எந்தப் பக்கம்: ஜெயமோகன், ஞானி, கனிமொழி, வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் இன்னும்.... ஜோ டி குரூஸ்!



எப்போதும் முற்போக்கு இலக்கிய முகாம் சார்ந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் மட்டுமே தேர்தல் காலங்களில் ஒரு நிலைபாடு எடுத்து மக்கள் நலன் சார்ந்து வெளிப்படையாகப் பேச முன்வருவார்கள். இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று பேசாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு தேர்தலில், இன்னாருக்கெல்லாம் வாக்களிப்பது தேச நலனுக்கு நல்லதல்ல என்று வெளிப்படையாகப் பேசுவார்கள். இவர்களை ”இலக்கியக் கால்நனைப்புக் கொண்ட அரசியல்வாதிகள்” என்று கேலி பேசிய மூத்த படைப்பாளிகளும் உண்டு. பாராளுமன்ற அரசியலில் பங்கேற்பதையே அசூயையாகப் பார்க்கும் எழுத்தாளர்களும் அநேகம் பேர் உண்டு..ஆனால் அதெல்லாம் போன மாசத்துக்கணக்கு.இந்த மாசம் கதை வேறேதான்.

இந்தத் தேர்தலில்,நவீன எழுத்தாளர்கள் சிலர் வெளிப்படையாக தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்கள். எந்தக்கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசினாலும் அவர்கள் இப்படி ஒரு இடத்துக்கு வந்ததே வரவேற்க வேண்டிய மாற்றம்தான். உலகின் மிகப்பெரிய முதலாளித்துவ ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழாவிலிருந்து ஒதுங்கி யாரோ போல நிற்பது எப்படி சரியாகும்?
எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத்தளத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருக்கிறார். வாக்குக் கேட்கிறார். பாரதிய ஜனதாக்கட்சிக்கு வாக்குக் கேட்பார்  என எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க்க, அவர் ஆம் ஆத்மி பக்கம் சாய்ந்திருப்பது  ஆறுதல் பெருமூச்சு விட வேண்டிய அம்சம்தான். நம்ம அரசியலை பூடகமாக நம் படைப்புகளுக்குள் வைத்துக்கொள்வோம். வெளியில் வேண்டாம் என்று அவர் கருதியிருக்கலாம்.

எழுத்தாளர்,பத்திரிகையாளர் ஞாநி,ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் இந்தத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஆதரவாக பிரச்சாரமே செய்கிறார். தலைமைக்கழகப் பேச்சாளர்களில் ஒருவராக அவர் வலம் வருகிறார். ஏற்கனவே நவீன இலக்கிய உலகம் சார்ந்த கவிஞர்கள் கனிமொழி,சல்மா,தமிழச்சி,நாவலாசிரியர் இமையம் போன்றார் திமுக குடும்பத்தினராக எப்போதும் களத்தில் இருக்கின்றனர். திமுக அடையாள முத்திரை உள்ள கவிஞர் வைரமுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதில்லை.

கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் கோபாலபுரத்துக்கும் போயஸ்கார்டனுக்குமாக அலையாமல் கௌரவமாக தனித்துப் போட்டியிடுங்கள் என்று சதாகாலமும் தர்ம அட்வைஸ் வழங்கிக்கொண்டிருந்த நவீன எழுத்தாளர்கள் பலர் இப்போது கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப்போட்டியிடுவதால் அப்படி ஒன்றும் வந்து களத்தில் குதித்து விடவும் இல்லை. ஆதரவாக ரெண்டு வார்த்தை பேசிவிடவும் இல்லை. நேர்ப்பேச்சுகளிலும் முற்போக்கு இலக்கியக்கூட்டங்களிலும் வந்து இடதுசாரிக் கருத்துகளை ஆதரிக்கும் நவீன எழுத்தாளர்கள் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல்  வேறு வேறு திசைகளில் செல்வது ஏன் என்று உண்மையிலேயே நமக்குப் புரியவில்லைதான். சுர்ஜித் போன்ற மகத்தான தலைவர்களை யெல்லாம் இப்படி போயஸ் கார்டன் வாசலில் நிறுத்திவிட்டீர்களே என்று கண்கலங்கி நம்மைப் புல்லரிக்க வைத்த எழுத்தாளர்களெல்லாம் இப்போ ஆளையே காணோம்.

