-->

முன்பக்கம் , , � அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

Helping Hand

 

“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல்.  அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு  கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம்.

 

தோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது.  இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும்,  மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல்.  ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். 30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.

 

பாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று,  “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரிகிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா.  கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார்.  அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம்.  மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள்.  சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.

 

தங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.

 

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார். அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர்.  “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.  “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட்.  பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

 

ஏர்போர்ட்டிலேயே ஆஸ்பத்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.  மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.

 

சர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு,  ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000! ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க,  எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும்,  அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.

 

இறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, விமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.  கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.

 

இறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும்,  மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார்.  வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ?  நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.

 

சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு,  திருச்சியில்  இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா! தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.

Related Posts with Thumbnails

35 comments:

 1. மனித நேயம் இன்னும் உயிர்ப்புடந்தான் இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.

  ReplyDelete
 2. மதுரை வரும்போது தோழர்களை அவசியம் பார்க்க வேண்டும் மாதவராஜ்.

  ReplyDelete
 3. VANTHARAI VAZAVAIKKUM TAMIL NADU. NOW VANTHARAI KAPATTIYA TAMIL NADU. THANKS TO GOOD HEARTED TAMILIZANS

  ReplyDelete
 4. ஒருசிலருக்கு மட்டும் இருக்கும் மனித நேயம் மற்றவர்களுக்கு ஏன் இல்லாமல் போகின்றது...?!

  இது போன்ற சூழ்நிலையில் தோள்கொடுத்த தோழர்களை எண்ணி பெருமிதமாக இருக்கிறது.

  ReplyDelete
 5. என்ன சொல்வது...? துயரக்கடலில் வீழ்ந்தவனுக்கு கண்ணீரும் வாய் தன்னை அறியாமல் கொட்டும் சொற்களும்தான் வடிகாலாய் இருக்கும், சொற்களின் அர்த்தம் அறிந்தவர்கள் கூடவே கண்ணீர் சிந்தி அழ முடியும், ஆனால் அந்த சொற்களின் அர்த்தம் பிடிபடாத ஒரு அந்நிய பிரதேசத்தில் இதயங்கள் அழும் ஒலிதான் மொழிகளும் பிரதேசங்களும் போடுகின்ற கோடுகளை அழித்து மனிதாபிமானம் என்ற ஒற்றை இழையில் மனிதர்களை பிணைத்து......இக்பால்

  ReplyDelete
 6. அன்புத் தோழர் மாதவ்

  அதிர்ந்து போனேன்..உங்கள் பதிவைக் கண்டு..

  ஊர் தெரியாத ஊரில் வந்த இடத்தில் துணியை இழந்து திசையைப் பறிகொடுத்து

  உணர்வுகள் முடங்கி உணர்சிகள் தத்தளிக்கத் தடுமாறிய தோழருக்கு அரவணைப்பு தந்த பாண்டியன் கிராம வங்கி தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

  இந்த நேரம் நினைவுக்கு வந்தவர் கவியரசு கண்ணதாசன் தான்:

  அவரது இந்தக் கவிதையை எப்போதோ எழுபதுகளில், குமுதம் இதழில் அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான போது வாசித்த நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன்..


  சாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்
  தனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்
  வேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்
  வேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்
  ஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்
  உறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்
  காலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன
  கண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன.....

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 7. அதிர வைக்கும் பதிவு. உதவிய நண்பர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.

  இழவு வீட்டுல கூட ஆதாயம் தேடற மக்கள் ஏர்லைன்ஸ் இல்லாத இடம் கிடையாது. பிணம் திண்ணிக் கழுகுகள்.

  ReplyDelete
 8. வெளி மாநிலம் வந்து மொழி தெரியாத இடத்தில் வந்து உறவுகளை இழப்பது என்பது மிகப் பெரிய சோகம். தொழிற்சங்க இயக்கம் என்ற பந்தமே பல முறை
  கை கொடுத்துள்ளது என்பது எனது சொந்த அனுபவம்.

  திரிவேணி சங்கமத்தில்
  குளிக்கச் சென்று ஒரு தோழரது தாயார் இறந்த போது, அவரை அங்கேயே அடக்கம் செய்ய எங்களது அலகாபாத் கோட்டத் தோழர்கள் உதவியுள்ளனர்.

  அதே போல் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு பலரும் சிகிச்சைக்கு வருவார்கள்.இறப்பு என்பது சில சமயம் தவிர்க்க இயலாததுதான். சொந்த
  ஊருக்கு எடுத்துச் செல்ல வழியில்லாமல் வேலூரிலியே அடக்கம் செய்வது
  என்ற கனத்த முடிவை எடுக்கிற போது உறவினர் என யாருமே இல்லாத போது சங்கத்தோழர்கள் தான் கூட இருக்க ேண்டியிருக்கும்.

