Type Here to Get Search Results !

என்னைக் கவர்ந்த பதிவர் 1

 

கொஞ்ச காலமாகவே யோசித்து வந்தது. இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. இலக்கியம் குறித்து திட்டமிடல்களோடு உட்காருகிற சமயம், எதாவது நிகழ்வுகள் தொந்தரவு செய்து விடுகின்றன. உன்னைப்போல் ஒருவன், நோபல் பரிசு என ஊர்சுற்ற ஆரம்பித்து விடுகிறேன். இப்போது திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்த கதியில்தான் வாழ்வும் சரி, வலையுலகமும் எனக்கு வாய்த்திருக்கிறது.

வலைப் பக்கங்களில், அடுத்தவர்களுடைய பதிவுகளை ஏழெட்டு மாதங்களாக  படித்து வருகிறேன். ஒன்றிரண்டு என ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக கூடி இன்று அறுபத்திரண்டு வலைப்பக்கங்களை என்னுடைய கூகிள் ரீடரில் வைத்து படித்து விடுகிறேன். இன்னும் சேர்க்க வேண்டியது இருக்கிறது. அய்யனார், கே.பாலமுருகன், ஆடுமாடு,  போன்றோரது பல பதிவுகளை இன்னமும் படிக்காமல் சேமித்து வைத்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்துக்களின் மீது எனக்கு பிரமிப்பும், மோகமும் உண்டு. மெல்ல ஆற அமர படிக்க வேண்டும் என நினைத்து, அவை ஒருபக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. எப்போது கம்ப்யூட்டரைத் திறந்தாலும் ஒரு உறுத்தல் வருகிறது. அதற்குள் பலரது வலைப்பூக்கள் ரீடரில் மலர்ந்து இருக்கின்றன. அதை நோக்கி ‘கர்சர்’ விரைகின்றது. இதற்காக மற்றவர்களது பதிவுகள் படிப்பதற்கு சுலபமானவை, அடர்த்தியில்லாதவை என்று அர்த்தமாகி விடாது. எனக்கு அப்படியொரு சுபாவம். அவ்வளவுதான். இது எல்லோருக்குமே இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இந்தப் பதிவுகளைப் படிக்கும்போது சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும். அப்படிப்பட்டவர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பிப்பேன். முதன்முதலாக இப்படி படிக்க ஆரம்பித்தது செல்வேந்திரனை. அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது. ஒரு பதிவைப் படித்து பின்னூட்டம் போட்டு விட்டு வேறொரு பதிவரின் பதிவுக்குச் செல்வது ஒரு பத்திரிகையை படிப்பது போல. ஒரே பதிவரின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பது ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, ஒரு நாவல் படிப்பது போல. கூடவே அந்த பதிவர் நம்மோடு தனியாக வந்துகொண்டு இருப்பார். அவரது உலகம், மொழி, நடை எல்லாம் துல்லியமாக உணர முடியும். எனக்கு இதுவும் பிடித்திருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் ஆரம்பித்து இரண்டு மணி வரைக்கும் கூட சிலரது வலைப்பக்கங்களை வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன்.  இருக்கிறேன்.

இந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ‘என்னைக் கவர்ந்த பதிவர்கள்’ என்னும் இந்த தொடருக்கான அர்த்தம் இதுதான். எனக்குள்ள புரிதலில் ஒரு பதிவரின் எழுத்துக்களை  பார்த்த விதமே இது. ஒரு கோணம். ஒரு பார்வை. அவ்வளவே.

தீவீரமான, அடர்த்தியான, முற்போக்கான எழுத்துக்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்று எந்த முன்முடிவுக்கும் போய்விட வேண்டாம். நல்ல கவிஞர்கள், நல்ல சிந்தனையாளர்களோடு ரொம்ப ரொம்ப ஜாலியான, அரட்டை அடிக்கும் பதிவர்களும் என் லிஸ்டில் இருக்கிறார்கள். பின்னூட்டங்களிலேயே பிரமாதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த சந்திக்கு கொண்டு வந்து நிறுத்தாமல் விடப்போவதில்லை.

இப்போது ஆரம்பிப்போமா. ‘அ’ன்னா....

 

மித்து அம்மா எழுதிய ‘உப்பு’ என்னும் இந்தப் பதிவுதான் நான் அவர்களது வலைப்பக்கத்தில் முதன்முதலில் படித்தது என நினைக்கிறேன்.

சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

அடுத்தடுத்து  தொடரும் இந்த விவரிப்புகள் ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கே உரியது.  கண்ணிகளைக் கோர்க்கிற, சீட்டுகளைச் சேர்க்கிற இந்த லாவகம்தான் எழுதுகிறவர்களுக்கு முக்கியமானது. இது அமித்து அம்மாவிடம் ஏற்கனவே இருந்தது போலும். சொல்ல வருகிற விஷயங்கள்  வாசகனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தொந்தரவு செய்ய வேண்டும். அதுவும் அமித்து அம்மாவுக்கு வாய்த்திருந்தது. ஆண்களின் உலகத்திற்கும், பெண்களின் உலகத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய சுவர் இருக்கிறது என்பதற்கு இந்த உப்பு ஒரு உரைகல் போல. ஆண்களின் சிந்தனையிலே இல்லாத இந்த உப்பு, பெண்களை என்ன பாடு படுத்திக்கொண்டு இருக்கிறது!

இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். சரளமான நடையும், மிக இயல்பான மொழியும், சட்டென்று கசிந்துருக வைக்கிற அனுபவங்களுமாய் இருந்தன. உளவையும், பத்மாவையும் படித்த யாரும் இதனை உணர்ந்திட முடியும். தொண்டை அடைத்துப் போக வைத்த பதிவுகள் அவை. மழையின் எல்லாப் பக்கங்களையும் படிக்க வேண்டும் என்னும் தாகத்தை இந்தப் பதிவுகளேத் தந்தன. முதல் துளியைத் தேடிச் சென்றேன்.

2008 ஆகஸ்டில்தான் அமித்து அம்மா வலைப்பக்கம் ஆரம்பித்து இருந்தார்கள். முதல் பதிவைப் பார்த்ததும் ஆச்சரியமும், சந்தோஷமும் என்னை ஆட்கொண்டன. அழகழகான குழந்தைகளின் படங்கள்! தவழ்ந்து கொண்டு இருந்த இந்த அழகுகள்தான் இப்போது எழுந்து நடந்துகொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றன போலும். படங்களோடு வந்த பதிவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல தயக்கத்தோடு கவிதைகளாய் சில பதிவுகள். சமூக அக்கறையோடு வந்தாலும் அவை சுமாராகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒன்றைத் தாண்டியே இன்னொன்று இருந்தது. இது அவசியம். வளர்ந்து, வளர்ந்து  ஒருக்கட்டத்தில் இப்படி ஒரு கவிதையாகவே வெளிவருகிறது!

சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்

தொடர்ந்து, சின்னச் சின்ன உரையாடல்கள் மூலம் சில பதிவுகள் எழுத ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் அப்பாவைப் பற்றிய அந்தப் பதிவு வருகிறது. தன்னை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு, வாய்விட்டு அழுது, அழவைத்த அமித்து அம்மாவின் எழுத்தும் வருகிறது. ‘பிராக்ரஸ் ரிப்போர்ட் வாங்க நீ வரவேண்டாம்’ என்று அப்பாவிடம் சொல்கிற குழந்தையும், தன் திருமணத்திற்கு வரமாட்டியா அப்பா என ஏங்குகிற குழந்தையும் வாசகனின் நினைவுகளில் எப்போதும் கூட வரத்தான் செய்வார்கள். இரண்டும் ஒரே குழந்தையாய் இருப்பதில்தான் வாழ்க்கை சிரித்துக் கொண்டு இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட கவிதையும், அப்பாவைப் பற்றிய பதிவும் முக்கியமானவை. ஆமாம். இந்த இடங்கள் மிக முக்கியமானவை. அமித்து அம்மாவின் எழுத்துக்களில் பக்குவமும், நிதானமும், தெளிவும் பிடிபட ஆரம்பித்த இடம் இவை. எல்லோருக்கும் இப்படி ஒரு இடம் வாய்க்கும். கிறுக்கி கிறுக்கிப் பார்த்து, சட்டென்று நாம் நினைத்த உருவம் ஒன்று வெளிப்படும். அதிலிருந்து வேறொரு இடத்திற்கு படைப்பாளி நகர ஆரம்பிக்கிற புள்ளி இது. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எழுத்துக்களில் இந்த மாற்றம் தன்னையறியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதற்குப் பிறகு அமித்து அம்மா தன்னை உணர்ந்து கொண்ட மாதிரி, தன்னம்பிக்கையோடு நிறைய சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இதோ, பொருத்தமற்ற தலைப்பு, ஒப்புக்கு அழுகை, அன்புள்ள அப்பாவிற்கு, பெட்டிக்குள் தாலி, மிளகாய் கிள்ளி சாம்பார், முதல் மூன்று பின்னூட்டங்கள், உப்பு, பத்மா, உளவு போன்ற அருமையான பதிவுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். இதில் சிலவற்றை திருத்தி எழுதினால் இன்னும் அற்புதமாக வரும் என்பது என் கருத்து.

வாசிப்பு அனுபவங்களைப் பற்றி குறையத்தான் எழுதி இருக்கிறார்கள். எழில் வரதன் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைகள் பற்றிய இரு பதிவுகளே இருக்கின்றன. முற்போக்கு, பின்நவீனத்துவம் என எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே எழுதக் கடவட்டும். சில பிரக்ஞைகள், நமது இயல்பான ஓட்டத்தைக் குலைத்து பெரும் தயக்கங்களை கொண்டு வந்து சேர்க்கும். அறம் சார்ந்து மட்டுமே அவர்கள் யோசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். பழசை நினைத்து என்னை புதுசாக்கிக் கொள்கிறேன்  என்று அவர்கள் குறிப்பிடுவதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்?  என்னைப் போன்றவர்களுக்கு மேலோட்டாமாக, அவர்கள் எழுதிய பிறவியில் குற்றங்கள் தெரியலாம். பிறவிகள் குறித்து இந்த சமூகத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கற்பிதங்கள் என்னென்ன கற்பனைகளை ஒரு நுட்பமான, பிரியமுள்ள மனுஷிக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் அந்தப் பதிவு. அதை நகைச்சுவையோடும், வலியோடும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக திருத்தி எழுதினால், பிறவியும் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். சினிமா குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போதே இந்தப் பிறவி குறித்த சந்தேகங்களை அழகாக முன்வைக்கிறார்.

என்ன படம்னுலாம்னு நினைவில்லை. ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன். அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. அவர் சுடப்பட்டு உடம்பெல்லாம் ரத்தமாகி செத்துடுவார். இதைப் பாத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு படம் பார்க்கிறேன். அதில் அதே ராதாரவி உயிரொடு இருக்கிறார். எனக்கு அந்தப் படத்தில் மனம் செல்லவேயில்லை. எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.

அமித்து அம்மாவின் வலைப் பக்கங்களைப் படித்தால் மூன்று விஷயங்கள் தெளிவாகும். முதலாவது கிராமம் சார்ந்த ஒரு வாழ்க்கை அவர்களுடைய அழகிய கனவு போல் இருக்கிறது. இரண்டாவது தினமும் வேலைக்குச் செல்லும் எலக்டிரிக் டிரெயின், நடைபாதைக் காட்சிகள் அவர்களுடைய நனவுலகமாக இருக்கிறது. அடுத்தது, எப்போதும் கூடவே இருக்கிற சமையலறை. தனக்கான விருப்பங்களாக எதையெல்லாம் சொல்கிறார்கள், பாருங்கள்:

வெற்றுக் கைகளை சில்லிட வைக்கும் பால் பாக்கெட்,
காரைத் தரையில், கட்டை தென்னந்துடைப்பத்தால் வரும் சர்... ரக், சர்... ரக் ஓசை,
பின்னர் வளையல் ஒலியினூடே வரும் ஸலக், ஸலக் தண்ணீர் தெளிக்கும் ஓசை.
குழாயைத் திறந்தபின் ஒரு சட சட சத்தத்துக்கு பின்னர், சில்லென்று கை மேலே படும் நீர் துளிகள்.
பார்த்துக்கொண்டே இருக்கும் போதே புஸ்ஸென பொங்கும் பால்,
ஒரு சோம்பலுடன் அடிநாக்கில் தித்திப்பும் கசப்புமாய் படரும் காபி,
சின்னதும் பெரியதுமான நீர் கொப்புளங்களுடன் சல சலவென கொதிக்கும் உலை.
ஒரு நொடியும் கடத்தாது, உள்ளிருக்கும் அழுத்தத்தை சரியான இடைவெளியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வெளியேற்றும் குக்கர்,
எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசை, பூக்காரர், தயிர்க்காரரின் ரைமிங்க் கத்தல்கள்
இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்

பெண்மனதின் உலகம் எதற்குள் உருண்டோடிக்கொண்டு இருக்கிறது! ‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு  ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள். அதுதான் அமித்து அம்மா! இத்தனையோடும்தான் இவர்கள் பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மலைக்க வைக்கிறது. அமித்து அம்மாவுக்குள் வாழ்க்கையனுபவங்கள் நிறைய நிறைய இருக்கின்றன. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவைகளில் பூத்திருக்கும் அபூர்வ கணங்களைப் பிடித்து எல்லோருக்கும் வாசம் காட்ட முடிகிறது அவர்களால்.

மகளே!
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க

என அவர்கள் குழந்தையை மழையாக்கி ஆசைப்படுவதில் ஆயிரம் அர்த்தங்களும், ஏக்கங்களும் தொனிக்கின்றன. ஒரு பொறுப்புணர்வு மிக்க படைப்பாளியாய் அமித்து அம்மா நிச்சயம் வருவார்கள்.

காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது.

*

Post a Comment

40 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. சிறப்பான பதிவுகளைப் பற்றிய அருமையான விமர்சனம்!

  ReplyDelete
 2. சார‌தாவுக்கு ம‌ன‌மார்ந்த‌ ,ஆத்மார்த்த‌மான‌ வாழ்த்துக்க‌ள்

  ReplyDelete
 3. அமித்து அம்மா எழுதிய எல்லாப்பதிவுமே நான் அனுபவிச்சு வாசிச்சிருக்கேன்.

  ReplyDelete
 4. நிறைய படிச்சிருக்கீங்க. :)

  இன்னும் பலரை சந்திக்கலாம் போல...

  நற்பணி செவ்வனே தொடருங்கள் ...

  நாங்களும் ...

  ReplyDelete
 5. அமித்து அம்மா அருமையிலும் அருமை.

  ReplyDelete
 6. மிகச் சரியானத் தேர்வு. நான் சிறிது காலமாக தான் வலையுலகை வாசித்து வருகிறேன். இந்த குறுகியகாலத்திலேயே அவர்கள் எழுத்து என்னை கவர்ந்தது.\\சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும்//.நிஜம்தான்.அவர்களுக்க்கு வாழ்த்துக்கள். காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது \\காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது//

  ReplyDelete
 7. வாவ்...மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது!! அமித்து அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்..அவர்கள் இன்னும் அதிக தூரம் கடந்து செல்ல!! அருமையான பகிர்வுக்கு தங்களுக்கொரு நன்றி!!

  ReplyDelete
 8. நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் சார்.. சக பதிவர் பற்றி பெருமையாய் பேச ஒர மனது வேண்டும்...வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கு

  நன்றி மாதவராஜ்சார்..

