ஆதலினால் காதல் செய்வீர் - 3ம் அத்தியாயம்

3. ஆதிக் காதலும், காவியக் காதலும்

அவள் ஒடுகிறாள். அவன் துரத்துகிறான். ஒரு மரத்தின் அருகில் போய் மூச்சு வாங்க நிற்கிறார்கள். விரல்கள் மெல்ல மெல்ல நெருங்குகின்றன. பார்வைகள்
மயங்குகின்றன. விரல் நுனிகள் தொடுகின்றன. தீண்டுகின்றன. கோர்க்கின்றன. கடல் அலைகள் நுரை பொங்க கரையில் மோதுகின்றன. ஆயிரமாயிரம் புறாக்கள் எழும்பி சடசடவென்று பறக்கின்றன. தந்தனம் தந்தனம் என வெள்ளையுடை தேவதைகள் சேர்ந்திசைக்கிறார்கள்.


இவை எதுவும் அப்போது நிகழவில்லை. விலங்குகளின் உணர்வுகள் மட்டுமே மனிதர்களிடம் இருந்தன. எதையும் மறைத்துக் கொள்ளாத காட்டுமிராண்டிகளாயிருந்தனர். விதைகளையும், வேர்களையும், கனிகளையும் உண்டு மரங்களில் வசித்து வந்தனர். குடும்ப உறவுகளற்ற வெளியில் வானத்தின் கீழ் எல்லா ஆண்களும், எல்லா பெண்களும் ஒருவரோடு ஒருவர் தங்கள் உடல்களை பகிர்ந்து கொண்டனர். இனப்பெருக்கத்தின் உந்துவிசையான உடல் இச்சை தவிர எந்த கண்களிலும் ரகசியங்கள் இருக்கவில்லை. பெண்களே குழுக்களில் தீர்மானிப்பவர்களாகவும், நிர்மாணிப்பவர்களாகவும் இருந்தனர். தங்கள் தேவைக்கதிகமாக அல்லது பராமரிப்புகளுக்கு அதிகமாக மனிதர்கள் எதையும் உற்பத்தி செய்யவில்லை. குடும்பங்கள் தாய் வழியிலும், சந்ததிகள் தாய் மூலமுமே நிச்சயிக்கப்பட்டனர். பெண் சக்தி மிக்கவளாய் உயர்ந்திருந்தாள். வாழ்வின் அர்த்தங்களும், மாயங்களும், உயிர்ப்பும் அவளே கொண்டிருந்ததாய் கருதப்பட்டாள். இயற்கையின் ரகசியங்கள் புதைந்தவளாய் தோன்றினாள். படைப்பாற்றல் கொண்ட அவளது ரத்தம் சிந்தும் உடலின் கூறுகளை அறிய முடியாமல் ஆண்கள் பெண்களை போற்றி வந்தனர். அடங்காத வேட்கை கொண்டவளாகவும், புனிதமானவளாகவும், கடவுளாகவும் பெண் சித்தரிக்கப்பட்டாள். பெண் தெய்வங்களுக்கு பல காதலர்கள் இருந்தனர். அவள் மட்டும் நிலைத்திருக்க காதலர்கள் மரணமடைந்து போனார்கள்.

வேட்டையாடிக் கொண்டிருந்தவர்கள் மாடுகள், பன்றிகள், ஆடுகள், கழுதைகள், ஒட்டகங்களை மேய்த்தார்கள். கால்நடைகள் மெல்ல மெல்ல ஆண்களின் சொத்துக்களாய் மாறின. புல்வெளிகளைத் தேடி நதிகளின் கரைகளில் வந்து நின்றார்கள். விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்த இந்த வளர்ச்சிப் போக்கில்தான் குடும்பங்களும் உறவுகளும் தோன்ற ஆரம்பித்தன. ஆண்கள் குடும்பத்தின் தலைவர்களானார்கள். பெண்கள் வீடுகளுக்குள் நிலைக்கப் பெற்றார்கள். ஒரு பெண் கருவுறுவதற்கு ஒரு ஆண் போதும் என்பதை ஆண் அறிந்து விட்டிருந்தான். தனது சொத்துக்களுக்கு வாரிசுகளை நியமிக்க ஆண் தனக்குப் பிறந்தவனை அடையாளம் காண வேண்டியிருந்தது. தந்தை வழி சமூகத்தின் இந்த தோற்றுவாயில்தான் ஒரு வலிமையான உறவு குழந்தைகளுக்கும், தந்தைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. ஒருத்திக்கு ஒருவன் என்னும் கற்புநெறியாக, பெண்களின் பிறவி ஒழுக்கமாக நிலைநிறுத்தப்பட்டது. நாகரீகத்தின் அடுத்த வளர்ச்சியாக இதனை உயர்த்திடாமல், மதங்களும், கடவுள்களும் முழுக்க முழுக்க ஆண்களின் பக்கம் நின்று பெண்களின் வீழ்ச்சியாக இதனை நிச்சயம் செய்யவே கட்டளைகளையும், விதிகளையும் பிறப்பித்தன. பல்லாயிரம் ஆண்டுகளாய் நீடித்திருந்த தனது வரலாற்றைத் தொலைத்து, பெண் தலைகுப்புற வீழ்ந்த இடம் இதுதான்.

