இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை பிறந்து விடுமென்று டாக்டர்கள் சொன்னதால், நான் சென்னையில் அம்முவின் வீட்டிலேயே லீவு போட்டு இருந்தேன். 1993 மார்ச் 4ம் தேதி காலையில் அம்முவுக்கு வலி வந்து அரற்றிய உடனே, அம்முவின் தந்தை எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு ஆட்டோவை வரவழைத்து அம்முவையும், என்னையும் மட்டும் அதில் அனுப்பி வைத்தார். அவருக்கு என் மீது இருந்த அன்பையும், நம்பிக்கையையும் அறிய முடிந்து நெகிழ்ந்த தருணங்களில் அது மிக முக்கியமானது.
ஆட்டோவில் என் உள்ளங்கையை அழுத்திப் பிடித்தவாறு அந்த நேரத்திலும் அம்மு என் கண்களைப் பார்த்து சிரித்தாள். எப்பேர்ப்பட்ட பெண் அவள்! அந்த ஆஸ்பத்திரியின் முன் அலுவலகத்துக்குச் செல்ல சில படிகள் ஏற வேண்டி இருந்தது. கிட்டத்தட்ட அம்முவை நான் தூக்கிக்கொண்டுதான் சென்றேன். வேகமாக பலர் சூழ்ந்து அவளை அழைத்துச் சென்றார்கள். ஜே.கே ஆஸ்பத்திரிக்கு போன் செய்திருக்க வேண்டும் என புரிந்து கொண்டேன்.
இரண்டு மூன்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார்கள். வெளியே தனியே நின்றிருந்தேன். அருகில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று சிகரெட்டாய் பிடித்துக் கொண்டு இருந்தேன்.
அரை மணி நேரம் போலத்தான் இருக்கும். ஒரு நர்ஸ் வெளியே வந்து, “சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது’ என்று சொன்னார். எனக்கு ஏனோ கண்ணீராய் வந்தது. அங்கேயே உட்கார்ந்து இருந்தேன். முதலில் என் அம்மாவுக்கு சொல்ல வேண்டும் என்றிருந்தது. அப்போது எந்த வசதியும் இல்லை. அம்முவின் வீட்டிற்கு போன் செய்து, ஜே.கேவிடம் (அவரை மாமா என்று ஒரு போதும் அழைத்தது இல்லை. அழைக்க விரும்பியதும் இல்லை.) சொன்னேன். சந்தோஷம் என்றார். ‘அம்மு எப்படி இருக்குறா?’ என்றார். “நான் இன்னும் பாக்கல” என்றேன்.
கொஞ்ச நேரத்தில் ஜே.கே அங்கு வந்து விட்டார். நர்ஸ் குழந்தையை கொண்டு வந்து அவரிடம் நீட்டினார். அவரோ என்னைக் காண்பித்தார். தூக்குவதற்கு எதோ பயமாய் இருந்தது. பார்த்துக்கொண்டே இருந்தேன். “தூக்குங்க சார்” என்றார் நர்ஸ். “இல்ல பரவாயில்ல..” என்று அந்த பிஞ்சுக் குழந்தையின் விரல்களை மட்டும் தொட்டுப் பார்த்து சிலிர்ப்படைந்தேன். ஜே.கே வாய்விட்டு சிரித்தார்.
குழந்தைக்கு தனது அம்மாவின் பேரை வைக்கும் எண்ணம் அப்பாவுக்கு இருப்பதாய் அம்மு சில நாட்கள் கழித்துச் சொன்னாள். நானோ, என் அம்மாவின் பேரை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அம்மு அதை ஜே.கேவிடம் சொல்லி இருக்க வேண்டும். அவர் அதுகுறித்து பின் எதுவும் சொல்லவில்லை. ஜோதி என்ற அம்மாவின் பெயரும் வருவதாய் ‘ஜோதிஷ்னா’ என்று அம்முவே பெயரை சூட்டினாள். பெயர் அதுவாக இருந்தாலும், பிரீத்து என்றே அழைத்தோம். அடுத்த சில நாட்களில், தனது சபையில், தன்னை பிரீத்து ’தாத்தாவாக்கி விட்டதாய்’ சொல்லி சிரித்தார்.
ஜோதிஷ்னாவின் குழந்தைப் பருவம், பள்ளிப்பருவம் எல்லாவற்றிலும் அம்முதான் நிறைந்து இருந்தாள்.
