இட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி!






நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்.

இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில்,  Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக்கிறது. இண்டர்வியூக்கு ஏற்கனவே நடந்த written exam அடிப்படையில் அழைக்கப்பட இருக்கின்றனர்.  மொத்த மார்க்குகள் 200.  இண்டர்வியூக்கு அழைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட  cut-off மார்க்குகள் இப்படி இருக்கிறது.

SC/ST category - 112
OBC category - 123
General Category - 108

இது நடக்கிற தேசம், இந்தியா.
அந்த வங்கி, பாண்டியன் கிராம வங்கி.
இண்டர்வியூ நடக்க இருக்கிற நாள், 3.5.2014.

இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி குறித்தும் மிகத் தீவீரமாக உரையாடும், இயங்கும் ஒரு தேசத்தில்தான் அப்பட்டமாக இப்படி மோசடி நடக்கிறது.

இதுகுறித்த எந்தத் தகவலையும் வங்கியின் வெப்சைட்டில், வெளிப்படையாக அறிவிக்காமல், குறைந்த பட்சம் ஐந்து நாட்கள் அவகாசத்தில், சம்பந்தப்பட்ட candidateகளுக்கு மட்டும் தகவலைத் தெரிவித்து, அவசர அவசரமாக இண்டர்வியூ நடத்த பாண்டியன் கிராம வங்கி துணிகிறது.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தில் நான் பொதுச்செயலாளராக இருப்பதால், பல தோழர்கள் தாங்கள் வாங்கிய மார்க்குகள் குறித்தும், தாங்கள் சார்ந்திருக்கிற category  குறித்தும் சொல்லவும்தான் இந்த குழப்பம் கவனத்திற்கு வந்தது. விசாரிக்க ஆரம்பித்த போது, இந்த மிகப் பெரும் மோசடி வெளிப்பட்டது.

மொத்தம் 100 ஆபிஸர்களுக்கு இந்த பணிநியமனம் நடைபெறுகிறது. Govt.of Indiaவின் Reservation Policy பிரகாரம் இட ஒதுக்கீடு கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.

SC - 15 %
ST - 7.5%
OBC 27.5 %
General - 50%

முதலில் SC/ST categoryஐ சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப  அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.

அடுத்ததாக OBC categoryஐ சேர்ந்தவர்களில், எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.

இறுதியாக இந்த இரண்டு categoryயிலும் இல்லாத General categoryயில் எத்தனை பேர் தேவைப்படுமோ, அதற்கேற்ப அவர்களுக்குள் ஒரு cut-off mark முடிவு செய்யப்படுகிறது.

General categoryயில் அதிகமான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால், அவர்களுக்குரிய cut-off marks இயல்பாக குறைவாகவும், மற்ற categoryயில் குறைவான பேர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்களுக்குரிய cut-off marks  அதிகமானதாகவும் இருக்கிறது.

ஆனால், அந்தந்த categoryயில் தேவைப்படும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவர்.

இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

சட்டென்று மேலோட்டமாக பார்ப்பதற்கு இது சரியெனவும் தெரியும். ஆனால் உண்மை இதுவல்ல. இடஒதுக்கீட்டை தலைகீழாக வைத்திருக்கிறார்கள் பாண்டியன் கிராம வங்கியில்.

இவர்கள் முதலில் தீர்மானித்திருக்க வேண்டியது General Categoryஐ! அதில் OBC categoryயில் உள்ளவர்களும் வருவார்கள், SC/ST categoryயில் உள்ளவர்களும் வருவார்கள். அதற்குத்தான் General Category என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, எத்தனை பேர் தேவைப்படுகிறார்களோ அதற்கேற்ப cut-off mark முடிவு செய்ய வேண்டும்.

இந்த General Categoryக்குத் தேவையான cut-off marks  வாங்கிய OBC  மற்றும் SC/ST  categoryயைச் சேர்ந்தவர்கள் General categoryயாகவே கருதப்படுவர். இவர்கள் போக மீதமிருக்கிற OBC மற்றும் SC/ST categoryயைச் சேர்ந்தவர்களுக்குத்தான்  அந்தந்த categoryக்குத் தேவையான எண்ணிக்கைக்கேற்ப cut-off marks முடிவு செய்யப்பட வேண்டும்.

இப்படிச் செய்யும்போது, General categoryயின் cut-off marksஐ விட OBC மற்றும் SC/ST categoryக்குரிய cut-off marks ஒரு போதும் அதிகமாய் இருக்காது. இருக்க முடியாது. General categoryக்கு cut-off marks 108  என்றால், மற்ற OBCக்கும், SC/ST categoryக்கும் cut-off marks அதிகபட்சமாக 107.99 ஆகவாவது வரும். இதுதான் விஞ்ஞானபூர்வமான இடஒதுக்கீட்டு முறை.

