-->

முன்பக்கம் , , , � போட்டோ: அமர்ந்திருக்கிறார் மரண முனைகளில்…

போட்டோ: அமர்ந்திருக்கிறார் மரண முனைகளில்…

இந்தப் படத்தை நண்பர் கவாஸ்கர் அனுப்பி வைத்திருந்தார். பார்க்கவும் தைரியம் வேண்டும்.  படபடவென இருக்கிறது. ஆனால் இவர்களுக்கு வாழ்க்கையே இப்படித்தான்.
on train
தவிப்பையும், தொந்தரவையும் தரும் இந்தப்படத்தைப் பார்த்து நண்பர் எஸ்.வி.வேணுகோபலன் எழுதிய கவிதை இது.

இறங்க வேண்டிய இடமும்
ஏறி மிதிக்க வேண்டிய தடமும்


ஓடிக் கொண்டிருக்கிறது ரயில்
அமர்ந்திருக்கிறாய் இரண்டு பெட்டிகளின் இடையில்
ஒரு வேகச் சுழற்சியில் தீவிரமாய்ச்சுழலும் ,
மாவு அரவை இயந்திரத்தின்
இரக்கமற்ற இரண்டு உருளைக் கற்கள் இடையே இருப்பதைப் போல்
நாலு கால் பாய்ச்சலில் செல்லும் ஒரு குதிரையின்
வயிற்றைக் கட்டித் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல்
வாழ்க்கையின் விதியே உதறியபின்னும்
அதன் ஒற்றை மெல்லிழையின் நுனியில் ஒட்டியிருப்பதைப் போல்
எல்லாம் தெரிந்த ஞானியைப் போல்
எதுவும் புரியாத குழந்தையைப் போல்
அமர்ந்திருக்கிறாய் ஒரு வேக வாகனத்தின்
மரண முனைகளில் ஒன்றின் மீது
தூரங்களை விழுங்கி விரைகிறது ரயில்
பசி, பட்டினி, அவச்சொல், அவமதிப்பு
எல்லாம் விழுங்கிய மிரட்சி தெரிகிறது
உனது கண்களில் .......
ஆட்டத்திலிருக்கும் உனது இருப்பையும்
அமைதிப் படுத்துகின்றன
உயரத்தில் தெரியும்
உனது மக்களின் கால்கள்.....
இறங்க வேண்டிய இடத்தை நோக்கிய
காத்திருப்பில் பயணிக்கிறீர்கள் கால காலமாய்..
ஏறி மிதிக்க வேண்டிய இடத்தை
யோசியுங்கள் இனி ஒரு மாற்றமாய்

பிற்சேர்க்கை:
படத்தின் பாதிப்பில் இங்கு இவர்கள் பின்னூட்டங்களையே  கவிதைகளாக தந்திருக்கின்றனர். அவர்களுக்கு நன்றி.  நீங்களும் படைக்கலாமே!
Related Posts with Thumbnails

25 comments:

 1. //இறங்க வேண்டிய இடத்தை நோக்கிய
  காத்திருப்பில் பயணிக்கிறீர்கள் கால காலமாய்..
  ஏறி மிதிக்க வேண்டிய இடத்தை
  யோசியுங்கள் இனி ஒரு மாற்றமாய்//

  நல்ல சிந்தனை..
  எழுதிய வேணுகோபால் அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 2. ஏப்ரல் 1 என் இனிய
  " இந்திய மக்கள் தின" வாழ்த்துக்கள்
  இந்த நல்ல நாளில், காவிரில, கங்கை தண்ணிய குடிக்கற மாதிரி , கருப்பு பணம் 73 லட்சம் கோடி வர மாதிரி, பெட்ரோல் வெல கொறையரா மாதிரி, ஒரு கனவ,அடிக்கடி நினச்சி பாத்து சந்தோஷமா இருக்கணும் .

  ReplyDelete
 3. படம் மனதை கலங்கடிக்கிறது

  ReplyDelete
 4. அன்பு மாதவராஜ்,

  இது பின்னூட்டம் தான்

  எரவானத்துல வச்சிருந்த
  சின்ன ஓலைக் கொட்டான
  தேடி எடுத்து கை விட்டு
  செருகின எடத்துல
  பார்த்தா... ரூவாய காணோம்!!