அதிமுக கைவிட்டதால்தானே தனியே நிற்கிறீர்கள் என்று சிலர் முகநூலில் நக்கலாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தலித் மக்களின் பிரச்னைகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தபோது  ”இப்ப நீங்க போராடறிங்க..ஆனா போன காலங்களில் போராடலியே.. அதனால இப்ப உங்களை ஆதரிக்க முடியாது” என்று எந்த லாஜிக்கிலும் அடைபடாத சாக்குச் சொன்ன பல தமிழக அறிவாளிகளின் ஞாபகம்தான் இப்போதும் வருகிறது.

கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் ஏன் திமுகவை ஆதரிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் சொன்ன பதில் நம்மைச் சொக்க வைக்கிறது,”கம்யூனிஸ்ட்டுகளின் இந்த முடிவு அதிமுகவுக்குத்தான் உதவியாக அமையும்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவுடன் சமீப ஆண்டுகளில் உடன்பாடு கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகள் இப்போது மகிழ்ச்சியுடன் பிரிந்து நிற்பதால்,  அவர்களுக்குக் கிடைக்கும் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்க வேண்டிய வாக்குகள்தானே. கம்யூனிஸ்ட்டுகள் தனித்து நிற்பதால் அதிமுகவுக்குத்தான் நட்டம் என்று நேற்றுப்பிறந்த அரசியல் பார்வையாளர்களுக்குகூடப் புரிகிறது. ஆனால் ’தொலைக்காட்சிப்புயல்’ கருத்து கந்தசாமி என்றெல்லாம் நண்பர்களால் ‘புகழ’ப்படும் சீனியர் ஸ்டேட்ஸ்மேன் மனுஷுக்கு இது ஏன் தலைகீழாகப் புரிகிறது. அதன் தர்க்கம் நமக்குப் புரியவே இல்லை. தவிர, பாஜகவின் இந்துத்துவத் தேர்தல் அறிக்கையும் வந்த பிறகு அவர் 2008இல் பாஜக அமைச்சரவையில் பங்கேற்ற திமுகவுக்கு பிரச்சாரம் செய்யப்போவது வியப்பளிக்கிறது. இதுகாறும் உண்மையான அக்கறையோடும் ஆவேசத்தோடும் பாஜகவுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் சொன்ன கருத்துக்களும் அவரைப்பார்த்துச் சிரிக்கின்றன. பாஜகவோடு சேரத்துடிப்பது அதிமுக மட்டும்தானா? திமுகவுக்கு அந்த எண்ணமே இல்லையா? ”பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல” என்று புனித நீர் தெளித்து அதைத் தோளில் சுமந்து கொண்டு வந்து தமிழகத்தில் இறக்கி வைத்ததே திமுகதான் என்பது மனுஷுக்குத் தெரியாதா? அவரது ஆன்மாவுக்கு நெருக்கமான கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்காமல் (போயும் போயும் )......நிற்க.

தனி ஈழம்,கூடங்குளம் போன்ற சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடு இருந்தபோதும் தோழர்கள் கொளத்தூர்மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையிலான திராவிட விடுதலைக்கழகம் 18 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கியிருப்பதை  இந்த எழுத்தாளர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக்கூடாதா?