  ReplyDelete
 9. சரியான நேரத்தில்,சரியான நபரைப் பற்றி சரியான ஒருவரால் இடப்பட்ட இடுகை :)

  வாழ்த்துகள் அமித்துஅம்மா :)

  ReplyDelete
 10. அன்பு மாதவராஜ்,

  உங்கள் பட்டியலில் கட்டாயம், அமித்து அம்மா இருப்பார்கள் என்று நினைத்தேன், நீங்கள் என்னை ஏமாற்றவில்லை. எனக்கு அவர்களின் பிற பதிவுகளை விட ஏனோ மிளகாய் கிள்ளி சாம்பார் மிகவும் பிடித்தது(சாப்பாட்டு பிரியன் என்பதாலும், அம்மாபிள்ளை என்பதாலும் கூட இருக்கலாம்), அதன் நெருக்கமும், அதில் உள்ள ஒரு பொதுத் தன்மையும் அதை எல்லோராலும் உள்ளங்கையில் ஊற்றி குடிக்க முடிந்தது. என்ன ஒரு அலட்சியமான நடை, எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒய்யார வனப்புடன் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் ஜெயந்தி போல, மனசுக்குள் ஒற்றைச் சலங்கை கொலுசென குதியாட்டம் போடும் நடை. என்னுடைய பின்னூட்டதில் கூட அவர்களின் கதை சொல்லும் லட்சனங்களை சிலாகித்ததாய் ஞாபகம். மிக சரியான ஊற்றுக்கண் இந்த பதிவு, பொங்கி பெருகும் எல்லோரையும் நனைக்க எல்லோரும் செழிக்க!

  அன்புடன்,
  ராகவன்

  ReplyDelete
 11. அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்!

  வாழ்த்துக்கள் அமித்து அம்மா!

  ReplyDelete
 12. அருமை!
  வெறுமனே அந்தப் பதிவரைப் பிடிக்கும் என சொல்லாமல், பிடித்ததற்கான காரணத்தையும் விளக்கி சொல்லி இருக்கீங்க. இது வரைக்கும் எவ்வளவோ வலையுலகத்துல கிடைச்ச அவார்டுகளை விட, இதில் பதிவருக்கு கிடைக்கும் ஊக்கமும், சந்தோஷமும், கௌரவமும் நிச்சயமாக ஸ்பெஷல் தான்.

  வாழ்த்துக்கள் அமித்து அம்மா : )

  ReplyDelete
 13. அன்பு மாதவராஜ் அண்ணா...

  நற்செயல் தொடரட்டும்...

  நன்றி.

  வாழ்த்துக்கள் அமித்து அம்மா.

  ReplyDelete
 14. அருமையான பதிவர்கள்!!! நல்ல விமர்சனம்!!

  ReplyDelete
 15. ஹைய் !!!!!! என்னோட ஃபேவரைட் அமித்து அம்மா...!!!!!!

  கிட்டத்தட்ட அமித்து அம்மாவின் எல்லா பதிவுகளையும் ஒரெழுத்து விடாமல் படிக்கும்
  சராசரி வாசகனாய் இந்த பதிவு மிகவும் எனக்கு மிகவும் நெருக்கமாகிறது.

  அவங்களுடைய இலக்கிய ரசனையும் வாசிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.மேலும்
  மாதவராஜ் அவர்களுடைய பாராட்டுகளில் பெருமையாக உணார்கிறேன்.

  ReplyDelete
 16. நல்ல பதிவு மாதவ்.

  அவருடைய வெற்றிடத்தை நோக்கிப் போகும் வீடு கவிதை அற்புதமான ஒன்று.

  ReplyDelete
 17. பதிவு நல்லா இருக்கு. சென்ற சிங்கை பதிவர்கள் கூட்டத்தின் போது ஒரு பதிவர்(அப்பாவி-முருகு) தங்களின் மோடி பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களைப் பற்றி வருத்தப் பட்டார். கோவியார், ஞானப்பித்தன், ஜேசப் பால்ராஜ் ஆகியோர் தங்களைப் பற்றியும் தங்களின் பதிவுலக அனுபவங்களைப் பற்றியும் கூறி, ஒரு கடுமையான பின்னூட்டம் இடும்முன் பதிவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுருத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு விசயத்தைப் பற்றி எழுத நினைத்தால் மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற கவலை இல்லாமல் எனது கருத்தை ஆனித்தரமாக கூறுபவன். ஆதாலால் நான் தங்களின் அந்த பதிவில் உங்களைப் பற்றி கடுமையான விமர்சனம் பண்ணியும் தாங்கள் பொறுமையாக பதில் உரைத்தது மிகவும் பிடித்து இருந்தது. எனது கடுமையான தனிப்பட்ட பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும். ஆனால் அதன் பிறகு நான் எனக்கு பலரின் எதிர் பதிவின் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் பின்னூட்டங்கள் இடாமல் இது அவர்களின் கருத்து என ஒதுங்கி விடுகின்றேன். கடுமையான கருத்துப் பின்னூட்டங்கள் இடுவதில்லை. விவாதமும் செய்வதில்லை. இந்த மாற்றத்தை தந்தமைக்காக நன்றி. நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன். நன்றி.