  எடுவட்ட பய எடுத்துட்டு
  போயிருப்பானோ?
  குடிச்சு கொல்லையில போக...
  பிணந்தின்னி கழுகா
  வந்து வாய்ச்சிருக்கு எனக்குன்னு...

  இழுத்துகிட்டு கிடக்குற
  ஆத்தாவா பாக்க எப்படி போகப்போறேன்

  உள்ளூருலையே விருமாண்டி மாமனுக்கு
  கட்டி கொடுத்திருந்தா
  இத்தனை சீப்பட வேண்டாம்
  அதுக்கும் நாப்பொழப்பு தான்
  இன்னவரை

  இருக்குற இரண்டு
  துணிய பழைய சீலைல
  மூட்டைய கட்டிக்கிட்டு
  ரயிலேற கிளம்பிட்டேன்...
  ஆத்தாவுக்கு எப்படி இருக்குமோ
  மனசு கிடந்து அடிச்சுக்குது

  டேசனுக்கு போனா
  ஜனமான ஜனம்
  மதுரை வீரன் கோயில் திருவிழா கணக்கா
  இதுல நமக்கு எடம் எப்படி
  கிடைக்குமோ...
  கருப்பசாமி! எப்படியாச்சும்
  போய்டணும் மனசு வை சாமீ!

  காசில்லாம போக கக்கூசு தான்
  வழின்னு போனா
  அங்க ரெண்டு பம்மிகிட்டு நிக்கி
  என்னத்தை செய்ய
  சீலைத்துணி மூட்டைய அடியில
  கொடுத்து ரெண்டு பொட்டிக்கு
  நடுவுல ஒக்காந்து போய்டலாம் தான்

  குண்டி கடுத்து போகுமே...
  தூரச்சீல வேற நகண்டுகிட்டே
  இருந்தோலைக்கும்

  அவஸ்தையான அவஸ்தை
  ஆம்பளைய பொறந்தா இதெல்லாம்
  இல்லாம பெட்டி மேலே
  ஒக்காந்து வரலாம்
  பொறந்தது பொட்ட கழுதையா
  சுமக்க மாட்டாம பொதி கனமா
  போச்சு வாழ்க்கை

  பிடிச்சுக்கிட கம்பி
  இருந்ததால வந்து சேர்ந்தேன்
  உன்னை பார்க்க
  ஆத்தா மேல எம்புட்டு
  உசுர வச்சிருக்க புள்ள...
  அம்மா கட்டிக்கிட்டு அழுதா...
  கொஞ்ச நேரம் இருந்துட்டு
  சொம்பு தண்ணீ குடிச்சப்புறம்

  தங்கச்சி கிட்ட
  அம்மாவ பாத்துக்கிடு
  நான் ராணியக்கா வீட்டு வரைக்கும்
  போயிட்டு வாரேன்

  ராணியக்கா வீட்டிற்கு
  போகும் வழியில்
  விருமாண்டி மாமா வீட்டிற்குள்
  எட்டி பார்த்து கொண்டே கடந்தாள்

  அன்புடன்
  ராகவன்

  ReplyDelete
 5. படத்தை பார்த்தவுடன் உடலை ஒரு நொடி சிலிர்க்க வைத்தது...
  தோழர்கள்.கவாஸ்கர், எஸ்.வி.வேணுகோபால்,மற்றும் மாதவராஜ் ஆகியோருக்கு நன்றிகள்... பல...

  ReplyDelete
 6. very heart touching one.The millions of people went by train as refugees like this during India and Pakistan partition..What RIGHT thinking people and LEFT thinking people are doing against these things ??Put a question also ..

  ReplyDelete
 7. மிதிக்க வேண்டிய இடங்கள்தான் இங்கே எத்தனை எத்தனை சிதறிக்கிடக்கின்றன....

  ReplyDelete
 8. ராக‌வ‌ன், பின்னோட்ட‌த்தில்
  ஒரு கி.ரா நாவ‌லையே
  ந‌றுவிசாய் க‌விதையாக்கி விட்டார்.
  வாழ்த்துக்க‌ள்.

  ReplyDelete
 9. My god... shocking to watch this snap...

