( ஒரு மனிதனின் கதை இது. ஒரு தோழரின் கதை இது. அவரை
உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். தெரியாமல் இருக்கலாம். அது முக்கியமல்ல இப்போது. அவர் எங்கிருந்து, எப்படி
வந்தார் என்பதுதான் முக்கியமானது. இருட்டையும் வெளிச்சத்தையும் அடைகாத்திருக்கும் வாழ்வனுபவம் இது. )
”அவக்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க” முகத்தைக் கழுவி பாத்ரூமில் இருந்து வெளியே வந்த முத்தையாவிடம் அவனுக்கு மட்டும் கேட்கும்படியாய் சொன்னாள் சீனியம்மா. கண்மணி இருந்த அறையையும் ஒரு பார்வை எட்டிப் பார்த்துக் கொண்டாள். புரிந்து கொண்டதைப் போல கண்களை மெல்ல மூடித் திறந்து ’பொறு.. பொறு’ என்பதாய் சைகை செய்தான் அவன்.
அதிகாலை மூன்று மணிக்கு விழித்துக் கொண்ட ஒரு வீட்டில் மனிதர்கள் சத்தமில்லாமல்தான் நடமாடுகிறார்கள். பேசுகிறார்கள். உறங்கிக் கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்னும் உணர்வு மனிதர்களுக்கு தன்னியல்பாகவே இருக்கிறது. என்றாலும் சாதாரணமாகவே ரகசியம் பேசிக்கொள்ள முடியாத சின்ன வீடுதான் அது. முன்னறை. அதைத் தாண்டி சமையலறை. பக்கவாட்டில் இரண்டு சின்ன அறைகள். நானூறு சதுர அடிகளுக்குள்தான் மொத்த வீடும். ஜே.இ சி.எம் சார் (ஜூனியர் எஞ்சினியர். செல்லச்சாமி மகன் முத்தையா) வீடு என்று சமீபமாய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிறந்ததும், அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி என எல்லோரோடும் முத்தையா வளர்ந்ததும் சாத்தூரில்தான். சாதிக் கலவரமாய்க் கிடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறில் ஆனைக்குட்டத்துக்கு ஒருநாள் அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது அவனுக்கு பத்தொன்பது வயது. தாய்மாமா குருசாமியின் பார்வையில் இருக்கட்டும் என்பது அம்மா சுப்புத்தாயின் யோசனைதான். கழுத்தில் சேலையைத் தொட்டிலாகக் கட்டி அதில் குழந்தையாய் இருந்தவனைப் போட்டு இருக்கன்குடி மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி எடுத்து வைத்த பேர்தான் முத்தையா. ஜாதித்திமிரும், சட்டென கைநீட்டும் கோபமும் கொண்ட அவனின் சேர்க்கைகள் சுப்புத்தாயை பயமுறுத்தின. வேறு வழி தெரியவில்லை. குருசாமிக்கு இருந்த அரசியல் செல்வாக்கில் விருதுநகர் ரேஷன் கடையொன்றில் தினக்கூலியாய் வேலை கிடைத்தது. ஆறு வரைக்கும் படித்தவனுக்கு அது ரொம்பப் பெரிய விஷயம். தில்லுமுல்லுகளுக்கு பழகியதும் தினமும் நானூறு ஐநூறு என்று ருபாய் நோட்டுகள் பங்காய் கிடைத்தது. பாட்ஷா ஆறுமுகத்தோடு எல்லாம் பழக்கம் உண்டானது. அமிர்தம் ஒயின்ஷாப்பில் சாயங்காலத்துக்கு மேல் குரூப்பாக உட்கார்ந்து தண்ணியடித்து வம்பு தும்பென்று இஷ்டத்துக்கு இருந்தான். ’கல்யாணம் பண்ணாத்தான் உருப்படுவான்’ என பெரியகொல்லப்பட்டி சீனியம்மாவுக்கு முத்தையாவைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவளது கையைப் பிடித்துக் கொண்டு விருதுநகரில் ஆனைக்குழாய் பகுதியில் குடிவந்தவன்தான். இருபது வருடங்கள் ஓடிவிட்டன. மகள், மகன், மகள் என அடுத்தடுத்த வருடங்களில் பெற்றது, இந்த இடத்தை வாங்கியது, ஒரு அறையும் சமையலறையுமாய் இருந்ததை மேலும் இரண்டு அறைகளோடு விரித்துக் கொண்டதை எல்லாம் நினைவுபடுத்தி நிற்கிறது இந்த வீடு.
