியப்படுத்தும் போது கூட, நாம் அதை வரவேற்கலாம்". இந்த புரட்சியின் அறைகூவல் ஒரே ஒரு காதை மட்டும் அடையவில்லை. கோடிக்கணக்கான காதுகளை அடைந்திருக்கிறது. அவர் கைகளில் இருந்து விழுந்த ஆயுதத்தை எடுக்க ஒரே ஒரு கரம் மட்டும் நீளவில்லை. கோடிக்கணக்கான கரங்கள் நீண்டுள்ளன. புதிய தலைவர்கள் எழுந்து வருவார்கள்.

 

அவரது அறைகூவலுக்கு செவிசாய்த்த சாதாரண மக்களிடம் இருந்து புதிய தலைவர்கள் வருவார்கள். உடனேயோ அல்லது பிறகோ ஆயுதந்தாங்கி போராடப் போகிற கோடிக்கணக்கான கரங்களுக்கு சொந்தக்காரர்களிடமிருந்து அந்த தலைவர்கள் எழுந்து வருவார்கள். புரட்சியின் போராட்டத்தில் சில பின்னடைவுகளோ, மரணமோ ஏற்படும் என்பதை நாங்கள் உணராமல் இல்லை. சே ஆயுதத்தை மீண்டும் எடுத்த போது உடனடி வெற்றி குறித்து சிந்திக்கவில்லை. ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒரு வேகமான வெற்றி குறித்து அவர் சிந்திக்கவில்லை. ஒரு அனுபவம் வாய்ந்த போராளியாக ஐந்து, பத்து, பதினைந்து, இருபது வருடங்களுக்கு தொடர்ந்து போராடுகிற பயிற்சி பெற்றிருந்தார். அவரது வாழ்க்கை முழுவதுமே போராடுவதற்கு தயாராக இருந்தார்.

 

அதிர்ஷ்டத்தை நம்புபவர்கள் கூட அவரது அனுபவம் மற்றும் தலைமையின் திறமையோடு அதைப் பொருத்திப் பார்க்க முடியமல் போவார்கள். சேவை நினைக்கும்போது நமக்கு அவரது ராணுவத்திறமை முதலில் முன்னுக்கு வருவதில்லை. யுத்த நடவடிக்கை ஒரு வழிமுறையே. அது முடிவல்ல. போராளிகளுக்கு யுத்த நடவடிக்கை ஒரு சாதனம். முக்கியமானது புரட்சி, புரட்சிகர கருத்துக்கள், புரட்சிகர உணர்வு மற்றும்  புரட்சிகர பண்புகள். இந்த விஷயங்களில் நாம் எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம் என்பதை உணரமுடிகிறது. அவருக்குள் ஒரு செயல்வீரனும், சிந்தனாவாதியும் நிறைந்திருந்தார்கள்.

 

முழுமையான நேர்மை கொண்டவராக, ஒழுக்க நெறிகளை மதிப்பவராக, மிகவும் உண்மையுள்ளவராக இருந்தார். அப்பழுக்கற்ற நடத்தை கொண்டவராக விளங்கினார். புரட்சிக்காரர் இப்படித்தான் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டி விட்டார். மனிதர்கள் இறக்கும் போது அவர்களைப் பற்றியும், அவர்களது சிறப்புகள் பற்றியும் பேசப்படுகிறது,. ஆனால் சேவைப் போல ஒரு மனிதரிடம் இருக்கும் நற்பண்புகளைப் பற்றி துல்லியமாக பேச முடியாது.

 

அவர் வேறோரு குணாம்சமும் பெற்றிருந்தார். அது அவரது மென்மையான இதயம். அசாதாரண மனித நேயம் பெற்றவராகவும், மிக நுட்பமான உணர்வுகள் கொண்டவராகவும் இருந்தார். இதனால்தான் அவரது வாழ்வைப்பற்றி கூறும் போது, எஃகு போன்ற உறுதிமிக்க செயல்திறனும் இது போன்ற அற்புதமான பண்புகளும், சிந்தனைகளும் கலந்த மிக அரிதான மனிதராக நாம் பார்க்கிறோம். வருங்காலத் தலைமுறையினருக்கு அவரது அனுபவத்தை மட்டும் விட்டுச் செல்லாமல் போராளியின் அறிவையும், புத்திசாலியின் பணிகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். மொழியின் மீதுள்ள ஆளுமையோடு எழுதி இருக்கிறார். சிந்தனையின் ஆழம் ஈர்க்கக் கூடியது. போர் குறித்த அவரது வர்ணனைகள் ஒப்பிட முடியாதவை. எதையும் ஒரு தீவீரத்தன்மை இல்லாமலும் ஆழம் இல்லாமலும் எழுதியதில்லை. புரட்சிகர சிந்தனைகளுக்கு அவரது பல எழுத்துக்கள் மிகச்சிறந்த ஆவணங்களாக இருக்கும். அவர் விட்டுச் சென்றிருக்கிற எண்ணற்ற நினைவுகளும், கதைகளும் அவரது இந்த முயற்சி இல்லாவிட்டால் அழிந்து போயிருக்கும்.