  யாருமே இல்லை, நீங்கள் வாருங்கள் என அழைக்கிற போது யார் என்ன என்று தெரியாமலே பல தோழர்கள் வந்துள்ளனர். தோழமை உணர்வின்
  மகத்துவத்தை உணர்த்தும் தருணங்கள் அவை .

  ReplyDelete
 9. an EXCELLENT help our union comrades have done..no words to share the sorrows of that comrades and their families..It can be only felt..your writings brought tears in my eyes.heart became heavy Madhav...

  ReplyDelete
 10. எங்கே மனிதம் என்று கேட்பவர்களுக்கு இதோ தோழர்கள் சுரேஷ்பாபு சாமுவேல் ஜோதிகுமார் என்று மனம் சொல்கிறது.அந்த தோழர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

  அடுத்தவர்களின் துயரத்திலும் காசு பார்க்கிறது தனியார் விமான நிறுவனக்கள்.

  ReplyDelete
 11. தோழர் மாதவ்,
  உங்கள் பதிவு கண்ணீர் வரவழைத்து விட்டது. தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு இருவரையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். வெறும் பொருளாதாரப் போராட்டங்களைத் தாண்டி தொழிற்சங்கங்கள் மனித நேயத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
 12. வாசிக்கும் போது கலங்கடித்து
  வாசித்தபிறகும் மனதை கனக்கச்செய்த பதிவு..

  உதவிய உள்ளங்களுக்கு வணக்கங்கள்!

  ReplyDelete
 13. மனித கடவுள்கள்

  ReplyDelete
 14. சாமுவேல் ஜோதிகுமாருக்கும் சுரேஷ் பாபுவுக்கும் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும். தாயையும் மனைவியையும் பறிகொடுத்த நிலையில் செய்வதறியாது நின்ற அவர்களுக்கு நேரில் வந்த தெய்வம் இவர்கள். மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிரிவினையை உண்டாக்குபவர்கள் உயிரின் வலி அனைவருக்கும் ஒன்றே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
  amas32

  ReplyDelete
 15. மிகவும் பாதிக்க வைத்த பதிவு......
  அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 16. என்னை கலங்க வைத்துவிட்டது உங்கள் பதிவு!

  ReplyDelete
 17. சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்களில் கண்ணீர் ! தோழமையின் மகத்துவமே மகத்துவம்!

  ReplyDelete
 18. தோழா! தாங்க முடியல

  ReplyDelete
 19. “தோழா! தாங்க முடியல”

  ReplyDelete
 20. அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் ?---//

  இதற்கு மேல் படிக்க முடியாமல் கண்களில் நீர்த்திவளைகள் என் கண்ணை மறைக்கின்றன... வெகு நாட்களுக்கு பிறகு அடைத்து வைத்த சோகங்கள் பீரிட்டு கிளம்புகின்றன...

  தோழர் சாமுவேல் மற்றும் ஜோதிகுமார் நீங்கள் இருவரும் உங்கள் குடுப்த்தினருடன் நீடுடி வாழ வேண்டும்..

  பிரியங்களுடன்
  ஜாக்கிசேகர்

  ReplyDelete
 21. அன்பும் மனிதமும் நட்பும் வாழ்க!

  ReplyDelete
 22. மனித நேயத்துடன் வாசித்த, கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

  தோழர்.வினோத் ஸ்ரீவத்சவாவின் மனநிலையும், அவரது குழந்தைகளின் நிலைமையும் எப்படி இருந்திருக்கும் என்பதை எழுதி தீர்த்துவிட முடியாது. ஆதரவற்று அவர்கள் நின்றிருந்த இடத்தில் நம் தோழர்கள், அவர்களுக்கு கைகொடுத்து இருக்கின்றனர். சொந்த ஊரில், சொந்த மனிதர்கள் நடுவே அவர்கள் அழுது தீர்த்து, நம்பிக்கையோடு நாட்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்க முடியும். அதற்கான வெளிச்சத்தை நம் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் ஏற்றி வைத்திருக்கின்றனர்.

  ReplyDelete
 23. தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 24. tears filled my eyes as i visulaized the scenes in the airport. hats off to you both.
  @Jothi, I am proud of being your cousin. you've kept up the good name of our grandfather, whose name u have inherited. very touchy.
  -Renuka Kumar

  ReplyDelete
 25. தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 26. மனித நேயம் எந்த எதிர்பார்ப்புமின்றி ...!!நெகிழ வைத்த இந்த உண்மை சம்பவம் bank workers' unity யில் வெளியாகி விட்டது. நன்றி/மாதவராஜ்/எஸ் வீ வீ . நிச்சயம் வாசகர்களைத் 'தொந்தரவு'செய்யும் ...

