சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 5ம் அத்தியாயம்

1967 அக்டோபர் 10ம் தேதி.

cinema page "நீங்கள் இதை நம்புகிறீர்களா? அவர் உண்மையிலேயே இறந்திருக்க மாட்டார் தானே?" சான்பிரன்சிஸ்கோ மாநிலக்கல்லூரியின் அந்த மாணவி பேராசிரியர் ஜான் கேரஸிடம் கேட்கிறார். 'வெற்றி நமதே' என சேகுவாராவின் படைப்புகளையும், உரைகளையும் பின்னாளில் ஜான் கேரஸ் தொகுத்திருக்கிறார். அன்று வகுப்பு முழுவதும் சேகுவாரா பற்றி, அவரது கொரில்லாப் போர் பற்றி, அவருடைய தனிப்பட்ட திறமைகள் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த வகுப்பில் இருந்த அறுபது மானவர்களும் சேகுவாரா இறந்து போன செய்தியை நம்ப மறுத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் அவர் மீது ஈடுபாடு கொண்டவர்கள், லத்தீன் அமெரிக்க மக்கள், ஐரோப்பாவின் மாணவர்கள் அனைவருமே திகைத்துப் போய் இருக்கிறார்கள்.

 

காஸ்ட்ரோவும் அந்த செய்தியை முதலில் நம்ப முடியாமல் இருந்தார். கியூபாவின் உளவுத்துறை அதிகாரி மானுவே பினைரோ அந்த காட்சியினை ஒரு பேட்டியில் விவரிக்கிறார். 1967 அக்டோபர் 10ம் தேதி அவருக்கு அந்த ரேடியோ போட்டோ கிடைத்திருக்கிறது. உடனே காஸ்ட்ரோவுக்கு செய்தி அனுப்பி வரச்சொல்லி இருக்கிறார். எதோ ஒரு கிராமத்து சலவை அறையில் ஒரு மேஜையில் சேகுவாராவின் உடல் கிடத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. சேகுவாராவா என்று சரியாக தெரியாமல் இருக்கிறது. காஸ்ட்ரோ அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு செலியா சான்செஸோடு திரும்பவும் வருகிறார். அதற்குள் ரேடியோ போட்டோ முலம் இரண்டாவது போட்டோ கிடைக்கிறது. இப்போது தெளிவாக தெரிகிறது. சேகுவாராவேதான். அந்த அறையில் கனத்த மெனம் சூழ்கிறது.

  dead2

சேவின் மனைவி அலெய்டா எங்கிருக்கிறார் என்று அறிந்து உடனே அழைத்து வரச்சொல்கிறார் காஸ்ட்ரோ. எஸ்கம்பரோ மலைகளில் ஆராய்ச்சிக்குச் சென்றிருந்த அலெய்டா விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்படுகிறது. கட்சித்தலைவர்களை அழைத்து செய்தியை சொல்கிறார்.  காயமும் வலியும் எல்லோர் முகத்திலும் தெரிகிறது. மக்களிடம் இந்தச் செய்தியை எப்படி சொல்வது என்று பேசுகிறார். இந்தக் கடுமையான செய்தியை தாங்குவதற்கு மக்களை எப்படி தயார் செய்வது என்றும் விவாதிக்கிறார். அங்கேயே அலெய்டாவின் வருகைக்காக காஸ்ட்ரோ அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறார்.

 

மானுவே பினைரோ தனது பேட்டியில், சேகுவாராவின் மரணச்செய்தி கியூபாவுக்கு வந்து சேர்ந்ததை இப்படி சொல்லி நிறுத்திக்கொள்கிறார். அலெய்டாவும் , குழந்தைகளும், கியூப மக்களும் கிடந்து தவித்ததை, எங்கும் அழுகையும் கோபமும் நிறைந்து போனதை அந்த அமைதி உணர்த்துகிறது. அந்த மண்ணில் பிறக்காவிட்டாலும் தங்கள் நாட்டின் புரட்சியில் முன்னணி வகித்த அந்த அற்புத மனிதரை, சிரித்த அந்த முகத்தை, செய்திகளில் வந்த அமைச்சரை, தங்கள் வீரப் புதல்வரை இழந்து நின்றது கியூபா.

  helicopter

  மானுவே பினைரோ போட்டோவில் பார்த்த காட்சியை அமெரிக்காவின் கார்டியன் பத்திரிக்கையின் நிருபர் ரிச்சர்ட் கோட் நேரில் பார்க்கிறார். வாலேகிராண்டேவுக்கு அருகில் உள்ள அந்த மலைப்பிரதேச கிராமத்துக்கு அந்த ஹெலிகாப்டர் காலை 5 மணிக்கு வருகிறது. வேண்டுமென்றே மக்கள் கூட்டமாய் நிற்கும் இடத்திற்கு தொலைவிலேயே அது தரையிறங்குகிறது. ஸ்டிரெச்சரிலிருந்து அந்த உடல் இறக்கப்படுகிறது. இராணுவ உடையிலிருந்த ஒரு மனிதர் அதனை தூக்குகிறார்.  அங்கிருந்த அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் அவரைத் தெரிகிறது. அமெரிக்க உளவுத்துறையின் மனிதர். 