நானும் அம்முவும் வேலைக்கு போக வேண்டிய வார இறுதி சனிக்கிழமைகளில் பிரீத்துவுக்கு பள்ளி விடுமுறையாக இருக்கும். பிரீத்துவுக்கு மதிய உணவை ஒரு டிபன் பாக்ஸில் வீட்டின் வாசலில் வைத்துவிட்டு அம்மு தைரியமாக வேலைக்குச் செல்வாள். எனக்குப் பதற்றமாக இருக்கும். ‘அவள் இருந்து கொள்வாள்’ என அம்மு சாதாரணமாகச் சொல்வாள். அதே போல தெருவில் மற்ற குழந்தைகளோடு விளையாடிவிட்டு, சாப்பிடும் நேரம் மட்டும் வீட்டுக்கு வந்து டிபன்பாக்ஸில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு திரும்பவும் தன் வயதொத்த குழந்தைகளோடு விளையாடச் சென்று விடுவாள்.
தொழிற்சங்க வேலையாக, சமூகப் பணிகளாக நேரம் காலம் இல்லாமல் அலைந்து கொண்டு இருந்த நான், அந்த பெண் குழந்தைக்கு எப்படி என் நேரத்தையும், சிந்தனைகளையும் கடத்தினேன் என்று யோசித்துப் பார்த்தாலும் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு தடவை டிவி பார்த்துக் கொண்டு இருக்கும்போது நான் ரஜினியைக் கிண்டல் செய்யவும், ‘உங்களுக்குப் பிடிக்கலன்னா எனக்கும் பிடிக்கக் கூடாதா?” என்று சட்டென்று சொன்னாள். நான் முதல் முறையாக அவளைத் தள்ளி வைத்துப் பார்த்தேன். “எதையும் திணிக்காதீங்கப்பா’ என்றாள். நான் அமைதியானேன்.
இன்றைக்கு அவளுக்கும் ரஜினி குறித்து தெளிவான புரிதல் வந்து இருக்கிறது. அரசியல் ரீதியாக அவர் ஒருஅபத்தம் என்ற தெளிவு இருக்கிறது. அதே வேளையில் சின்ன வயதில் தன்னை குதூகலமாக்கிய ரஜினியை அவள் மதிக்கவும் செய்கிறாள்.
இந்தத் தெளிவு என்னிடம் அதற்கு முன்பு இல்லை. நான் ஒரு காலத்தில் ரசித்து, விரும்பி, கொண்டாடியவர்களிடம் இப்போது பலவீனங்களையோ, குறைபாடுகளையோ கண்டால் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கும் மனோபாவம்தான் கொண்டு இருந்தேன். அப்படி இருக்கக் கூடாது, இரண்டுமே அந்தந்த தருணத்தின், காலத்தின் உண்மைகள் என்பதை அவளிடம் கற்றுக் கொண்டேன்.
என் அம்மாவின் பேரில் இருக்கும் ‘ஜோதிஷ்னாவிடம்’ இப்படி நிறைய நான் கற்று இருக்கிறேன். என்னிடம் இருந்து என் மகள் கற்று இருப்பாளா என்று யோசிப்பதுண்டு. வருத்தப்பட்டதுண்டு. ஆனால் அவள் தனக்கான வாழ்வை பழக்கிக் கொள்கிற விதத்தில், பிரச்சினைகளை எதிர்கொள்கிற விதத்தில் என்னிடம் இருந்து தெரிந்து கொண்டதை, என்னை விடவும் சிறப்பாகவும், அழகாகவும் வெளிப்படுத்துவதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
பெண் குழந்தைகள் தினத்தில் அவளைப் பற்றிய நினைவுகள் இப்படியாக வந்து சென்று கொண்டு இருக்கின்றன.
வாழ்க பெண் குழந்தைகளே!
உங்கள் மொழி நடை, எழுத்தின் அசல் தன்மை, உள்ளத்தின் மைதொட்டு எழுதும் நேர்மை இவை எப்போதும் அழகான படைப்புகளையே வழங்கும். இந்தக் குறுங்கட்டுரை, உங்கள் மகள் பற்றிய சித்திரம் என்று வரைய ஆரம்பித்திருப்பீர்கள்.... உங்கள் மகளின் பிஞ்சு விரல்கள் பற்றி உங்களை நீங்களே வரைய வைத்திருக்கிறாள் அவள். பளிச்சென்று தெரிகின்றன அவள் விரலும், உங்கள் முகமும்.
பதிலளிநீக்குஎஸ் வி வேணுகோபாலன்
After long time I read your post
பதிலளிநீக்குநானும் வாழ்த்துகிறேன்.!!!
பதிலளிநீக்கு