சீனியம்மா எட்டிப்பார்த்த பக்கத்து அறையில் உடைகளையும் புத்தகங்களையும் பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு இருப்பவள்தான் பெரியவள் கண்மணி. பத்தாம் வகுப்புத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது அதிக மதிப்பெண் பெற்ற மாணவி. ப்ளஸ்டூ படிக்க அவளை நாமக்கல்லில் சேர்த்தார்கள். தங்கள் வீடுகளுக்கு மாணவிகள் போன் பண்ணிப் பேச மாதத்துக்கு ஐந்து ஒரு ருபாய் நாணயங்களை ஹாஸ்டலில் கொடுப்பார்கள். அங்கிருக்கும் போனில் நாணயத்தைப் போட்டு பேசிக்கொள்ள வேண்டும். வீட்டின் நம்பர் இல்லாமல் இன்னொரு நம்பருக்கும் கண்மணி பேசுவதை கவனித்து அங்குள்ள டீச்சர் முத்தையாவை வரவழைத்துச் சொல்லியிருக்கிறார். விசாரிக்கும்போதுதான் விருதுநகரில் ஆட்டோ ஒட்டும் சுப்பையா என்னும் பையனோடு பழக்கம் இருப்பது தெரிந்தது. கண்மணிக்கு புத்திமதிகள் சொல்லிவிட்டு வந்தான். ப்ளஸ்டூவில் ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்து எழுபது போலத்தான் மார்க்குகள் வாங்கினாள். இப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் எஞ்சீனியரிங் கல்லூரியில் முதல் வருடம் இன்பர்மேஷன் டெக்னாலஜி படித்துக்கொண்டிருக்கிறாள். சனி ஞாயிறுக்கு வந்தவள் இன்று திங்கட்கிழமை கல்லூரிக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். காலை மூன்றே முக்காலுக்கு விருதுநகர் ஸ்டேஷனில் செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸை பிடிக்க வேண்டும்.
இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டு இருப்பவன் செந்தில். இரண்டாவது மகன். கேவிஎஸ் ஹையர் செகண்டரி பள்ளியில் ப்ளஸ்டூ படிக்கிறான். சனிக்கிழமை சாயங்காலம் எதோ ஜெராக்ஸ் எடுக்கப் போவதாக வெளியே சென்ற கண்மணியை தெப்பக்குளம் அருகே அந்த சுப்பையாவோடு பார்த்திருக்கிறான். அம்மாவும் அப்பாவும் கவலைப்படுவதை உணர்ந்தவன். சீனியம்மாவிடம் வந்து சொன்னான். பெற்ற தாய்க்கு தவிப்பாய் வந்தது. அன்றிரவு முத்தையா சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்கு வெளியே அவனை அழைத்து, அடங்கியிருந்த அந்த குறுகலான தெருவில் ஒரு ஓரமாய் நின்று குரல் உடைந்து போனாள். முத்தையா சமாதானப்படுத்தினான். தான் பேசினால் சரியா வராது என்று அவனை கண்மணியிடம் பேசச் சொன்னாள். சரியென்று சொல்லியிருந்தான்.
கண்மணி புறப்பட்டுக் கொண்டிருக்கும் அறையில் தூங்கிக் கொண்டு இருக்கும் இன்னொருத்தி சின்னவள் செல்வி. பத்தாம் வகுப்பு முடித்திருக்கிறாள். நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறாள். நாமக்கல்லில் ப்ளஸ் டூவில் சேர அவளுக்கு இன்று இண்டர்வ்யூ. கண்மணியை செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் அனுப்பி் வைத்துவிட்டு, வீட்டுக்கு வந்து செல்வியை அழைத்துக்கொண்டு முத்தையா புறப்பட வேண்டும். மரியான் படத்தின் ”இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன…… ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே” வரியை சனிக்கிழமை சாயங்காலத்திலிருந்து திரும்பத் திரும்ப கண்மணி பாடிக்கொண்டிருந்தது அவளை விட இரண்டு வயது குறைவான செல்விக்கு புரியாமல் இல்லை. “என்னக்கா அந்த பாட்டையே பாடிட்டு இருக்க…” கொஞ்சம் கிண்டலாய்த்தான் கேட்டாள். தங்கையைக் அப்படியே பார்த்திருந்துவிட்டு, ”எனக்குப் பிடிச்சிருக்கு. அதுக்கு என்ன?” கண்மணி கேட்டிருக்கிறாள். நேற்று இரவு பேச்சோடு பேச்சாக செல்வி அதை அம்மாவின் காதில் ஒரு ஒரமாய் போட்டு வைத்தாள். ‘அதுக்கு என்ன?’ வார்த்தையில் இருந்த பிடிவாதம் உறுத்தியது.
அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்து படுக்கவே முத்தையாவுக்கு பனிரெண்டு மணி ஆகிவிட்டது. கண்மணியிடம் அன்று அவன் எதுவும் பேசவில்லை என்பது சீனியம்மாவுக்கு கலக்கம் தந்தது. காலையில் மூன்று மணிக்கு எழுந்ததும் ”கண்மணி எந்திச்சிட்டாளா” என்றுதான் கேட்டான்.
“அவ தூங்கினாத்தான எந்திரிக்க…” சீனியம்மா முணுமுணுத்தாள்.
அப்போதிலிருந்து மனைவியின் பரிதவிப்பை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். யோசனையாய் இருந்தது, தொழிற்சங்க அரங்கில் பெரும் கூட்டத்திற்கே நம்பிக்கையளித்து பேச முடிந்திருக்கிறது. கோரிக்கைகள் மீதான அவனது பேச்சின் சாதுரியத்தால் அரசு அதிகாரிகள் வார்த்தைகளின்றி போயிருக்கிறார்கள். தனி அறையில் அழைத்து மிரட்டிய தமிழ்நாட்டின் உளவுத்துறை அதிகாரியை சமாளித்த அவனது உரையாடல்கள் ஏழு வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் தோழர்களிடையே பிரபலமான சம்பவம். அப்பேர்ப்பட்டவனுக்கு இன்று பெரியவளாகி நிற்கும் தன் குழந்தையிடம் என்ன பேசுவது, எப்படி புரிய வைப்பது என்று குழப்பமாயிருந்தது.
ரேஷன் கடையில் இருந்த இளமையின் ஆரம்ப காலங்களில் பெண்களை எப்படியெல்லாமோ பார்க்கத் தூண்டிய தன் கண்களை அவனுக்குத் தெரியும். அந்தக் கண்கள்தானே ஆட்டோ ஓட்டும் அந்த ஆண் பையனுக்கும் இருக்கும் என்ற உணர்வுதான் ’அட என் மகளே” என தலையில் அடித்துக் கொள்ள வைத்தது. ஆசையோடு ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்த அனுபவங்கள் அவனுக்கும் சில பெண்களிடம் அப்போதெல்லாம் இருக்கத்தான் செய்தன. அவை வெறும் ஆசைகள்தான். அதற்கும் மேலே நகர்ந்து எந்தப் பெண்ணையும் அவன் காதலிப்பதாகக் கருதியதோ, கல்யாணம் செய்து கொள்ளத் தோன்றியதோ இல்லை. எந்தப் பெண்ணுக்காவது தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்குமா என்றும் தெரியாது. சினிமாத் தியேட்டர்களின் திரைகளில் பல கதாநாயகிகளை அவன் காதலித்துக் கொண்டு இருந்தான். கனவில் வந்து அவர்களும் அவனை காதலித்தார்கள். காதல், காமம் எல்லாம் பெரும்பாலும் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் தனிமையிலேயே வந்து சென்றன. இந்த ஆட்டோக்காரப் பையன் அப்படித் தெரியவில்லை.
ஆரம்பத்தில் பட்டும் படாமல் மகளுக்கு பொதுவாக புத்திமதி சொன்னான். ‘நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்னு ரஜினி ஆடுனா ரசிக்கிறதோட நிறுத்திக்கணும்” என சாதாரணமாகக் கிண்டல் கூட செய்தான். ப்ளஸ் டூவில் மதிப்பெண்கள் குறைந்ததும்தான் தாங்க முடியவில்லை. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, கண்மணியை அருகில் உட்காரவைத்து, ”மார்க்கெல்லாம் ஏன் குறைஞ்சுதுன்னு புரியுதா” அமைதியாகக் கேட்டான். ”உன்னோட கவனம் பாடத்தில இல்ல. அதனால குறையுது” அவனே பதிலும் சொன்னான். இந்த வயதில் எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுகள்தான் என்பதையும் நமக்குப் படிப்புதான் முக்கியம் என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினான். இதைக் கடந்து செல்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது, பார்த்துக்கொள் என எச்சரித்தான். அவள் கண்ணீர் வடியக் கேட்டுக் கொண்டிருந்தாள். இங்கிருந்தால் நினைப்பை பறிகொடுத்து விடுவாள் என்று திருச்செந்தூரில் போய் எஞ்சீனியரிங்கில் சேர்த்திருந்தான்.
