புத்தரைப் பார்த்தேன்
குழந்தை மொழி

 

வன் அந்தச் செடியின் இலைகளைப் பறித்துக் கொண்டிருந்தான்.  அக்கா பார்த்து விடுகிறாள்.

“ஏன் இலைகளைப் பிய்த்துப் போடுகிறாய். இப்படிச் செய்யக் கூடாது என்று எத்தனை தடவை உனக்கு நான் சொல்லியிருக்கிறேன்” சத்தம் போட்டாள்.

 இலைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 “பார்...இந்தச் செடி அழுகிறது”. பாவம் போல குரலை வைத்துக் கொண்டு அவள் சொன்னாள்.

 “செடி அழுகிறதா?”

 “ஆமாம். அதுதான் கண்ணீர்”

 அருகில் சென்றான். செடியின் காம்புகளில் பால் போன்ற திரவம் சொட்டிக்கொண்டிருந்தது. அவனது பிஞ்சு விரல்கள் அதைத் தொட்டுப் பார்த்தன. கன்னம் சுருங்க ஆரம்பித்தது. அண்ணாந்து அக்காவைப் பார்த்தான். அடிபட்டது போல முகம் துடித்தது. கண்கள் கலங்கின.

 “அக்கா, இந்தச் செடியை சிரிக்க வையேன்”

 “செடியை நீதான் அழ வைத்தாய். நீயே சிரிக்க வை.”

 “எனக்கு சிரிக்க வைக்கத் தெரியலயே”.

 அவன் சத்தமாய் அழ ஆரம்பித்தான்.

 “அக்கா, ப்ளீஸ்... செடியை சிரிக்க வையேன்”

 “காற்று வீசினால் செடி சிரிக்கும்.”அக்கா சொன்னாள்.

 அவன் செடியை நோக்கி ஊதிவிட்டுக் கேட்டான்.  “அக்கா செடி சிரிக்கிறதா”.

 ****

ஒன்றுமில்லை அது

 

னியாக சிந்திக்கும்போதும், இன்னொருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போதும்  நீங்கள் அதனை கைகளால் வெறுமனே உருட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். 

 குழந்தைகளோ கண்கள் விரிய பார்க்கிறார்கள். மேகங்கள், பூக்கள், நீர்ச்சுழிவுகள் எல்லாம் அசையாமல் உள்ளே இருக்கின்றன. வண்ணச் சிதறல்கள் வெடித்து அழகழகாய் சிந்திக் கிடக்கின்றன. அவற்றைப் பிடித்துவிட குழந்தைகளின் விரல்கள் தடவுகின்றன. அப்படியே அதை  விழுங்கிவிட ஆசை கொள்கிறார்கள்.  உறைந்த நீர் போலிருக்கும் அதற்குள் புகுந்து  அதிசயங்களைக் காணத் துடிக்கிறார்கள்.  மீன்களாகவும், பறவைகளாகவும் உருமாறுகிறார்கள்.

 பெரும் ஆர்வத்தோடு உங்களிடம் கேட்கிறார்கள், “இது என்ன முட்டை” .

 பெரியவர்கள் நீங்கள் அலட்சியமாய் திருத்துகிறீர்கள், “ஒன்றுமில்லை அது. பேப்பர் வெயிட்” .

 ***

ரெயிலைக் காணோம்

 

றவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று  ரெயிலில் முன்பதிவு செய்து வைத்தான் அவன். “ரெயிலைப் பார்க்க வேண்டும், ரெயிலைப் பார்க்க வேண்டும்”  என ரொம்ப நாளாய்ச் சொல்லிக்கொண்டு இருந்தாள் அந்தக் குழந்தை.

 

“இன்னும் எத்தனை நாளிருக்கு” என  ஒவ்வொரு காலையிலும் ரெயிலைப் பார்க்கக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

போகும் நாளன்று சீக்கிரமே ரெயில் நிலையத்திற்கு சென்று விட்டிருந்தார்கள். 

 

தண்டவாளங்களைப் பார்த்தபடி, “இதிலா ரெயில் வரும்” என ஆச்சரியத்தோடு கேட்டாள். ரெயில் வரும் திசையைக் கேட்டு, அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். இரைச்சலோடு தூரத்தில் சின்னப் புள்ளியாய்  இருந்து  மெல்ல மெல்ல பெரிதாவது அதிசயம் போலிருந்திருக்க வேண்டும். அதை நோக்கிக் கையைக் கையை நீட்டியவளைத் தூக்கி  வைத்துக் கொண்டாள் அம்மா. 

 

‘தடக்’ ‘தடக்’கெனக்  கடந்து நின்ற அந்த நீண்ட  இயந்திரம் பார்த்து  ‘ரெயில் ’, ‘ரெயில்’ எனக் கத்தினாள்.

 

ரெயிலின் உள்ளே ஏறிக் கொண்டார்கள்.  உட்கார இடம் பார்ப்பதில், சாமான்களை  பத்திரமாக வைப்பதில் அவனும் அவளும் கவனமாக இருக்கும்போது குழந்தை எதேதோ பேசிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் ரெயில் புறப்பட்டது.

 

“நாம இப்போ ரெயிலில் போறோம்” என்றான் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் மகளைப் பார்த்து.

 

“ரெயிலைக் காணோம்” என வெளியே கை நீட்டியபடி குழந்தை அழ ஆரம்பித்தாள்.

