சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 4ம் அத்தியாயம்

பிடலுக்கு மட்டும் அவர் எழுதியிருக்கவில்லை. தாய் தந்தையருக்கும், குழந்தைகளுக்கும், மனைவிக்கும் கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவைகளில் பரிபூரண தியாகம் நிறைந்திருக்கிறது. 1965லிருந்து 1967ற்குள் வேறு வேறு தருணங்களில் எழுதப்பட்டவையாயிருந்த போதும் எழுத்துக்களில் அதே உறுதி படிந்திருக்கிறது. யுத்தகளத்திற்கு புறப்பட்டுவிட்ட ஒரு புரட்சிக்காரனின் இதயம் கிடந்து துடித்துக் கொண்டிருக்கிறது.  மரணத்தை அழைத்துக் கொண்டு அவர் டான் குயிக்சாட்டின் ரோசினாண்டே குதிரையில் சென்று கொண்டிருக்கிற காட்சி கண்முன்னே விரிகிறது. உலகை குலுக்குகிற வெடிச் சத்தத்தை அவரது துப்பாக்கி அடைகாத்து கொண்டிருக்கிறது.

 

 

பிடலுக்கு எழுதிய கடிதம் :

with castro7

 

ஹவானா

பிடல்,

இந்த நேரத்தில் எனக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோணியாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது, புறப்பட தயாரானபோது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது. பிறகு எல்லாம் புரிந்து போனது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள்.

 

இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது. கியூப புரட்சியின் எனக்கு அளிக்கப்பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றி விட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிடமிருந்தும் விடைபெறுகிறேன்.

 

கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிலிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது.

 

புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கிற அர்ப்பணிப்போடும், முழு ஈடுபாட்டோடும் நான் கடந்த காலத்தில் பணிபுரிந்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியரியா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரட்சிகரத்தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாக புரிந்துகொள்ளவில்லை.

 

அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கிறேன். கரீபீய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்த சமயத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாக புரிந்து கொண்டு எந்த தயக்கமுமின்றி பின்தொடர்ந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

 

என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது.

 

சந்தோஷத்தோடும், வருத்தங்களோடும்தான் நான் இதனை செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அருமையான உலகத்தை கட்டி எழுப்புவார்கள் என்கிற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கிறேன். தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகிறது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையை கொண்டு செல்கிறேன். மக்களின் புரட்சிகரத்தன்மைகளைப் பெற்று செல்கிறேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆழமான காயங்களை சரிசெய்கிறது.

 

கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன்.

 

நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூப புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கிறேன். அப்படியே நடந்து கொள்வேன். என்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. சந்தோஷம்தான். வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கிறது.

 

உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கிறேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை.

 

நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம்.

 

எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக் கொள்கிறேன்.

 

சே

 

பெற்றோருக்கு எழுதிய கடிதம் :

 

 

அன்பிற்குரியவர்களே!

 

மீண்டும் என் கால்களுக்கடியில் ரோசினாண்டேயின் விலா எலும்புகளை உணர்கிறேன். கேடயத்தை கைகளில் ஏந்திக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பும் இதே போல விடைபெற்று ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். அதில் நான் ஒரு சிறந்த படைவீரனாகவும், சிறந்த மருத்துவராகவும் இல்லாமல் இருந்ததற்காக வருத்தப்பட்டிருந்தேன். இன்று நான் அவ்வளவு மோசமான படைவீரன் அல்ல.

 

மேலும் நம்பிக்கையுள்ளவனாக நான் இருப்பதைத் தவிர வேறு ஒரு மாற்றமும் இல்லை. என்னுடைய மார்க்சீயம் இன்னும் ஆழமானதாகவும், தூய்மையானதாகவும் ஆகியிருக்கிறது. தங்களை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு போராடும் மக்களுக்கு ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே தீர்வு என்று நம்புகிறேன். அதன்படியே நடக்கிறேன். பலர் என்னை சாகசக்காரனாக அழைக்கலாம். ஒரு வித்தியாசம். தன்னுடைய நம்பிக்கைகளை உண்மையென்று காட்ட தன்னையே பணயம் வைக்கிற சாகசக்காரன்தான் நான்.