முத்தையாவுக்கு ஒரு விஷயம் உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டோ ஓட்டும் அந்த பையன் ஒருநாளும் இன்னொரு முத்தையாவாக முடியாது. தன் மகள் கண்மணி ஒருநாளும் இன்னொரு சீனியம்மாவாகி விடக் கூடாது. படிப்பு என்பது மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வாழ்க்கைதான் அவனுக்கு ஊட்டியிருந்தது.
திருமணம் நடந்து சீனியம்மாவோடு குடும்பம் நடத்த ஆரம்பித்த பிறகு, எத்தனையோ நாட்கள் அவளை இதே வீட்டில், தெருவில் போட்டு அடித்திருக்கிறான். பெண்ணைப் பற்றி எந்த மதிப்பும் அப்போது கிடையாது. கோபம் வந்தால் பேச்சே கிடையாது. அடிதான். நடுங்கித்தான் சாவாள் சீனியம்மா. வீட்டு வேலை செய்து கொண்டும், பிள்ளைகளை அணைத்துக் கொண்டும் புழுவைப் போல இந்த வீட்டில் துடித்து அழுத கோலங்கள் கண்ணுக்குள்ளேயே இருக்கின்றன. “ஏ… என்ன பெத்த அம்மா” நெஞ்சில் அடித்துக் கொண்டு ஓலமிட்டதை தெருவே கேட்டிருக்கிறது. காட்டுப் பாதையில் கொளுத்தும் வெயிலில் எந்த பேச்சுமில்லாமல் தன் கல்யாணத்தை நிச்சயம் செய்தவள் அம்மாதானே.
சாத்தூர் தனலட்சுமி தியேட்டரில் சின்னக் கவுண்டர் பகல் காட்சி பார்த்துவிட்டு குமரம்மாவும் அவள் மகள் சீனியம்மாவும் பெரியகொல்லப்பட்டிக்கு வெயிலோடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். தன் உறவுக்காரர்களை பார்க்க சுப்புத்தாய் பெரிய கொல்லப்பட்டிக்குச் சென்றுவிட்டு சாத்தூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். குமரம்மாவும் சுப்புத்தாய்யும் சின்ன வயதுத் தோழிகள். எதிர் எதிரே பார்த்து விசாரித்துக் கொண்டார்கள். தன் தோழியின் அருகில் நின்ற சீனியம்மாவை யாரென்று கேட்டிருக்கிறார் சுப்புத்தாய். ”தெரியலயா… உங்க மருமகா” என கிராமத்து வழக்கில் சொந்தம் வைத்து குமரம்மா சொல்லவும், ”எம் பையன் முத்தையாவுக்குத் தர்றியா” என சுப்புத்தாய் கேட்டிருக்கிறார். அங்கேயே நிச்சயமாகி இருக்கிறது. பெத்த கடனுக்கு மூன்று பவுண் நகை போட்டு சாத்தூர் பெருமாள் கோவிலில் கல்யாணத்தை நடத்தி குமரம்மா தன் மகளை முத்தையாவோடு அனுப்பி வைத்தாள்.
சீனியம்மாவையும் அவளது உலகையும் தெரிந்து கொள்ள முத்தையாவுக்கு பத்து வருடங்களுக்கும் மேல் வேண்டியிருந்தது. சங்கமும் கட்சியும்தான் அந்த அறிவைத் தந்திருந்தன. தன் வாழ்வில் சந்தித்த மேடுகளும் பள்ளங்களும், இருட்டும் வெளிச்சமும் அப்படியே யாருக்கும் வாய்க்காது எனத் தோன்றியது. அவனுக்கே சில நேரங்களில் அதிசயம் போலத் தோன்றும். வடமலைக்குறிச்சி பழனி ஒயின்ஸில் சரக்கு அடித்து விட்டு நட்ட நடு ராத்திரியில் மூப்பர் சமாதி மேல் உட்கார்ந்து சுருட்டு புகைத்துக் கொண்டு குறி சொன்ன அந்த சின்ன முத்தையா இந்த பெரிய முத்தையா எப்படி இருப்பான் என்று அறிந்திருந்தானா?
