முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப் பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி அப்பாவைப் பார்த்தாள். முத்தையாவோ ஜன்னல்களை ஒட்டி பிளாட்பாரத்தில் வேகமாய் நடந்து “கண்மணி இங்க ஒரு இடமிருக்கு” ஒரு ஜன்னல் பகுதியைக் காட்டியவாறு வெளியிலிருந்து கத்தினான். அவள் அதை நோக்கி உள்ளே சென்றாள். உறங்கிக் கொண்டிருந்த வயதான அம்மா பக்கத்தில் ஒண்டிக்கொண்டாள். முத்தையாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. ஒரு வெட்டு வெட்டி ரயில் புறப்படவும் “பாப்போம் கண்மணி, நல்லாப் படிம்மா” முத்தையா கையசைத்தான். ரெயில் வேகமெடுத்துக் கடந்தது. பிளாட்பாரம் பின்னால் சென்று கொண்டிருந்தது. தனியே நின்றிருந்த முத்தையா சின்ன உருவமாகிக் கொண்டிருந்தான். வெளி இருட்டு ரெயிலைச் சூழ்ந்தது. கண்மண் தெரியாமல் ரெயில் ஓட்டம் பிடிக்க தூரத்து வெளிச்சப் புள்ளிகளோடு இரவு சரசரவென பின்னால் நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. அவள் மீது அப்பா காட்டிய அக்கறையும், வைத்திருந்த நம்பிக்கையும் கூடவே வந்தது.
கண்மணியும் முத்தையாவும் அப்படியே ’அபியும்.நானும்’ படத்தில் வரும் மகளும் அப்பாவுமாக இருக்கிறார்கள் என்று சாத்தூரில் லாரி ஷெட்டில் வேலை பார்க்கும் சீனியம்மாவின் தம்பி பாண்டி சொல்வான். முத்தையாவோடு கூடவே இருக்கும் தோழர் கோட்டைராஜும் படம் பார்த்து சொல்லியிருந்தான். அமிர்தராஜ் தியேட்டரில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து குடும்பத்தோடு அந்த படம் பார்த்ததை கண்மணியால் மறக்க முடியாது. அபியையும் அவள் அப்பாவையும் போல அப்படியே தாங்கள் இல்லை என்றாலும் அப்படி பார்க்கப்படுவதிலும் பேசப்படுவதிலும் முத்தையாவுக்கும் கண்மணிக்கும் ஒரு மகிழ்ச்சி இருந்தது.
கேட்கிற மகள் அவள் இல்லை. கேட்டதையெல்லாம் வாங்கித் தருகிற அப்பா அவன் இல்லை. மிஞ்சிப் போனால் சென்னையில் பாண்டிபஜாரில் பத்து ருபாய் இருபது ருபாய்க்குள் கம்மல், கிளிப் போன்று சின்னச் சின்னதாய் வாங்கித் தருவான். அவளும் ஆசையோடு போட்டுக் கொள்வாள். நம் சக்திக்கு மீறி ஆசைப்பட்டு அவமானங்களை சந்திக்கக் கூடாது, சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று அடிக்கடி முத்தையா சொல்வான். அப்பத்தா சுப்புத்தாய் ‘அந்தக் கிறுக்குப்பய’ என ஆரம்பித்து அப்பாவைப் பற்றி சொல்லியிருந்த பழைய கதைகளிலிருந்து ஹார்லிக்ஸ் மேலெழுந்து வரும். கண்கலங்கிப் போவாள்.
சாத்தூரில் காட்டு புதுத்தெருவில் இருக்கும்போது வீட்டில் ஒரே கஷ்டம். முத்தையாவின் அப்பா செல்லச்சாமிக்கு வருமானம் பெரிதாய் ஒன்றும் இல்லை. குடிக்க மட்டும் செய்வார். வீட்டில் மூத்தவன் முருகன், முத்தையா, இளையவன் சண்முகமும் படித்துக்கொண்டு இருந்தார்கள். அக்கா லட்சுமி தீப்பெட்டி அட்டை ஒட்டினாள். ஆரிய வைஷ்யா பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்த முத்தையா தானும் ஒரு பாரமாய் இருக்க விரும்பாமல் படிப்பை நிறுத்திவிட்டு பழனிச்சாமியின் ரொட்டிக்கடைக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். அங்கிருந்து நிப்புக்கம்பெனி, ஐஸ் கடை என்று மாறி மாறி இரண்டு வருடம் வேலை பார்த்தான். சென்னையில் பின்னி மில் பக்கத்தில் மேட்டுப் பாளையத்தில் பலசரக்குக் கடைக்கு வேலைக்குப் போனான். சாப்பாடு போக மாதம் முப்பது ருபாய். வீட்டுக்கு அனுப்பி விடுவான். சுப்புத்தாய்க்கு அந்த பணம் பக்க பலமாய் இருந்தது. பிறகு அகரத்தில் ஒரு கடையில் வேலை. அங்கிருந்து ஆத்தியப்பனின் ஸ்டேஷனரிக் கடையில் வேலைக்கு சேர்ந்தான்.