இவர்களெல்லாம் கூடப்பரவாயில்லை.கொற்கை நாவலுக்காகக் கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் தனது முகநூலில் நரேந்திரமோடி என்கிற புரட்சியாளர்தான் அடுத்த பிரதமர் ஆகவேண்டும் என்று ஒரு பக்கத்துக்கு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். எல்லாத்தலைவர்களும் அடுத்த தேர்தலைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது மோடி ஒருவர்தான் அடுத்த தலைமுறையைப்பற்றிக் கவலைப்படுகிறாராம். ஜோ.ட்.குரூசின் முதல் நாவலான ஆழிசூழ் உலகு வெளிவந்தபோது கிறித்துவ அடிப்படைவாதிகள் அவரை ஒதுக்க முயன்றபோது தாக்கியபோது கம்யூனிஸ்ட்டுகள்தான் அவருக்குப் பக்கபலமாக நின்றோம். மோடி கூட்டத்தார் அல்ல. கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது. குறைந்தபட்சப் பகுத்தறிவும் வேலை செய்யவில்லையா தோழர் குரூஸ்? தமிழருவி மணியனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் குரூஸ்?

தவிர, மதச்சார்பின்மை மட்டுமா இந்தத்தேர்தலின் மையப்பிரச்னை? கடந்த 5 ஆண்டுகளில் 33 முறை பெட்ரோல்,டீசல் விலை உயர்வும்,அதன் காரணமாகவும் ஊக வணிகத்தை ஊக்குவித்த்தன் காரணமாகவும் மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான உப்பு,புளி,வெங்காயம்,பருப்பு,காய்கறிகள் என அனைத்துப் பொருட்களின் விலை உயர்ந்ததும் அதன் காரணமாக நாமெழுதும் கதைகளின் நாயகர்களான மக்களின் வாழ்வு பெரும் சரிவுக்குள்ளாகியிருப்பதும் ஒரு படைப்பாளிக்கு முக்கியமில்லையா? நமோ நமோ என்று கார்ப்பொரேட் ஊடகங்களின் பீப்பி ஊதல்களின் பின்னணி இசையோடு கொலைவெறி மோடி அலைந்து கொண்டிருக்கும்போது படைப்பாளிகள், இவற்றையெல்லாம் சமரசத்துக்கு இடமின்றி எதிக்கும் இடதுசாரிகள் பக்கம் அணிதிரள வேண்டாமா?

முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த 1930களில், நகரங்களாக சந்தைகள் ஊதிப்பெருத்தபோது சென்னைபோன்ற பெருநகரத்தை ‘மகாமசானம்’ என்று பெரும் சுடுகாடு என்று கதை எழுதி முதலாளித்துவத்தின் முகத்தில் அடித்தானே புதுமைப்பித்தன்? க.நா.சுவின் சீடர்களான இலக்கியவாதிகள் எல்லோரும் ஸ்டாலினின் சோவியத்தைத் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஸ்டாலினுக்குத் தெரியும் என்று புதுமைப்பித்தன் புத்தகம் எழுதி மறுக்கவில்லையா?முதலாளித்துவம் இன்று ஏகாதிபத்தியமாகி உலகமய முகமூடியோடு வருகிறபோது புதுமைப்பித்தனின் வழிவந்த தமிழ்ப்படைப்பாளிகள் இந்தப்பொருளாதாரக்கொள்கைகளை மாற்றுக்கொள்கையோடு எதிர்க்கும் இடதுசாரிகளை ஆதரிப்பது காலம் கோரும் கடமை அல்லவா?

இதெல்லாம் கூட ’அரசியல்’ என்று படைப்பாளி ஒதுக்கினாலும் கருத்து சுதந்திரத்துக்கும் கலை வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கும் எதிராக பாஜகவும் காங்கிரசும் திமுகவும் அதிமுகவும் கடந்த காலங்களில் ஆடிய ஆட்டங்களுமா மறந்து போகும்? வெண்டி டோனிகரின் புத்தகங்கள் அரைத்துக் கூழாக்கப்பட்ட்து இன்றைய உதாரணம் எனில் கொல்லப்பட்ட ஓவியர்கள், எழுத்தாளர்கள், தபோலகர் போன்ற அறிவாளிகளின் பட்டியல் எத்துணை நீண்டது? ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டதற்காக மதுரையில் சம்பந்தமேயில்லாத மூன்று உயிர்களை அநாவசியமாகப் பலிகொண்ட்து திமுகதானே?