கண்மணி காலேஜ்க்கு சென்ற பிறகும் சுப்பையாவோடு சேர்த்து பேச்சுக்கள் வந்தன. சொந்தக்கார மனிதர் ஒருவர் “விடுங்க முத்தையா. இன்னிக்கு உலகம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு. யாரையோ அவ லவ் பண்ணலயே. நம்ம இனத்துக்காரப் பையந்தானே” என்றபோது அப்படியே அந்தாளு செவிட்டில் ஓங்கி அறைய வேண்டும்போல் இருந்தது. கச்சேரி ரோட்டில் இருக்கும் சிபிஎம் ஆபிஸுக்குச் சென்றான்.
கட்சித்தோழர் சீனிவாசன் ஆட்டோ ஒட்டும் சுப்பையாவை அழைத்து, “காதலுக்கு முத்தையாவும் சரி, நாங்களும் சரி, எதிரில்லாம் இல்ல. எத்தனையோ கல்யாணங்கள எங்க ஆபிஸ்லயே வச்சி நடத்தி இருக்கோம். பொண்ணு படிச்சு முடிக்கட்டும்னுதான் அவங்க அப்பா சொல்றாரு. முடிக்கட்டும். அப்ப முத்தையான்னு இல்ல, யாரு மறுத்தாலும் எங்கக் கிட்ட வா. பாத்துக்காலம்.” என தெளிவாகச் சொல்லியிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து பார்த்த போது ”பையங்கிட்ட பேசிட்டேன் தோழா. சரியாயிரும்னு நினைக்கேன்.” என்று சொல்லியிருந்தார். அதற்குப் பிறகு ஒரு மாதமாய் எந்தப் பேச்சும் வரவில்லை. இப்போது மீண்டும் தலைதூக்கி இருக்கிறது.
பையைத் தூக்கிக் கொண்டு முன்னறைக்கு வந்த கண்மணி கட்டிலில் உட்கார்ந்தாள். தலைசீவிக் கொண்டிருந்த முத்தையா கவனித்தான். மகள் அப்படி இருப்பது என்னவோ போலிருந்தது. அவளாக பேசுவதில்லை. கேட்டால் ஒன்றிரண்டு வார்த்தைகளில் பதில் வரும். கொஞ்ச நாளாகவே அப்படித்தான் இருக்கிறாள். முன்பெல்லாம் பார்வையும் பேச்சும் எவ்வளவு துடிப்பாகவும், பிரியமாகவும் இருக்கும். பார்த்ததும் “அப்பா”வென குழந்தையாய் ஓட்டிக் கொள்வாள்.
மணி மூன்று பதினெட்டு காட்டியது. “எல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா. கிளம்பலாமா?” அவள் பக்கம் திரும்பினான்.
“ஆமாம்ப்பா… போலாம்.”
”இருக்கங்குடி மாரியாத்தா, புள்ளைக்கு நல்ல புத்தி குடும்மா” பயபக்தியோடு குங்குமத்தை கண்மணியின் நெற்றியில் வைத்துவிட்டு சீனியம்மா வாசல் கதவைத் திறந்தாள். திறந்ததும் தெருதான். முன்னால் கொஞ்சம் இடமோ, அடைப்போ கிடையாது. வெளியே இருட்டாய் இருந்தது. வாசல் விளக்கை போட்டாள். வீட்டுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளை தெருவில் கொண்டு வந்து நிறுத்தினான் முத்தையா. பையை முதுகில் போட்டுக் கொண்டு சைக்கிள் பின்னால் ஒரு பக்கமாய் கண்மணி உட்கார்ந்தாள்.
“சீனி! சின்னவள எழுப்பி புறப்பட வை. திரும்பி வந்ததும் குளிச்சிட்டு அவளை கூட்டிட்டு நாமக்கல் போகணும்” சொல்லி சைக்கிளை அழுத்த ஆரம்பித்தான்.