 

இந்த மண்ணுக்காக அவர் நேரங் காலம் இல்லாமல் உழைத்திருக்கிறார். ஒரு நாள் கூட அவர் ஒய்வு எடுத்துக் கொண்டது கிடையாது. பல பொறுப்புக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. தேசீய வங்கியின்ன் தலைவர். திட்டக்குழுவின் இயக்குனர். தொழில்துறை அமைச்சர். ராணுவ கமாண்டர். அதிகார பூர்வமான அரசியல் மற்றும் பொருளாதார குழுக்களின் தலைவர். எந்த வேலை கொடுத்தாலும் அதை மிக உறுதியோடு செய்யும் அசாத்திய அறிவாற்றல் அவருக்கு இருந்தது. பல சர்வதேச மாநாடுகளில் நமது தேசத்தை மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.

 

அவரது அறையின் ஜன்னல் வழியே பார்த்தால் இரவு முழுவதும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதையும், அவர் வேலை செய்து கொண்டிருப்பதையும், படித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கமுடியும். அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு மாணவனைப் போல அணுகியதால் களைப்படையாத படிப்பாளியாக இருந்தார். கற்றுக்கொள்ள இருந்த தாகம் தணிக்க முடியாததாய் இருந்ததால் அவர் தனது தூக்கத்தில் இருந்து நேரத்தை திருடி படித்தார். வேலை இல்லாத நாட்களிலும் தானாக முன்வந்து வேறு வேலைகள் செய்வதற்கு பயன்படுத்தி கொண்டார். பலருக்கு தூண்டு கோலாக இருந்தார். நமது மக்கள் மேலும் மேலும் முயற்சி செய்யும் செயல்பாடுகளை தூண்டி விட்டார்.

 

கியூபா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அவரது அரசியல் மற்றும், புரட்சிகர சிந்தனைகள் என்றென்றும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இந்த கொரில்லாப் போராளியை கொன்று விட்டதாக அவர்கள் எக்காளமிடுகிறார்கள். ஆனால் ஏகாதிபத்திய வாதிகளுக்குத் தெரியாது. அல்லது தெரியாதது போல நடிக்கிறார்கள். அப்போராளியின் பல முகங்களில் ஒன்றுதான் அந்த செயல்வீரனின் முகம். ஆனால் அந்த செயல்திறனுள்ள மனிதனை இழந்து விட்டதால் மட்டும் துயரம் கொள்ளவில்லை. உயர் நடத்தை கொண்ட ஒரு மனிதனை இழந்து நிற்கிறோம். உன்னத மனித உணர்வுகள் கொண்ட மனிதனை இழந்து நிற்கிரோம். இறக்கும் போது அவருக்கு 39 வயதுதான் என்கிற நினைப்பால் துயரம் கொள்கிறோம். இன்னும் அவரிடம் இருந்து நாம் நிறைய பெற்றிருக்க முடியுமே என்ற ஏக்கத்தால் துயரம் கொள்கிறோம்.

 

துளிகூட வெட்கமில்லாதவர்கள் என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. மோதலின் போது தீவீரமாக காயமடைந்தபின் அவரை கொலை செய்துள்ளதை அவர்கள் வெட்கமின்றி ஒப்புக்கொண்டுள்ளனர். கடுமையாக காயமடைந்திருக்கும் ஒரு புரட்சிக்கைதியை சுட்டுக் கொல்ல ஒரு கூலிப்பட்டாளத்திற்கு, பொறுக்கிகளுக்கு உரிமை இருக்கிறது என்பது போல அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். சேவின் வழக்கு உலகையே உலுக்கி விடும் என்பதையும், அவரை சிறைக்குள் அடைப்பது இயலாத காரியம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டு விட்டனர். அவரது இறந்த உடலைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. உண்மையோ பொய்யோ உடலை அடக்கம் செய்து விட்டதாக தெரிவிக்கின்றனர். உயிரை அழிப்பதன் மூலம் அவரது கொள்கைகளை அழித்துவிட முடியாது என்கிற பயம் அவர்களுக்கு இருந்திருக்கிறது.