"அவன் ஒரு அம்பை விடுவித்தான்.
அது அவள் வயிற்றைக் கிழித்தது.
அவளுடைய உள் அவயங்களை ஊடுருவினான்.
அவளுடைய உடலை கீழே வீழ்த்தினான்.
வெற்றிக் களிப்பில் அதன் மீது காலை வைத்தான்".


கி.மு இரண்டாயிரத்தில் பாபிலோனியாவின் படைப்புக் காவியத்தில் ஆணின் அதிகார மாற்றம் இப்படி குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆணே இனப்பெருக்கத்தின் பிரதான பாத்திரத்தை ஆற்றுபவனாகவும், பெண் முனைப்பற்ற முறையில் அவனுடைய விதையை அடைகாக்கும் கருவியாக மட்டுமே ஆனாள். வீடுகளுக்குள்ளூம், பர்தாக்களுக்குள்ளும், அந்தப்புரங்களுக்குள்ளும் பெண்கள் மறைந்து போனார்கள். அவர்களின் அற்புதங்களும், அதிசயங்களும் இப்போது அழுக்காகவும், அசிங்கமாகவும்
பேசப்பட்டது. கணவனையும், குழந்தையையும் பராமரிப்பது அவர்களின் வாழ்வின் அர்த்தமாகி விட்டிருந்தது. பெண்களின் சொர்க்கம் ஆண்களின் காலடியில் கிடந்தது. தனிமை அவளின் பொழுதாகவும், மௌனம் அவளின் மொழியாகவும் ஆனது. கனவுகள், கவலைகள் எல்லாமே பிரத்யேகமாகிப் போக முற்றிலும் ஆண்களிலிருந்து வேறுபட்ட உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.

வரலாற்றின் இந்தப் பிழையை அப்படியே ஏற்றுக் கொள்வதில் தனிப்பட்ட ஆண்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தியது ஒன்றே ஒன்று தான். காதல் என்னும் அந்த நெருப்பு பற்றிக் கொண்ட போது ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் புனிதமானவர்களாகவும், மேன்மையானவர்களாகவும் தோன்றினார்கள். சமூகத்தின் தளைகளுக்கு கீழ்ப்படிந்து போகாமல் இருவரும் சேர்ந்து வேறு உலகத்தில் உலவ ஆரம்பித்தார்கள். ஒப்புக்கொள்ள முடியாத அந்த பழைய காலம் காதலை அழகானதாகவும், ஆபத்தானதாகவும் ஆண்களிடம் திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டிருந்தது. பெர்ஷியன், ஐரோப்பியச் சிந்தனைகளில் காதல் வயப்படுவது என்பது ஒரு நோயாகவே கருதப்பட்டு இருக்கிறது. "சைத்தானின் கண்கள்' என்றெல்லாம் சாபமிட்டிருக்கிறது.

அழகான பெண்களை பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போகும் ஆண்கள் காதல்வயப்பட்டு தங்களை இழந்து நின்ற காட்சிகளை பார்க்க முடிகிறது. "ரோம் டைபர் நதியில் உருகிப் போகட்டும். விரிந்து பரந்த இந்த சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து நொறுங்கட்டும். எனக்கான இடம் இதோ இருக்கிறது" என்று கிளியோபாட்ராவைப் பார்த்து அரற்றுகிறான் அந்தோணி. "என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள். நீ எனக்கு வேண்டும்" என்று காட்டிற்குள் சகுந்தலையை முதன் முதலில் பார்த்த உடனேயே துஷ்யந்தன் சொல்கிறான்.