தெருமுனையில் திரும்பும் வரைக்கும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அம்மாவின் உருவம் தெரிந்தது. கண்மணி பார்த்துக்கொண்டே சென்றாள். போகும் வழியெல்லாம் சைக்கிளின் கிறீச் கிறீச் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. சாலைப்பணியாளராய் வேலைப் பார்த்த காலத்தில் வாங்கிய சைக்கிள் இது. பத்துப் பனிரெண்டு வருஷமிருக்கும். ரோடு இன்ஸ்பெக்டராகி, இந்த வருடம் ஜூனியர் எஞ்சீனியரானாலும் அப்பா அதே சைக்கிளைத்தான் வைத்திருக்கிறார் என்பது அவ்வப்போது அவள் நினைவில் வந்து போகும். உன்னி உன்னி கால்கள் பெடலை அழுத்துவதை உணர முடிந்தது. “வேற வண்டி எதாவது வாங்குனா என்னப்பா?” கேட்க நினைத்து முடியாமல் போனது. கண்கள் கலங்க ஆரம்பித்தன.
டிடிகே சாலையில் ஏறியதும் முழுசாய் ஓளியோடு இருந்த நிலாவை மேற்குப் பக்கம் முத்தையா கவனித்தான். முன்னொரு காலத்தில் வெள்ளம் நிறைந்து ஒடிய கவுசிகா நதியின் மீதும் இந்த நிலா தெரிந்திருக்கும். இப்போது அந்தப் பகுதியெல்லாம் வேலிக்கருவேல மரங்களும், சாக்கடையும், இருட்டும் அடர்ந்திருந்தன. தண்டி தண்டியாய் யானை மாதிரியாய் குழாய்கள் தெரிந்தன. வானம் மட்டும் எப்போதும் போல அழகாயிருந்தது. நிலா அந்த நேரத்தில் அபூர்வமாய்த் தெரிந்தது.
‘அதிகாலை நிலா’ என்று ராஜேஷ்குமார் ஒரு நாவல் எழுதியிருப்பதை முத்தையா கேள்விப்பட்டிருந்தான். படித்திருக்கவில்லை. வீட்டின் நிலைமையைப் பார்த்து ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு ஒரு மளிகைக் கடைக்கு வேலைக்குச் சென்ற போது அங்கிருந்த பழைய பேப்பர்களில் ராஜேஷ்குமாரின் கதையை முதன்முதலாக படிக்க ஆரம்பித்தான். பிடித்துப்போய் அவரது கதைகளை தேடித் தேடி படித்தான். சாத்தூரில் ராஜேஷ்குமாரின் பேரவை என்று சில நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தான். அப்படி ஒரு காலமும் கதையும் உண்டு.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஆள் நடமாட்டங்கள் இருந்தன. வெளிச்சமாகவும் இருந்தது. இங்கு எத்தனையோ இரவுகளில் பஸ்களுக்காக காத்திருந்திருக்கிறான். பஸ்களிலிருந்து இறங்கி ஊருக்குள் தனியே நடந்திருக்கிறான். சாலைப்பணியாளர் போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறான். அதிரும்படி பெரும் முழக்கங்களை எழுப்பியிருக்கிறான். தோழர்களோடு டீக்களாய் குடித்து பேசியிருக்கிறான். நேற்று கூட கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், “எல்லா மீடியாக்களும் மோடி மோடின்னுதான் காட்டுறாங்க. கார்ப்பரேட்களோடு ஆர்.எஸ்.எஸும், பிஜேபியும் கூட்டு வச்சுக்கிட்டு அத்வானிய ஒரங்கட்டிட்டாங்க” என்று இங்கேதான் டீ குடித்தபடி சொல்லிக் கொண்டிருந்தார்.
ரெயில்வே பீடர் ரோட்டில் போகும்போது அப்பாவின் கழுத்துப் பக்கம் அந்த நேரத்திலும் வேர்த்திருந்ததை கண்மணி கவனித்தாள். ஸ்டேஷனை அவர்கள் அடைந்த போது மணி சரியாக மூன்று முப்பத்தைந்து. எப்படியும் டிரெயின் கால்மணி நேரம் லேட்டாகத்தான் பெரும்பாலும் வரும். டியூப் லைட்களோடு சிமெண்ட் தளமாய் நீண்டிருந்த பிளாட்பாரத்தில் அவர்கள் இருவர் மட்டுமே மெல்ல நடந்தனர். பக்கத்தில் தண்டவாளங்கள் மின்னிக்கிடந்தன. ஒன்றிரண்டு பேர் பெஞ்ச்களில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. சூட்கேஸைத் தலைக்கு வைத்து ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான். ரெயில் வரும் திசையில் ஒரு வயதானவர் ஆழ்ந்திருந்தார். தூரத்துக் கம்பங்களில் சிவப்புப் புள்ளிகளாய் விளக்கு வெளிச்சம் ரெயில்வே ஸ்டேஷன் என்று சொல்லிக்கொண்டு இருந்தது.
