"உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும்”





2004 தேர்தல் ஆரம்பித்த நேரத்தில் இருந்து, பிஜேபி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது வரையிலான கட்டுரைகளைத் தொகுத்து ‘உடைந்த முட்டையும், தலையெட்டிப் பார்த்த டைனசரும்’ என்ற புத்தகமாக அமேசானில் வெளியிட்டு இருக்கிறேன்.

 

இடதுசாரிக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும்  பிஜேபிக்கு எதிராக ஒருங்கிணைந்ததால்தான் வாஜ்பாய் தலைமையிலான பிஜேபியை ஆட்சியை அன்று அதிகாரத்திலிருந்து அகற்ற முடிந்தது.

 

தேர்தலில் தோற்ற பிஜேபி என்ன முடிவு எடுத்தது என்று புத்தகம் பேசுகிறது.

 

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் என்ன முடிவு செய்தார்கள் என்பதை பேசவே இல்லை.,

 

அன்றைக்கு பேசியது, பேசாமல் விட்டது எல்லாவற்றையும் இப்போது யோசிக்க வைக்கிறது.

 

முதல் அத்தியாயத்தை இங்கு பகிர்கிறேன்.

-------------

‘இந்தியா ஓளிர்கிறது’ – பிரச்சாரம்’

இந்தியா ஒளிர்கிறது’   

 

வறட்சியை, பசியால் அழும் குழந்தைகளை, பட்டினிச்சாவுகளை எதோ சில வினாடிகள் காண்பித்துவிட்டு 'லேக்மே ஃபேஷன் ஷோவை' முட்டி முட்டி வாரக்கணக்கில்  காண்பித்துக் கொண்டிருந்த இந்திய தொலைக்காட்சிகளுக்கு இந்தியாவில் ஒளிவெள்ளம் பாய்ச்ச வேண்டிய நேரம் 2004ம் ஆண்டின்  துவக்கத்தில் வந்திருந்தது.

 

"நமது கனவுகள் மிகவும் சிறியன. இப்போது எதுவும் சாத்தியம். இந்தியா முழுவதும் சந்தோஷம்"  தொழிலதிபர்களின் பேட்டிகள். பங்குச்சந்தை குறியீடுகள். சந்தோஷமான மனிதர்கள். செல்போனில் பேசினார்கள்பொருட்கள் வாங்கினார்கள். செய்தித்தாள்கள் படித்தார்கள்.

 

விளம்பரங்களும் பிரச்சாரங்களும் எல்லோர் வீடுகளிலும் போய் விழுந்து கொண்டே இருந்தன. அவைகளை பொய்  என்று சொல்லக்கூட வேண்டாம், நம்ப மறுத்தால்கூட தேசவிரோதிகளாகி, ரத்தம் ரத்தமாய் கக்கி செத்துப் போகக் கூடும். அப்படித்தான் வாஜ்பாயையும், அவரது ஆட்சியையும் முன் நிறுத்தினார்கள்.

 

அங்கங்கு தங்கள்செட்-அப்’களை நுழைத்து அவர்கள் மூலமாக தங்கள் சித்துவேலைகளை நம்ப வைத்தார்கள். காட்சிகள் அப்படித்தான் அரங்கேற்றப்பட்டன. சித்து சேர்ந்துவிட்டார். ஸ்ரீகாந்த் கலந்துவிட்டார். நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் நடிகை பல்லவி இணைந்துவிட்டார்கள். நஜ்மா ஹெப்துல்லா வாஜ்பாயை தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டார். ஆலடி அருணா ஐக்கியமாகிவிட்டார். நாளொரு செய்தியாக பத்திரிக்கைகளில் வண்ணப்படங்கள் ஒளிர்ந்தன. தேசமே பா..  பின்னால் அலைஅலையாய் திரண்டு வருவதாய் பிரமாதப்படுத்தப்பட்டன.

 

"மகாமகத்தில் தீர்த்தமாட வருகிறவர்கள் போல எங்கள் கட்சியில் வந்து இணைகிறார்கள்" என்று பரிவாரங்களுக்கே உரித்தான அரசியல்  பார்வையோடு வெங்கையா நாயுடு தலையில் வைத்து கூத்தாடினார். மகாமகம்  வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் நதி ஒன்றும் அல்ல. ஒரு கால்வாய்கூட அல்ல. பனிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை பக்தர்கள் குளிப்பதற்கு செயற்கையாக நீர் தேக்கி வைக்கப்படுகிற ஒரு குளம். விசேஷ ரெயில்கள், பேருந்துகளில் அடித்துப் பிடித்து கூட்டத்தில் கசங்கி வரும்  லட்சக்கணக்கான மனிதர்கள் நெரிசலோடு குளிக்க குளிக்க அவர்களின் வேர்வை அந்த தேக்கிவைக்கப்பட்டு இருக்கிற நீரில் மாறி மாறிகலந்து கலந்து  தெய்வீக தீர்த்தமாகும்நாமும்  குளிக்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று அப்பாவி மனிதர்கள் மகாமகத்தை நோக்கி  இழுக்கப்படுகிறார்கள். அந்த ஒருநாள் குளித்தாகிவிட்டது. பிறவிப்பயனை அடைந்தாகிவிட்டது. பின்னர் மகாமகத்துக்கும், அந்த மக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.  மிகச்சரிதான்.  ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும்  தேர்தல் நேரத்தில் பக்தர்களை அந்த 'புண்ணிய' தீர்த்தத்தில் நீராட இழுக்கிறது  மகாமக கட்சிவெங்கையா நாயுடு சரியாகத்தான் சொல்லி இருந்தார்.