நாம் எழுதும் மொழிக்காக இவர்கள் செய்ததுதான் என்ன? செம்மொழித்தமிழ் மாநாடென்ற பேரில் கோவையில் கூத்தடித்து ஊர் ஊருக்கு தமிழ்வாழ்க என்று பல்பு போட்டதைத்தவிர திமுக என்ன செய்தது? 1967இல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ்நாட்டில் இருந்த ஆங்கில வழிக்கல்வி நிலையங்கள் இரட்டைப்படை எண்ணில்தானே இருந்தது? பல்லாயிரக்கணக்கான ஆங்கிலவழித் தனியார் பள்ளிகள் புற்றீசல்கள் போலப் புறப்பட்டது தமிழுக்காக உயிரைவிடும் திமுக ஆட்சிக்காலத்தில்தானே? திமுகவும் அதிமுகவும் உருவாக்கியுள்ள அரசியல் மேடைகள் அநாகரிகத்தின் உச்சபட்ச அடையாளங்களாக இருக்கின்றன.அவர்களோடு தொகுதி உடன்பாடு கண்டதற்கே கம்யூனிஸ்ட்டுகளைக் கரித்துக்கொட்டிய தமிழ் நவீனப் படைப்பு மனங்கள் அவர்களோடு சங்கமித்து நிற்கக் கூச்சப்படவில்லையே ஏன்?

வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான  நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்.

வர்க்கப்போராட்டத்தின் பல்வேறு போராட்டக்களங்களில் மக்களைத்திரட்டித் தனித்து நின்று போராடுகிறவர்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள். தேர்தல் என்னும் இந்தப் போராட்டத்தில் மட்டும்தான் கூட்டும் உடன்பாடும். மக்கள் போராட்டங்களில் ஆண்டுதோறும் நூறு தோழர்களுக்கு மேலாக உயிர்ப்பலி கொடுக்கும் ஒரே இயக்கம் இன்றைக்கும் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டும்தான்.

மக்களின் வாழ்விலிருந்து சாறெடுத்துக் கவியும் கதையும் கலையும் புனையும் படைப்பாளிகள் கம்யூனிஸ்ட்டுகளைத்தவிர வேறு யாரையும் ஆதரிக்க எந்த தர்க்கநீதியும் கிடையாது. தமிழ்ப்படைப்பாளிகள் ஆங்காங்கே நின்று கொண்டிராமல் தங்கள் நிலைபாடுகளை உடனடியாக மாற்றிக் கம்யூனிஸ்ட்டுகளை ஆதரிக்க வேண்டும். இது எங்கள் பணிவான வேண்டுகோள் மட்டுமல்ல. காலம் கலைஞனிடம் கோரும் கடமையுமாகும்.


- எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.


கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கம்யுனிஸ்ட் காரனிடம் கொள்கையை தவிர்த்து வேறு என்ன இருக்கு? மற்றவர்களிடம் கொள்கையை தவிர்த்து நல்ல பசை இருக்கு அதனால் போய் ஒட்டிகொண்டார்கள் .இதிலென்ன ஆச்சரியம் .

    பதிலளிநீக்கு
  2. பெரிதும் மதிக்கப்படும் //எல்லாரும் எல்லாரும் பெறவேண்டும்// என்கிற உயர்ந்த கொள்கையுடைய கம்யூனிசக் கட்சி சிறிது சிறிதாகத் தாழக் காரணமானவை
    1) அவர்களது தொழிற்சங்கங்கள் வரம்பை மீறிச் செயல்பட்டது
    2) தனது நேர்மையுடன் சந்தர்ப்ப வாதத்தை இணைத்தது. (கணினிகள் வந்தால் வேலை வாய்ப்புகள் குறையும் என்று பிதற்றியது போல்)
    3) இதுவரை தாங்கள் மிக்க பண்புடன் பேசிவந்த நாத்திகக் கொள்கைகளுடன் ஒரு சாதியையும் மதத்தையும் தரக்குறைவாக ஒரு பெரியவர் பாணியில் விமர்சிக்கத் தொடங்கியது (இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் மதச்சார்பற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு அவர்களின் வெளிப்பாடு வளர்ந்தது).