அப்பாவும் மகளும் ஒரு பெஞ்ச்சில் உட்கார்ந்தார்கள். சில வினாடிகள் அமைதியாய் இருந்த முத்தையா, “படிப்புல கவனம் செலுத்தும்மா. அந்தப் பையன நெனச்சிக்கிட்டு படிப்பு தொலைச்சிராத” என்றான். எத்தனையோ முறை அவளிடம் சொன்னதுதான். அதையேத்தான் திரும்பவும் சொல்லத் தோன்றியது.
கண்மணி ஒன்றும் பேசவில்லை.
“அந்தப் பையனப் பாத்து எதும் பேசினியா?”
இல்லையென்பதாய் தலையாட்டினாள்.
“பொய் சொல்ல வேண்டாம்மா. அப்பாவுக்கு கஷ்டமா இருக்கு. முந்தாநாள் உன்னையும், அந்தப் பையனையும் தெப்பக்குளம் பக்கம் பாத்துட்டு எங்க தோழங்க ரெண்டு பேர் சொன்னாங்க. வீட்டுல வச்சி பேசுறது சரியாத் தெரில. அதான் இங்க வச்சு கேட்டேன்.”
கண்மணி தண்டவாளங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்பா அம்மாக் கிட்ட நீ சகஜமா பேசி ரொம்ப நாளாச்சு தெரியுமா?“
அவள் தலைகுனிந்து கொண்டாள்.
“தப்புச் செய்றவங்கதான் தலை குனிவாங்க. எம் பொண்ணு தலை குனியுறது நல்லால்ல கண்மணி!”
நிமிர்ந்து “அப்படில்லாம் இல்லப்பா. திரும்பத் திரும்ப அதப்பத்தி பேச வேணாமேன்னு பாத்தேன்…” இழுத்தாள். பத்தொன்பது வருஷமாய் அவளது ஒவ்வொரு அசைவையும் அறிந்தவனுக்கு அந்த முகத்தில் பிடிபடாமல் எதோ வேதனை அடைந்திருப்பது தெரிந்தது.
”எம் பொண்ணு எனக்கு முக்கியம். அவ படிப்பு எனக்கு முக்கியம். நீ நல்லா படிக்குறவ. அதக் கெடுத்துக்காத. இந்த நாலு வருஷம் படிச்சு ஒரு டிகிரிய மட்டும் வாங்கிட்டு யாரை வேண்ணாலும் கல்யாணம் பண்ணிக்க.” தான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டது போலிருந்தது முத்தையாவுக்கு.
கண்மணி பையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தூரத்து சிவப்புப் புள்ளிகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
செந்தூர் எக்ஸ்பிரஸ் அடுத்த சில வினாடிகளில் வரும் என்று அறிவிப்பு ஒலித்தது.
“நாஞ் சொன்னது கேட்டுச்சா. படிச்சு முடிக்கிற வரைக்கும் காத்திருப்பியா?” கேட்டான்.
அவளது கண்கள் கலங்கத் தொடங்கின. எழுந்து தன் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். முத்தையாவின் கண்களிலும் நீர் நிறைந்தது.
டிரெயின் வரும் சத்தம் பக்கத்தில் கேட்டது.
***
முத்தையாவும் செல்வியும் பஸ்ஸில் மதுரையை நெருங்கி போய்க்கொண்டு இருந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை எழுப்பி, “போன் அடிக்குதுப்பா” என்றாள் செல்வி.
பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து பார்த்தான். அரசு ஊழியர் சங்கத் தோழர் சதாசிவம் அழைத்துக் கொண்டிருந்தார்.
“வணக்கம் தோழர்..” என்று உற்சாகமாக சொன்னான்.
வாக்கிங் போகும்போது சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காலை ஐந்து மணிக்கு கண்மணியையும், இன்னொரு பையனையும் பார்த்ததாகவும், ராஜபாளையம் போகிற முதல் பஸ்ஸில் இருவரும் ஏறியதாகவும் சதாசிவம் சொல்லச் சொல்ல விக்கித்துப் போனான். அப்போது தன் கையில் போன் இல்லையென்றும். வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சந்தேகத்தில் பேசுவதாகவும் சதாசிவம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் முத்தையா காதில் வாங்கவே இல்லை. முகத்தில் அருளே இல்லாமல் போனது.