முத்தையாவோடு சேர்ந்து அந்தக் கடையில் மேலும் இரண்டு பையன்கள் வேலை பார்த்தார்கள். ஆத்தியப்பன் வீட்டு மாடியில் போட்டிருந்த குடிசையில் தங்கியிருந்தார்கள். மூன்று வேளை சாப்பாடும் வீட்டில்தான். மதியம் மட்டும் கேரியரில் கடைக்கு வந்துவிடும். முத்தையாவின் சுறுசுறுப்பும், கடைக்கு வருகிறவர்களிடம் பொறுப்பாய் பேசும் விதமும் ஆத்தியப்பனுக்கு பிடித்திருக்கிறது. அவனுக்கும் மற்ற இடங்களை விட அங்கு வசதியாகத் தெரிந்தது.
கடையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஒருநாள் ஹார்லிக்ஸ் டப்பா ஒன்றைத் திறந்து கையில் அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டு அவ்வளவு ருசியாய் இருந்தது. திரும்பவும் ஒரு கை எடுத்துத் தின்றான். ஹார்லிக்ஸ் டப்பாவை மூடி வைத்து விட்டு பிசுபிசுப்பாய் இருந்த வாயையும் கையையும் துடைத்துக் கொண்டான். மூன்று நாள் கழித்து ஹார்லிக்ஸ் வாங்கிய ஒருவர், டப்பா திறக்கப்பட்டு இருப்பதையும், ஹார்லிக்ஸ் கொஞ்சம் குறைந்திருப்பதையும் ஆத்தியப்பனிடம் காட்டினார். அதற்கு பதிலாக இன்னொரு ஹார்லிக்ஸ் பாட்டிலைக் கொடுத்தனுப்பிவிட்டு வேலைக்கு இருந்த மூன்று பேரிடமும் ஆத்தியப்பன் விசாரித்தார். தாங்கள் எடுக்கவில்லை என்றனர். யோசனை செய்தவாறு கேட்டுக் கொண்டார்.
அடுத்த நாள் ராத்திரி மாடிக்கு வந்த ஆத்தியப்பன் முத்தையாவை மட்டும் கீழே வீட்டுக்கு அழைத்துச் சென்றார். டிவியில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம் செங்கோல் கொடுத்துக் கொண்டிருந்த காட்சியும் செய்தியும் ஓடிக்கொண்டு இருந்தது. உட்காரச் சொன்னார். தரையில் உட்கார்ந்தான். ஒன்றும் புரியாமல் முதலாளியைப் பார்த்தான். உள்ளே சென்று சாப்பாட்டுத் தட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தார். “முதலாளி நா மேலேயே சாப்பிட்டுக்கிறேன்” எழுந்தான். ”அட உக்காருப்பா” என்றவர் கொஞ்சம் தள்ளி மேஜையில் இருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை எடுத்துத் திறந்தார். முத்தையாவுக்கு கைகால்கள் எல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தன. அவன் முன் இருந்த தட்டிலில் அப்படியே தலைகீழாய் கொட்டினார். அவன் முகம் பார்த்து, ”ம்… ஆசை தீரச் சாப்பிடு” என்றார்.
முத்தையாவுக்கு அழுகையாய் வந்தது. கையெடுத்துக் கும்பிட்டு, “முதலாளி…. தெரியாமச் செஞ்சிட்டேன். இனும இப்படி செய்ய மாட்டேன்” கெஞ்சினான்.
“சாப்பிடுன்னு சொன்னேன்….” அதட்டினார். தட்டிலிருந்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ”ம்” என்று சொல்லவும் பயத்தில் இன்னொரு கையள்ளி வாயில் போட்டுக் கொண்டு அவரை பரிதாபமாகப் பார்த்தான்.
”அவசரப்படாத. மெல்ல சாப்பிடு. எல்லாம் உனக்குத்தான். சாப்பிடாம எந்திக்கக் கூடாது.” சோபாவில் உட்கார்ந்து கைகளைக் கட்டிக் கொண்டார். அவரது மனைவி உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தார்.
“முடில முதலாளி… என்ன விட்டிருங்க… இனும ஒருநாளும் செய்ய மாட்டேன்.” ஹார்லிக்ஸ் அடைத்திருந்த வாயைத் திறக்க முடியாமல் அழுதான் நெஞ்சையடைத்தது முத்தைய்யாவுக்கு.
அவரது மனைவி வேகமாகத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, “என்னங்க இது? எதோ ஆசையில் ஒரு வாய் எடுத்ததுக்கு இப்படி பாடாய் படுத்துறீங்க.” என்றாள்.
”பாடாய் படுத்தலடி. பாடம் எடுக்குறேன்.” சொல்லிவிட்டு முத்தையாவிடம், ”உனக்கு உரிமையில்லாத ஒரு பொருள் வேணும்னா கேக்கணும். எடுக்கக் கூடாது” எச்சரிப்பதைப் போல கைகளைக் காட்டி, “எந்திச்சுப் போ” என்றார்.
சொல்லிக்கொண்டு வந்த அப்பத்தா சுப்புத்தாய். கண்களை மூடி ”முத்தையா” என்றார். கண்களைத் திறந்தபோது கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. தோல் சுருங்கிய அப்பத்தாவின் கைகளை எடுத்து வைத்துக் கொண்டு கண்மணி வருடிக் கொடுத்தாள். தழும்பேறிய அந்த கடந்தகால வாழ்க்கையின் காயங்களை சுமந்த நினைவுகளே அப்பாவின் வாசமாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்புக்குக் கிடந்து அவதிப்படுகிற மனிதர்களை பார்க்கும் போதெல்லாம் கவனிக்கவும், நேசம் கொள்ளவும் செய்தது.
வீட்டை விட்டு புறப்பட்டபோது மேற்குப் பக்கம் கண்ட நிலா அடிவானத்தில் இறங்கியிருந்தது. கொஞ்ச நேரத்தில் சாத்தூர் வந்துவிடும். வழக்கமாய் சுப்பையா இன்னேரம் அங்கு காத்திருப்பான். மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்கள் இரவில் ஊருக்குள் வராமல் பைபாஸில் சென்றுவிடும் என்பதால் விடிகாலை மூன்று மணிக்கு விருதுநகர் கலெக்டர் ஆபிஸ் சென்று பஸ் ஏறுவான். மூன்றரை, மூன்றே முக்காலுக்கு சாத்தூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விடுவான். ரெயில் நிற்கும் அந்த இரண்டு மூன்று நிமிடங்கள் தன்னைப் பார்க்கவும் சில வார்த்தைகள் பேசவும் அப்படி வந்து நிற்பது கஷ்டமாயிருந்தாலும் கண்மணிக்குப் பிடித்து இருந்தது. இதமான காற்று முடியை பறக்க விட, மெல்ல மெல்ல வெளியெல்லாம் பார்வையில் பிடிபட, பொழுது புலரும் ரெயில் பயணத்தின் அழகிய நினைவாக அன்று முழுவதும் அவளுக்கு சுகமாயிருக்கும்.
சுப்பையா இன்று வருவானா என்று சந்தேகமாயிருந்தது. முந்தாநாள் கோபத்தில் சென்றிருந்தான். ”இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன…… ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” தெப்பக்குளம் அருகே ஜெராக்ஸ் கடைப்பக்கத்தில் நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது கேட்ட பாட்டும் சுப்பையாவின் வாடிய முகமும் ஒருபுறம் வதைத்துக் கொண்டிருந்தது. தன்னால்தான் எல்லாம் என்று இரண்டு நாளாய் வருந்திக் கொண்டிருந்தாள். அவனோடு இருந்த கொஞ்ச நேரத்தில் தன்னை அப்படியே வெளிக்காட்டுவதாய் நினைத்து பேசியதுதான் வினையாகி விட்டது. தனிமையில் தலையிலடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
கடையின் இடது பக்கம் அடைப்பு வைத்து மறைவாய் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் டீக்கடையில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ”எனக்கு இந்த திங்கட்கிழமை காலேஜ்க்கே போகவேப் பிடிக்கல. இன்னும் ரெண்டு நாள் இருக்கணும்னு தோணுது. அப்பாக்கிட்ட சொல்ல முடியாது, படிக்குறதுக்கு மட்டம் போடுறதாய் நினைப்பாங்க.” என்றாள்.
சுப்பையா உற்சாகமானான். “அப்போ ஒன்னு செய்யலாம். திங்கக்கிழமை காலைல நா சாத்தூர் வந்துர்றேன். நீ அங்க இறங்கிரு. நாம ஒன்பது மணிக்குள்ள குத்தாலத்துக்குப் போயிரலாம். கொஞ்ச நேரம் ஜாலியா சுத்திப் பாத்துட்டு மதியத்துக்கு மேல அங்கயிருந்து நீ திருச்செந்தூருக்குப் போயிரு. நா விருதுநகருக்கு வந்துர்றேன்.”
“அய்யய்யோ…முடியாது” சட்டென்று மறுத்தாள் கண்மணி.
“ப்ளீஸ் கண்மணி. நாம இது வரைக்கும் தனியா எங்கயும் போனதில்ல. அடடா மழைடா அடை மழைடா…. அழகா சிரிச்சா….. புயல் மழைடா…… பாட்டுப் பிடிக்கும்னு சொல்லிட்டு, அத மாரி யாருமில்லாத இடத்துக்குப் போயி மழைல ஆட்டம் போடணும்னு சொல்வேல்ல… ஆட்டமெல்லாம் வேண்டாம். அஞ்சு நிமிஷம் பத்து நிமிஷம்னு இப்படி பயந்து பயந்து பாத்துட்டு பேசிட்டு இருக்குறதுக்கு உங்கூட ரொம்ப நேரம் இருக்கலாம். நிறையா பேசலாம்” இழுத்தான்.
“ஐடியால்லாம் நல்லா இருக்கு. எனக்கும் ஆசைதான். ஆனா வேண்டாம். வீட்டுக்குத் தெரிஞ்சா அவ்ளோதான். உடைஞ்சு போவாங்க.” கொஞ்சிக் கொண்டே மறுத்தாள்.
“வீட்டுக்குத் தெரியாது கண்மணி. பாத்துக்கலாம்”
“இல்ல. அப்பாவுக்கு எல்லா ஊர்லயும் யாராவது தோழர்கள் இருப்பாங்க.”
“அப்பாவுக்குத் தெரிஞ்சவங்க இருப்பாங்க. நீதான் முத்தையாவோட பொண்ணுன்னு யாருக்குத் தெரியும்? உன்னயும் என்னயும் தெரிஞ்சவங்க யார் இருப்பா?”
கைகளைக் கட்டியபடி யோசித்தவள், “சரிதான். ஆனா வேண்டாம்ப்பா. பயம்மா இருக்கு.” தலையை வேகமாக ஆட்டிக்கொண்டு சொன்னாள். அவன் பேசவில்லை. முகம் வாட்டமடைந்தது. தெப்பக்குளத்தையும், சுற்றியிருந்த கடை வீதியில் சந்தடியாயிருந்த மனிதர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“கோபமா..” கேட்டாள்.
பதில் சொல்லாமல் அவளை ஒரு தடவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, திரும்பவும் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.
அவளும் அமைதியானாள்.
“வர்றேன்…” கிளம்பினான்.
“ஏம்ப்பா இப்படி பண்றீங்க, நல்லால்ல. நாள கழிச்சு காலேஜ்க்கு போயிருவேன். அப்புறம் ஒரு வாரம் நாம பாக்க முடியாது.” சோகத்தோடு சொன்னாள்.
“உனக்கும் உங்க அப்பாவுக்கும் படிப்புத்தான் முக்கியம். எனக்கு அப்படியில்ல. நீ மட்டுந்தா முக்கியம். ஏன்னா நா ஒரு முட்டாள்.”
“எனக்கு படிப்பும் முக்கியம். நீங்களும் முக்கியம். படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஏம்ப்பா இப்டி. ப்ளீஸ்… என்னை வருத்தப்பட வைக்காதீங்க.”
“படிப்பு முடிஞ்சதும் உங்கப்பா இந்த ஆட்டோக்காரனுக்கு உன்ன கல்யாணம் பண்னி வைப்பாராக்கும்? எனக்கு அந்த நம்பிக்கைலாம் இல்ல.”
“அப்பா பண்ணி வைக்கலண்ணா, உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்காதா?”
“அதெல்லாம் பேசலாம் கண்மணி. படிச்சு முடிச்சதும் நீ எங்கயோ போயிருவே. நா இப்படி ரோடு ரோடா அலைஞ்சுக்கிட்டு கிடக்க வேண்டியதுதான்..”
அவர்களது பேச்சை பக்கத்தில் இரண்டு பேர் டீ குடித்துக்கொண்டே கவனித்துக் கொண்டிருப்பது போல கண்மணிக்குத் தோன்றியது. அமைதியானாள்.
“நீ என்ன விட்டுப் போயிருவியோன்னு பயம்மா இருக்கு. உன்னப் பாக்காம இருக்கவே முடில. கண்டதையும் நெனைச்சு நெனச்சு இப்பவே பைத்தியமாய்ட்டு இருக்கேன். நீ இல்லன்னா அவ்ளோதான். பேசாம செத்துத் தொலைச்சிரலாம்னு தோணுது”
கண்மணியால் தாங்க முடியவில்லை. பக்கத்தில் நெருங்கி அவன் கையைப் பிடித்து, ”ப்ளீஸ்பா. எல்லாரும் பாக்குற மாரி இருக்கு. என்ன நம்புங்க. அவ்ளோதான் சொல்ல முடியும்.” மெல்லிய குரலில், அதே நேரம் அழுத்தமாய் சொன்னாள். அவளது கையை உதறியபடி சுப்பையா வேகமாய் போய்விட்டான்.
சாத்தூர் நெருங்கிக்கொண்டு இருந்தது. ரெயிலின் வேகம் குறைந்தது. தான் உட்கார்ந்திருந்த இடத்தில் பையை வைத்துவிட்டு எழுந்து செல்லப் போனவள், நின்று பையை எடுத்து முதுகில் மாட்டிக் கொண்டு முன்னால் கதவுப்பக்கம் சென்றாள். ஒருவேளை சுப்பையா வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் போலிருந்தது. அவனைத் தேடிப் பார்த்துவிட்டு, இல்லையென்றால், திரும்ப உள்ளே வந்து பையை எடுத்துக் கொண்டு இறங்குவதற்கு நேரமிருக்காது. சுப்பையாவைப் பார்க்காமல் காலேஜ் போனாலும் நிம்மதியாய் இருக்காது. பேசிக்கொண்டு கதவருகில் நின்ற இரண்டு ஆண்கள் அவளுக்கு வழிவிட்டு உள்ளே நகர்ந்து கொண்டார்கள். அந்த இடத்தில் மூத்திர வாடை பொறுக்க முடியாமல் இருந்தது.
ரெயில் நின்றதும் கண்மணி வெளியே தலையை எட்டிப் பார்த்தாள். அடுத்து இருந்த பெட்டியின் உள்ளே ஜன்னல் வழியாய் சுப்பையா அவளைத் தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ரெயிலில் ஏறுவதற்காக கீழே நின்றிருந்தவர்களில் ஒருவன், “ஹலோ, இறங்குறதுன்னா இறங்குங்க. வழிய மறிச்சுட்டு நிக்காதீங்க” அவசரப்பட்டான்.
சுப்பையாவை பார்த்து விட வேண்டும், சமாதானமாய் இரண்டு வார்த்தை பேசிவிட வேண்டும் என்றிருந்தது. இறங்கினாள். சுப்பையா அவளைப் பார்த்து, “கண்மணி!” என பொங்கிக்கொண்டு அருகில் வந்தான். ஷேவ் செய்யாமல் இருந்தான். பையோடு அவளைப் பார்த்ததும் வேகமாய் வந்து கைகளைப் பிடித்துக் கொண்டு “ஏந்தங்கம்” என்றான்.
திரும்பவும் ஏமாறக் கூடாதே என்று இருந்தது. “ஸ்டேஷனுக்கு நீங்க வரலண்ணா விருதுநகருக்குத் திரும்பிரணும்னு பையோட எறங்கினேன். நீங்கதான் வந்தாச்சே. காலேஜ்க்கு போறேன்” சொல்ல நினைத்து நிதானித்தாள்,
”இது போதும் கண்மணி. உன்ன முழுசா நம்புறேன். இனும அப்படியெல்லாம் பேச மாட்டேன் மன்னிச்சுரு.” நெஞ்சில் கை வைத்துச் சொன்னான்.
”இப்பவாது புரிஞ்சுக்கிட்டீங்களே. அப்பாடி. காலேஜ்க்கு போலாமா?” கெஞ்சலாய் கேட்டாள்.
“விளையாடுறியா…” பையை எடுத்து தன் முதுகில் போட்டுக் கொண்டு “வா…வா” நடக்க ஆரம்பித்தான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தாள். விசில் சத்தம் கேட்க, வெட்டு வெட்டி ரயில் நகர ஆரம்பித்தது. அவளும் அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தாள். ஸ்டேஷனுக்கு வெளியே ஆட்டோக்காரர் ஒருவர் நெருங்கி, “எங்க போகணும்” கேட்டார். ”பஸ் ஸ்டாண்ட்தான்” சொன்னதும் விலகிக் கொண்டார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில்தான் இருந்தது.
காலேஜ்க்குப் போய்க்கொண்டிருப்பதாய் மொத்த வீடும் நம்பிக்கொண்டிருக்கும். சற்று முன்னால் அப்பாவின் கையைப் பிடித்து அழுததில் அவர் சமாதானமாகித் தெரிந்தார். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி சுப்பையாவின் பின்னால் இப்படி நடந்து கொண்டிருப்பது தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று உறுத்தியது. அடுத்த கணமே தெரிந்தால்தானே, நாம்தான் சாயங்காலம் காலேஜ்க்கு போய்விடலாமே என்று நம்பிக்கையும் வந்தது. பஸ் ஸ்டாண்டில் அங்கங்கு சில பேர் நின்றிருந்தார்கள். அன்றைக்கு வந்த பேப்பர்களை இரண்டு பேர் சைக்கிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். டீக்கடையில் ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார். ராஜபாளையம் பஸ் புறப்பட நின்றிருந்தது. போய் ஏறிக் கொண்டார்கள். நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பையை உடலிலிருந்து கழற்றி உட்கார்ந்ததும் சுப்பையா கண்மணியைப் பார்த்து சிரித்தான்.
“ம்… ஒருவழியா நினைச்சத சாதிச்சிட்டீங்க” கண்களை உருட்டி பெரிய ஆளுதான் என்பது போல காட்டினாள்.
“ஆமாம், இதுக்கே இவ்வளவு அடிச்சிக்கிட வேண்டியிருக்கு” பெருமூச்சு விட்டான்.
“சரி. உங்க வீட்டுல என்ன சொல்வீங்க?” கேட்டாள்.
“ஆட்டோ ரிப்பேர். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க மதுரைக்கு வந்திருக்கேன்.” யோசிக்கமல் சொன்னான்.
“சரியான களவாணி..” அவனை அடிப்பது போல பாவனை செய்தாள்.
அவன் அருகில் குனிந்து ”நீ இவ்வளவு பக்கத்துல இருக்க. தெரிஞ்சவங்க யாரும் இல்ல. எந்த அவசரமும் இல்ல. நா ரொம்ப சந்தோஷமாயிருக்கேன். இப்படி ஒரு நாள் அமையணும்னு எவ்வளவு நாள் ஏங்கியிருப்பேன் தெரிமா?” ரகசியம் போல மிக மெல்லிய குரலில் சொன்னான்.
கண்மணி அவன் கைகளை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். இருவரும் பேசாமல் இருந்தார்கள். காலேஜ்க்குப் போகாமல் இறங்கியதும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டாள். டிரைவர் ஏறவும் பஸ் புறப்பட்டது. காதல் படத்தில் அந்த இருவரும் இப்படித்தானே பஸ்ஸில் போனார்கள் என்றிருந்தது.
‘உனக்கென இருப்பேன்…. உயிரையும் கொடுப்பேன்…. உன்னை நான் பிரிந்தால்….. உனக்கு முன்னே இறப்பேன்…… கண்மணியே….” பத்தாவது வயதில் உட்கார்ந்த இடம், நின்ற இடம், போன இடமெல்லாம் அவள் பேரைச் சொல்லி வலியோடு அழைத்துக் கிடந்தது அந்தக் குரலும் இசையும். நடுரோட்டில் தாடி முடியோடு பைத்தியமாய் சுற்றிக்கொண்டிருந்த பரத்தின் நெஞ்சில் பச்சைக்குத்தியிருந்ததை தன் பேராகவே உணர வைத்தது. எப்போது கேட்டாலும் அந்த பாட்டு உயிரைப் பிசைவது போலிருக்கும்.
முத்தையா அப்போது வீட்டில் இருந்ததே குறைச்சல்தான். இரண்டாயிரத்து இரண்டு செப்டம்பரில் பத்தாயிரம் சாலைப் பணியாளர்களை ஜெயலலிதாவின் அரசு பணிநீக்கம் செய்தது. ஐந்து வரைப் படித்தவர்களுக்கு ஒரு அரசு வேலை என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. தங்களுக்கு நிச்சயமான ஒரு எதிர்காலம் இருக்கும் என அவர்கள் கண்டிருந்த கனவில் மண்ணள்ளிப் போட்டது. சிலருக்குப் பைத்தியம் பிடித்து தெருவில் அலைந்தார்கள். அறுபது பேருக்கும் மேலே தற்கொலை செய்து கொண்டார்கள். மூன்றரை வருடங்கள் தமிழ்நாடு முழுவதும் சாலைப் பணியாளர்கள் திரும்பவும் வேலை கேட்டு போராடினார்கள். அதற்குத் தலைமை தாங்கி நடத்தியதில் முத்தையாவின் பங்கு முக்கியமானது. அதிகாலையில் புறப்பட்டுப் போவான். எல்லோரும் தூங்கிய பின்னிரவில் வருவான். பல நாட்கள் வீட்டில் தங்குவதும் இல்லை. ஒரு தடவை சென்னைக்குப் போனவன் ஒரு வாரத்துக்கும் மேலாய் வரவில்லை. ஆனைக்குழாய் பகுதியில் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து அவதிப்பட்டார்கள். சாலைப்பணியாளர் சங்கத் தோழர்கள்தான் வந்து உதவிகள் செய்தார்கள். இரண்டாயிரத்து ஆறு பிப்ரவரியில் மீண்டும் சாலைப் பணியாளர்கள் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். வீடும் சூழலும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்தாலும் அப்போது கண்மணிக்குள் எழுந்திருந்த குழப்பங்களை, சந்தேகங்களை வீட்டில் யாரும் அறிந்திருக்கவில்லை.
வளரும் பெண்ணின் மாற்றங்களை தன்னில் பார்க்க ஆரம்பித்ததும் கண்மணிக்கு மின்சாரக் கம்பிகளில் மைனாக்கள் கூடு கட்ட ஆரம்பித்தன. எட்டாவது படிக்கும்போது வயதுக்கு மீறி பெரிய பெண்ணாய் கண்மணி தெரிவதாய் அடுத்த தெருவிலிருக்கும் ராணியக்கா சீனியம்மாவிடம் ஒருநாள் வீட்டு வாசலில் வைத்துச் சொன்னதைக் கேட்டதும் புத்தகத்தை கீழே வைத்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள். அங்குமட்டும்தான் கதவை மூடிக்கொள்ள முடியும். அந்தச் சின்ன வீட்டில் அவள் தன்னை அறிந்து கொள்ள இடமில்லை. எல்லோருக்கும் நேர்வதுதான் அவளுக்கும் நேர்கிறது என்பதைச் சொல்லி இயல்பாக்கும் மனிதர்கள் இல்லை. விரிந்திருந்த பள்ளிதான் அடைக்கலமாயிருந்தது. கூட படிக்கும் தோழிகளோடு பேசுவது சுவாரசியமாகவும், நன்றாக படிப்பதாக டீச்சர்கள் பாராட்டுவது உற்சாகமாகவும் இருந்தது.
பள்ளிக்குப் போகும் வழியில் புதிதாய் கட்டிக்கொண்டிருந்த வீட்டில் உடலெல்லாம் புழுதியும் சிமெண்ட்டுமாய் சித்தாள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனின் அசைவுகளும் சுறுசுறுப்பும் கவனிக்க வைத்தது. தினமும் போகும்போதும் வரும்போதும் அந்த இடத்தைக் கடக்கும்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தான் அவன். காணாத போது கண்கள் தேட ஆரம்பித்தன. கண்டதும் சந்தோஷம் வந்தது. பாதியளவுக்கு சுவர் உயர்ந்த நேரத்தில் அவள் தன்னைப் பார்ப்பதை அறிந்து கொண்டான் அவன். தன்னை சரிசெய்து கொண்டு எனக்கும் உன்னைத் தெரியும் என்பது போல் நின்று பார்க்க ஆரம்பித்தான். மாடிச்சுவர் கட்டி முடியும்போது இருவரும் ஒருவரையொருவர் எந்நேரமும் தேடிக்கொண்டு இருந்தார்கள். கட்டிய வீட்டிற்கு பால் காய்ச்சி, யாரோ குடிவந்த பிறகு கண்மணிக்கு அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் வெறிச்சென்று இருந்தது. அவளது பாதையில் வேறொரு இடத்தில் அவன் வந்து நிற்க ஆரம்பித்தான். ஒருநாள் எதிரே வந்தவன் அவளைக் கடக்கும்போது, ”கண்மணி” என்று எங்கோ பார்த்து சொல்லிக்கொண்டு போனான். அடுத்தநாள் ”சுப்பையா” என தன் பெயரைச் சொல்லிக்கொண்டு போனான். பெயரை அறிந்தவர்களுக்கு மேலும் தங்களைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள வேண்டும் போலிருந்தது.
படித்துக்கொண்டிருந்த சத்திரியா பெண்கள் உயர்நிலைப் பள்ளி முன்பு ஒருநாள் சுப்பையா ஆட்டோவுடன் வந்து நின்றான். அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிறகெல்லாம் அவனை ஆட்டோவில்தான் பார்க்க முடிந்தது. சித்தாள் வேலையை விட்டு அவனும் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்பது சந்தோஷமாயிருந்தது. அந்த வருடம் ஊர்ப் பொங்கலின்போது கூட்டத்தில் தனியே நின்ற சமயம் அவளருகே வந்து, “கண்மணி, அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” சொல்லிக்கொண்டே ஒரு காகிதத்தைக் கொடுத்து சென்றான். பத்திரமாய் அதை வீட்டில் வந்து நெஞ்செல்லாம் துடிதுடிக்க பிரித்தாள். ஒன்றும் எழுதியிருக்கவில்லை. வெறும் காகிதம். அடுத்த நாள் அவளே அவனிடம் போய்க் காகிதத்தை காண்பித்து “என்ன இது?” கேட்டாள். அவனும் அதை வாங்கிப் பார்த்து, ”என்ன, ஒன்னும் எழுதல” திருப்பிக் கேட்டான். “என்ன விளையாடுறியா?” அவள் கோபமாய் கேட்க, ”எனக்கு எழுத வராது. நாஞ் சொல்ல சொல்ல நீதான எழுதணும். கண்மணி அன்புடன் காதலன் நான் எழுதும் கடிதம்” சொல்லி சிரித்தான். அவளுக்கும் சிரிப்பு வந்தது. தெப்பக்குளம் அருகில் சந்தித்ததெல்லாம் அதன் பிறகுதான். நாட்களெல்லாம் பாடங்களோடும், கனவுகளோடும் அழகாய் வந்தன.
நன்றாக படித்தால்தான் இந்தக் காதலும், திருமணமும் சாத்தியமாகும் என்பதில் கண்மணி உறுதியாய் இருந்தாள். தன் அப்பா பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். பெண்களைப் பற்றி பெரியார் எழுதியிருப்பதையெல்லாம் வீட்டில் முத்தையா சொல்வதை கேட்டிருந்தாள். தன் பெண் நன்றாக படிக்க வேண்டும், தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும், தன் காலில் நிற்க வேண்டும் என்றுதான் அவளிடமும் சொல்லியிருந்தான். பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்று எழுபத்தெட்டு மார்க்குகள் வாங்கினாள்.
ப்ளஸ்டூவுக்கு நாமக்கல்லில் சேர்த்ததுதான் கஷ்டமாய் போய்விட்டது. காலை நான்கு மணிக்கே எழுந்திரிக்க வைத்து, ஓய்வு, பேச்சு, சிரிப்பு எதுவுமின்றி சதாநேரமும் மெஷின் போல படிக்க கட்டாயப்படுத்தியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் விருப்பத்தோடு புத்தகங்களை கையிலெடுத்தவளுக்கு, தன்னுடைய நேரத்தைத் தானே தீர்மானித்து விருப்பத்தோடு படித்தவளுக்கு நாமக்கல் பள்ளியும் கல்வியும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அப்பாவிடம் சொல்லவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் அவஸ்தைப்பட்ட அந்த இரண்டு வருடங்களும் நரகம் போல்தான் கழிந்தன. சுப்பையாவிடம் புலம்புவாள். அந்த சமயங்களில் ஆறுதலாய் இருந்தவனும் அவளைத் தேற்றியவனும் அவன்தான். அவளது உலகத்தில் முத்தையா வீட்டிலும், சுப்பையா வெளியிலும் தெரிந்தார்கள்.
“கண்மணி தூக்கம் வருதா.” சுப்பையா அவள் தலையைத் தடவி விட்டான். நேற்றிரவு சரியாகத் தூங்காதது, மூன்று மணிக்கு எழுந்தது அவளை அசத்தியது. அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். பரட்டைத் தலையோடு பைத்தியமாகி விடாமல் சுப்பையா நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு தூக்கத்திற்குள் நுழைந்து கொண்டாள்.
ராஜபாளையம் இறங்கும்போது மணி ஆறு நாற்பதுதான் ஆகியிருந்தது. ரெஸ்ட் ரூம் போய் விட்டு இருவரும் காபி குடித்தார்கள். போனில் பேசிக்கொண்டே தென்காசி போகும் பஸ்ஸைத் தேடினான் சுப்பையா. ஒரு மணி நேரம் போலத் தூங்கியது புத்துணர்ச்சியாய் இருந்து அவளுக்கு.
ராஜபாளையத்திலிருந்து தென்காசி போகும் வழியில் மலைகள் கூடவே வந்தன. இருவரும் விடாமல் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்தார்கள். தென்காசியில் இறங்கி ஒரு கடையில் ஆவி பறக்க இட்லி சாப்பிட்டார்கள். ஒரு ஆட்டோவில் பழைய குற்றாலம் சென்றார்கள். மலைத்திரட்சியையும், அருவியையும் ரசித்தார்கள். ஆடை மாற்றிக்கொண்டு அவள் ஆசை தீரக் குளித்தாள். தன்மீது கொட்டிய வெள்ளத்தை குழந்தை போல கொண்டாடினாள். ரொம்ப நாள் இருந்த ஏக்கமெல்லாம் கரைந்து கொண்டிருந்தது. அவன் வெளியில் இருந்து பார்த்துக் கொண்டும் போனில் பேசிக்கொண்டு இருந்தான்.
அருவியை விட்டு வெளியே வந்து உடைமாற்றி வெயிலில் நடந்த போது “தென்காசிக்கு வந்ததிலிருந்து பாக்குறேன். போனோடுதான் இருக்கீங்க...” என்றாள்.
”ஒன்னுமில்ல.
“ஃபிரண்ட்ஸ்தான்” சொல்லி அமைதியானான். இருவரும் மீண்டும் தென்காசிக்கு வந்தபோது மணி
மதியம் ஒன்றைத் தாண்டியிருந்தது.
ஓட்டலில் சாப்பிட்டு கை கழுவும்போது கண்மணி அருகே வந்த சுப்பையா, “நீ காலேஜ்க்கு போகலங்குறதும், நாம ரெண்டு பேரும் ஒன்னா இருக்கோம்கிறதும் உங்க வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு.” என்றான்
(தொடரும்)
இங்கிருந்து தான் வந்தான் தொடர் இரண்டு தொடர்களும் படித்தேன்.அதனோடு ஒன்றிவிட்டேன்.கருத்து சொல்ல வார்த்தைகள் இல்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழர் மாதவராஜ்.
ந.குமாரகுரு சாத்தூர்
இங்கிருந்து வந்தான் முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயம் இரண்டையும் படித்தேன் தோழர். முத்தையா வின் பல ஆண்டுகள் பின்னோக்கிய உண்மைகளை உலகிற்கு கொண்டு வரும் தோழர் மாதவராஜ் அவர்களை வாழ்த்திட வயதும் இல்லை!வார்த்தைகளும் இல்லை!!! சி.குருசாமி, உடுமலைப்பேட்டை.
ReplyDeleteஇங்கிருந்து தான் வந்தான் என பதிவிடுவதற்கு பதிலாக தவறுதலாக இங்கிலாந்து வந்தான் என பதிவிட்டு விட்டேன். மன்னிக்கவும்... திருத்தம் செய்து வாசிக்கவும்.
ReplyDeleteசி.குருசாமி, உடுமலைப்பேட்டை.
இங்கிருந்துதான் வந்தான்
ReplyDeleteமுதல் இரண்டு அத்தியாயங்களும்
அழைத்துச் செல்லும் பாதை
அத்தியாயம் 3 எப்போது வரும் என தேடும் பாதை.
முத்தையாவின் அறிமுகம் , அவரின் ஆசை,
கண்மணியின் ஏக்கம், அப்பா மகள் உறவில் அந்த பாசப் பிணைப்பும் ,தவிப்பும்
ஒருவித ஏக்கத்தையும் , எதிர்பார்ப்பையும் தருகிறது. நன்றி தோழர்.