காதல் ஆண்களையும், பெண்களையும் ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. தனக்கான ஒருவன் என அவளும், தனக்கான ஒருத்தி என அவனும் சகலத்தையும் எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள். பால் கசக்க ஆரம்பித்தது. படுக்கை நோக ஆரம்பித்தது. மேகங்களையும், புறாக்களையும் தூது விட்டார்கள். மரணத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். பருகியிருந்த விஷத்தின் துளிகள் ஒட்டி இருந்த ரோமியோவின் உதடுகளிலிருந்து அதைக் குடிக்க முற்படுகிறாள் ஜூலியட். உறங்கிக் கொண்டிருக்கும் டெஸ்டிமோனாவின் கடைசி படுக்கையருகே கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து நிற்கிறான் ஒத்தல்லோ. லைலாவும், மஜ்னுவும் பாலவன மணல் வெளிகளில் காலடிகளை நிரப்பிச் செல்கிறார்கள். அனார்கலியின் கல்லறையில் சலீம் தலையால் மோதி கதறுகிறான். அம்பிகாபதி இறந்ததும் அமராவதியும் தன்னை மாய்த்துக் கொள்கிறாள். "காதல் மரணத்தைப் போல வலிமையானது" என்று பாடல்களின் பாடல் என்னும் கிரேக்கப் பாடலில் வரும் வரிகள் காதலின் அமரத்துவத்தை சொல்லிக் கொண்டு இருந்தன.

அருவருப்பாக சித்திரம் தீட்டப்பட்ட பெண்கள் இந்தக் காதலால் அழகானவர்களாகவும், மென்மையானவர்களாகவும் காவியங்களில் சித்தரிக்கப்பட ஆரம்பித்தார்கள். ஆண்கள் அவர்களின் அருகில் போய் தோளில் கை போட்டு நின்ற காட்சிகள் தெரிகின்றன. காதலின் மாயமாய் எல்லாம் புரிகிறது. ஆணும், பெண்ணும் ஒருவரை யொருவர் நேசிப்பது இருக்கும் வரை பெண்களின் மீதான பாலியல் தன்மை மீதான தாக்குதல்கள் ஒரு போதும் முற்றாக வெற்றியடைந்து விட முடியாது" என்று வரலாற்றாசிரியர் ரோஸலிண்ட் மைல்ஸ் கூறுவது உண்மையாகிறது.

இன்னும் ஒரு உண்மை மீதமிருக்கிறது. அது வேதனையானது. இந்த காவியக் காதல்களில் வரும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்த மாந்தர்களாய் இல்லை. சீதை ராமனிடமிருந்து பிரிந்து காட்டில் வசிக்க வேண்டி இருந்தது. துஷ்யந்தனின் மோதிரமும், குழந்தையும் மட்டுமே வாழ்ந்த காலத்தின் மிச்சமாகிப் போகிறது சகுந்தலைக்கு. பெண்களின் சோகங்கள் தீர்ந்திடவில்லை. காதல் அவர்களின் இருண்ட உலகத்தின் சன்னல்களைத் திறந்து விட்டிருந்தாலும் கதவுகள் மூடியபடியே இருந்தன. அவர்களின் உலகம் வேறாகவே இருந்தது. வரலாற்றின் இருட்டில் அது புதைந்து போயிருந்தது.

"நான் உயரே பறக்க விரும்புகிறேன்.
ஆனால் என்னுடைய துணை எப்போதும் கூட்டினிலே ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றது கழுகு.
"என்னால் பறக்க முடியாது. அவ்வாறு முயற்சி செய்யவும் எனக்கு விருப்பமில்லை. ஆனால் என்னுடைய துணை வானில் உயரே உயரே பறப்பதைக் காண நான் பரவசமடைகிறேன்." என்றது பெட்டைக்கோழி.
அவர்கள் மணம் புரிந்து கொண்டனர்.
"ஆ.. இதுதான் காதல், என் அன்பே" கூவினர்.
கோழி அமர்ந்தது. கழுகு உயரேப் பறந்தது ஒற்றையாக."

மண வாழ்க்கையின் பேரின்பம் என்று சார்லெட் பெர்கின்ஸ் எழுதிய இந்தக் கவிதையில் அன்றையக் காதல் உலகத்தின் விதிகள் மிகத் தெளிவாக சொல்லப்படுகின்றன. பெண் மௌனமாக எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் வரை இந்தக் காதலின் புனிதங்கள் போற்றப்பட்டிருந்தன. அவள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும்வரை ஆண்களின் உலகம் காதலைக் கொண்டாடிக் கொண்டு இருந்தது.

