அம்மாவின் பாட்டும், சிரிக்கும் எனது எழுத்துக்களும்





மேடையில் ஐந்தாறு பேர் போல இருக்கிறார்கள். நடுவில் கனகம்பீரமாக எல்லோரையும் பார்த்தபடி மணிவிழா நாயகர் . ஒரு அரசியல்வாதியாகவோ,
இலக்கியவாதியாகவோ, தொழில் அதிபராகவோ வைத்துக் கொள்ளுங்கள். தனது அறுபது வருடங்களில் பூவுலகில் அவர் செய்த மகத்தான காரியங்களுக்காக கௌரவப்படுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாலைகளும், பொன்னாடைகளும் வாழ்த்துக்களாய் குவிந்திருந்தன. சொந்தக்காரர்கள், நண்பர்கள், அபிமானிகள் என்று நிறையபேர் அந்த மண்டபத்தில் கூடி இருந்தார்கள்.

ஒருவர் பின் ஒருவராக அவரது குணநலன்களை, இரக்க சுபாவத்தை, தாராள மனதை தங்கள் நினைவுகளிலிருந்து எடுத்து வந்து ஒலியில் பெருக்கி
கொண்டிருந்தனர். மணிவிழா நாயகர் சிலநேரம் லேசாய் சிரிப்பார். சிலநேரம் தீவிர யோசனையில் இருப்பார். தான் என்னவெல்லாம் பேசுவது என்ற சிந்தனையில் அவர் அப்போது மூழ்கியிருக்க வேண்டும். கொஞ்சநேரம் அருகில் உட்கார்ந்திருந்த அவரது வாழ்க்கைத் துணைவியார் பிறகு மேடையில் இல்லை. வந்திருந்தவர்களை வரவேற்க, உபசரிக்க என பல வேலைகள் அந்த அம்மாவிற்கு இருந்தன. போகிற போக்கில் இரண்டு பேர் அந்த அம்மாவைப் பற்றியும் பேசினார்கள். 'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்' என்ற மிக வழக்கமான வார்த்தைகளோடு சொல்லிக் கொண்டனர். முக்கியமான அந்தக் கட்டத்தில் அந்த அம்மாவை காமிராவில் பிடித்துவிட வீடியோ கிராபர் தேடியபோது , தொலைவில், கூட்டத்தின் பின்னால் அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

மணிவிழா நாயகர் அந்த அம்மாவைப் பார்த்து மேடையில் இருந்தபடியே தனது அருகே வந்து அமரும்படி சைகை காட்ட கூட்டம் லேசாய் சிரித்து சலசலத்தது. கொஞ்சம் வெட்கப்பட்டு மெல்ல வந்தார்கள். எல்லோரும் தன்னை வானளாவ புகழும்போது அதைக் கவனியாமல் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு கோபம் உள்ளுக்குள் அவருக்கு ஓடியது போலத் தோன்றியது. இப்போதாவது தன்னை இவள் முழுமையாக புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்திருக்கலாம். அந்த அம்மாவுக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

இந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு வந்த பிறகு ஒன்று தோன்றியது. இந்த மணிவிழாக்களெல்லாம் ஆண்களை மையமாக வைத்து மட்டுமே கொண்டாடப்படுகின்றன. பெண்களின் அறுபது வயது என்பது முக்கியமற்றதா? வாழ்வில் அவர்களுக்கு பங்களிப்பு இல்லையா? அவர்களையும் இப்படி கௌரவப்படுத்தலாமே. பக்கத்தில் அவர்களது வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று இந்த புருஷர்களை உட்கார வைக்கலாமே. இந்தச் சமூகம் யாரைப் பிரதானப்படுத்தி இயங்குகிறது என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. பெண்ணுக்கு இங்கு இடமுமில்லை. பெண் ஒரு பொருட்டுமில்லை. ஆண்களுக்காகவே படைக்கப்பட்டவர்களாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். சொந்தக் கால்களில் நிற்க அவர்களுக்கு அனுமதி இல்லை.

