2014 பாராளுமன்ற தேர்தலில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில். 7ம் நம்பர் வீட்டை அடையக் கூடிய முக்கிய அரசியல் தலைவர்களின் பிம்பங்களை காவியமாக்கும் தன்மையில் அந்த தொடரின் அத்தியாயங்கள் அமைந்திருந்தன. பரந்து விரிந்த இந்திய நிலப்பரப்பின் மீதும் மக்களின் மீதும் செல்வாக்கும், அதிகாரமும் செலுத்தக் கூடிய மனிதர் இவர்களில் ஒருவர் என்று ஆவலைத் தூண்டுவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாராம்சம்.
மொத்தம் பதினைந்து எபிசோட்களில், நரேந்திர மோடிக்கு ஆறு, ராகுல் காந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தலா இரண்டு, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, மாயாவதி, முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா ஒன்று என முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தங்கள் உள்ளமும் அறிவும் கவர்ந்த எழுத்தாளரின் உள்ளக் கிடக்கையை வாசக பெருமக்கள் பார்த்தார்கள்.
ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது
முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது.
அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள்.
அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்குதான் இருக்கின்றன. அவ்வகையில் நரேந்திர
மோடியின் கடந்த காலம் பலருக்கும் அறியப்படாமல் இருந்ததால் அல்லது அதிகமாக சொல்லப்பட
வேண்டி இருந்ததால் அவருக்கு மட்டும் ஆறு எபிசோட்கள் என்றும் அந்த முக்கியத்துவத்தை
புரிந்து கொள்ளலாம்.
நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்பவர் குஜராத்தில் இப்போதும் ஒரு டீக்கடை நடத்திக்கொண்டு இருப்பவராக வைத்துக் கொள்வோம். அசாமிலோ, தமிழ்நாட்டிலோ உள்ள டீக்கடைகளில் யாராவது அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கப் போகிறார்களா? அவர் என்ன படித்தார், யசோதா பென்னோடு ஏன் சேர்ந்து வாழவில்லை என்றெல்லாம் யாராவது சிந்திக்கப் போகிறார்களா? அவரது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாமே அவருக்கும், அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்தவையாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்டவையாகவும் இருந்திருக்கும்.
‘அவரே இனி இந்தியாவின் பிரதமர்’ என பெரும் சத்தத்தோடு சங்கு ஊதப்பட்டது. எல்லோருக்கும் சம்பந்தப்பட்ட மனிதராகிவிட்டிருந்தார். அவரை கடுமையாக எதிர்த்தும், கடுமையாக ஆதரித்தும் எங்கும் பேசப்பட்டது. அவரது கொள்கைகள், பார்வைகள், சிந்தனைகள், தத்துவங்கள், அனுபவங்கள் எப்படிப்பட்டவை என ஆராயாமல், அவரது தனிப்பட்ட குண நலன்கள்கள், இயல்புகள், வாழ்க்கை குறித்த அலசலாக மாற்றி, அவரை நாயகனாக்கும் காரியங்கள் கார்ப்பரேட் மூளைகளில் இருந்து அரங்கேறிக் கொண்டு இருந்தன. அதில் ஒரு எபிசோட்தான் சேட்டன் பகத்தின் ’7 RAC’ தொடர். சைரன் பொருத்திய காரொன்று வாசல் திறக்க ஒரு ஒரு மாளிகை நோக்கி பயணிக்கும் காட்சியுடன் துவங்கியது.
அறிந்திராத பல தகவல்களால் மோடி வடிவமைக்கப்பட்டிருந்தார். “டீ விற்றவர் பிரதம வேட்பாளராக..” என்ற
பின்னணிக்குரலில் மனதை கவ்வும் ஈர்ப்பு இருந்தது. மோடி பிறந்த வட நகர், அவர்
பிறந்த வீடு, படித்த பள்ளி என தொடர்ந்த காட்சிகள் ஆழ்ந்து போக வைத்தன. மோடிக்கு
நெருக்கமானவர்கள், மோடியை அறிந்தவர்களின் உரையாடல்கள் அரூபமான இசைச் சேர்க்கையோடு
பார்வையாளர்களை தன்னிலை இழக்க வைத்தன.