  ReplyDelete
 10. திரிசங்கு முடிச்சு

  ஓடும் வேகத்தில் கழிவறை கசடுகள் காலுக்கு வருகையில்தான் உயர்த்தவும் கூடாமல் உள்ளிழுக்கவும் ஆகாமல்

  திருட்டு சிகரெட்டை அணைக்காமல் வீசும் மகராசர்கள் வீட்டை நினைவுறுத்துகிறார்கள்

  கருப்பு கோட்டு காரர்களுக்கு
  கப்பம் காசும் கொஞ்சம் வேசை பட்டமும்

  குட்கா தெறிக்க பேசும் மேலிருப்பவன்
  கண்ணுக்கு செலவு வைக்காமலிருக்கட்டும் கர்த்தாவே

  எத்தனை ரயில் விட்டாலும்
  ஏற்றித்தர மனதில்லை சம்பளத்தை எசமனர்களுக்கு

  ReplyDelete
 11. முதல் பார்வையில் படம் குழப்பினாலும்,புரியும்போது மிரள வைத்தது
  கவிதையின் கடைசிவரிகள்...........!!!!?????.
  வேணுகோபால், மாதவ ராஜ் மற்றும் ராகவன் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 12. இந்த தடவை ஊருக்கு போயிட்டு வரும்போது லோனாவ்லாவை தாண்டி வரும்போது ஒரு ரயில் எங்களுக்கு இணையாக வந்து கொண்டிருந்தது. கடக்கும்போதுதான் கவனித்தேன்.. இரண்டு பெட்டிகளுக்கிடையிலான இடைவெளியில் நாலைந்து பேர் ஆண்களும் பெண்களுமாக கையில் குழந்தையுடன் அமர்ந்திருப்பதை.என்னையறியாமல் 'ஐயோ' என்று அலறிவிட்டேன்.அதே உணர்வுதான் இன்றும் இந்தப்படத்தைப்பார்த்து.

  ReplyDelete
 13. வாழ்க்கைப் பயணத்தில் பயணமே ஒரு போராட்டமாய்...
  பதைபதைக்க வைத்த புகைப்படம்.

  ReplyDelete
 14. My daily life is more treacherous than this journey!
  Caught between moneylenders and my children's hungry mouths!
  Caught between my drunken husband and lusty rowdies on the street!
  Caught between raging bulldozers and falling walls of my home!
  Caught between the leaking roof
  and the rising river!
  Caught between.......
  My daily life is more treacherous than this journey!

  ReplyDelete
 15. இந்தப் பதிவிற்கு முதல் முக்கிய காரணம், இளம் தோழர் கவாஸ்கர் வேறு யாரிடமிருந்தோ பெற்று அனுப்பியிருந்த புகைப்படம்.

  இயந்திரகதியான ரயிலைவிடவும், இயந்திரகதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்மணி அடுத்த காரணம்.

  வேகமோ, ஓசையோ, உற்சாகமோ, அழுகுரலோ ஒரு புகைப்படத்தில் பதிவாகாது என்று யார் சொன்னது.....
  ஒரு கலைஞனின் உள்ளிருந்து எட்டிப் பார்த்த சமூக ஆன்மா ஒன்று இப்படியான பதைப்புறத் தக்க காட்சியைப் படமாக்கி அனுப்பியிருக்கிறது.......

  படத்தின் செய்தியில் ஆழ்ந்தோர், கவிதை மேலும் கூட்டிய அதிர்ச்சியில் உறைந்தோர், சிறுகதையாகவே மேலும் கவிதைகள் புனைந்து அனுப்பியுள்ள தோழர்கள், வழக்கம் போல் எனது பதிவுகளை இடுகை செய்திருக்கும் இனிய மாதவ் அனைவருக்கும் எனது நெஞ்சு நெகிழ்ந்த நன்றி...
  படைப்பாக்கங்கள் செயலூக்கம் வழங்கட்டும்.

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 16. மனச்சுமை இறக்க ஒரு பயணம்.
  எனது வாழ்க்கையை விடவா கடினம்.
  வாய்தவர்களுக்கு உள்ளே பயணம்.
  ஏன் இந்த கடின நிலைமை எனக்கு.
  சிந்திக்க நேரம் இதுவல்ல.
  எனக்கு நிம்மதி தரும் தயனம்
  கிடைக்கும் வரை சலனமில்லா இப்பயணம்
  எனது வாழ்கையை விடவா கடினம்.