  ReplyDelete
 27. தோழர்கள் சாமுவேல்,சுரேஷ் இருவரையும் வாழ்த்த வார்த்தைகளே இல்லை. மூத்தமகள் அவர் காலில் விழுந்து கதறினாள் என்பதை படிக்கையில் நானும் உடைந்து விட்டேன். மனித நேயம் உயர்ந்து நிற்கிறது இவர்களீடம்.வாழ்கவளமுடன்.

  ReplyDelete
 28. நெஞ்ஞடைத்து போனது, தோழர்கள் மிகச் சரியாக சொன்னார்கள் நாம் மனிதர்கள்தான் என்று. திக்குத் தெரியாத காட்டில் தோழர்கள் வழிகாட்டியாய், வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. தோழர் மாதவ்ராஜ் அவர்களின் பதிவு முழுமை பெறாமல் போனதாகவே படுகிறது. நிகழ்வை ஆழமாக பதிக்க வேண்டும் என்ற உந்துதலோடு எழுத நினைத்து சாதாரணமான வரிகளால் பதிந்திருக்கிறார். இன்னும் அவருக்கு நேரம் கிடைத்து எழுதியிருந்தால் அழுத்தம் அதிகமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நானும் சில நேரங்களின் இது போன்ற நிகழ்வை கண்டிருக்கிறேன். மனம் வெதும்பி அகக்கண்ணீர் வடித்திருகின்றேன். இதே போன்ற தோழர்கள் united India Insurance head office Royapetta chennai யில் உள்ளனர். தோழர் அஸ்கர் ஹூசைன், வித்யா, உமாமகேஸ்வரி, இன்னும் அவர்களது சகாக்கள். இவர்கள் அனைவரும் இடதுசாரி சங்கத் தோழர்களே. ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது போல் மனிதாபிமானத்திற்கும் சமயத்தில் நாம் கரம் நீட்ட வேண்டும்.
  தோழர் மாதவ்ராஜ் அவர்களின் பேட்டியை புத்தகம் பேசுது வில் படித்தேன். நிறைவான பேட்டி.

  ReplyDelete
 30. தோழர் மாதவ்ராஜ்,
  வாழ்த்துகள். சர்வதேசவாதிகளை நினைவோடு பதிந்ததற்கு.
  இவர்களது உதவும் எண்ணங்களையும் சகோதர பாசத்துடன் அதிகாரிகளுடன் சண்டையிட்டு டிக்கெட் விலையை குறைத்தது போன்ற நேர்மையான உதவியை யாரும் மறக்க முடியாது. அவருடைய மகள், தோழரின் கால்களை பிடித்து வெடித்து அழுதது, ஆற்றாமையின் வெளிப்பாடு. உலர்ந்த இதயமும் ஈரமாகி போகும் வரிகள் தோழா. தோழமை உலகின் பதியாத உதவிகள் இன்னும் எத்தனையோ.

  ReplyDelete
 31. எதை நோக்கியோ ஓடுகின்றோம், ஓடிக்கொண்டே இருக்கின்றோம்....'சே! என்ன வாழ்க்கை இது சனியன்!' என்று சோர்ந்து விழுகின்ற தருணங்களில் இதுபோன்ற அன்பும் கருணையும் தன்னலம் பாராத உதவிகளும்தான் 'எழுந்து நில்' என்று தூக்கி நிறுத்துகின்றன... ஊர் பேர் தெரியாத இடம் வெறும் காட்டுக்கு சமானம்தான். அப்படியான ஒரு இடத்தில் உதவிக்கரம் நீட்டிய (இப்படியான வெறும் வார்த்தைகள் போதாது) தோழர்களை எல்லோரும் பாராட்டுவோம்..

  ReplyDelete
 32. Find no words to express.Read Mathavaraj's article in Bank union journal.Moved with tears. Registering such incidents will definitely restore &rejuvenate the HUMANITARIAN CONSIDERATION which is diminishing fastly towards extinct.The spontaneous support from the observers to SAMUEL JOTHIKUMAR when he fought for this genuine cause is proving this. Hats Off Mathavaraj for your timely registration in relevant medias.
  "MANITHAM PUNITHAMAANATHU
  ANTHAP PUNITHAM IPPOETHU
  IYAKKATH THOEZHARKALIDAM
  MADDUMAE ENJIYULLATHU,
  ANTHA VAHAIYIL THOEZHARHAL
  SAMUEL JOTHIKUMAR-UM
  SURESH BABU-VUM
  manitharhal alla ! ! ?
  ...................
  PUNITHARHALAE !
  entru nenjai nimirththip perumithaththudan ..naanum oru iyakkath thoezhanaay....
  TNGCTA-Appadurai

  ReplyDelete
 33. thozaiyin imayamalai ivarkal. thozamai than manithaneyam yenbathai yellorukkum unarthivittanar.thozarkal iruvarukkum sevvanakkam! siva venkatesan

  ReplyDelete