அப்படித்தான் மோடியின் பள்ளி நண்பர் சுதிர் மிஸ்ரா போகிற போக்கில்
அந்த தகவலைச் சொன்னார். தனது பதினான்காவது
வயதில் பள்ளியில் நடந்த லீடருக்கான
தேர்தலில் கலந்து கொள்ள மோடி ஆசைப்பட்டாராம். அவருக்கு ஏன் இந்த வேண்டாத ஆசை என பள்ளியில்
பலரும் எடுத்துரைத்தார்களாம். நண்பர்களேக் கூட அவருக்கு ஆதரவு
தெரிவிக்கவில்லையாம். மோடி உறுதியோடு தேர்தலில் நின்றாராம். வெற்றி பெற்றாராம்.
இதைச் சொல்லி, மோடி மிகுந்த மன உறுதி கொண்டவர் என்றும், தான் எடுத்த முடிவில்
இருந்து பின் வாங்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.
இதை கேள்விப்பட்டவுடன் பிரதம வேட்பாளராக மோடி எப்படி ஆனார், கூட்டணிக்
கட்சியில் மற்றவர்கள் எதிர்த்தபோதும், அத்வானி போன்ற மூத்த தலைவர்களே ஆதரிக்காத
போதும் எப்படி மோடி தன்னை முன்னிறுத்திக் கொண்டார் என்பதெல்லாம் உள்ளுக்குள்
ஓடலாம். இங்கு சொல்ல வருவது அவ்வளவு முக்கியமான விஷயங்கள் இல்லை. மிக மிக
சாதாரணமான, அல்லது அல்பமான ஒன்றுதான்.
தேர்தல் முடிந்து, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி நாட்டின் 14வது பிரதமராக
பதவியேற்று ஒருவருடம் கழித்து நடந்த சம்பவம் இது. 2015ம் ஆண்டு செப்டம்பர் 5ம்
தேதி ஆசிரியர்கள் தினத்தில் ‘பிரதமர் தனது நாட்டின் குழந்தைகளோடு
கலந்துரையாடுகிறார்’ என பெரும் விளம்பரங்களோடு நிகழ்ச்சியொன்று ஏற்பாடு
செய்யப்பட்டது. கருமமே கண்ணாய் அது குறித்து செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்து
வெளியிட்டு பரபரப்பையும், ஆர்வத்தையும் தூண்டின. தூர்தர்ஷனில் நேரடி ஓளிபரப்பு
இருப்பது குறித்து பள்ளிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அனைத்துக் குழந்தைகளையும்
பார்க்க வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டன.
மத்திய அரசின் மனித வளத்துறை வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி இருந்தது.
டெல்லியில் மானெக்சா ஆடிட்டோரியத்தில், ஆயிரக்கணக்கில் திரட்டப்பட்ட
பள்\ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கலந்துரையாடல் காலை 10 மணிமுதல் 11.15
வரை நடைபெற்றது. இந்தியப் பெருநகரங்களில் குறிப்பிட்ட மையங்களில் பெரிய திரைகளில்
கவனிக்கவும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவும் உட்கார வைக்கப்பட்டு இருந்தார்கள்
குழந்தைகள். எல்லாம் முன்கூட்டியே
திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன..
நாடாளுமன்றத்திலோ, வெளியே நிருபர்களிடமோ எந்தக் கேள்விகளையும் எதிர்கொள்ளாத,
அவைகளுக்கு பதிலளிக்காத பிரதமர் மோடி நாட்டின் இளம் தலைமுறை கேட்ட கேள்விகளுக்கு
அன்று பதில் அளித்தார்.
“அரசியல் மிகக் கஷ்டமானதா? நீங்கள் எப்படி அதன் மன அழுத்தத்தை
சமாளிக்கிறீர்கள்?” பள்ளி மாணவன் ஒருவனின்
கேள்வி இது.