 

சே வேறு எதற்காகவும் இறக்கவில்லை. இந்த கண்டத்தில் உள்ள நசுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களுக்காக இறந்துவிட்டார். இப்பூவுகில் குடியுரிமை இல்லாதவர்களுக்காகவும், ஏழைகளுக்காவும் இறந்து விட்டார். சுயநலமற்று போராடி இறந்துவிட்டார் என்பதை அவரது எதிரிகளே ஒப்புக்கொள்வார்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட மனிதர்கள் வரலாற்றில் ஒவ்வொருநாளும் உயர்ந்து கொண்டே போகிறார்கள். மக்களின் இதயங்களில் ஆழமாக பதிந்து கொண்டே இருக்கிறார்கள். அவரது மரணம் என்னும் விதையிலிருந்து ஏராளமான மனிதர்கள் தோன்றி அவரது வழியை பின்பற்றுவார்கள். இந்த கண்டத்தின் புரட்சிகர நடவடிக்கை இந்த பின்னடைவிலிருந்து மீண்டு எழும்.

 

அவரது புதிய எழுத்துக்களை நாம் மீண்டும் பார்க்க முடியாதுதான். அவரது குரலை நாம் மீண்டும் கேட்க முடியாதுதான். அனால் அவர் இந்த உலகத்திற்கு மாபெரும் செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர சிந்தனைகளை விட்டுச் சென்றுள்ளார். புரட்சிகர குணங்களை விட்டுச் சென்றுள்ளார். அவரையே ஒரு உதாரணமாக விட்டுச் சென்றுள்ளார்.

 

நாம் நமது போராளிகள், நமது மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் தயக்கமின்றி சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது எதிர்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் அவர்கள் சே போல இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது குழந்தைகள் எப்படிப்பட்ட கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்று சொல்ல விரும்பினால் சேவின் ஆன்மாவைப் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வோம். நமது காலத்தை சார்ந்திருக்கிற மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால், வருங்காலத்தைச் சார்ந்த மனிதனின் முன்மாதிரி வேண்டுமென்றால் நான்  அப்பழுக்கற்ற அம்மனிதன் சே என்று என் இதயத்தின் ஆழத்தில் இருந்து சொல்வேன்.

 

புரட்சிகர அர்ப்பணிப்பை, புரட்சிகர போராட்டத்தை, புரட்சிகர செயல்பாட்டை சே மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். மார்க்சீய-லெனிய கோட்பாட்டை அதன் புத்துணர்ச்சி மிக்க, மிகத் தூய்மையான நிலைக்கு எடுத்துச் சென்று விட்டார். நமது காலத்தில் வேறு யாரும் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு அவைகளை எடுத்துச் செல்லவில்லை. வருங்காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியின் உதாரணம் பற்றி பேசும் போது மற்ற எல்லோரையும் விஞ்சி அங்கே சே இருப்பார். தேசீயக் கொடிகள், நடுநிலையற்ற தன்மை, குறுகிய தேசீய வெறி ஆகியவை அவரது இதயத்திலிருந்தும், எண்ணங்களிலிருந்தும் அடியோடு மறைந்து விட்டிருந்தன.

 

போராட்டத்தில் காயமடைந்து இந்த மண்ணில் அவர் இரத்தம் கலந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக போராடி பொலிவிய மண்ணில் அவர் இரத்தம் கலந்திருக்கிறது. அந்த இரத்தம் லத்தீன் அமெரிக்க மக்களுக்காக சிந்தப்பட்டது. வியட்நாமில் உள்ள மக்களுக்காக சிந்தப்பட்டது. தோழர்களே, எதிர்காலத்தை உறுதியோடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்க வேண்டும். சேவின் உதாரணம் நமக்கு உத்வேகமளிக்கிறது. எதிரியை பூண்டோடு அழிப்பதற்கான உத்வேகம். சர்வதேச பார்வையை வளர்த்துக் கொள்வதற்கான உத்வேகம்.