    வெளிப்படைத் தன்மைக்காக பலரால் போற்றப்பட்ட கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவத்தின் அடக்குமுறை, கல்வி சார்ந்த வேலை வாய்ப்பை முன்வைக்காமல் சாதி, மத, இடஒதுக்கீடு போன்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்துவது வேதனையளிக்கிறது.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
  3. வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. "DMK extended invitation to secular forces like communists.But even now CPIM wants to align with AIADMK only. ( Selective amnesia for communists in - Bangalore case and Karseva support) . Padithavan soothum vaathum seithaal Aiyoo Aiyoo ena povaan - like communists in Tamilnadu.

    பதிலளிநீக்கு
  4. கம்யூனிஸ்டுகள் மீது எனக்கு நல்ல மரியாதை எப்போதும் இருக்கிறது. ஆனால் அவ்ர்கள் கூட பதவி ஆசைக்காக அடுத்த பிரதமர் அம்மா தான் என்று சொன்னபோது மிகவும் வித்தியாசமாக தெரிந்தது. காம்ரேட்டுகளா இப்படி என?
    ஜெயலலிதா கூட்டணி தர்மத்தை மீறி 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவித்தபோதும் கூட வாய் திறக்காமல் இருந்த போது மிகவும் ஆத்திரமாக வந்தது. மொத்தத்தில் அவர்களுடைய பெருமைகளையும் மரியாதையையும் அவர்களாகவே குறைத்துக்கொண்டனர். இப்போது தூக்கி நிறுத்த முயல்கின்றனர். இன்று கூட தோழர் த. பாண்டியன் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமராக வரவேண்டும் என யாரையோ??? மனதில் வைத்து கூறியிருக்கிறார்....

    பதிலளிநீக்கு
  5. ஈழ இன அழிப்பை “ஏகாதிபத்திய எதிர்ப்பு” தெள்ளிய நீர்கொண்டு அனைக்க முற்பட்டவர்கள் இந்த கொமினிஸ்ற்றுகள்.
    கேட்டால் புலிகள் அமெரிக்க சார்பானவர்கல். ஈழத்தமிழர் அமெரிக்காவின் துணையுடன ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள் என்பார்கள்.
    முன்னர் எல்லாம் புலிகள் யாழ்மையவாத சைவ வேளாள கோஷ்டிகள் என கதை அளப்பார்கள். வன்னி இன அழிப்பின் பின்னர் இந்தக்கதையும் எடுபடாமல் போயாச்சி.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையான கட்டுரை...
    கம்யூனிஸ்ட்டிடம் பசை இல்லை என்பதே உண்மை...