  அன்புடன்
  சுவாமி.

  ReplyDelete
 17. நடுக்கம் நிற்க சில வினாடிகள் ஆனது.

  ReplyDelete
 18. மிரள வைக்கும் படம்.
  \\எல்லாம் தெரிந்த ஞானியைப் போல்
  எதுவும் புரியாத குழந்தையைப் போல்\\

  வேணுகோபலன் அவர்களின் அற்புதமான கவிதை.

  ராகவனின் கவிதை, வழக்கம் போல பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது

  ReplyDelete
 19. very disturbing picture and poem :(

  ReplyDelete
 20. விஜய் அவர்களின் ஆங்கிலக் கவிதை பின்னூட்டம் அபாரமாயிருக்கிறது. எனக்கு எட்டிய தமிழில் அதைத் தமிழில் தந்திருக்கிறேன்.......நன்றியும், வாழ்த்துக்களும் விஜய்!

  எஸ் வி வி

  இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது...

  இரா. விஜயசங்கர்

  எனது அன்றாட வாழ்க்கை இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது...
  சிக்கித் தத்தளிக்கிறேன்
  கந்துவட்டிக்காரர்களுக்கும் எனது குழந்தைகளின் பசி மிஞ்சிய வயிறுகளுக்குமிடையில்
  எனது குடிகாரக் கணவனுக்கும் தெருவில் அலையும் காமாந்தகாரர்களுக்குமிடையில்
  இரக்கமற்ற புல்டோசர்களுக்கும் நொறுங்கி வீழ்ந்து கொண்டிருக்கும் எனது குடிசைக்குமிடையில்
  ஒழுகிக் கொண்டிருக்கும் கூரைகளுக்கும் உயர்ந்து கொண்டிருக்கும் ஆற்று வெள்ளத்திற்குமிடையில்
  சிக்கித் தத்தளிக்கும்
  எனது அன்றாட வாழ்க்கை
  இந்தப் பயணத்தை விடவும் கொடுமையானது...

  ReplyDelete
 21. Dear Venu
  The translation is accurate and excellent. I could not have written llike this in Thamizh. I write my responses in English because I have not mastered the art of typing in Thamizh. I am technologically challenged that way.
  Thanks and regards
  Matravai Neril!
  Vijayshankar

  ReplyDelete
 22. உயிரின் மீது ஆசையில்லை.
  வாழ்க்கையின் மீது உண்டு.
  நாளை என்பது வேறுதான்.
  இன்றே இல்லை.
  விடியல் மட்டும் பார்க்கின்றது
  ஏதோ ஒன்று மாறுகிறது.
  ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
  கடைசியில் எல்லாம்.
  கை இறுக பற்றிக் கொண்டிருக்கிறது
  மாற்றத்தை எதிர்பார்த்து.

  ReplyDelete
 23. எந்தப் பயணம் ஆனாலும்
  அதில் எத்தனை அபாயம் இருந்தாலும்
  பெண் எப்போதும் ஆண்களின் காலடியில்தான்
  வரிசையாக எத்தனை கால்கள்!
  ஒரு கால் உதைத்து அடக்கும்
  ஒரு கால் அலட்சியமாய் தூசியை தட்டிவிடும்
  ஒரு கால் ஆணவமாய் மறுகாலின் மீது அமரும்
  எந்தக் கையாவது என்றாவது அவளுக்கு ஆதரவாய் நீளுமா?

  ReplyDelete
 24. என்ன கொடுமை.படத்தைப் பார்த்ததும்
  ஒருகணம் மூச்சு நின்று போயிற்று.
  கவலை தொற்றிக் கொண்டது.

  ReplyDelete
 25. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  தங்கள் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.

  கவிதைகளை பலரும் தந்திருக்கின்றனர். அவர்களுக்கு மிக்க நன்றி.

  வாழ்க்கையின் ஒரு கணம் நம்மை எப்படி உலுக்குகிறது?

  ReplyDelete