“அரசியல் ஒரு தொழில் அல்ல. சேவை என்று எடுத்துக் கொண்டால் அழுத்தமே
வராது. தேசத்தின் மக்கள் அனைவரும் என் குடும்பம். அவர்களின் சந்தோஷம் என்
சந்தோஷம். அவர்களின் வேதனை என் வேதனை.”
அப்பழுக்கற்ற எல்லோருக்குமான மனிதராக தன்னை முன்னிறுத்திக் கொண்டார் மோடி.
“ஒரு புத்திசாலி மாணவன். ஒரு சோம்பேறி மாணவன். ஒரு சராசரி மாணவன். ஒரு
டீச்சராக யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” இன்னொரு மாணவன் கேள்வியை
முன்வைத்தான்.
“எல்லா மாணவர்களும் டீச்சருக்கு சொந்தம். ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை
இருக்கிறது. நான் ஒரு ஆசிரியராக இருந்தால் பாகுபாடு காட்ட மாட்டேன்” என்று இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய
பாரம்பரியத்தையும் உயர்த்திப் பிடித்தார் மோடி. ஒவ்வொரு கேள்விக்கும், மிக
நிதானமாக, சாந்த சொருபியாய், ஒரு ஞானியைப் போல பேசினார். நாட்டின் பிரதமராக இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த
கவனத்தோடு பேசுவதாகவும் அப்போது தெரிவித்தார்.
மேலும் கேட்கப்பட்ட ஒன்றாக “சிறு வயதில் எப்போதாவது நீங்கள்
பிரதமராகும் கனவு கண்டதுண்டா? உலகம் முழுவதும் அறியமுடிந்த ஒருவராய் இருப்போம் என
நினைத்ததுண்டா?” ஒரு மாணவனின் குரல் ஒலித்தது.
லேசாக சிரித்துக் கொண்டே “நான் நினைத்ததே இல்லை. பள்ளியில் லீடராகும்
போட்டியில் கூட கலந்து கொண்டது இல்லை” என்றார் மோடி.
”நான் நினைத்ததே இல்லை.” என்பது வரைக்கும் உண்மை. இந்திரா
காந்தியிடமோ, ராஜீவ் காந்தியிடமோ, ராகுல் காந்தியிடமோ இந்தக் கேள்வி
கேட்டிருந்தால் வேறு பதிலை எதிர்பார்க்கலாம். 2001 அக்டோபர் 1ம் தேதி, அன்றைய
பிரதமர் வாஜ்பாய் அழைத்து, “நீங்கள் குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் “
என்று சொல்லும் வரைக்கும் அப்படியொரு எண்ணம் மோடிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.
அதற்காக பள்ளியில் லீடராகக் கூட ஆசைப்பட்டதில்லை என்று சொன்னதுதான் நெருட வைத்தது.
சேட்டன் பகத்தின் நிகழ்ச்சியில் மோடியின் நண்பர் சொன்னதற்கும், பள்ளிக்
குழந்தைகளிடம் மோடி சொன்னதற்கும் உள்ள முரண்பாடு வெளிப்பட்ட இடமாக அந்த பதில்
இருந்தது. ஒன்று, பிரதமர் நரேந்திர மோடி சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது
அவரது பள்ளி நண்பர் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். பள்ளி நண்பர் மிகச்
சாதாரணமானவர். அவர் மோடி குறித்து பொய் சொல்லத் தேவையில்லை. பொய் சொல்லவும்
முடியாது. மோடியைப் பற்றி அவருக்குத் தெரிந்தவர்களின் இயல்பான உரையாடல்களின் மூலம்
ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பவே சேட்டன் பகத் போன்ற ஒரு எழுத்தாளர் முயன்றிருப்பார்.