ஒருபுறம் அன்புக்கும், பொறுமைக்கும் அவர்களை இலக்கணமாக்கிவிட்டு இன்னொருபுறம் பலவீனமானவளாகவும், சுயபுத்தியற்றவளாகவுமே பெண்கள் இந்த சமூகத்தால் கற்பிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முரண்பாட்டில்தான் பெண்களுக்கான சிறைகள் அரூபங்களாய் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாயின், மாட்டின் தலையை வருடிக் கொடுக்கிற சமூகம் இது.

பெண்களை வெறும் உடலை வைத்து அளக்கப் பழகிய ஆண்மக்கள் இன்னமும் அவர்களின் உலகத்துக்குள் நுழையாமலேயே இருக்கிறார்கள். அவர்களின் பெரிய பெரிய பிரச்சினைகளைக் கூட புரிந்து கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன தவிப்புகளைஆண்கள் அறிந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. அவசரத்தில் அவ்வளவு சுறுசுறுப்பான மவுண்ட் ரோட்டில் சட்டென்று ஒதுங்கி சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கு அவை புரிந்திருக்க வாய்ப்பில்லை.

பெண்களின் இதயத்தை காலம் காலமாக இந்த ஆண்கள் ஏமாற்றி ஏமாற்றித்தான் தொட முயல்கிறார்கள். காதலாயிருந்தாலும், கல்யாணமாயிருந்தாலும் பெண்கள் மிக விரைவில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று புரிந்து கொள்கிறார்கள். தனக்குள் நிறைந்திருக்கும் பூக்களை, பறவைகளை, புல்வெளிகளை அறியமுடியாத தன் ராஜாவை நினைத்து சிரிக்கவா, அழவா என்று தெரியாமல் காலத்தை எதிர்கொள்கிறார்கள். ராஜாக்கள் தலை நிமிர்ந்து ஊர்பூராவும் நடந்து கொண்டு இருக்க, பெண்கள் எல்லாவற்றையும் புதைத்துக் கொண்டு சிரிக்க, பேச, சமைக்க என்று வாழுகிறார்கள். குழந்தைகள்தான் அவர்களுக்கு கிடைத்த ஆறுதல்.

அம்மாவின் பாட்டில் உள்ள சோகம் இருபது வயதுக்கு மேல்தான் எனக்குத் தெரிந்தது. அம்மா நன்றாகப் பாடுவார்கள். பாட்டு வாத்தியாரை வைத்து சின்ன வயதில் படித்திருக்கிறார்கள் என்பது முக்கியமான விஷயமாக சொல்லப்பட்டு இருந்தாலும் அழுத்தமாக மனதில் பதிந்திருக்கவில்லை. எப்போதும் பாட்டு பாடிக்கொண்டு இருப்பார்கள். துணி துவைக்கும் போதும் பாட்டு. சமைக்கும் போது பாட்டு. கோலம் போடும்போது பாட்டு. 'கிருஷ்ணா முகுந்தா முராரே... ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே' , 'கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சாய்..ஜெகமெங்கிலும்' என்று பாட்டுக்கள் வீட்டில் நிறைந்திருக்கும். அப்படி ஒரு ராகம் சுற்றி இருக்கிற பிரக்ஞை அற்று காலம் ஓடியிருந்திருக்கிறது என்பது இப்போது புரிகிறது. வேலையில் சேர்ந்து அம்மாவை விட்டுப் பிரிந்து தூரத்தில் போன பிறகு ஒருதடவை லீவில் வீட்டிற்கு சென்றிருந்தேன். ஒரு மத்தியான நேரம். திடுமென எனக்குத் தோன்றியது. அம்மா அருகில் போய் உட்கார்ந்து 'அம்மா ஒரு பாட்டு பாடுங்க' என்றேன். அம்மா ஆச்சரியமாய் என்னை பார்த்தார்கள். 'என்னம்மா ஒரு பாட்டு பாடுங்க... தானா எவ்வளவு பாட்டு பாடுவீங்க.. இப்போ பாடுங்க. கேட்டு ரொம்ப நாளாச்சு" என்றேன். பார்த்துக் கொண்டிருந்த அம்மா பொல பொலவென அழுதார்கள். பிரிவினால் அம்மாவின் மீது எனக்குள்ள ஏக்கத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்து அவர்களை "என்னம்மா இது" என தேற்றினேன். அம்மா என் தலையை வருடிக் கொண்டே "ஒங்க அப்பா ஒரு நாளு கூட இப்படிக் கேட்டதில்ல " என்று அழுதார்கள். நான் உறைந்து போனேன். அம்மாவுக்குள் இன்னும் எத்தனை பாட்டுக்கள் ஒளிந்திருந்திருக்குமோ.