 

அடுத்த காட்சியில் காலமும் நேரமும் பிஜேபி பக்கம் இருப்பதாக சொல்ல வேண்டும்அவர்களே வெற்றிக்கு சொந்தக்காரர்கள் என்று மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

 

மக்கள் யார் பக்கம் என்றொரு நிகழ்ச்சி டிவியில் நடத்தப்பட்டது. நாகர்கோவில் தொகுதி குறித்து அலசப்பட்டது. கிறித்துவர்கள்தான் தீர்மானிக்கும் சக்தி என்று அவர்களுக்கே உரிய அரசியல் பார்வையை அள்ளித் தெளித்தார்கள். பா.. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனிடமும், சி.பி.எம் வேட்பாளர் பெல்லார்மின்னிடமும் பேட்டிகள் எடுக்கப்பட்டன. பொன்.ராதாகிருஷ்ணன் பொட்டு வைத்து  இருந்தார். மிகச்சரியான கோணத்தில்  காமிரா அவரைத் சாந்தசொரூபியாக காண்பித்தது. பெல்லார்மின் எங்கோ அலைந்து களைத்து வந்தவராக இருந்தார். காமிரா ஒரு மாதிரியாக மேலிருந்து எடுக்க, பெல்லார்மின் தலை பெரிதாகவும், உடல் சிறியதாகவும் தெரிகிறது. மீடியாக்காரர்கள் கவனமாகவும், நுட்பமாகவும் தங்கள் வேட்பாளர்களை மக்கள் மனதில் வடிவமைக்க முயன்றார்கள்.

 

பேட்டியில் பெல்லார்மின் அந்தத் தொகுதியில் குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லாமல் இருப்பதையும், தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். மத்தியில் பா.. அரசே இருந்தும், அதன் அமைச்சர்களில் ஒருவராக அவரே இருந்தும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி செய்யாததற்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பொன்.ராதாகிருஷ்ணன் சிரித்துக் கொண்டே "மக்கள் இந்துக்களாக இருக்கலாம். கிறித்துவர்களாக இருக்கலாம். மூஸ்லீம்களாக இருக்கலாம். அதில் எனக்கு பாகுபாடு கிடையாதுநான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டார். தனக்கு போட்டியாக இருப்பவர்களை  மக்களிடமிருந்து   அந்நியப்படுத்த பரிவாரங்கள் கையாளும் உத்தியில் பழுத்த பழமாக இருந்தார் அவர்.

 

சோனியா வெளிநாட்டுக்காரர் என்று பிரச்சாரம் செய்வதைப் போலத்தான் இதுவும். மக்களின் பிரச்சினைகளை முன் நிறுத்தாமல், தாங்கள்  பதவிக்கும், பொறுப்புக்கும் வருவதற்கு தகடு வைக்கிற வேலை அதுஅந்த நிகழ்ச்சியின் இறுதியில் திட்டமிடப்பட்ட காட்சி வந்தது. ஒரு ஜோஸ்யக்காரரிடம்  யார் ஜெயிப்பார்கள் என்று கேட்டார்கள்.  மேடு, பள்ளம், ராசி, கிரகம் எல்லாம் பார்த்து அவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நல்ல யோகம் இருப்பதாக அறிவித்தார். எதற்கு தேர்தல் கமிஷன். எதற்கு இத்தனை செலவுகள். எதற்கு இந்தியாவில்  கோடி கோடியாய் மக்கள் . பேசாமல் ஒரு ஜோஸ்யக்காரரிடம் போய் கிளி எடுத்துப்போடும் சீட்டுக்காக இந்திய ஜனநாயகம் காத்திருக்கலாம்.

 

மூடுமந்திர ஜாலங்களில் அடிப்படை பிரச்சினைகளை ஒளித்து வைக்கப் பார்த்தார்கள். வாக்காளர்களை புத்தி பேதலிக்கச் செய்யும் முறை அது. மோடி மஸ்தான்கள் கைகளில் இருக்கும் பொம்மையைப் போல ஜனநாயகம் தலையை ஆட்டிக் கொண்டு விழித்தது. ஆட்ட விதிகள் எதுவுமே இல்லாமல் பரிவாரங்கள் ஆடிய ஆட்டங்கள் எல்லாமே பயங்கரமானவை. அயோத்தியின் ராமரை கையிலெடுத்தார்கள். கார்கில் போரை முன்வைத்தார்கள். அந்த முறை முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் துருப்புச் சீட்டாய் வாஜ்பாய் இருந்தார்.

 

மாயாபஜாரில் "கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்' என்று தலையை உருட்டிப் பாடும் ரெங்காராவ் போல வாஜ்பாய் 'இந்தியா ஒளிர்கிறது', "இந்தியா ஒளிர்கிறது" என திரும்பத் திரும்ப  சொல்லிக்கொண்டு இருந்தார். லட்டுகளும், ஜிலேபிக்களும் அவரது வாயை நோக்கிப் போவதைப் போல அனிமேஷன் காட்சிகளை பரிவாரங்கள் வடிவமைத்துக் கொண்டு இருந்தார்கள்.

(தொடரும்) 

(இன்றும் நாளையும் புத்தகத்தை இலவசமாக அமேசானில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதற்கான லிங்க்: உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும்  )

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!