தமிழ்நாடு கிராம வங்கியை சீர்குலைக்கும் அதன் நிர்வாகம்!

சட்டம், ஒழுங்கு, தார்மீக நெறிகள் அனைத்தையும் மீறி காட்டு தர்பார் நடத்திக் கொண்டு இருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்.
பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றாக இணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்படத் துவங்கி இரண்டு வருடங்கள் ஆகி விட்டன.
இன்னமும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்களை செய்து தர மறுக்கிறது. NEFT, RTGS மூலம் வாடிக்கையாளர் பணம் அனுப்பினால் பெரும்பாலும் காலதாமதம் ஆகிறது. சில சமயங்களில் வாரக்கணக்கிலும் போய்ச் சேருவதில்லை. வாடிக்கையாளர்கள் கிளையில் பணிபுரிகிற ஊழியர்கள் அலுவலர்களிடம் கோபம் கொள்கிறார்கள். அதுகுறித்து சங்கங்கள் பேசினல் நிர்வாகத்துக்கு பிடிக்காமல் போகிறது.
Google Pay மூலம் பணம் செலுத்த தேடினால் தமிழ்நாடு கிராம வங்கியின் பெயரே இருக்காது. மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் மிகச் சிறிய கிராம வங்கிகளில் கூட இந்த வசதி இருக்கிறது. நிர்வாகத்திடம் பலமுறை சங்கங்கள் பேசிப் பார்த்தும் பிரயோஜனமில்லை.
வங்கியின் வணிகத்தில் கணிசமான பகுதி என்.ஜீ.ஓக்கள் மூலம் நடத்துகிறது. அங்கங்கு என்.ஜீ.ஓக்கள் குழுக்களிடம் வசூல் செய்துவிட்டு, வங்கிக்கு பணம் கட்ஆவேசமாநகழ்வுகள் அதிகமாகி வருகின்றன. தொலைக்காட்சிகளில் கூட என்.ஜீ.ஓக்களுக்கு எதிராகவும், வங்கிக்கு எதிராகவும் மக்கள் கோபமாக போராடிய காட்சிகள் வெளியாகின. அந்த என்.ஜீ.ஓக்கள் மக்களை கட்டணம் என்ற பேரில் கொள்ளை அடிக்கின்றன. இது சரியல்ல என்று சங்கங்கள் பேசினால் நிர்வாகத்துக்கு கோபம் வருகிறது.
கோவிட் பெருந்தொற்று தீவீரமாக இருந்த நேரங்களில் பொதுப் போக்குவரத்து இல்லாமல் கிராமங்களுக்கும், தொலைதூரங்களுக்கும் செல்ல முடியாமல் பெண் ஊழியர்கள் உட்பட பலரும் தவித்தபோது, நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இல்லாமல், பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தது.
இன்னும் தமிழ்நாடு கிராம வங்கிக்கு என்று ஒரு அடிப்படை ஆவணமான Book of instructions கிடையாது. ஏராளமான புதிய ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு வங்கியின் நடவடிக்கைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்த எழுத்து பூர்வமான வழிகாட்டி இல்லை. அவ்வப்போது உயரதிகாரிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பவே அவர்கள் செயல்பட வேண்டிய அவல நிலை தொடர்கிறது.
வாடிக்கையாளர் நலன் கருதி, ஊழியர்கள் நலன் கருதி சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் மீது Regional Labour commissioner (central) முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகம் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி மொழி அளித்தது. அதன் பேரில் எழுத்து பூர்வமான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒன்பது மாதங்களாகியும் நிர்வாகம் அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தவில்லை.
வங்கிக்கு விரோதமான, ஊழியர்களுக்கு விரோதமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தியதால் ஆத்திரம் கொண்ட நிர்வாகம் சங்கங்களுக்கு சந்தா பிடித்தம் செய்து கொடுக்கும் செக்-ஆப் வசதியை சட்ட விரோதமாக நிறுத்தியது. அதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தடையுத்தரவு வந்த பின்னரும், அதனை மதிக்காமல் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கிறது.
முற்றிலும் இளம் தோழர்கள் தலைமையில் இயங்கத் துவங்கி இருக்கிற தொழிற்சங்கங்களை அழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அராஜகங்களை கட்டவிழித்து கொண்டிருக்கிறது.

அதனை எதிர்த்து இன்று- தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலர்களும், ஊழியர்களும் இணைந்து வேலை நிறுத்தம் நடத்துகின்றனர்.

எங்கே அடக்குமுறைகள் கட்டவிழித்து விடப்படுகிறதோ, அங்கு அதனை எதிர்த்த போராட்டங்களும் இடைவிடாமல் எழுந்தே தீரும்!
 


கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!