 

இதுவே முடிவாகக் கூட இருக்கலாம். நான் விரும்பாவிட்டாலும் கூட, எது வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படியிருந்தால் உங்களை கடைசி முறையாக தழுவிக்கொள்கிறேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன். அதை வெளிப்படுத்த எனக்குத் தெரியவில்லை. நான் எனது செயல்களில் மிகவும் உறுதியானவன். பலசமயங்களில் நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. இருக்கட்டும். இன்று என்னை நம்புங்கள்.

 

நொய்ந்து போன என் கால்களையும், ஓய்ந்து போன எனது நுரையீரல்களையும் மனவலிமையால்  ஒரு கலைஞனின் நுட்பத்தோடு சரி செய்து வைத்திருக்கிறேன். இருபதாம் நூற்றாண்டின் இந்த சிறிய போராளியை அவ்வப்போது நினைத்துக் கொள்ளுங்கள். சிலியா, ராபர்ட்டோ, மார்டின், பீட்ரிஸ், மற்றும் அனைவருக்கும் எனது முத்தங்கள்.

 

என் அன்பு தாய் தந்தையே, உங்களுக்கு கீழ்படியாத, இந்த தறுதலைப் பிள்ளையின் தழுவலை ஏற்றுக் கொள்ளுங்கள்.

 

-எர்னஸ்டோ

 

 

மனைவிக்கு எழுதிய கடிதம்:

 

1966,நவம்பர் 11

பிரியமானவளே!

 

உன்னைப் பிரிவது கஷ்டமாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்திற்காக எப்போதும் தியாகங்கள் செய்ய விரும்புகிற மனிதன் என்று என்னை நீ புரிந்து கொள்வாய்.

 

தைரியமாக இரு. ஒருவேளை யுத்தத்தில் நான் இறந்து போனால், எனது குழந்தைகள் பெரியவர்களாகி எனது கடமையை தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களையும், அவர்கள் அனுபவிக்கும் வறுமையையும் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என நம்புகிறேன்.

 

உனக்கு அடுத்த கடிதம் எழுத நீண்ட காலம் ஆகலாம். காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும் எண்ணத்தால் உங்களோடு இருப்பேன்.

 

எனது அன்புக்குரிய மனிதர்களை,  உன்னை, குழந்தைகளை பிரிய நேர்கிறதே என்று வேதனைப் படுகிறேன். பிறநாடுகளில் கோடிக்கணக்கான மக்களைச் சுரண்டும் எதிரியோடு போரிடப் போகிறேன் என்பது வேதனையை குறைக்கிறது.

 

உடல்நலத்தை கவனித்துக் கொள். குழந்தைகளை பார்த்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை மனைவியாக பெற்றதையும் என் வாழ்க்கையின் அற்புத விஷயங்களாக கருதுகிறேன்.

 

இந்தப் போராட்டத்தில் இறக்க நேருமானால் சாகும் தறுவாயில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.

-சே

 

குழந்தைகளுக்கு எழுதிய கடிதம் :

 

அன்புள்ள ஹில்டிடா, அலெய்டா, காமிலா, சிலியா, எர்னஸ்டோ ஆகியோருக்கு

 

இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கிற போது நான் உங்களோடு இருக்க மாட்டேன்.

 

என்னைப் பற்றி உங்களுக்கு அதிகம் நினைவிருக்காது. உங்கள் தந்தை தனது நம்பிக்கைகளுக்கு உண்மையாக செயல்படுகிறவன். தனது தத்துவத்திற்கு விசுவாசமானவன்.

 

நீங்கள் நல்ல புரட்சிக்காரர்களாக வரவேண்டும். கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெற வேண்டும். அறிவுதான் இயற்கையை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும். தனிப்பட்ட முறையில் நாம் முக்கியம் அல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது.

 

எல்லாவாற்றையும் விட, எப்போதும் உலகத்தின் எங்கேனும் யாருக்காவது நடக்கிற கொடுமைகளுக்கு வருத்தப்படுகிறவர்களாக இருங்கள்.

 

குழந்தைகளே, விடை கொடுங்கள். மீண்டும் உங்களை நான் காண்பேன் என நம்புகிறேன்.

 

அன்பு முத்தங்களும், அரவணைப்பும்.

 

-சே

 

மூத்த மகளுக்கு எழுதிய கடிதம் :

 

 

அருமையான ஹில்டிடா

 

இப்போது எழுதிக் கொண்டிருக்கிற இந்தக் கடிதம் உனக்கு ரொம்ப காலத்திற்கு பிறகு பெறுவாய். உன்னைப்பற்றியும், சந்தோஷமான உனது பிறந்த நாளை கொண்டாடுவதையும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீ இப்போது பெரியவளக இருப்பாய். ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போல எழுத முடியாது.

 

தொலைதூரத்தில் நமது எதிரிகளோடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறேன்.  இது ஒன்றும் மகத்தான விஷயமல்ல. எதோ ஒன்றை செய்கிறேன். நான் உன்னைப் பெருமையாய் நினைப்பதைப் போல நீயும் என்னை பெருமையாக நினைப்பாய் என நம்புகிறேன்.

 

இன்னும் நிறைய காலம் போராட வேண்டியிருக்கிறது. வளர்ந்த பிறகு நீயும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். அதற்கு உன்னை தயார் செய்து கொள். புரட்சிகரமானவளாய் இரு. உன்னுடைய வயதில் நிறைய படிப்பதும், நியாயங்களை ஆதரிப்பதும்தான் அவைகள். அம்மா சொல்கிறபடி கேள். உனக்கு சீக்கிரமே எல்லாம் தெரிந்துவிடும் என நினைக்காதே. காலாகாலத்தில் அவை உன்னை வந்து சேரும்.

 

பள்ளியில் நீ சிறந்தவளாக இருக்க வேண்டும். சிறந்தவள் என்றால் எல்லா அர்த்தத்திலும். படிப்பதும், புரட்சிகரமாய் இருப்பதும்தான். சொல்லப்போனால், நல்ல நடத்தை, அர்ப்பணிப்பு, தோழமையான நேசம் போன்றவைகள்தான் அவை. உன்னுடைய வயதில் நான் அப்படி இல்லை. வேறோரு சமூகத்தில் வாழ்ந்தேன். அங்கு மனிதன் மனிதனுக்கு எதிரியாக இருந்தான். நீ இன்னொரு அத்தியாயத்தில் வாழ்கிறாய். அதற்கு நீ பொருத்தமானவளாக இருக்க வேண்டும்.

 

வீட்டில் மற்ற குழந்தைகள் படிப்பதிலும், நன்றாக நடந்து கொள்வதிலும் கவனம் செசலுத்த வேண்டும். முக்கியமாக அலெய்டிடா. அக்கா என்று உன்னிடம் அதிகமாக அன்பு வைத்திருக்கிறாள் அவள். சரி. பெரிய மனுஷியே! திரும்பவும் உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மாவையும், கினாவையும் அணைத்துக்கொள். உன்னைப் பிரிந்திருக்கிற காலம் எல்லாவற்றிற்கும் சேர்த்து உன்னை ஆரத்தழுவுகிறேன்.

 

அப்பா.

 

எப்போதுமே அவர்களை ஆரத்தழுவிக் கொள்ளவே முடியாமல் போய்விட்டது. எல்லோருக்கும் அன்பினை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். நண்பனாக, தந்தையாக, மகனாக, கணவனாக, உலக மக்களின் சேவகனாக இருந்தாலும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராளி என்னும் ஒரு முகத்தோடு மட்டுமே இருந்தார். அது உறுதிசெய்யப்படுகிறது. மரணமே அவரை தழுவிக் கொள்கிறது. தொலைதூரத்தில் பொலிவியாவில் ஒரு பள்ளிக்கூடத்தின் அறையில் வெடித்த துப்பாக்கி குண்டுகள் உலகையே கதற வைக்கின்றன.

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. மாதவராஜ்
  என்னுடம் பட்டாம்பூச்சி விருதை நீங்களும் பகிர்ந்துக்க வாங்களேன்.
  http://gg-mathi.blogspot.com/2009/01/blog-post_6402.html

  பதிலளிநீக்கு
 2. follow up --அப்படி வாங்க வழிக்கு மாதவராஜ் :))


  சேகவேரா பற்றிய உங்களின் தொடர் நன்றாக உள்ளது , புத்தகமாகவோ அல்லது பத்திரிக்கைகளில் தொடராகவோ முயற்சிக்கலாமே

  பதிலளிநீக்கு
 3. ஜீவன்!

  ஏற்கனவே புத்தகமாக வந்துள்ளது.

  கிடைக்குமிடம்:

  பாரதி புத்தகாலயம்
  7, இளங்கோ சாலை
  தேனாம்பேட்டை
  சென்னை -18

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!