அம்மாக்களின் சோகம் காலம் காலமாய் வீடுகளுக்குள் அடர்த்தியான மௌனமாய் நிறைந்து கிடக்கிறது. பாவப்பட்ட ஜென்மமாய், எதையோ இழந்து போனவர்களாய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறார்கள். அடையாளம் மறுக்கப்பட்ட இந்த உயிர்களின் வேதனையை இங்கு யாரும் உணர்வதேயில்லை. எல்லாம் மிக இயல்பான ஒன்றாய் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் தங்கள் குழந்தைகளிடம் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் அவர்களை ஏமாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் அம்மாவின் குழந்தைகளாய் அவர்கள் இருக்கவில்லை. சமூகத்தின் குழந்தைகளாகவே இருக்கின்றனர். ஆண். பெண். அவ்வளவுதான்.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடன் பேசிக் கொண்டு இருக்கும்போது ஒருமுறை குறிப்பிட்டார். "மற்ற எல்லாப் பிரச்சினைகளையும் இந்த சமூகம் அறிவு பூர்வமாகவோ, உணர்வு பூர்வமாகவோ புரிந்து வைத்திருக்கிறது. வர்க்க முரண்பாடுகள், தலித் அடக்குமுறைகள் எல்லாம் கூட ஒரு காலக் கட்டத்தில் தீர்ந்துவிடும். ஆனால் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகளும், ஆதிக்கமும் குறைந்து போக பல நூற்றாண்டுகள் ஆகும் போல இருக்கிறது. பிரக்ஞை பூர்வமாக அதை இன்னும் வாய்கிழிய முற்போக்கு பேசுகிறவர்களும்கூட அறியவில்லை. "

இதை எழுதிக் கொண்டு இருக்கும் போதே பாத்ரூமிலிருந்து பையன் சத்தம் போட்டது கேட்டது. நானும் தொடர்ந்து குரல் எழுப்பினேன். "அம்மு... பாத்ரூமிலிருந்து நிகில் கூப்பிடுறான். போய்ப் பாரு " என்றேன்.

"என்னங்க ரன்னிங் கமெண்ட்ரியா கொடுக்கிறீங்க. நா சமையல்ல இருக்கேன்ல. நீங்க போய் அவன் காலக் கழுவி விடுங்களேன். நாந்தா அதச் செய்யணுமா?"

வீட்டில் அவள் மிகச் சாதாரணமாய், அமைதியான குரலில் இதைச் சொல்லிய போது அவமானமும், குற்ற உணர்வும் என்னை சட்டென்று தாக்கியிருந்தன. இது ஏன் தானாக எனக்கு உறைக்கவில்லை. இதை அவள்தான் செய்ய வேண்டும் என்ற நினைப்பு அணிச்சையாக படிந்திருக்கிறது. மௌனமாக பாத்ரூம் சென்று கால் கழுவி விட்டேன். இது போல ஒருநாளில் எத்தனை முறை அவளை எந்த சிந்தனையும் அற்று அழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. இப்படித்தான் தாத்தா ஈஸிச்சேரில் உட்கார்ந்து கொண்டு ஒரு நாளைக்கு நூறு தடவை அழைத்துக் கொண்டிருப்பார். பாட்டியும் சளைக்காமல் வந்து கொண்டே இருப்பார்கள்.

பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான். திரும்பி வந்து எழுத உட்கார்ந்தேன். அதுவரை எழுதியிருந்த எழுத்துக்கள் இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தன.