 

மனதில் பதிந்து போன இந்த நிகழ்வின் முடிவில், அர்ப்பணிப்பும் கட்டுப்பாடும் மிக்கதால் மகத்துவம் பெற்ற மாபெரும் மனிதக் கூட்டத்தின் அஞ்சலிக்கு பிறகு இந்த இரவு, நாம் உணர்வு பூர்வமானவர்கள் என்று காட்டி நிற்கிறது. போரில் இறந்து போன ஒரு தைரிய புருஷனுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி என்று உணர்ந்த பாராட்டுக்குரிய மனிதர்கள் என்று காட்டி நிற்கிறது. தங்களுக்கு பணிபுரிந்தவனுக்கு அஞ்சலி செலுத்துவது எப்படி என்று உணர்ந்த மக்கள் இவர்கள் என்று காட்டி நிற்கிறது. புரட்சிகர போராட்டத்தை எப்படி இந்த மனிதர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டி நிற்கிறது. புரட்சிகர கொள்கையை, பதாகைகளை எப்படி தூக்கி பிடிப்பது எனபதை அறிந்த மக்கள் இவர்கள் என்று காட்டி நிற்கிறது. இன்று இந்த அஞ்சலியில் நாம் நமது சிந்தனைகளை உயர்த்திக் கொள்வோம். நம்பிக்கையோடு, முழு நம்பிக்கையோடு இறுதி வெற்றி குறித்து சேவிடமும் அவரோடு சேர்ந்து இறந்து போன நாயகர்களிடமும் சொல்வோம். எப்போதும் வெற்றி நோக்கியே நமது பயணம். தாய்நாடு அல்லது வீர மரணம். வெற்றி நமதே.

 

 

காஸ்ட்ரோ வரலாற்றுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

 

che 05 மற்றவர்கள் நிறைய பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பொலிவியாவில் கொரில்லாப் போர் தோற்றதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன. சேகுவாராவே தனது பொலிவிய நாட்குறிப்புகளில் குறித்து வைத்திருப்பதையும் காட்டுகிறார்கள். விவசாயிகள் மெல்ல மெல்லத்தான் எழுச்சி பெறுவார்கள். அவர்கள் ஆதரவு பெறுவதற்கு நாளாகலாம். நிதானமாக காத்திருக்க வேண்டும் என்கிறார். அதற்குள் ஏகாதிபத்தியம் அவரை தீர்த்துவிட்டிருந்தது. பொலிவிய கம்யூனிச கட்சியில் உறுதியான தலைவர்கள் இல்லாமல் போனதால் அவர்களுடைய ஆதரவும் பெறமுடியாமல் போய்விட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

 

சேகுவாராவின் மரணத்தின் விளைவுகளும் பலவிதமான பேசப்பட்டன. "ஆறு மாதத்துக்கும் குறைவான  இந்தக் கொரில்லாப் போரினால், ஒரு மனிதனின் தோல்வியால் லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே மார்க்சீய புரட்சிகர போராட்டம் பலவீனமடைந்துவிட்டது" என்றனர்."அரசியல் ரீதியான தீர்வை விட்டு விட்டு வன்முறையையே தீர்வாக்கிக்கொண்டார். அதன் தோல்வி" என்றனர். இருந்தபோதிலும் அவர்கள் அனைவருமே சேகுவாராவின் மரணம் மிகப்பெரிய பின்னடைவு என்பதை ஒப்புக் கொண்டிருந்தனர்.

 

பாரிஸில், ஜெர்மனியில், பிரேசிலில், ஆப்பிரிக்காவில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் என உலகம் முழுவதும் சேகுவாராவின்  படத்தோடு அமெரிக்க தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பரித்த இளைஞர்களின் குரல்கள் அந்த மனிதர் எவ்வளவு மகத்தான வெற்றியடைந்திருக்கிறார் என்பதை பறைசாற்றியது. சேகுவாரா இறக்கவில்லை என்றார்கள் அவர்கள். காஸ்ட்ரோ சேகுவாராவுக்கு அஞ்சலி மட்டும் செலுத்தவில்லை. எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தது போல சேகுவாரவை தனியாக விட்டுவிடாமல் எல்லாவற்றுக்கும் பொறுப்பெற்றுக் கொள்கிறார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் உறுதி செய்து கொள்கிறார். உலகமே காஸ்ட்ரோவின் இந்த அஞ்சலியுரையை கேட்டது. சி.ஐ.ஏவும் கேட்டு தங்கள் குறிப்புகளில் பதிவு செய்து கொள்கிறது. மனிதகுல எதிரிகள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.

 

(இன்னும் இருக்கிறது....)

 

இ து வ ரை....

முன்னுரை         அத்தியாயம் 1     2     3      4      5

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!