இங்கே அதையே உல்டா பண்ணி, இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஒரு பெரும் துரோகம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. எவ்வளவு எளிதாகவும், வெளிப்படையாகவும் அவர்களால் ஏமாற்ற முடிகிறது.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த cut-off மார்க்குகளைப் பார்த்த மாத்திரத்தில் தெரியும் பாரபட்சங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எல்லாம் சரியாகவே நடந்திருப்பதாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. பாண்டியன் கிராம வங்கியின் ஸ்பான்ஸர் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. அதன் வழிகாட்டுதலின்படிதான், இந்த பணிநியமனம் நடைபெற்று வருவதாகச் சொல்லப்பட்டது. நாம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, இதனை அம்பலப்படுத்தி இயக்கங்கள் நடத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மற்ற சங்கங்கள், சகோதர அமைப்புகளை சந்தித்துப் பேசியபோது தெரிவிக்கப்பட்ட உண்மை இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. Indian banking personnel Selection (IBPS) வசம் வங்கிகளில் பணிநியமனங்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு பல பொதுத்துறை வங்கிகளில், இப்படித்தான் நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக இருக்கிற சங்கங்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை. General categoryயிலிருந்து வருகிறவர்கள் தங்களிடம் உறுப்பினர்களாகச் சேர மாட்டார்கள் என பயந்து அமைதியாகிவிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நாங்கள், பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமும், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியனும் இதனை விடப் போவதில்லை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து தொடர் போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகிறோம்.

இதற்கிடையில், இந்த அநியாயத்தைக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட தோழர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

“ நான் SC.  cut off marks 111 வாங்கியிருக்கிறேன். சார், இதுதான் எனக்கு கடைசி  attempt"  என்றார்.

“நான் 114 மார்க்குகள். OBC  சார். எனக்கு interviewக்கு லெட்டர் வரவில்லை. இதென்ன அநியாயம்?”

“ நான் OBC. 119 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனால் எனக்கு இண்டர்வியூ கிடையாது. 108 மார்க்குகள் எடுத்த  General categoryயை சேர்ந்த ஒருவர் இண்டர்வியூவுக்கு செல்லப் போகிறார். எதுக்கு சார் இந்த Reservation Ploicy?  எல்லோரும் General category என்றால் கூட நான் வந்திருப்பேனே?”

“108 மார்க்குகள் எடுத்திருக்கிறேன். ஆனா SC சார். எதாவது செய்யுங்கள் சார், ப்ளீஸ்”

இந்தக் குரல்கள் ஒவ்வொன்றும் வேதனையும், வலியும் தருவதாக இருக்கின்றன. தங்கள் எதிர்காலத்திற்கான ஆதரவுக் கரங்களை தேடி நிற்கின்றன. இட ஒதுக்கீடு என்னும் மகத்தான சமூக நீதி அர்த்தமிழந்து போனதால் அவர்களது வாழ்க்கையும், நம்பிக்கைகளும் சிதைந்து போயிருக்கின்றன.

வலிக்கிறது.



Comments

18 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. என்ன அநியாயமிது மாது? ஒருபக்கம் வலுவாக ஊழியர்களைத்திரட்டி இயக்கம் நடத்தத் திட்டமிட்டுக்கொண்டே, வழக்கறிஞர்களைக் கலந்து ஆலோாசியுங்கள். இதைச் சும்மா விடக்கூடாது. அரசியல் சாசனத்திருத்தமே அர்ததமிழந்து போக இந்த முயற்சி. ஏதாவது செய்யுங்கள் மாது. நிச்சயமாக சமூகநீதி வெல்லும்.

    ReplyDelete
  2. Tnpsc also done the same thing...before finishing General category, they filled sc/mbc/bc/bcm in group 4.

    ReplyDelete
  3. நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய செயலிது, இட ஒதுக்கீட்டை ஆதிக்கச் சாதியினருக்கு சாதகமாய் மாற்றி, பொது பிரிவு மொத்தத்தையும் ஆதிக்கச் சாதியினரின் இட ஒதுக்கீட்டைப் போன்று மாற்றியமைத்து நடக்கும் இந்த மோசடியை உடனடியாக நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    ReplyDelete
  4. உங்களது போராட்டம் வெற்றி பெற விழைகிறேன்

    ReplyDelete
  5. இதைச் செய்தவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

    ReplyDelete
  6. பார்பனியம் எங்கெல்லாம் அதிகாரத்தில் உள்ளத்தோ அங்கெல்லாம் இப்படி நடக்க வாய்ப்புள்ளது .
    அதிலும் அவர்கள் நிர்வாக குழுவில் அதிக அளவில் இருந்தால் சொல்லவே வேண்டாம் ..
    நீதி மன்றமே ஒரே வழி ..சமுக நீதி காக்க பட வேண்டும். மக்கள் பரவலாக வளர்ச்சி பெற வேண்டும்,

