"நாம் அந்த நிலங்களை விற்க வேண்டும். அவர்களால் வாங்க முடியாத போது, உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நாம் அவர்களுக்கு கடன்கள் வழங்கி நிலங்களை வாங்கச் செய்யலாம்."
" இது மிகவும் பிற்போக்குத்தனமான கருத்து'. என்று சே எரிச்சலுடன் தொடர்ந்தார். "நாம் நிலங்களை எவ்வாறு உழுபவர்களிடம் விற்க முடியும்? சமவெளியில் வாழ்கிற மனிதர்களைப் போலவே நீங்களும் பேசுகிறீர்கள்."
நான் எனது பொறுமையை இழந்தேன். "நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அவர்களுக்கு நிலங்களை இலவசமாக கொடுக்க வேண்டுமென்றா? மெக்சிகோவில் செய்தது போல இங்கேயும் கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கட்டும் என்றா விரும்புவார்கள். ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கினால்தான் அதன் அருமை மனிதர்களுக்குப் புரியும்"
"சீ..தேவடியா மகனே" சே கத்தினார். அவரது கழுத்து நரம்புகள் புடைத்து தெரிந்தன.
-தனக்கும், சேவுக்கும் நடந்த உரையாடல் பற்றி எழுத்தாளரும் அரசியல் பிரமுகருமான் சியாரா.
(3)
எல்லாம் இயல்பாய் நடந்துகொண்டிருப்பதாக தோன்றினாலும் ஒரு நிசப்தம் இருந்தது கியூபாவில். மெல்ல மெல்ல எல்லோர் கண்ணிலும் வித்தியாசமானதாய் தட்டுப்பட ஆரம்பித்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு மார்ச் 14ம் தேதி கியூபாவிற்கு திரும்பிய சேகுவாராவை அதற்குப் பிறகு எங்கும் பார்க்க முடியவில்லை. நாட்டின் உயர்ந்த பொறுப்புகளிலிருந்த மனிதர் அவர். நடவடிக்கைகளாலும், சிந்தனையாலும் உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருந்த புரட்சிக்காரர். அவர் இல்லாத இடம் எப்படி தெரியாமல் போகும். இருக்கிற இடம்தான் தெரியாமல் தவித்துப் போனார்கள்.
பிடிபடாத சேவின் குணாம்சங்கள் அவரைப் பற்றி தீவிரமாக யோசிக்க வைத்தன. சே என்ன ஆனார் என்பதை ஆராய்வதில், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதில் எங்கும் குழப்பம் இருந்தது. லண்டனில் ஈவினிங் போஸ்ட் பத்திரிக்கை சே சீனாவில் இருக்கிறார் என எழுதியது. உருகுவே வாரப்பத்திரிக்கை மார்ச்சாவில் சே ஒரியண்டே மாநிலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டு எழுதுகிறார் என செய்தி வந்தது. வியட்நாமில் இருக்கிறார், கவுதமாலாவில் இருக்கிறார், வெனிசூலாவில் இருக்கிறார், கொலம்பியாவில் இருக்கிறார், அர்ஜெண்டினாவில் இருக்கிறார், ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றில் இருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. அவர் ஒரு நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை என்பதும், ஒரு சர்வதேச புரட்சிக்காரர் என்பது மட்டுமே இந்த தவறான செய்திகளில் இருக்கிற உண்மை.
