சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 7ம் அத்தியாயம்

che07 அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ தனது அடுத்த ஆவணத்தை தயாரிக்கிறது. சேகுவாராவின் மரணம் லத்தீன் அமெரிக்காவில் என்ன விளவுகள் ஏற்படுத்தும்  என்று எழுதுகிறார்கள். அங்குள்ள ஒவ்வொரு நாடு குறித்தும் அலசுகிறார்கள். வரலாற்றை தாங்களே எழுத வேண்டும் என்கிற வெறி அவர்களுக்கு இருப்பது  தெரிகிறது.

 

இறந்த பிறகும் சே அவர்களை படுத்துகிற பாடு எழுதாமலேயே விளங்குகிறது. அவர்களால் வெற்றியை கொண்டாட முடியாத தவிப்பை  காட்டுகிறது. சேவின் மரணம் வரலாற்றின் எந்தப் புள்ளியில் நிகழ்ந்திருக்கிறது என்பதை மிகச்சரியாக உணர்த்துவதோடு ஏகாதிபத்தியத்திற்கும், சோஷலிச  முகாமுக்கும் நடக்கிற யுத்தத்தின் எதிர்கால திசையைத் தேடுகிறது.

 

 

cia சேகுவாரவின் மரணம்- லத்தீன் அமெரிக்காவிற்கான அர்த்தம்

 

சேகுவாராவின் மரணம் பொலிவியாவில் கொரில்லா இயக்கத்தை முறித்து விட்டது. சொல்லப்போனால் மரண அடி கொடுத்திருக்கிறது. ஏறத்தாழ அனைத்து  லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வன்முறை மூலம் புரட்சி நடத்த வேண்டும் என்னும் பிடல் காஸ்ட்ரோவின் நம்பிக்கைகளுக்கு கடுமையான பின்னடைவை  ஏற்படுத்தி உள்ளது. இந்த உலகத்தில் உள்ள மிக பலவீனமான ஒரு இராணுவத்திடம், கியூப புரட்சியின் தலைசிறந்த தந்திரக்காரர் தோற்று போயிருப்பது  கியூபாவைப் போன்று கொரில்லாப் போர் தொடுக்க வேண்டுமென்று தயாராகி வரும் கம்யூனிஸ்டுகளையும், மற்றவர்களையும் கொஞ்ச காலத்திற்காவது  சோர்ந்து போக வைத்திருக்கும். காஸ்ட்ரோவும் அவரை பின்பற்றுபவர்களும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கலகக்காரர்களை ஆதரிப்பதற்கு சிறிதளவு  வாய்ப்புகளே உள்ளன. ஒருவேளை தந்திரங்களில் சில மாறுதல்கள் செய்து நடத்தலாம்.

 

பிடல் காஸ்ட்ரோவின் வலது கரமாக விளங்கிய சேகுவாரா 1965ல் மாயமாய் மறைந்து போனார். அவர் நோய்வாய்ப்பட்டு விட்டதாகவும், காஸ்ட்ரோவால்  கொல்லப்பட்டு விட்டதாகவும், டொமினிக் குடியரசில் இருப்பதாகவும், வியட்நாமிலோ, காங்கோவிலோ இருப்பதாகவும் வதந்திகள் உலாவின. கடைசியாக  காஸ்ட்ரோ 1965 அக்டோபரில் அறிவித்தார். சேகுவாரா கியூபாவின் குடியுரிமையை துறந்து விட்டதாகவும், அவர் மற்ற நாடுகளில் புரட்சிகர நடவடிக்கைகளில்  ஈடுபடப் போவதாகவும் சொன்னார். அவர் எங்கேயிருக்கிறார் என்பது குறித்து வதந்திகள் தொடர்ந்தன. மிகச் சமீப காலம் வரைக்கும் அவர் உயிருடன் இருந்தார்  என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது.

 

காஸ்ட்ரோ வன்முறை புரட்சியில் தனது தொனியை குறைத்துக்கொண்ட நேரத்தில், சோவியத் ஆதரவான லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளோடு  முரண்பாடுகளை சரிசெய்ய முயற்சிக்கின்ற நேரத்தில் 1965 மார்ச்சில் சேகுவாரா காணாமல் போனார். ஆனால் சமீபத்தில் காஸ்ட்ரோ கியூபா புரட்சிக்கு அவரும்  சேகுவாராவும் சேர்ந்து வகுத்த புரட்சி குறித்த பார்வையை திரும்பவும் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார். 1966 ஜனவரியில் நடந்த மூன்று  கண்டங்களுக்கான மாநாட்டில் தனது இந்த பார்வையை மேலும் தீவீரமாக்கிக் கொண்டு பிரெஞ்ச் மார்க்சீய அறிவுஜீவியும், காஸ்ட்ரோவின் கொள்கையை  ஆதரிப்பவருமான  ஜூலியஸ் தீப்ரே (இப்போது பொலிவிய விசாரணையில் இருக்கிறார்)  எழுதிய 'புரட்சியின் புரட்சி' என்னும் புத்தகத்தை தூக்கி பிடித்து  பேசியிருக்கிறார். 'அமைதியான வழியில் அதிகாரம்' என்னும் பழைய கம்யூனிஸ்டுகளை, குறிப்பாக வெனிசுலா கம்யுனிஸ்ட் கட்சியையும், மற்ற சோவியத்  சார்புடையவர்களையும் வெறுத்து ஒதுக்கிய காஸ்ட்ரோவும் தீப்ரேவும் லத்தீன் அமெரிக்காவில் இப்போது கலகம் செய்வதற்கு தகுந்த நேரம் என்று சொல்லி  இருக்கின்றனர். நகரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியைவிட மற்ற குழுக்களை விட கிராமப்புறத்து கொரில்லா இயக்கங்களே புரட்சிக்கான தலைமையிடங்களாக  இருக்க முடியுமென்று அழுத்தத்தோடு சொல்லி இருக்கிறார்கள். தத்துவத்தை செயல்களே அழைத்துச் செல்ல முடியுமென்று அறிவித்திருக்கிறார்கள். மார்க்சீய  லெனினிய கட்சிக்கு கொரில்லா இயக்கமே மையப்புள்ளி என்றும் அதுதான் வெற்றியின் விளைவுக்கு இட்டுச் செல்லக்கூடிய புறச்சூழலை உருவாக்கும் எனவும்  விவசாயிகளை தன்பக்கம் இழுக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

 

ஏபரல் 17ம் தேதி காஸ்ட்ரோ- சேகுவாரா-தீப்ரே கருத்துக்களை முன்வைக்கிற சேகுவாராவின் கட்டுரை ஒன்றை கியூப பத்திரிக்கைகள் வெளியிட்டு  பிரமாதப்படுத்தி இருக்கின்றன. இரண்டு நாள் கழித்து காஸ்ட்ரோ அதை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.              லத்தீன் அமெரிக்க ஒற்றுமைக்கான முதல்  மாநாட்டின் சிறப்பம்சமானது மரபார்ந்த கம்யூனிஸ்டுகளின் மறுப்புதான். இந்தக் கோடையில் ஹவானாவில் நடைபெற்ற அந்த மாநாட்டில் காஸ்ட்ரோவின்  கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. ஒருசில லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமே தற்சமயம் வன்முறை புரட்சி நடத்துவதற்கான சூழல்  இருக்கிறது என்றனர். அந்தந்த நாட்டில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகளே அவர்கள் நாட்டில் எந்த கொள்கைகளை, எந்த தந்திரங்களை கையாளுவது என்று  தீர்மானிக்க வேண்டும் என்றும் இதில் கியூபாவோ, மற்றவர்களோ தலையிடக் கூடாது என்றும் வாதிட்டனர். சேகுவாரா இல்லாமலேயே, கெரவத் தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மாநாடு பிரதிநிதிகளிடையே இணக்கம் இருப்பதுபோல வெளியே காட்சியளித்தாலும் உள்ளுக்குள் மாஸ்கோ அபிமானிகளுக்கும்,  உடனடியாக புரட்சியை ஏற்படுத்த நினைத்தவர்களுக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்தி இருக்கிறது. பொலிவியாவில் ஏற்பட்ட கொரில்லாக்களின்  நடவடிக்கைகள் 1967 மார்ச் மாதத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. லத்தீன் அமெரிக்காவின் கொரில்லா இயக்கங்களின் மீது ஒரு சர்வதேச ஆர்வத்தை  ஏற்படுத்தியது. கவுதாமாலா கொரில்லாக்கள் விடுதலைக்கான போராட்டத்திற்கு  தயாரானதாய் தெரியவில்லை. வெனிசுலாவிலும், கொலம்பியாவிலுமுள்ள  கொரில்லா சக்திகள் அமைதியாக இருந்தார்கள். புதிய இந்த கொரில்லா நடவடிக்கைகள் நம்பிக்கையளிப்பதாக இருந்தது. காஸ்ட்ரோவோடும், லத்தீன்  அமெரிக்காவில் உள்ள அதிதீவீர கம்யூனிஸ்டுகளோடு இணக்கம் ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியாக மரபார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் பொலிவிய  கொரில்லாக்களை ஆதரித்தனர். தீப்ரே பொலிவிய இராணுவத்திடம் பிடிபட்டதும், சேகுவாராதான் கொரில்லாக்களை இயக்குகிறார் என்று அவர் சொல்லியதும்  நிறைய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரில்லாக்களோடு நடந்த ஆரம்ப சண்டைகள் போதிய பயிற்சியளிக்கப்படாத, மோசமான ஆயுதங்களுடைய பொலிவிய  இராணுவத்திற்கு பெரும் சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்தி இருந்தது. கைவிரல்களால் எண்ணிவிடக்கூடிய அளவுக்கு மிகச்சிலரே இருந்த  கொரில்லாக்களிடம் இராணுவம் தோற்றுப் போனது மொத்த பொலிவிய அரசையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பரிதாபமாக அமெரிக்காவின் உதவியை கேட்டது.  பக்கத்து நாடுகள் தாங்கள் என்ன நடவடிக்கை எடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். கொரில்லாக்கள் தவறு செய்யாதவர்களாகவும்,  வெல்லமுடியாதவர்களாகவும் இருந்தார்கள். ஜூலை மாதத்தில் கொரில்லாக் குழுவிலிருந்த மற்றும் அவர்களோடு தொடர்புடைய தீப்ரே மற்றும் சிலர்  பிடிபட்டனர். அவர்கள் சொல்லிய வாக்குமூலத்தாலும், பொலிவிய அரசுக்கு விசுவாசமாக இருந்த விவசாயிகளின் ஒத்துழைப்பாலும் இராணுவம்  கொரில்லாக்களுக்கு சில சேதங்களை ஏற்படுத்த முடிந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இராணுவத்தின் திடீர் தாக்குதலால் கொரில்லாக்களின் ரகசிய முகாம் ஒன்று  முற்றிலுமாக அழிக்கப்பட்டது. அக்டோபர் 8ம் தேதி கொரில்லாக்களின் முக்கிய பிரிவோடு நடந்த வெற்றிகரமான சண்டையில் இராணுவம் சேகுவாராவை  கொன்று தன்னை தக்க வைத்துக் கொண்டது.