    ReplyDelete
  7. நீதி கண்டு வெகுண்டெழுந்த பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்திற்கு செவ்வணக்கம். சமூக நீதிக்கான போராட்டத்தில் சகோதர சங்கங்கங்களை இணைத்து செயல் பட வேண்டிய அற்புத தருணமிது...வெல்க உங்கள் போராட்டம்

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா உங்கள் தொடர்பு எண் தரமுடியுமா எனது எண் 08939344192

    ReplyDelete
  9. படித்தோம் சம்பாதித்தோம் சங்கம் மூலம் இட மாறுதல் வாங்குனோம்னு இல்லாம இந்த அநியாயத்தை கவனத்தில் கொண்டு வந்துள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள்.போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Tamilnadu Govt did the same thing in the last TRB. After the court judgment, they rectified and released the new list.

    ReplyDelete
  11. இடஒதுக்கீடு அமலாக்கப்படும் லட்சணத்தை தொடர்ந்து கவனித்துவருகிறவர்களுக்கு இதில் அதிர்ச்சியடைய எதுவுமே இல்லை. இடஒதுக்கீட்டின் உள்ளீடுகளை அரித்து அதையும் தங்களுக்கு ஆதரவானதாக மாற்றிக்கொள்வதில் "முன்னேறியச்சாதியினர்" தொடர்ந்து வெற்றியை ஈட்டிவருகிறார்கள். மெரீட்டோகிரசி என பேசிக்கொண்டே தகுதியற்ற தமது சாதியினரை முன்னிலைக்குத் தள்ளிவிட அவர்கள் தொடர்ந்ந்து மேற்கொண்டுவரும் கபடவேலைகளில் பாண்டியன் கிராம வங்கி புதியதொரு உத்தியை கண்டுபிடித்துள்ளது. இந்த திருட்டுத்தனத்தை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ள தொழிற்சங்கம், சமூகநீதியை நிலைநாட்ட போராடுவதற்கும் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய மற்றொரு மோசடி, எஸ்.சி/ எஸ்.டி/ ஓபிசி/ யினரை அவரவர் சாதிப்பட்டியலுக்குள் அடைத்து நிரப்பிவிட்டு, பொதுப்பட்டியலுக்குள் உள்ள இடங்கள் முழுவதையும் முன்னேறியச் சாதியினர் கைப்பற்றிக்கொள்வதாகும். மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ் ஐபிஸ் தேர்வு முதற்கொண்டு பல்வேறு அரசுப்பணி நியமன அமைப்புகள் சாதிமன்றங்களாக உள்ள நீதிமன்றங்களின் துணையோடு இந்த மோசடியை நிறைவேற்றிவருகின்றன. இதனால் எஸ்.சி/ எஸ்.டி/ ஓபிசி/ யினர் வருடாவருடம் நியமன இடங்களை இழப்பதும் அவர்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றுள்ள முன்னேறியச்சாதியினர் பயனடைவதும் நடக்கிறது. ஒன்றுக்கும் உதவாத விசயங்களில் உணர்ச்சிகளைத் தூண்டி மோதல்களை உருவாக்கும் சாதியவாதிகள் தமது சாதியினருக்கு இழைக்கப்படும் இவ்வாறான அநீதிகளை எதிர்க்கத் துப்பில்லாதவர்கள். சாதியவாதம் என்கிற ஒற்றைநிலை கடந்து, எல்லாருக்கும் நல்லப்பிள்ளை என்கிற பொத்தாம்பொதுவான நிலை துறந்து, எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி மக்களுக்கு ஆதரவான சார்புநிலை எடுக்கத் துணிவுள்ள சக்திகளின் குறுக்கீடுகள்தான் சமூகநீதியைக் காப்பாற்றும்.

    ReplyDelete
  12. என்ன ஒரு மோசடி பாருங்கள். இப்படிச் செய்வதற்கு பேசாமல் அவர்களுக்குரியவர்களையே தேர்ந்தெடுத்துவிடலாமே. உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.....

    ReplyDelete
  13. Comedy pannadeega...Go and check IBPS RRB CLERK website....Cutoff for general category Is higher than Other community...

    ReplyDelete
  14. what is the status of this issue now?

    ReplyDelete
  15. குறுக்கு வழியில் வாழ்வை தேடிடும் திருட்டு உலகமடா...

    ReplyDelete
  16. நிச்சயம் கண்டிக்கப்பட தண்டிக்கப்பட வேண்டிய விசயம் இது. எவ்வளவு துணிச்சல் அவர்களுக்கு

    ReplyDelete
  17. Arumai Pathivu https://www.tamilnadugovernmentjobs.in

    ReplyDelete

You can comment here