கருத்துகள்

26 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையான பதிவு. உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆணாதிக்க மனப்பான்மை ஒழிய வேண்டும். நானும் நீங்களும் முதலில் மாற வேண்டும். தாங்கள் அடிமைகளல்ல என்பதை பெண்களும் உணர வேண்டும்.

    நல்ல சிந்தனை நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. சிலர் இதை விரும்பியே ஏற்றும்கொள்கின்றனர்.. அடிமைத்தனம் என்று முற்றிலுமாக சொல்ல முடியாது...

    என் அன்னை யாரையும் சமையலறைக்குள் விடமாட்டார்.. அது அவர் ராஜ்யம் மாதிரி... தனக்குத்தெரிந்த சமையல் மூலம் பாராட்டு பெறணும் என்பதே அவர் எண்ணம்...

    இது அக்காலத்துக்கு பொருந்தும்...

    இக்காலத்திலும் மனைவி வீட்டிலிருந்தால் வீட்டு வேலைகளை அதிகமாக பொறுப்பு எடுப்பது ஒன்றும் அடிமைத்தனம் அல்ல...பகிர்ந்துகொள்ளுதல் ..

    நல்ல கட்டுரை ...

    பதிலளிநீக்கு
  4. நல்ல மாற்று சிந்தனை.

    \\இந்த மணிவிழாக்களெல்லாம் ஆண்களை மையமாக வைத்து மட்டுமே கொண்டாடப்படுகின்றன. பெண்களின் அறுபது வயது என்பது முக்கியமற்றதா? வாழ்வில் அவர்களுக்கு பங்களிப்பு இல்லையா? அவர்களையும் இப்படி கௌரவப்படுத்தலாமே. பக்கத்தில் அவர்களது வெற்றிக்குக் காரணமானவர்கள் என்று இந்த புருஷர்களை உட்கார வைக்கலாமே\\





    சிறப்பாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்.

    தமிழ் திரைப்படம் - (அகரன்) வந்து படியுங்களேன். நன்றி.

    http://akaran-movie.blogspot.com/

    பதிலளிநீக்கு
  6. பெண்களை வெறும் உடலை வைத்து அளக்கப் பழகிய ஆண்மக்கள் இன்னமும் அவர்களின் உலகத்துக்குள் நுழையாமலேயே இருக்கிறார்கள். அவர்களின் பெரிய பெரிய பிரச்சினைகளைக் கூட புரிந்து கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன தவிப்புகளைஆண்கள் அறிந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. அவசரத்தில் அவ்வளவு சுறுசுறுப்பான மவுண்ட் ரோட்டில் சட்டென்று ஒதுங்கி சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கு அவை புரிந்திருக்க வாய்ப்பில்லை.

    மிக நல்ல பதிவு. மற்றபடி ஆணாதிக்க சிந்தனைக்கும் மிக முக்கிய காரணியே பெண்கள்தானே
    :)

    பதிலளிநீக்கு
  7. இந்த‌ப் ப‌திவைப் ப்ரின்ட் ஔட் எடுத்து வீட்டில் எல்லா சுவ‌ரிலும் ஒட்ட‌ப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. புன்னகை தேசம். said...
    //சிலர் இதை விரும்பியே ஏற்றும்கொள்கின்றனர்.. அடிமைத்தனம் என்று முற்றிலுமாக சொல்ல முடியாது... //

    வேறு வ‌ழி????


    //என் அன்னை யாரையும் சமையலறைக்குள் விடமாட்டார்.. அது அவர் ராஜ்யம் மாதிரி... தனக்குத்தெரிந்த சமையல் மூலம் பாராட்டு பெறணும் என்பதே அவர் எண்ணம்...//

    ஆமாம், அது தான் அவ‌ர்க‌ள் ர‌ஜ்ஜிய‌ம், ம‌ற்ற‌ ர‌ஜ்ஜிய‌ங்க‌ளில் எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு ஏது இட‌ம்?

    பதிலளிநீக்கு
  9. அருமையான படைப்பு,இப்படித்தான் தாத்தாக்கள்,அப்பாக்கள்,நாம் என தொடர்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அருமை!அருமை! சமீபத்தில் நான் படித்த பதிவுகளில் மிகவும் சிறந்த பதிவு இது.

    பதிலளிநீக்கு
  11. கடையம் ஆனந்த்!

    முரளி கண்ணன்!

    முத்து ராமதாஸ்!

    எம்.ரிஷான் ஷெரிப்!

    விலெகா!

    புதுகை.அப்துல்லா!

    அனைவருக்கும் நன்றி!!!

    பதிலளிநீக்கு
  12. //ஆமாம், அது தான் அவ‌ர்க‌ள் ராஜ்ஜிய‌ம், ம‌ற்ற‌ ராஜ்ஜிய‌ங்க‌ளில் எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு ஏது இட‌ம்?
    //

    தீபா!

    ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  13. // தாங்கள் அடிமைகளல்ல என்பதை பெண்களும் உணர வேண்டும்.//

    சுல்தான்!

    பெண்கள் அதை உணர்வதுதான் ஆண்களுக்கு பிரச்சினயே!

    பதிலளிநீக்கு
  14. //இக்காலத்திலும் மனைவி வீட்டிலிருந்தால் வீட்டு வேலைகளை அதிகமாக பொறுப்பு எடுப்பது ஒன்றும் அடிமைத்தனம் அல்ல...பகிர்ந்துகொள்ளுதல் ..
    //

    புன்னகை தேசம்!

    ஆண்கள் ஏன் அதை பகிர்ந்து கொள்ள தயங்குகிறார்கள்...அல்லது
    வீட்டு வேலைகளில் ஏன் பொறுப்பு எடுக்க மறுக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  15. கென்!

    ஆணாதிக்க மனோபாவத்திற்கு பெண்களா முக்கிய காரணம்? எப்படி?

    பதிலளிநீக்கு
  16. வழக்கம் போல நல்ல பதிவு. பதிவின் கருத்துக்களுடன் ஒத்துப் போக முடிகின்றது.

    இதே கருத்தாக்கங்காளுடன் கூடிய எனது பழைய பதிவு.
    காலம் காலமாய் மனைவிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்

    பதிலளிநீக்கு
  17. //அவர்களின் பெரிய பெரிய பிரச்சினைகளைக் கூட புரிந்து கொள்ள வேண்டாம். சின்னச் சின்ன தவிப்புகளைஆண்கள் அறிந்திருக்கிறோமா என்று தெரியவில்லை. அவசரத்தில் அவ்வளவு சுறுசுறுப்பான மவுண்ட் ரோட்டில் சட்டென்று ஒதுங்கி சிறுநீர் கழிக்கும் ஆண்களுக்கு அவை புரிந்திருக்க வாய்ப்பில்லை//
    உண்மை...ஒரு பெண்ணிற்கு மாதவிலக்கு நின்றுபோகும் நிலையில் (menopause)என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என ஒரு Gender வகுப்பில் கேட்டபோது, பெரும்பான்மை ஆண்கள் உடனே சொன்ன பதில்....'ஒரே சிடுசிடுப்பும் கோபமும் வரும்....ஆனால் அதற்கு உடல் ரீதியான காரணம் எங்களுக்கு தெரியாது'
    திருமண நாள் வெள்ளிவிழா கொண்டாடத்தெரியும்..ஆனால் 25 வருட தாம்பத்தியத்தில் தன்னுடைய Betterhalf- ன், உடல் மற்றும் உள்ளரீதியான உணர்வுகளை புரிந்து கொள்ள நேரமும் இல்லை விருப்பமும் இல்லை....இதுதான் ஆணுலகம்!!!!!

    பதிலளிநீக்கு
  18. நந்தா!

    உங்கள் பக்கங்களைப் படித்தேன்.