பெறுவதற்கு ஒன்றும் இல்லை. இழப்பதற்கு நிறைய இருக்கின்றன. -சே |
உண்மை என்ன என தெரிந்து கொள்வதைக் காட்டிலும் இதுதான் சந்தர்ப்பம் என ஏகாதிபத்தியக் குரல்கள் வதந்திகளையும், அவதூறுகளையும் வேகவேகமாக கியூபாவிற்கும், பிடலுக்கும் எதிராக பரப்ப ஆரம்பித்தன. 'சே, கைது செய்யப்பட்டு விட்டார்', 'சே கொலை செய்யப்பட்டு விட்டார்', 'கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்' என்றெல்லாம் சரமாரியாக பேசப்பட்டன. எழுதப்பட்டன. 'கியூப ரகசியங்களை பத்து மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டு சே தலைமறைவு ஆகிவிட்டார்' என்று அமெரிக்க பத்திரிக்கை நியுஸ்வீக் 1965 ஜூலை 9ம்தேதி எழுதியது. கியூப மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஜூன் 17ம் தேதி பிடலிடம் சேகுவாராவின் இருப்பிடம் பற்றிக் கேட்கப்படுகிறது. "எங்கே இருக்கிறார் என்று கூறமுடியாது. ஆனால் ஆரோக்கியமாக இருக்கிறார்" என்றார். அவரைப்பற்றி தகவல்கள் எப்போது தெரியும் என்று கேட்டதற்கு "சேகுவாரா எப்போது விரும்புகிறாரோ அப்போது தெரியும். இதில் நாங்கள் என்ன சொல்ல முடியும். சே எப்போதும் புரட்சிகர வழியில் வந்தவர். அதேவழியில்தான் பணியாற்றுவார் என நினைக்கிறோம்" என்றார்.
மீண்டும் பத்திரிக்கைகளில் வேறொரு கோணத்தில் இருந்து தாக்குதல்கள் ஆரம்பித்தன. 'சேவுக்கும் கியூப தலைவர்களுக்கும் மோதல்', 'பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்', கம்யூனிச ஆட்சியில் மனிதர்கள் தடம் தெரியாமல் அழிந்து போவார்கள்' 'அதுகுறித்து விளக்கமும் தர மாட்டார்கள்' என்றெல்லாம் மீண்டும் மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
வதந்திகளை உற்பத்தி செய்கிற, எங்கும் துப்பி விடுகிற ஒரு அமைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது. அது ரகசிய சதிவேலைகளை எப்போதும் செய்துகொண்டே இருக்கிறது. சேகுவாராவைப் பற்றி சி.ஐ.ஏவின் அடுத்த ஆவணம் தயாராகிறது. இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசுகின்றன அந்த காகிதங்கள். சேவின் இருப்பிடத்தை அறியமுடியாத கழுகுகள் ஆத்திரத்தில் இரைகின்றன.
இந்த ஆவணம் இப்படியே நீள்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகள், வெளியுறவுக் கொள்கைகள் குறித்து நிறைய பேசிவிட்டு, சேகுவாராவின் இருப்பிடம் அறிய முடியாத எரிச்சலோடு தொடர்கிறது.
சேகுவாரா மார்ச் 13ம் தேதி ஹவானா வந்தார். காஸ்ட்ரோ விமான நிலயத்திற்கு சென்று வரவேற்றார். ஹவானா பத்திரிக்கைகளின் மூலம் அவர் மார்ச் 20ம் தேதி ஒரு பொது இடத்தில் பேசியிருப்பதாக தெரிய வருகிறது. அதற்குப் பிறகு யார் கண்ணிலும் தட்டுப்படவில்லை. இந்த அதிகாரப் போட்டியின் முதல் விரிசல் ஜூன் மாதத்தில் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. சேகுவாராவின் ஆதரவாளராயிருந்த தேசிய வங்கியின் இயக்குனர் சல்வாடர் அதிலிருந்து அகற்றப்பட்டு ஹவானா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படுகிறார்.
ஜூலை 27ம் தேதி காஸ்ட்ரோவின் பேச்சு கியூபாவை சேகுவாராவின் பார்வையிலிருந்து அப்படியே திருப்புவதாக இருக்கிறது. சேகுவாராவின் இறுக்கமான கொள்கைகளுக்கும், பெத்தல்ஹேமின் நெகிழ்வுத்தன்மையான கொள்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வரும்போது காஸ்ட்ரோ சேகுவாராவையே ஆதரித்து வந்தார். ஆனால் அவர் இப்போது தனது நிலையில் பெரும் மாற்றங்களை கொண்டிருக்கிறார். பழைய முறையிலிருந்து முழுமையான மாற்றங்களும், சீர்திருத்தங்களும் கொண்டு வரவேண்டும் என்கிறார். அதிகாரத்தை மையப்படுத்திய சேகுவாராவின் நடவடிக்கையிலிருந்து அதிகாரப்பரவலுக்கான கொள்கைகளை காஸ்ட்ரோ முன்மொழிந்தார். "மாகாணத்தின் ஒரு நகரத்தில் நின்று ஒரு நாய் சேட்டைகள் செய்து கொண்டிருக்குமானால், அங்கே பொறுப்பில் உள்ளவர்கள் அதை அகற்றியே ஆக வேண்டும்" என்றே சொன்னார்.