ஆக, பொய் பேசியது மோடி என்பதை உணர முடியும். அது குறித்து பொதுவெளியிலும், இணையத்திலும் விவாதங்கள்
எழுந்தன. ‘இது ஒரு பெரிய விஷயம் போல ஏன் பேச வேண்டும்’, ’ஒரு சாதாரண விஷயத்தை ஏன்
கிளறுகிறீர்கள்”, ‘மோடியின் மீது
உங்களுக்கு இருக்கும் வெறுப்புத்தான் தெரிகிறது” என மோடியின் ஆதரவாளர்கள்,
திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
அவர்கள் எல்லாம் பெரிய மனுஷன்கள் போலவும், இதுகுறித்து பேசுகிறவர்கள்
அல்பர்கள் போலவும் காட்டிவிட்டு கடந்து விட முனைந்தார்கள். நரேந்திர தாமோதர்தாஸ்
மோடி இந்த நாட்டின் பிரதமர் என்பதையும், அவர் வகிக்கும் பதவிக்கும் பொறுப்புக்கும்
இருக்க வேண்டிய தன்மை குறித்தும் அவர்கள் கவலைப்படவில்லை.
பிரதமரின் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படைத்தன்மையும், உண்மையும் இருக்க
வேண்டும் என தேசத்தின் சாமானிய மக்கள் எதிர்பார்க்கவே செய்வார்கள். அந்த பிரக்ஞையற்றவர்களாய் அவர்கள் மோடிக்கு வக்காலத்து
வாங்கிக் கொண்டு இருந்தார்கள்.
மிகச் சிறிய விஷயத்தில் கூட இப்படி பொய் சொல்கிறவர், இந்த தேசத்தின்
மிக முக்கிய காரியங்களிலும், பிரச்சினைகளிலும் எவ்வளவு பொய்களைச் சொல்வார் என்ற
கேள்விகள் இயல்பாக எழத்தான் செய்யும்.
அந்த கேள்விக்கு ““நான் பிரதமராக நினைத்ததே இல்லை. ஆனால் பள்ளியில் லீடராகும் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன்”
என்று புன்னகைத்துக் கொண்டே உண்மை பேசுவதில் என்ன குறைந்து விடப் போகிறார்.
பதவிக்கும், அதிகாரத்துக்கும் எப்போதும் ஆசைப்படாதவராய்,
மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காய் தன்னைத் தேடி வந்த பொறுப்புகளை ஏற்றுக்
கொண்டவராய் காட்டிக் கொள்ள நரேந்திர மோடி நினைத்திருக்க வேண்டும்.
ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு உண்மையானவராய், நேர்மையானவராய்
செயல்படுவதன் மூலமே தன்னை அவ்வாறு நிலைநாட்ட ஒருவர் முயற்சிக்க வேண்டும். வெறும்
வாய் வார்த்தைகளாலேயே தன் பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கம்தான் உண்மையில்
அல்பத்தனமானது. உண்மைக்கு மாறாக தன்னை பொதுவெளியில் நிலைநிறுத்த முயற்சிப்பது
அருவருப்பானது,.
அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தேசத்தின் உயர்ந்த
பீடத்தில் இருந்து கொண்டு, அவரை அண்னாந்து பார்க்கும் குழந்தைகளிடமா அப்பட்டமாகப்
பொய் சொல்வது?
”தரையில் ஊர்ந்து செல்லும் எறும்பொன்றை அவன் கைகளால் நசுக்கிக்
கொன்றான். அதை அவன் பின்னால் இருந்து ஒரு குழந்தை உற்றுப் பார்த்துக் கொண்டு
இருந்தது.’ என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒருதடவை பகிர்ந்த ஜென் கவிதையை நினைக்கும்
போதெல்லாம் இனம்புரியாத ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு உணர்வை மோடியின்
இந்தப் பொய் தந்தது.
2014ல் மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கியவர்களில் ஒருவரான சேட்டன்
பகத், 2021 மே மாதத்தில் என்.டி.டிவியில் ”மோடியின் பிம்பத்திற்கு இப்போது
ஆக்ஸிஜன் நெருக்கடி வந்திருக்கிறது” என்று சொன்னார். மோடியின் தொடர்ந்த பொய்களும்,
புரட்டுகளும் தந்த அச்சம், அந்த எழுத்தாளரை அப்படி பேச வைத்திருக்க வேண்டும்.
( அம்பலப்படுத்துவது தொடரும் )
- பாரதி புத்தகாலயத்தின் இணையத்தில் எழுதி வெளிவந்து கொண்டிருக்கும் தொடரின் முதல் அத்தியாயம் இது
வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்