 

சேகுவாராவின் மரணம் பொலிவிய அதிபர் பாரியண்டோஸுக்கு  முக்கியமான சாதனையாகும். அரசுக்கு கொரில்லா இயக்கம் விடுத்த மிரட்டலின் முடிவாக  இருக்கலாம். பாரியண்டோஸுக்கு மிக உறுதுணையாக இருக்கிற, ரொம்ப காலமாய் துவண்டு கிடந்த இராணுவத்தின் தன்னம்பிக்கையையும், வலிமையையும்  இது அதிகரிக்கும். ஆனால் கொரில்லாக்களுக்கு எதிராக நேரடியாக ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலருக்கு அரசியல் அபிலாஷைகள் ஏற்பட்டு அவர்களே  குடியரசின் காப்பாளர்களாக தங்களை முன்னிறுத்தவும் கூடும்.

 

உணர்வுகளை உடனடியாக ஏற்படுத்துகிற அளவுக்கு கியூபாவின் உள்நாட்டு பத்திரிக்கைகளில் சேகுவாராவின் மரணத்தைப் பற்றி அதிகமாக சொல்ல  முடியவில்லை. ஹவானா மக்களின் பொதுவான மனோநிலை புரிகிறது. வீரமரணம் அடைந்த சேகுவாரா புரட்சிக்காரர்களின் உதாரண புருஷராக  கருதப்படுகிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகெங்கும் இருக்கிற எதுவும் செய்யாத, பழைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளுக்கு வியாக்கியானம்  தருகிற, வறட்டுத்தனமான புரட்சிக்காரர்களுக்கு சேகுவாரா முற்றிலும் மாறுபட்டு காட்சியளிக்கக் கூடும். காஸ்ட்ரோ-சேகுவாரா கொள்கைகள் தூக்கிப்  பிடிக்கப்படும். ஆயுதந்தாங்கிய போராட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சேகுவாராவின் மரணத்திற்கு வழக்கம்போல அமெரிக்காவின்மீதும்  சி.ஐ.ஏவின் மீதும் பழி சுமத்தப்படும். வீழ்ந்து விட்ட தலைவனின் பதாகைகளைத் தூக்கிப் பிடித்து இறுதி வெற்றியடைய புதிய சேகுவாராக்களுக்கு அறைகூவல்  விடப்படும்.

 