  ReplyDelete
 18. நல்ல விமர்சனம் சிறப்பான அறிமுகம்.

  நன்றி அய்யா.

  ReplyDelete
 19. நல்ல ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டினீர்கள். படித்தேன்.. படிப்பேன்.

  நன்றி

  ReplyDelete
 20. தோழர்! அமித்து அம்மா பதிவுகளை இதுவரை வாசிக்க‌ இயலாமல் போய் விட்டது. அருமையான பகிர்வுக்கு நன்றி!! இனி பதிவுக‌ளை வாசிக்கிறேன். நன்றி!!

  ReplyDelete
 21. அமித்து அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. மிக விரிவான, அருமையான விமர்சனம்..

  இனி அவர்களின் தளத்தையும் வாசிக்கிறேன்

  நன்றி

  ReplyDelete
 23. //‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள்.

  இது தான் அமித்து அம்மாவை தொடர்ந்து நான் படிப்பதற்கான காரணம்.

  ReplyDelete
 24. அவரது அனுபவ பதிவுகள் மிக இயல்பாக இருக்கும்.

  வாழ்த்துகள்.

  மாதவராஜ் சார். நண்பன் ஜாக்கி சொன்னதையும் வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 25. AA (ஆம், அவர்களை நான் அப்படித்தான் அழைப்பேன்) எனக்குப் பிடித்த பதிவர்களுள் ஒருவர். நீங்கள் குறிப்பிட்ட "பெட்டிக்குள் தாலி" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. போலவே வேலன் குறிப்பிடும் கவிதையும்.

  நாம் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய பதிவர் அவர். வாழ்த்துகள் AA.

  அனுஜன்யா

  ReplyDelete
 26. அருமையான பகிர்வு மாதவன்.எவ்வளவு அழகாய்,நிறைந்த மனசோடு சக பயணியை விவரித்து செல்கிறீர்கள்.மிக சிலவே அவர் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன்.வாசித்தவரையில்,நீங்க உணர்கிற இதே பிரமிப்பை,சந்தோசத்தை,நிறைவை, நானும் உணர்ந்து வந்திருக்கிறேன்.யாரும் உணரலாம்.முக்கியமாய் அவரின் அமித்து அப்டேட்ஸ்..எனக்கு!

  ஒரு பதிவை பிடித்து அதை சிலாகிக்க இடுகிற பின்னூட்ட மொழிகள் எப்பவும் பத்தாமலே இருந்து வருகிறது.எவ்வளவுதான் தூர படுத்தி சிலாகித்ததை பார்க்கும் போதும்,இன்னும் கொஞ்சம் சொல்லி வந்திருக்கலாமோ,என்று உணர்கிற எவ்வளவோ பதிவர்களின் எழுத்துக்களில் அமித்தம்மாவும் ஒருவர்.

  நாம் சொல்லவிட்ட எல்லாவற்றையும்,நம் மனசுக்கு பிடித்த ஒருவரை பற்றி,நம் மனசுக்க பிடித்த மற்றொருவர் சித்திரம் தீட்டி தருவது ஆக சிறந்த பேரனுபவம்.

  இதை,உங்களின் இந்த பதிவில் பார்க்கிறேன்.நிறைந்த சந்தோசம் மாதவன்.

  வாழ்த்துக்கள் அமித்தம்மா!

  ReplyDelete
 27. Hereafter, I will also start reading amit amma's writings.

  Keep going Mr. Maadhavaraj.

  ReplyDelete
 28. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கும்,உங்களுக்கும்!

