வணக்கம்.
2008 செப்டம்பர் 25ம் தேதி தீராத பக்கங்களில் எனது முதல் பதிவை எழுதி இருந்தேன். ஐந்தரை வருடங்கள் தொடர்ந்து இந்த பக்கங்களிலேயே என் சிந்தனைகளை பகிர்ந்திருந்தேன். 2014 மே 1ம் தேதி எழுதியதற்கு பின் இங்கு வரவில்லை.
பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தது போல blog இல்லை. வெறிச்சோடித் தெரிகிறது. சமூக வலைத்தளங்கள் வெவ்வெறு வடிவங்களில், தன்மைகளில் நிறைந்து இருக்கின்றன. உடனடியாக, சின்னச் சின்னச் சின்னதாய், சட் சட்டென்று உரையாடுவதாய், பகிர்வதாய் பெருகி விட்டன.
இருந்தாலும் பிளாக்கர் உலகம் போல் சுவாரசியமும், ஒரு நிறைவும், பரந்த வெளியும் கொண்டவைகளாய் மற்றவை இல்லை என்றே தோன்றுகிறது.
எவ்வளவோ நண்பர்கள், எவ்வளவோ அரட்டைகள், விவாதங்கள் என கடந்த காலம் ததும்பி கிடக்கிறது இங்கு. மற்றவர்களை மட்டுமல்ல நம்மையும் அறியவும் பகிரவுமாய் இருந்த ஒரு வசந்த காலம் அது.
நிறைய நினைவுகளோடு அங்கங்கு உலவிப் பார்த்தேன். பக்கங்கள் எதுவும் பழையதாய் இல்லை. புதுசாகவே இருக்கின்றன.
முதன் முதலில் பிளாக் எழுத ஆரம்பித்த அதே செப்டம்பரில் அதே நாட்களில் - 12 வருடம் கழித்து மீண்டும் இங்கு வரத் தோன்றியதும், வாய்த்ததும் எதோ ஒரு காரணத்துக்காக என்றுதான் நினைக்கிறேன்.
இன்னும் சரியாக ஏழு மாதங்களில் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், இங்கு கொஞ்சம் ஆசுவாசமாக வர வாய்ப்பிருக்கிறது.
மீண்டும் இங்கு எழுத ஆரம்பிக்க வேண்டும்.


No comments: