-->

முன்பக்கம் , , , , � சிறகு முளைத்த வாழ்க்கை

சிறகு முளைத்த வாழ்க்கை

உண்மையில் அவர் சிறகு முளைத்த பறவையாகத்தான் இருக்கிறார். அங்கு இருக்கிற எல்லாப் பறவைகளும் அவரது குழந்தைகளாக இருக்கின்றன. அந்த எளிய, அழகிய உயிர்களின் சத்தங்களைக் கேட்டபடி, அசைவுகளை பார்த்தபடி குளத்தங்கரையில் அவர் உட்கார்ந்து இருக்கிறார்.

சென்ற சனிக்கிழமை பாளையங்கோட்டையில் தமிழ் வளர்ச்சி பண்பட்டு மையத்தில் திரையிடப்பட்ட மூன்று ஆவணப்படங்களும், பறவைகளோடு, பறவைகளுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கிற பால்பாண்டி என்னும் மனிதரைச் சுற்றியே எடுக்கப்பட்டு இருந்தன. A Life for Birds என்னும் படம் சுரேஷ் இளமோன் இயக்கத்திலும்,  வள்ளித்தாய் என்னும் படம் ஸ்ரீகுமார் இயக்கத்திலும், Bird Man  என்னும் படம் ரஹிம் இயக்கத்திலும் வெளிவந்திருக்கின்றன. மூன்று படங்களிலுமே ஒரே மாதிரியான காட்சிகளைப் பார்க்க முடிந்தது. அலுக்கவே இல்லை.

 

paaulpandy திருநெல்வேலியின் ஒரு மூலையில் இருக்கிற கூந்தன்குளம் என்னும் சிற்றூரில், இருநூற்றுக்கும் அதிகமான வகைப் பறவைகள் பல்லாயிரக்கணக்கில்  வந்து தங்குகின்றன. நானூறு வருடங்களுக்கும் மேலாக இப்படி நிகழ்ந்துகொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மக்களே இந்த பறவைகளின் சரணாலயத்தைப் பேணி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது. சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடும் ஒரு பிரதேசமாக இப்போது கூந்தன்குளம் காட்சியளிக்கிறது. பறவைகளால் பேர் கிடைத்திருக்கிறது.

 

கூடுகளிலிருந்து வீழ்ந்த குஞ்சொன்றை, அந்தக் கூட்டில் சேர்க்க ஆரம்பித்ததிலிருந்து பால்பாண்டிக்கு சிறகு முளைக்க ஆரம்பிக்கிறது. வெயிலும், மழையும் உள்ளே சிந்திச் சிதறும் ஒரு சின்னஞ்சிறு வீட்டில் வாழும் பால்பாண்டி, பறவைகளை ஒரு தாய் போல கவனிக்க ஆரம்பிக்கிறார். அந்தப் பறவைகளுக்காக மரங்களைப் பேணுவது, நீரைப் பாதுகாப்பது, நோய் வந்தால் மருந்து கொடுப்பது, மீன்கள் வாங்கியோ, பிடித்தோ அந்தக் குஞ்சுகளுக்கு கொடுப்பது என சதாநேரமும் பறவைகளுக்காகவே தன்னை ஒப்படைக்கிறார். அவரது மனைவி வள்ளித்தாயும் அதே போல பறவைகளை பார்க்கிறார். பறவைகளுக்கு வந்த வைரஸ், வள்ளித்தாயை தொற்றிக்கொள்ள, அவர் காலமாகிவிடுகிறார். பால்பாண்டி மனைவியின் நினைவுகளோடு பாட்டு பாடிக்கொண்டு இருக்க, ஒரு பறவை வந்து அவரது தோளில் வந்து மிக அந்நியயோன்யமாக வந்து உட்கார்கிறது.

koonthankulam குளத்தில் இறங்கி சடசடத்துக்கொண்டு இருக்கும் பறவைகளை ஒரு நாய் வெறிகொண்டு விரட்டுகிறது. பறவைகள் பரிதாபமாக கத்தி அலைக்கழிகின்றன. அந்த ஊரில் இருக்கும் ஒரு சிறுவன் அந்த நாயைக் கல்லெறிந்து விரட்டுகிறான். எல்லாம் பால்பாண்டி கற்றுக் கொடுத்த பாடம். ஊருக்குள் யாரும் தீபாவளிக்கு வெடிகள் வெடிப்பதில்லை என்பதையறியும்போது அந்த மக்களின் மீது மரியாதை கூடுகிறது. தனது தொடர்ந்த முயற்சியினால் இப்போது அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் பறவைகளுக்கு மருந்து கொடுப்பதற்காக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதையும் சொல்கிறார். அரசு கவனமெடுத்து, ஆதரவுக் கரம் நீட்டினால் பறவைகள் இங்கேயே இருக்க முடியும், இல்லையென்றால் இவைகளும் இங்கிருந்து போய்விடும் என கவலைகொள்கிறார். தன்னைப் போல ஒரு பத்து பால்பாண்டிகளை உருவாக்கிவிட வேண்டும் எனப்தே இப்போது அவருக்கு இலட்சியமாக இருக்கிறது. படங்கள் முழுக்க பால்பாண்டியும், பறவைகளும்தான்.

A Life for Birds படம் சிறப்பாக வந்திருந்தது. ஓளிப்பதிவும், தொழில்நுட்பமும் படத்தை கவனத்துக்கு உரியதாய் எடுத்துக் கொடுக்கிறது. பறவைகள் உட்காருவதால் வேலிக்கருவேல மரங்கள் கூட அழகாக தெரிகின்றன. பறந்து திரிந்து மீன்களைக் கவ்விக் கொண்டு வந்து, குஞ்சுகளின் வாயில் கொடுக்கிற காட்சி அற்புதமாக இருக்கிறது. மரத்தின் நுனியில் உட்கார்ந்து நீண்ட தலைகளை உயர்த்தி, சிறகுகளை அசைக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இதெல்லாம் National geographic சேனலில் பார்க்க முடியும் எனத் தோன்றினாலும், ஒரு மனிதன் பறவைகளுக்கு போக்கு காட்டி ஓடுவதையும்,   அவனைப் பிடித்துக்கொள்ள பின்னாலேயே ஒரு பறவை ஓடுவதையும் எங்கும் பார்க்க முடியாது. சிலிர்க்க வைக்கிறது அந்தக் காட்சி.

படங்களைப் பற்றி பேராசிரியர் டி.தருமராஜன் அவர்கள் பாராட்டிப் பேசுகிறபோது சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது.  “நானூறு ஆண்டுகளாக பறவைகள் கூந்தன்குளத்துக்கு வருவதாகச் சொல்லப்படுகிறது. பால்பாண்டிக்கும் முன்னாலும் பறவைகளை அந்த ஊர் மக்கள் போற்றி, பாதுகாத்து வந்திருக்கின்றனர்.ஒரு வரலாற்றின் தொடர்ச்சிதான் பால்பாண்டி.  அதற்கும் முந்தைய காலத்தின் மக்கள் வாழ்வையும் சேர்த்து அறிய வேண்டி இருக்கிறது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக மேலும் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன” எனச் சொன்னார்.

உண்மைதான். இதை வழிமொழிந்து நானும் பேசும்போது சொன்னேன்.  நான் கூந்தன்குளத்துக்கு சென்றதில்லை. விருதுநகர் மாவட்டத்தில் சங்கரபாண்டியபுரம் என்னும்  சிறிய ஊர் இருக்கிறது. நீர்ப்பரப்புகள் பெரிதாக எதுவும் இல்லை. அங்கும் பறவைகள் வருகின்றன. எங்கள் ஆவணப்படக்குழு அங்கு சென்று பதிவு செய்து இருக்கிறோம். ஊரே பறவைகளின் எச்சங்களால் நனைந்து காய்ந்து கிடந்ததைப் பார்த்தோம். பறவையின் எச்சங்கள் படாத மனிதத் தலைகளே இல்லெயென்றார்கள். எப்போதும், எங்கு இருந்தாலும் பறவையின் சத்தங்கள் ஒரு இரைச்சலாக கேட்டுக்கொண்டே இருக்கும். அவைகளை சகித்துக்கொண்டு அல்லது ஏற்றுக்கொண்டு அங்குள்ள மக்கள் வாழ்கின்றனர். அந்தப் பறவையின் எச்சங்கள் இந்தப் படங்களில் இல்லை. அங்கிருந்து இன்னொரு படம் அல்லது பார்வை துவங்க வேண்டி இருக்கிறது.

காக்கா எச்சம் போட்டு விட்டால்,  அவமானமாகவும், அசிங்கமாகவும் பார்க்கிற நமக்கு  இந்தப் படங்கள் பல குற்ற உணர்ச்சிகளைத் தருகின்றன.

Related Posts with Thumbnails

10 comments:

 1. நல்ல பகிர்வு.

  இந்தப் படங்களை எங்கே பெறமுடியும்

  ReplyDelete
 2. நெருடும் பகிர்வு மாது சார்

  துவங்குவோமே!

  ReplyDelete
 3. கேள்வி படாத செய்தி... பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு, நன்றி.

  சமீபத்தில் இவரைப் பற்றி எழுதப்பட்ட மற்றொரு இடுகை.

  http://mvnandhini.wordpress.com/2010/02/05/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE/

  ReplyDelete
 5. கூந்தன்குளம் பால்பாண்டி ஒரு மகத்தான மனிதர்தான். அவருக்கு வாழ்த்துக்களும், அழகாகப் பகிர்ந்த உங்களுக்கு நன்றிகளும் மாதவ் அண்ணா.

  ReplyDelete
 6. ஆச்சர்யமான மனிதர்... முன்னமே ஒருமுறை அறிந்ததாய் ஞாபகம்.

  நல்ல பகிர்வு... இவர்களை போன்றவர்களை அடையாப்படுத்தும் முயற்சிகள் பாராட்டுக்களுக்குரியது...

  ReplyDelete
 7. "ஆவணப்படங்களும், பறவைகளும்"

  மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது.

  பறவைகளை தாய்போல் கவனிக்கும் பால்பாண்டி வாழ்த்துவோம்.

  ReplyDelete
 8. அன்பு மாதவ்

  இந்தப் பதிவையும், குறிப்பாக அந்தப் புகைப்படத்தில் தோன்றும் மனிதரையும் இன்ப அதிர்ச்சியோடு பார்த்தேன்.......

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள், பூவுலகு இதழ் மீண்டும் தொடர்ந்து வருவது தொடர்பாக சென்னையில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பால் பாண்டி அழைக்கப்பட்டிருந்தார். அவரைப் பற்றிய அருமையான கட்டுரையை அழகான புகைப்படங்களோடு பூவுலகு இதழில் எழுதியிருந்தார் காஞ்சனை சீனிவாசன். உள்ளபடியே அவரது மின்னஞ்சல் அழைப்பு மூலம்தான் இந்தக் கூட்டம் பற்றிய செய்தியே எனக்குத் தெரியவந்திருந்தது. அதில் பால் பாண்டியைப் பற்றிய அறிமுகம் அமர்க்களமாகவும், உருக்கமாகவும் செய்யப்பட்டது.

  பால் பாண்டியின் மடியில் பறவைகள் எப்படி குழந்தைகள் போல் வந்து அமரும் என்பதிலிருந்து, ஓராண்டு வந்து திரும்பும் பறவைகள் அடுத்த முறை வரும்போது எப்படி பரிச்சயத்தோடு அவரது கைகளை நாடி வந்து சேரும் என்பதிலிருந்து, அவராக எடுத்துக் கொண்டு ஒரு பராமரிப்பாளனாக கூத்தங்குளம் சரணாலயத்தில் செயலாற்றிக் கொண்டிருந்த இந்த ஏழை மனிதரின் இல்லாளும் எப்படி இந்தப் பறவைக் கூட்டத்திற்கும் ஒரு தாயாக உருமாறினார் என்பதையும், அண்மையில் அந்த உன்னத மனுஷி காலமான துயரச் செய்தியும், அரசாங்கம் இந்த மனிதரை ஒரு சொற்பச் சம்பளம் கொடுத்து ஊழியனாக்கிய வரலாறும், பின்னர் கட்டுப்படியாகவில்லை என்பதால் அவர்களாகவே இவரை வேலையிலிருந்து நிறுத்தியதை, அது தந்த அதிர்ச்சியை மீறி நீங்கள் என்ன பணத்தால் என்னை அளப்பது, பறவைகளிடமிருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது என்று இந்த மனிதர் தமது கடமையைத் தொடர்வதை.............என்று நிறைய விஷயங்கள் அந்த மேடையில் பேசப்பட்டன.

  மிகச் சிறந்த புகைப்படக்காரருமான பால் பாண்டியின் உதவியால் தான் எத்தனையோ மாணவர்கள் ஆய்வுக் குறிப்புகளை சேகரித்து வருகின்றனர். பறவைகள் பற்றி மட்டுமல்ல, அந்தப் பகுதி தாவரங்கள், இதர உயிர்கள், தட்ப வெப்ப நிலை .....என எத்தனையோ இயற்கை ரகசியங்களைத் தமது உடலின், உள்ளத்தின், வாழ்க்கையின் உறுப்புகளாகவே அமையப்பட்ட வரத்துடன் உலவுகிற பால் பாண்டிக்கு ஓர் புகைப்படக் கருவி வாங்க உதவுங்கள் என்று நூறுக்கும் குறைவாகவே இருந்த பார்வையாளரிடம் வேண்டுகோள் விடப்பட்டது. தமது கைக்குட்டையினை ஏந்தித் தமது பங்களிப்போடு வசூலை பார்வையாளரின் இருப்பிடங்களுக்குச் சென்று நடத்தியவர் எடிடர் லெனின். எட்டாயிரம் போல கிடைத்தது. முதல் தவணைப் பணமாக அதை அன்போடு பெற்றுக் கொண்ட பால் பாண்டி முன்னதாக உயிரைப் பிசைந்தெடுக்கும் "கூத்தங்குளம் வாங்க அந்தப் பறவைகளைப் பாருங்க....." என்று வகை வகையான பறைவகளைப் பற்றிய தாமே இட்டுக் காட்டிய அழகான பாடலைப் பாடினார். அவரது பணி நீக்கத்தை அரசு திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இந்த உணர்சிகரமான நிகழ்வின் கனத்தை மேலும் கூடினர் தியோடர் பாஸ்கரனும், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரும்......

  மாதவ், பால் பாண்டி பற்றிய ஆவணப் படங்களை அறிமுகப் படுத்தியிருப்பது உங்கள் வலைப்பூவின் வெளிச்ச வாயில்களைக் கூட்டுகிறது. வாழ்த்துக்கள்..

  எஸ் வி வேணுகோபாலன்
  .

  ReplyDelete
 9. ஈரோடு கதிர்!
  தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன். கவிஞர் கிருஷி எனக்கு டிவிடி அனுப்பி வைக்கிறேன். என்றார். கிடைத்தால் உங்களுக்கும் நகலெடுத்து அனுப்புகிறேன்.


  நேசமித்ரன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.
  ஆ....ஆ...புரிந்துவிட்டது!
  நன்றி நண்பரே!  கையேடு!
  வருகைக்கும், சுட்டிக்காட்டியதற்கும் நன்றி. படித்தேன். இதுபோன்ர பதிவுகள் தேவை. மக்களிடம் சில விழிப்புணர்வுகளை கொண்டு வரும்.


  செ.சரவணக்குமார்!
  தொடர் வருகைக்கு மிக்க நன்றி தம்பி.


  க.பாலாசி!
  ஆமாம். ஏற்கனவே சில பத்திரிகைகளிலும், இணையத்தில் சில பதிவுகளிலும் அவரைப் பற்றி வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.


  மாதேவி!
  நிச்சயம் காலம் அவரை வாழ்த்தும். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.


  எஸ்.வி.வி!
  வழக்கம்போல இந்தப் பதிவை மேலும் அடர்த்தியாக்கி இருக்கிறீர்கள். இந்த ஆவணப்படத் திரையிடலுக்கும் பால்பாண்டி வந்திருந்தார். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி தோழா!

  ReplyDelete