 ***

ஆண் -பெண்

            

டற்கரை மணலில் அவனும், அவளும் உட்கார்ந்திருந்தார்கள்.         

அவன் பேசும்போது, அவள் மணலில் எழுதிகொண்டு இருந்தாள்.              

அவள் பேசும்போது, அவன் அதை அழித்துக்கொண்டு இருந்தான்.

 ***

 சினிமாப் பித்தம்

 வெளியே சன் மியூசிக்கில் சிம்ரன் கைகளைத் தூக்கியபடி ஆடிக்கொண்டு இருந்தாள். அந்த வார குமுதத்தின் அட்டையில் ஸ்ரேயா கையில்லாச் சட்டையில் சிரித்துக்கொண்டு இருந்தாள்.

 உள்ளே முதலிரவில் அவன் மோசம் போயிருந்தான். ஐந்து வருடம் காதலித்தவளுக்கு அக்குளில் முடிபார்த்து, அப்படி இருக்கவே  முடியாதென்பதாய் அருவருப்படைந்தான்.

 நாலும் தெரிந்தவன் அவன். நாகரீகமானவன் அவன்.

 ***

பரவாயில்லை

 

பஸ் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் ஜன்னல் வழியே வந்த மார்கழி இரவின் காற்று கடுமையாக வாட்டியது. தன் ஜன்னல் பக்கம் இருந்த கண்ணாடியை இழுத்து விட்டுக்கொண்டான். குளிர் விடவில்லை. முன் சீட்டின் பக்கம் திறந்திருந்த ஜன்னல் வழியே காற்று சாடியது. அதையும் பின்னிருந்து இழுத்துத் தள்ளினான். அப்பாடாவென்றிருந்தது..

சட்டென்று முன் சீட்டில் இருந்த இளம் பெண் வேகமாக கண்ணாடியைப் பின்னுக்குத் தள்ளி தன் ஜன்னல் அருகே முகம் காட்டி மெய்மறந்தாள்.

 

“பாப்பா. ரொம்பக் குளிருது. ஜன்னலை சாத்தலாமா?” என்றான்.

 

“என் ஜன்னல். எனக்கு காத்து வேணும்” என்றாள் வெடுக்கென.

 

அவள் பேசிய விதமும், முகத்தில் தெரிந்த சிறு கோபமும் ரசிக்க வைத்தன. புன்னகைத்துக் கொண்டான். ஆனால் குளிர் தாங்க முடியாமலிருந்தது. ’இன்று தூக்கம் அரோகராதான்’ என அவஸ்தை கொண்டான்.

 

பத்து நிமிடம் கழித்திருக்கும். அவள் திரும்பி, “ ரொம்பக் குளிருதா” என்று கெஞ்சுவது போலக் கேட்டாள்.

 

“இல்லம்மா. பரவாயில்லம்மா” என்று திரும்பவும் புன்னகைத்தான். அவளும் புன்னகைத்தாள்.

 

கண்ணாடியை முன்னுக்குத் தள்ளி ஜன்னலை சாத்திக் கொண்டாள்.

 

“பரவாயில்லை. திறந்திருக்கட்டும்” என்றான் அவன்.

.

“பரவாயில்லை மூடியிருக்கட்டும் ” என்றாள் அவள்.

 ***

நாய் படுத்தும் பாடு

 

ஒரு பழைய துணியோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறது அந்த நாய்.

 வாயில் கவ்விக்கொண்டே கொஞ்ச தூரம் ஓடும். கிழே ;போடும். ஓரிடத்தில் அமைதியாகி, நாக்கு வெளியே தள்ளி மூச்சிறைக்கும். முகர்ந்து பார்க்கும். தள்ளிப் போய் முறைத்துப் பார்க்கும். .பதுங்கும். பின்னங்காலால் மண்ணள்ளிப் போடும். உர்ரென்று துணி மீது பாயும்.. திரும்பவும் கவ்வி, எதோ குழறியபடியே தன்னையே சுற்றும். அப்படியே உட்கார்ந்து ஒரு வெற்றி வீரனைப் போல கம்பீரமாய் தெருவைப் பார்க்கும். சட்டென எழுந்து அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தலையை ஆட்டி துணியைக் கிழித்து எறிய் முயலும். எதோ ஒரு அசைவில் துணி தலையைச் சுற்றிக் கொள்ளவும், அரண்டு போய் வாள் வாள் என கத்திக்கொண்டே அங்குமிங்கும் ஓடியலையும். தலையை மண்ணில் கவிழ்த்தபடியே கொஞ்ச நேரம் அசையாமல் நிற்கும். உதறும். துணி கீழே விழுந்ததும் எட்டிப் போய் நிற்கும். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு பாவம் போல விழிக்கும். தலையை சரித்துக்கொண்டு மீண்டும் துணி அருகில் வரும்.

 அசையாமல் கிடந்த அந்தத் துணி நாயின் உயிரை வாங்கிக் கொண்டிருந்தது.

 ***

 இதுபோல நான் எழுதிய சொற்சித்திரங்களையெல்லாம்  ‘புத்தரைப் பார்த்தேன்’ என்னும் தொகுப்பாய் Notion press மூலம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

 கீழ்கண்ட தளங்களில் புத்தகம் கிடைக்கிறது.


 - Amazonநன்றி.


கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!