    பதிலளிநீக்கு
  7. "கொற்கை நாவலுக்கு விருது கிடைத்தபோது முதன்முதலாக அவ்ருக்குப் பாராட்டு விழா நட்த்தியது தமுஎகசதான். அவமானமாக உணர்கிறோம் இப்போது"
    . விருது அவரது படைப்புக்காக வழங்கப்பட்டது.நீங்களும் அந்த அங்கீகரிக்கப்பட்ட படைப்புதன்மைக்காகதான் அவருக்கு பாராட்டு விழா எடுத்தீர்கள்.இந்நிலையில் உங்களின் பாராட்டை ஏற்றுகொண்டவர் நீங்கள் விரும்பும் கட்சிக்கு ஆதரவாக பேசாததை வைத்து அவருக்கு பாராட்டு விழா எடுத்த நிகழ்வை கேவலமாக சித்தரித்திருப்பது ஏற்ப்புடையதல்ல.வேண்டுமாயின் அடுத்தமுறை யாருக்கேனும் பாராட்டு விழா எடுப்பதாக இருந்தால் பின்னாளில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்களா என்பதை உறுதிசெய்துகொண்டு பாராட்டுவிழா எடுக்கலாமா வேண்டாமா என முடிவுசெய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. "நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்."இது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையா?முதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமா?சரி .முதல் முறை மக்கள் நலனுக்காக என அவர்களுடன் சேர்ந்து பார்த்தீர்கள்.அப்படிஒன்றும் நீங்கள் சேர்ந்த கட்சிகள் மக்கள் நலனை முன்னிறுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.பின்னர் இதே மக்கள் நலனை முன்னிறுத்தி அணிமாறி மற்றுமொரு முதலாளித்துவ கட்சியுடன் அணி சேர்ந்திருப்பீர்கள்.அங்கும் அதே கதைதான். பிறகு ஒவ்வொருமுறை இதே பல்லவிதான் .இதுவரையிலும் கழட்டிவிடப்பட்ட சுழலில் மட்டுமே நீங்கள் தனித்து நின்றிருக்கிறீர்கள்.வீராவேசமாக எழுதுவதாக நினைத்துகொண்டு படு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  9. "வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை".
    வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களா?தீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களா? உங்களது அணுகுமுறைகளை மாற்றாமல் ஆதரவு கேட்பது எள்ளளவும் பலனிக்காது.
    "நமக்கே சொந்த பலம் வரும் வரையிலும் கிடைக்கும் முதலாளித்துவக் கட்சியை முடிந்த வரை மக்கள் நலன் காக்கப் பயன்படுத்துவோம். கிடைக்காவிட்டால் தனித்து நின்று போராடுவோம்."இது உங்களுக்கே கொஞ்சம் நகைச்சுவையாக தெரியவில்லையா?முதலாளித்துவ கட்சிகள் என தெரிந்தும் பின்னர் அவர்களுடன் சேரலாமா?சரி .முதல் முறை மக்கள் நலனுக்காக என அவர்களுடன் சேர்ந்து பார்த்தீர்கள்.அப்படிஒன்றும் நீங்கள் சேர்ந்த கட்சிகள் மக்கள் நலனை முன்னிறுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள்.பின்னர் இதே மக்கள் நலனை முன்னிறுத்தி அணிமாறி மற்றுமொரு முதலாளித்துவ கட்சியுடன் அணி சேர்ந்திருப்பீர்கள்.அங்கும் அதே கதைதான். பிறகு ஒவ்வொருமுறை இதே பல்லவிதான் .இதுவரையிலும் கழட்டிவிடப்பட்ட சுழலில் மட்டுமே நீங்கள் தனித்து நின்றிருக்கிறீர்கள்.வீராவேசமாக எழுதுவதாக நினைத்துகொண்டு படு நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. வீடு தீப்பற்றி எரியும்போது பரிசுத்தமான நடு ஆற்றில் அள்ளிய தெள்ளிய நீர் கொண்டுதான் தீயை அணைப்பேன் எனக் கம்யூனிஸ்ட்டுகள் கைகட்டிக் காத்து நிற்க முடியாது. கிடைப்பது சாக்கடை நீரானாலும் அள்ளி அள்ளி ஊற்றித்தான் ஆகவேண்டும். தீயை அணைப்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கண்களுக்கு முக்கியமெனப்படும். இதுதான் தேர்தல்கால உடன்பாடுகள் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை. வாஸ்தவம் தான். ஆனால் ஒவ்வொருமுறையும் அந்த தீயை பற்றவைத்தவர்களுடனல்லவா கை கோர்கிரீர்கள்வாழ் நாள் முழுவது சாக்கடை நீரெடுத்து தீ அணைப்பதுமட்டுமே உங்களது வேலை என முடிவு செய்துவிட்டீர்களா?தீ பற்றவைத்தவனை தண்டிப்பது தேவையில்லை என கருதிவிட்டீர்களா? உங்களது அணுகுமுறைகளை மாற்றாமல் ஆதரவு கேட்பது எள்ளளவும் பலனிக்காது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!