ஆனால் பெண் இப்போது பேச ஆரம்பித்து விட்டாள். ஆதிக்காதலும், காவியக்காதலும் அவள் மீது படிந்து படிந்து அவைகளின் சாயலாக மாறுவதில் சம்மதமில்லை அவளுக்கு. எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து நிற்கிறாள். இந்தப் புதுவெள்ளத்தில்தான் கலங்கி நிற்கிறது இன்றைய காதல்.தொடரும்...

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. காதலுக்கு இவ்வளவுதான் அடிப்படையா:)

  ஆண் பெண்ணுக்கான உறவுகள் பற்றிக் குழந்தைகளுக்கு இளவயதிலேயே சொல்லிக் கொடுக்கப் படவேண்டும்.

  மாய உலகிலிருந்து அவர்கள் விடுபடவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. மாதவராஜ், சமீப காலத்தில் என்னைக் கவர்ந்த பதிவராயிருக்கிறீர்கள். உங்களது இத்தொடரும், இது வேறு இதிகாசம் பதிவும் மிகவும் அருமை. தொடருங்கள்.

  http://blog.nandhaonline.com

  பதிலளிநீக்கு
 3. Yes Madavaraj>>I thought the historical meterialsm can also be taught by your way of this article part-3..In many places in your articles u r using PASSIVE VOICES and smooth structure of words..Nice article.Kindly collect thousands of mailing IDS AND form a group mailing list and send regularly to all u r articles.You are a writer/person to be known by all in the Tamilnadu---vimalavidya@gmail.com--Namakkal-9442634002

  பதிலளிநீக்கு
 4. super sir. mega periya mattera simpla solli irrukkinga

  பதிலளிநீக்கு
 5. வல்லிசிம்ஹன்!

  காதலுக்கு எது அடிப்படை என்பதைவிட,
  அடிப்படையில் காதல் என்ன என்று அறியும் முயற்சிதான் இது!

  ஆண் பெண் உறவுகள் குறித்து ஏற்கனவே குழந்தைகளுக்கு
  இந்தச் சமூகம் நிறையக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
  அதி சரி, தவறுகளை கற்றுக் கொடுக்கும் உரையாடல்கள்தான் துவங்கப்படாமல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நந்தா!

  உங்கள் வார்த்தைகள் உற்சாகம் தருகின்றன.
  நன்றி!

  பதிலளிநீக்கு
 7. விமலவித்யா!

  மிக்க நன்றி!
  தொடந்து நீங்கள் என்னை
  செதுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 8. மேம்போக்காக இல்லாமல் அழுத்தமான ஆழமாக சொல்லிச் செல்கிறீர்கள் மாதவராஜ். தேவையான விஷயம்.


  ஆரம்பம் ராகுல சாங்கிருத்யாயனின்
  'வால்காவிலிருந்து கங்கை வரை' வாசித்தது நினைவுக்கு வருகிறது.

  காதலில் தொலைந்து வாழ்வையும் தொலைத்தவர்களைப் பற்றியும் மட்டுமே பேசப்படுகையில் இது சாத்தானின் கண்கள் போன்ற தோற்றத்தையே தரும்:))

  எனினும் காதலைத் தவிர்க்க முடிந்துள்ளதா


  கடைசி பத்தி பல கேள்விகளை எழுப்புகிறது. இக்காலப்பெண் காதலை விரும்புகிறாள் அது கட்டமைக்கும் அடக்குமுறையை விரும்பவில்லை.

  பதிலளிநீக்கு
 9. மதுமிதா!

  //மேம்போக்காக இல்லாமல் அழுத்தமான ஆழமாக சொல்லிச் செல்கிறீர்கள் மாதவராஜ். தேவையான விஷயம்.//
  நன்றி,

  //எனினும் காதலைத் தவிர்க்க முடிந்துள்ளதா//
  ஏன் தவிர்க்க வேண்டும்?

  // இக்காலப்பெண் காதலை விரும்புகிறாள் அது கட்டமைக்கும் அடக்குமுறையை விரும்பவில்லை.
  //
  உண்மை.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். அனைவரும் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. kathalin valzi, inbam, thukkam.. ellam arumayaga vilakkiyullirgal.. nandri.. adutha pathiukku kathu irukeeren....

  பதிலளிநீக்கு
 12. ithai paditha piragu valkavilirunthu gangai varai meendum vasikka virumbukiran. puthiya velichathai ennul intha katturai pachiullathu.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!