‘அப்பாவ விட்டுட்டுப் போகப் போறோம்னுதான் என் கையப் பிடிச்சு அப்படி அழுதியா மகளே’ என்பதுதான் சிந்தனையாய் வந்தது.
”என்னப்பா ஆச்சு. ஒரு மாரியா இருக்கீங்க…” கேட்டாள் செல்வி.
“ஒன்னுமில்லம்மா. இது வேற..” என அவளது தலையை வருடினான்
முத்தையா.
திரும்பி ஜன்னல் வழியே வெளியுலகை பார்க்க ஆரம்பித்தாள் செல்வி.
(தொடரும்)
மீண்டும் மீண்டும் என்னை நன்றி தோழர்
ReplyDeleteதோழர்....!
Deleteதொடர் வாசிப்பில் தோழர்.
ReplyDeleteகண்முன் நடப்பது போல் நடை,
தந்தையின் பரிதவிப்பு புரிந்து கொள்ள கூடியது.
நல்லது. உற்சாகமளிக்கிறது உங்கள் வார்த்தைகள். தொடர்வோம் எழுத்தையும், வாசிப்பையும். தங்கள் பேர் அறிந்து கொள்ளலாமா?
Deleteதோழர் ஒவ்வொரு முறையும் கூகுள் கணக்கைத்தான் தேர்வு சொய்கிறேன் ஆனால் anonymous ல் கருத்து பதிவாகிறது தோழர் .
Deleteஇரா.தமிழ்செல்வம், மதுரை.
அப்படியா. உங்கள் மொபைலில் எந்த browserஐ வைத்திருக்கிறீர்கள். குரோம் இருந்தால் அதனை open செய்யவும். வலப்பக்கம் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும். அதைத் தொட்டால் ஒரு லிஸ்ட் வரும். அதில் settingsஐ அழுத்தினால் அடுத்த லிஸ்ட் வரும். அதில் Privacy and security என்று இருக்கும். அதை தொட்டால் third party cookies இருக்கும். அதைத் தொட்டு, allow செய்ய வேண்டும். அவ்வளவுதான். இனி உங்களால் கமெண்ட் செய்ய முடியும்
Deleteமறக்கவியலா காட்சிகள் அனுபவங்கள் நிழலாடுகின்றன.
ReplyDeleteநிழலாடும் அனுபவங்களைச் சொல்லுங்கள். தங்கள் பேரை அறிந்து கொள்ளலாமா?
Deleteதந்தை and மகள் தவிப்பு கண் முன்னே தெரிகிறது 👏
ReplyDeleteநல்லது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தங்கள் பேரை அறிந்து கொள்ளலாமா?
Deleteமிக அருமையான தொடக்கம்,தோழர். மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள், தோழர்.
ReplyDeleteஆஹா, மகிழ்ச்சி தோழர். தொடர்ந்து எழுதுவேன். தாங்களும் வாருங்கள்.
Deleteதோழர் சில நேரங்களில் சில எழுத்துக்கள் நம்மை மறந்து கதாபாத்திர உலகத்துக்குள் கூட்டிசெல்லும். நான் முதல் வரியை படித்தவுடனே முத்தையா அவர்களின் உலகத்துக்குள் சென்றுவிட்டேன். ஆன்லைனில் நான் படிக்கும் முதல் கதை இது சரி ஆரம்பித்தவுடனே சோர்வாகிடுவோம்ம்னு நினைத்தேன். ஆனால் கடைசி வரை படித்துவிட்டு அடுத்து எங்கன்னு தேட ஆரம்பித்துவிட்டேன். அத்தியாயம் இரண்டு ஏதாவது இருக்கானு. மிக அருமையான எழுத்து நடை தோழர். இதை எங்களுக்கு அளித்ததற்கு நன்றி தோழர்.
ReplyDeleteமகிழ்ச்சி தோழர் விஜயபாரதி. உங்கள் வார்த்தைகள் உற்சாகம் தருவதோடு, பொறுப்பையும் உணர்த்துகிறது. தங்களை சோர்வடையச் செய்து விடக் கூடாது என்றும் முனைப்பாக இருக்கிறது. தொடர்ந்து வாசித்து சொல்லுங்கள் தோழர். நல்லது.
Deleteஒவ்வொரு நடுத்தரக் குடும்பமும் சந்திக்கும் வாழ்க்கை சிக்கல்களை தங்கள் நடையில் அருமையாய்..............
ReplyDelete