செப்டம்பர் 28ம் தேதி காஸ்ட்ரோவின் பேச்சு இன்னும் தெளிவாக இருக்கிறது. "நான் உள்ளூர் வளர்ச்சியையும், நிர்வாகத்தையும் மட்டுமே ஆதரிக்கிறேன்". சேகுவாராவின் தீவீரமான கொள்கைகளுக்கு இது நேர் எதிரானது.
அக்டோபரில் நடந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியின் கூட்டம் சேகுவாராவின் கொள்கைகளுக்கும், ஆதரவாளர்களுக்கும் சாதகமானதாக இல்லை. நெகிழ்வுத்தன்மையுள்ள புதிய பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவான வேறு பொறுப்பாளர்களை நியமிக்கிறது.
அக்டோபர் 2ம் தேதி கூட்டமொன்றில் சேகுவாரா எழுதிய கடிதம் ஒன்றை காஸ்ட்ரோ வாசிக்கிறார். அதன் முக்கிய சாராம்சம் சேகுவாரா தனது புரட்சிகரத் தன்மைகளை வேறெங்காவது உபயோகப்படுத்தப்போவதாக சொல்லியிருப்பதுதான். ஒரு இடத்தில் சேகுவாரா இப்படி எழுதுகிறார்: "கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை நான் செய்கிறேன்". இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. புரட்சியை ஏற்றுமதி செய்யும் காஸ்ட்ரோவின் திட்டமும், பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்களும் சேகுவாரவின் வீழ்ச்சிக்கு காரணமாகி இருக்கிறது. இனி உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் கியூபா சோவியத்தின் புத்திமதிகளின்படிதான் நடந்து கொள்ளும்.
இந்த புதிய அணிசேர்க்கையால் கியூபாவிற்கும் சீனாவுக்கும் ஏற்கனவே இருந்த உரசல்கள் மேலும் அதிகரிக்கும். கொள்கை ரீதியான கம்யூனிஸ்ட் கட்சிகளை இனி ஆதரிக்கும் என்றும் பீகிங் ஆதரவு பெற்ற போராளிக்குழுக்களை ஆதரிக்காது என்றும் போன நவம்பரில் லத்தீன் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கியூபா சொல்லியிருக்கிறது. இதுகுறித்து விளக்குவதற்காகவே சேகுவாரா இந்த பிப்ரவரியில் சீனா சென்று வந்ததாகவும் தெரிகிறது.
எது எப்படி இருந்தாலும் சீனா, கியூபாவை இனி திரிபுவாதிகள் என்றே அழைக்கும். இதுவரை வெளிப்படையாக அப்படி அறிவித்ததில்லை. சேகுவாராவின் வீழ்ச்சியோடு கியூபாவின் புரட்சி புதிய பரிணாமம் பெறுகிறது. கியூபாவின் வெளியுறவுக்கொள்கையில் முக்கிய மாற்றம் ஏற்படுவதில் போய் முடிகிறது. |
ஆவணம் முடிகிறது.
இந்த ஆவணம் ஏகாதிபத்தியத்தின் அபிலாசைகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஒரு சின்னஞ்சிறு நாடு, அதுவும் தனக்கு மிக அருகில் இருந்துகொண்டு புரட்சி நடத்தி சோஷலிச பாதையில் காலடி எடுத்து வைப்பது தாங்க முடியவில்லை. கியூபாவில் சோஷலிசத்தை எப்படி தீர்த்து கட்டுவது என்கிற சதியின் கைகள் இந்த ஆவணத்தில் ஒளிந்திருக்கின்றன. புரட்சி நடத்தி, பழைய உலகிலிருந்து ஒரு புதிய உலகிற்கு காலடி எடுத்து வைக்கிற போது ஏற்படுகிற சிரமங்களை கொச்சைப்படுத்துகிறது. தானே அந்த நாட்டிற்கு தடைகளை விதித்து விட்டு அதை அந்த நாடு சமாளித்து எழுந்து நிற்பதை பார்க்க முடியாமல் பொருமுகிறது. தலைவர்களுக்குள், கொள்கைகளுக்குள் முரண்பாடுகள் என்று அதனை ஊத ஆரம்பிக்கிறது. கியூப புரட்சிக்குப் பிறகு சி.ஐ.ஏ பலமுறை காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. ஹாவானாவின் மீது விமானத்தில் பறந்து குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. அதன் ஏஜண்டுகள் கியூபாவிற்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த ஆவணமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
காஸ்ட்ரோவுக்கும் சேகுவாராவுக்கும் இடையில் நுழைந்து சோவியத்துக்கும், சீனாவுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் வரை அதுபாட்டுக்கு பேசிக்கொண்டே இருக்கிறது. தான் எதுவெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அதையெல்லாம் பைத்தியம் பிடித்தது போல எழுதி தள்ளியிருக்கிறது.
ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும். -சே |
பைத்தியம் என்று சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. சேகுவாராவை சோவியத்தின் எதிர்ப்பாளராக சித்தரிக்கிறது இந்த ஆவணம். ஆனால் அமெரிக்காவிலேயே இருந்து கொண்டு 1964 டிசம்பர் 11ல் ஐ.நா சபையில் சேகுவாரா பேசியதை எங்கே கொண்டு போய் ஒளித்துவைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவை சுட்டிக்காட்டி உலகறிய சொன்னார் "...நாங்கள் மார்க்சீய லெனினியவாதிகளாக இருந்தாலும் எங்களது நாடும் நடுநிலை நாடு என்று பிரகடனம் செய்கிறோம். ஏனெனில் நடுநிலை நாடுகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றன. நாங்கள் எங்களது மக்களுக்கு உன்னதமான வாழ்க்கையை அமைத்துத் தர விரும்புகிறோம். ஏகாதிபத்தியமோ ஆத்திரமூட்டிக் கொண்டு இருக்கிறது..." அமெரிக்கா சார்பாக பேசிய ஸ்டீவன்சன் சேகுவாராவை தாக்கி பேசினார். அமெரிக்க விதித்த தடையால் கியூபாவுக்கு நேர்ந்த பொருளாதாரக் கஷ்டங்களை பற்றி பேசியதற்காகவும், கம்யூனிஸ்டாக இருப்பதற்காகவும் குற்றம் சாட்டினார். சேகுவாரா பதில் சொன்னார். "கியூபாவுக்கு எதிரான அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் உண்மை வரலாற்றை நான் மீண்டும் கூறப்போவதில்லை. சோஷலிச நாடுகளின் சகோதர உதவியால், குறிப்பாக சோவியத் யூனியன் உதவியால் நாங்கள் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை வென்று வருகிறோம். எதிர்காலத்திலும் வெல்லுவோம் என்று கூறிக் கொள்கிறேன்". சோவியத் யூனியன் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த ஒரு மனிதரைத்தான் சி.ஐ.ஏ ஆவணம் தன் இஷ்டம் போல சிதைக்க முயற்சிக்கிறது.
புரட்சி பற்றிய சில விமர்சனங்கள் என்னும் தனது கட்டுரையில் சே எழுதுகிறார்... "கியூபாவை மண்டியிடச் செய்ய வேண்டுமென்று விரும்பிய எதிரிகள் கியூபாவிற்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்திய போது சோவியத் துறைமுகங்களில் இருந்து தேவையான அளவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு சோவியத் கப்பல்கள் கியூபா நோக்கி புறப்பட்டன. கியூபாவை அடிபணியச் செய்ய வேண்டுமென்று விரும்பிய எதிரிகள் சர்க்கரை வாங்க மறுத்த போது சோவியத் வாங்கிக் கொண்டது. அமெரிக்க மண்ணிலிருந்து செலுத்தப்பட்ட படையெடுப்பு ஆயத்தங்களை சோவியத்தின் எச்சரிக்கை தடுத்து நிறுத்தியிருப்பதால்தான் கியூபா இன்று இறையாண்மையோடு இருக்க முடிகிறது". சேவின் இந்த வார்த்தைகள் சி.ஐ.ஏவின் வார்த்தைகளை சுட்டு வீழ்த்துகின்றன.
சேகுவாராவை நாய் என்பது போல பிடல் சொன்னதாக எழுதுகிறது. அந்த இரண்டு உள்ளங்களுக்கு இடையில் நிகழ்ந்திருந்த அன்பின் உறவுகள் குறித்து உளவாளிகளுக்கு என்ன தெரியும்? "பிடல் என்னைவிட சிறந்த மூளையுடையவனை கண்டுபிடித்து விடலாம். ஆனால் அவரது கருத்துக்களோடு அதிகம் ஒத்துப் போகிற ஒருவனை அவர் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல" என்று சேகுவாராவே சொல்கிறார். சோவியத் எழுத்தாளர் அனஸ்டஸ் இவினோவிச் மிகோயின் இன்னும் அழுத்தமாகச் சொல்கிறார். "பூரண பரஸ்பர மரியாதை, பரஸ்பர புரிதல் என்ற குணங்கள் ததும்பிய அந்த சிறந்த நட்பைக் கண்டுகொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த இரண்டு புரட்சிக்காரர்களின் தனிப்பட்ட குணங்கள் முற்றிலும் மாறுபட்டவை. ஆனால் ஒருவர் மீது ஒருவர் உயர்ந்த கருத்துக்களை உடையவர்களாய் இருந்தனர்."
அற்புதமான அந்த தோழமையை சேகுவாரா எழுதி கொடுத்திருந்தார். மேலே படித்த இந்த சி.ஐ.ஏ வின் ஆவணத்தில் கூட அக்டோபர் 2ம் தேதி ஒரு கூட்டத்தில் காஸ்ட்ரோ அதை வாசித்ததாக ஒரு தகவல் வந்திருக்கிறது. அதில் ஒரு வரியை மட்டும் சொல்லி கயமைத்தனத்தோடு அர்த்தம் சொல்கிறது. அன்பும், மனிதநேயமும் கொண்ட இதயத்திற்கு அதன் அர்த்தங்கள் யாரும் சொல்லாமலேயே விளங்கும். சேகுவாரா மிக அமைதியான குரலில் இதயத்திலிருந்து பேசுகிறார். உலகை நேசித்த அவரது கனவுகள் அதில் வடிக்கப்பட்டிருந்தன. எப்பேர்ப்பட்ட காரியத்திற்காக, தன்னை அர்ப்பணிக்க இருக்கிறார் என்பதை சொல்கிறார். யுத்த களத்துக்கு புறப்பட்டுவிட்ட அவர் பிரியா விடையோடு பிடலுக்கு எழுதிய கடிதம் அது.
முன்னுரை | அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 |
வணக்கம் தீராத பக்கங்கள்
பதிலளிநீக்குஇப்போதைக்கு என்னால் ஏதும் குறிப்பிட்ட பின்னூட்டம் தரஇயலாது
ஆனால் உங்கள் பதிவுகளை சேமித்துக்கொள்கின்றேன்
நன்றி
இராஜராஜன்
ஏகாதிபத்தியத்தை நிர்மூலப்படுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொன்றாக, சிறு சிறு கட்டமாக மக்களை விடுவிக்க வேண்டும். எதிரியை அவன் பூமியில் இருந்து பெயர்த்தெடுத்து கடுமையான போராட்டத்திற்கு அழைக்க வேண்டும். அவனுக்குச் சாதகமான பகுதிகளையும் முகாம்களையும் அழிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஎவ்வளவு அற்புதமான கணிப்பு
சே போன்ற ஆளுமைகள் இன்றைக்கும் தேவையாக இருக்கிறது
தொடர்ந்து எழுதுங்கள்
விடுதலை!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், பாராட்டுதல்களுக்கும் நன்றி.
வனம்!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
tamil cinema !
பதிலளிநீக்குநன்றி. சேர்ந்து விட்டேன்
Valaipookkal !
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
முயற்சி செய்தேன்.
வலைப்பூக்கள் open ஆகவில்லை.
என்ன ஆச்சு?
நட்பின் இலக்கணம் செ , வாழ்த்துக்கள் திரு மாதவராஜ்
பதிலளிநீக்கு