    ஒரு சீரியஸான ரைட்டர் என்பதை அறிந்து கொண்டதில் சந்தோஷம்.
    உங்கள் பதிவில் எழுப்பியிருந்த கேள்விகளும், விமர்சனங்களும் முக்கியமானவை.
    முற்போக்கு, கம்யூனிசம் எல்லாம் குறித்தும் உங்களுக்கு கேள்விகள் இருக்கின்றன.
    முற்போக்கு பேசுவதால் முற்போக்குவாதியல்ல.
    கம்யூனிசத்தை ஆதரிப்பதால் கம்யூனிஸ்டும் அல்ல!!
    இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
    அப்போதுதான் தவறு எங்கே இருக்கிறது என தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
    தனிமனித பலவீனங்களை ஒரு அமைப்பின் பலவீனமாகக் கருதக் கூடாது.
    பலவீனங்களை தனிமனிதன் சார்ந்த சமூகமும்,
    பலத்தை தனிமனிதன் சார்ந்த அமைப்பும் உருவாக்குகின்றன.
    இதில் தனிமனிதன் பலமாயிருப்பதையும், பலவீனமாயிருப்பதையும்
    அவனுடைய உளப்பூர்வ ஈடுபாடுகளே தீர்மானிக்கின்றன.
    தனி மனிதனுக்கு வரலாற்றில் இப்படித்தான் பாத்திரங்கள் உருவாகின்றன.

    பதிலளிநீக்கு
  19. சுடர் ஒளி!

    மிகச்சரியாகவும், நுட்பமாகவும் புரிந்திருக்கிறீர்கள்.
    சந்தோஷமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. ஆழமான கருத்துக்களுடன் கூடிய பதிவு.
    பிடித்திருந்தது

    பதிலளிநீக்கு
  21. //இதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
    அப்போதுதான் தவறு எங்கே இருக்கிறது என தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
    தனிமனித பலவீனங்களை ஒரு அமைப்பின் பலவீனமாகக் கருதக் கூடாது.
    பலவீனங்களை தனிமனிதன் சார்ந்த சமூகமும்,
    பலத்தை தனிமனிதன் சார்ந்த அமைப்பும் உருவாக்குகின்றன.
    இதில் தனிமனிதன் பலமாயிருப்பதையும், பலவீனமாயிருப்பதையும்
    அவனுடைய உளப்பூர்வ ஈடுபாடுகளே தீர்மானிக்கின்றன.
    தனி மனிதனுக்கு வரலாற்றில் இப்படித்தான் பாத்திரங்கள் உருவாகின்றன.//

    மாதவராஜ் அவைகள் புரியாமல் இல்லை. தனி மனித தவறுகளைஇச் சுட்டிக் காட்டி அமைப்பை தவறு என்று சொல்ல முனைய வில்லை. இந்த அமைப்பிலிருப்பவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல என்று உணர்த்த விரும்பினேன். அவ்வளவே.

    இதை வேறு வகையில் சொல்ல வேண்டுமானால், சபரிமலைக்குள் பெண் நுழைந்தால் தீட்டு என்று சொல்லி பரிகாரம் செய்ததை எள்ளி நகையாடிய சில கறுப்புச் சட்டைக்காரர்களின் வீட்டில் பெண் சமையலறையை தாண்டாதவளாய், சூழ்நிலைக் கைதியாய், பொருளாதார தன்னிறைவு பெறாதவளாய்தான் இருக்கிறாள். வர்க்க மாறுபாடுகள், சாதியடுக்கு ஏற்றத்தாழ்வுகளை எதிர்ப்பவர்கள் கூட பாலியல் வேறுபடுகள் பொருட்டு ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றனர்.

    "எளியோன் மீது வலியோன் ஆதிக்கம் செலுத்துதல்" இந்த அடிப்படையில் பார்க்கும் போது பல தரப்பினர் குற்றவாளிகளாய் நிற்கின்றனர் என்பதே உண்மை. இதைத்தான் சொல்ல முயன்றேன்.

    http://blog.nandhaonline.com

    பதிலளிநீக்கு
  22. In every men victory, there will be a women behind him. I heard some where, but its true and I realised, after seeing your article.

    பதிலளிநீக்கு
  23. நந்தா!

    உங்கள் இந்தக் கருத்துக்களோடு எனக்கும் உடன்பாடு உண்டு.

    பதிலளிநீக்கு
  24. பொன்ராஜ்!
    எதோ கிண்டல் செய்கிற மாதிரி தெரியுதே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!