இருந்தாலும் காஸ்ட்ரோவும், அவரது சகாக்களும் தங்களுக்குள் இந்த 'புரட்சி ஏற்றுமதி' குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அலசுவார்கள். சேகுவாராவின்  மரணத்தினால் மற்ற நாடுகளில் புரட்சி  ஏற்படுத்துவது நின்று போகாது, மேலும் வலுப்பெறும் என்று கியூப மக்களிடம் காஸ்ட்ரோ சூளுரைக்கலாம். அதுதான்  அவரது குணாம்சம். அல்லது நிலைமைகளை ஆராய்ந்து ஒருவேளை இது போன்ற அந்நிய முயற்சிகளை நிறுத்தி வைக்கலாம். அல்லது சேகுவாராவின்  முயற்சிகளை ஆராய்ந்து கொரில்லா இயக்கத்தில் சில மாறுதல்களைச் செய்து தொடரலாம். மொத்தத்தில், சேகுவாராவின் தியாகத்தை முன்னிறுத்தி, சில  மாற்றங்களோடு காஸ்ட்ரோ தனது முயற்சியைத் தொடருவார் என்றுதான் தெரிகிறது.        விரைவில் தங்கள் நாட்டிலும் புரட்சி ஏற்பட்டுவிடும் என  பயந்துகொண்டிருந்த இடதுசாரிகள் அல்லாத மற்ற லத்தீன் அமெரிக்கர்களுக்கு சேகுவாராவின் மரணம் பெரும் நிம்மதியைக் கொடுத்திருக்கும். கைதேர்ந்த அந்த  புரட்சிக்காரனின் மரணம், சில லத்தின் அமெரிக்கர்களுக்கு இந்த கலகங்கள் மற்றும் அதற்கான சமூக காரணங்கள் குறித்த தீவீரத்தை குறைக்கவும் செய்யலாம்.  அதற்கு நேர் எதிராக, எந்த வகையான இடதுசாரிகளாயிருந்தாலும் கம்யூனிஸ்ட்கள் சேகுவாராவை புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக கியூப புரட்சிக்கு  அவர் ஆற்றிய பங்கினை எடுத்துச்சொல்வார்கள். அதற்கான காரணங்கள் களையப்படும் வரை புரட்சி தொடரும் என்பார்கள்.

 

காஸ்ட்ரோவோடு முழுமையான முரண்பாடுகள் கொண்டிருக்கிற, கொரில்லா போராட்டத்தை வாயளவில் மட்டும் ஆமோதித்துக் கொண்டு இருக்கிற லத்தீன்  அமெரிக்காவில் உள்ள பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் காஸ்ட்ரோ-சேகுவாரா- தீப்ரே கொள்கைகளை எதிர்த்து இன்னும் வலிமையாக வாதங்கள் செய்வார்கள்.  புரட்சிக்கு தகுந்த சூழல் உள்ள ஒரு நாட்டில், மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கொரில்லா புரட்சிக்காரன் தோற்றுப்போனதை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள்.  சேகுவாராவை முழுமையாக குறைத்துப் பேசாவிட்டாலும், பொலிவிய கொரில்லாப் போராட்டத்திற்கு பொலிவியர்கள் அல்லாதவர்கள் தலைமை தாங்கியதால்  அங்குள்ள விவசாயிகளின் ஆதரவைப் பெற முடியாமல் போய்விட்டது என குற்றம் சுமத்துவார்கள். அங்குள்ள இடதுசாரி கட்சிகளே புரட்சிக்கு தகுந்த  தருணத்தை அறியமுடியும் என்றும் அந்த மண்ணில் உள்ளவர்களால்தான் புரட்சி நடத்தப்பட முடியும் என்றும் சொல்வார்கள். சேகுவாராவின் பொலிவிய  முயற்சிகளிலிருந்து காஸ்ட்ரோ தன்னை துண்டித்துக்கொள்ள முடியாது. நாங்கள் ஏற்கனவே சொன்னோம் என்கிற குரல்களை கேட்க வேண்டி வரும்.  கியூபாவின் கொள்கைகளை ஆதரித்தவர்கள் அதை மறுபரிசீலனை செய்தாலும் காஸ்ட்ரோவுக்கு  இளம் கம்யூனிஸ்டுகளிடம் செல்வாக்கு குறைந்து விடாது.

 

அக்டோபர் 8ம் தேதி நடந்த போரில் சேகுவாரா கொல்லப்பட்டார் என்று இந்த ஆவணத்திலும் குறிப்பிடப்படுகிறது. பொய்யை சொல்லிக் கொண்டே  இருக்கிறார்கள். காஸ்ட்ரோ அதை அவிழ்க்கிறார்.

 

இந்த ஆவணத்திற்கும் அவர்கள் ஏற்கனவே எழுதிய ஆவணங்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் தெரிகிறது. காஸ்ட்ரோவுக்கும் சேவுக்கும் உள்ள  முரண்பாடுகள் பேசப்படவில்லை. அவர்கள் இனி அதை பேசவும் முடியாது. கியூபா மக்கள் காஸ்ட்ரோவோடு இணைந்து நின்று அவர்கள் வாயை அடைத்து  விட்டார்கள்.

 

ஆனால் உலகில் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு முன்னால் ஒரு கேள்வியை அவர்கள் வைத்து விட்டார்கள். சேவின் மரணம் எழுப்பியிருக்கும்  கேள்வி அதுதான். காஸ்ட்ரோவே அதற்கும் பதில் சொல்கிறார்.

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!