 

உடல் உடனடியாக வேனுக்கு மாற்றப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் அந்த வேனை தொடர்கிறார்கள். ஆஸ்பத்திரியின் கதவுகள் அலறும்படியாக திறக்கப்படுகின்றன. வேனிலிருந்து வெளியே வந்த அவர் "நாங்கள் போக வேண்டும். தள்ளித் தொலையுங்கள்' என்று போர்க்கூச்சல் போடுகிறார். "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்' என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்கிறார். "எங்கிருந்தும் அல்ல" என்கிறார். சலவை அறை போலிருக்கும் அந்தச் சின்னக் குடிசையை நோக்கி உடல் கொண்டு போகப்படுகிறது. ஆலிவ் பச்சையிலான உடை, அந்த உடலை சேகுவாரா என்று சொல்கிறது. ரிச்சர்ட் கோட் 1963ல் கியூப தூதரகத்தில் சேவை பார்த்திருக்கிறார். சின்னப் புதர் போன்ற கறுப்பு தாடி, ஒட்டிக் கிடந்த நீண்ட முடியோடு இருந்தார். கழுத்துக்கு கீழே இரண்டு இடங்களிலும், வயிற்றில் ஒரு இடத்திலும் குண்டடி பட்ட காயங்கள் தெரிந்தன. சே ஒல்லியாகவும், சின்னதாகவும் தெரிந்தார். மாதக்கணக்கில் காடுகளில் வாழ்ந்த மனிதர் தனது இயல்பான உருவத்தையும், தோற்றத்தையும் இழந்திருக்க வேண்டும்.

 

அந்த அமெரிக்க ஏஜண்ட் கூட்டத்தை விரட்டுவதிலேயே கவனமாய் இருக்கிறார். அவரது திசையில் காமிராக்கள் படம் எடுக்கும் போதெல்லாம் பதற்றத்தோடு காணப்பட்டார். சேகுவாராவைப் போல அவரும் கியூபாவிலிருந்து வந்தவர்தான். நேரடியாக சேகுவாராவுக்கு எதிரான போரில் இறங்கினால் லத்தீன் அமெரிக்கா முழுவதும் தனக்கு எதிரான கோபத்தை உருவாக்கிவிடும் என்பதால் அமெரிக்கா, கியூபப் புரட்சியால் பாதிக்கப்பட்ட இதுபோன்ற நபர்களை பொலிவியாவில் இறக்கியிருந்தது.

 

மக்கள் கூட்டம் திரண்டு சேகுவாராவைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று அப்போது ஆவேசத்தோடு சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர். அந்தக் குரல்கள் இன்றுவரை அடங்காமல் இருக்கின்றன. பாரிஸ், பிரேக், பெல்கிரேட் நகரங்களில் 'சே வாழ்கிறார்' குரல்கள் எதிரொலித்தன. சிலியில் 85000 பேர் கலந்து கொண்ட மக்கள் கடலிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அலைகள் எழும்பின.

 

சேகுவாராவின் மரணம் குறித்த முரண்பட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன. அக்டோபர் 8ம் தேதியே பொலிவிய இராணுவத்திற்கும் கொரில்லாக்களுக்கும் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பாட்டு விட்டதாக ஒரு தகவல் வெளியாகிறது. சேகுவாராவை கைது செய்து அக்டோபர் 9ம் தேதிதான் கொல்லப்பட்டு இருக்கிறார் என்று இன்னொரு தகவலும் சொல்லப்பட்டது.

 

சேகுவாராவின் உடலை கியூபாவிற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வாலேகிராண்டேவில் எதோ ஒரு இடத்தில் கொரில்லா போராளிகளை மொத்தமாய் புதைத்து விட்டதாக சொல்லப்பட்டது. எரித்துவிட்டதாகவும் சொன்னார்கள். அவரது உடலைத் தரவும் மறுத்தார்கள். கியூபாவின் மக்கள் அந்த மகத்தான மனிதரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

 

முன்னுரை        அத்தியாயம்   1   2   3   4

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!