  ReplyDelete
 29. அமித்து அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 30. மிக சிறந்த ஒரு பதிவரை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்...!
  ஒரு அபூர்வமான எழுத்து நடையில் கலக்குபவர்..!

  அமித்து அம்மாவின் பதிவுகளில்...!

  பணத்தின் ருசி

  கவலை தின்னி

  சுயம்

  ஆகிய பதிவுகளும் சிறப்பானவை...!

  ReplyDelete
 31. அமித்து அம்மாவின் டாப் க்ளாஸான படைப்புக்கள் இன்றைய வெகுஜன ஊடக படைப்புகளைவிட டாப் க்ளாசாக சில சமயம் உணர்ந்ததுண்டு.

  அவர்களை சரியான நேரத்தில் ரெககனைஸ் செய்யும் இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி !!!!

  பதிவுக்கொரு பூங்கொத்து !!!!!

  ReplyDelete
 32. காலையிலேயே படித்து விட்டு அமித்து அம்மாவிடம் வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டேன்.

  அற்புதமான பகிர்வு. உங்கள் பார்வையும் வெகு நுட்பமான அலசலும் அவர்களின் எழுத்துக்களுக்கு மேலும் உரமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை!

  //இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். //

  :-) ரொம்ப ரசித்தேன். மழை நனைப்பது போன்ற ரம்மியமான நடை அவர்களின் தனிக்கலை!

  அமித்து அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; உங்களுக்கும்!

  ReplyDelete
 33. வலைச்சரத்தில் எழுதலாமே!

  ReplyDelete
 34. அழகான விமர்சனம். அமித்து அம்மாவின் இயல்பான நடை எனக்கும் பிடிக்கும்
  .வாழ்த்துக்கள் அமித்து அம்மா

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள் அமித்து அம்மா

  சிறந்த விமர்சனம்..

  சிறந்த எழுத்தனுபவமும்,வட்டார பேச்சு வழக்கில் எழுதுவதிலும் திறமையானவர் சகோதரி..

  ReplyDelete
 36. யாருக்கும் அமித்தம்மாவைப் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம். வத்தல், வடாம் என்று எழுதும் பழய்ய பெண்எழுத்தாளர்கள் பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. அதையெல்லாம் பாந்தமாகத் துடைக்கிற எழுத்து அமித்து அம்மாவின் எழுத்து. அஞ்சறைப்பெட்டிகளை நடுக்கூடத்திற்கும் நடுத்தெருவுக்கும் கொண்டுவந்து பொதுவான அன்றாடங்களோடு இணைக்கிற அவரது வித்தை வியப்பானது. அதுதான் அவர்களது சிறப்பு. அவர்களையும் எனக்கு
  மாதுதான் அறிமுகப்படுத்தி வைத்தான். வானம் அறிந்ததனைத்தும் வலையில் அறிவோம். வானம் அறியாதவற்றையும் கூட.
  அட மறந்துவிட்டேன் வாழ்த்துக்கள் அமித்தம்மா....

  ReplyDelete
 37. எதுவும் தெரியாமத்தான் எழுத ஆரம்பிச்சேன், ஒரு சராசரி வாசகியாய் இருந்திருக்கேன், நீங்கள் சொன்னால் மாதிரி ஒரு புள்ளி என்னை மாற்றி இருக்க வேண்டும்.

  நீங்க எழுதுனதும், அனைவரின் பின்னூட்டங்களும் என்னை சிலிர்க்க வைத்து அழ வைத்துவிட்டது மாதவ் சார்!!

  தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. ரொம்ப நன்றி சார்.

  ReplyDelete
 38. எனக்கும் சாரதாவின் பதிவுகள் மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு சக பதிவரை (படைப்பாளியை) மனம் திறந்து பாராட்டுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொடருங்கள் மாதவராஜ்.

  ReplyDelete
 39. கடந்த ஒரு வருட காலமாக அவரின் அனைத்து இடுகைகளையும் படித்து வியக்கும் ஒரு வாசகன் என்ற முறையில், இந்த இடுகையைக் கண்டு பெரிதாய் மகிழ்கிறேன். 
  உங்களுக்கு நன்றி.. அமித்துமா அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்!

  ReplyDelete