வாகனங்கள் அங்குமிங்குமாய் முக்கிய சாலையில் சீறிக்கொண்டிருந்தன.
பைக் ஒன்றின் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தையின் கையிலிருந்த பலூன் பறந்தது. வாகனத்தை ஓட்டிய தந்தையால் அதைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த தாயும் அதைப் பார்ப்பதற்குள் எங்கோ சென்று விட்டிருந்தார்கள் மூவரும்.
பலூன் தனியாக சாலையில் மிதந்து மிதந்து அலைந்து கொண்டிருந்தது. காரோ, பைக்கோ எதுவும் எந்த நேரத்திலும் மோதி வெடித்துவிடக் கூடும். பார்ப்பதற்கு ஒரு பதற்றம் தந்தது.
சாலையோரம் நின்றிருந்த வேட்டி கட்டிய மனிதர் ஒருவர் பலூனை நோக்கி போக ஆரம்பித்தார். வாகனங்கள் எதுவும் நிற்பதாயில்லை. சர்சர்ரென்று கடக்க, நிதானமாகவும், கவனமாகவும் பலூன் செல்லும் திசையில் நெருங்கிக் கொண்டிருந்தார்.
அவருக்கு ஏன் வேண்டாத வேலை என மனிதர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவருக்கு எதற்கு பலூன் எனவும் தோன்றியது.
வாகனங்கள் அற்ற ஒரு சிறு கணத்தில் ஓடிச்சென்று பலூனை எடுத்து கைக்குழந்தையைப் போல பதமாய் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சாலையைக் கடந்தார்.
சாலையோரம் இன்னொரு தாய் தந்தையோடு ஒரு குழந்தை அவரை பார்த்துக் கொண்டு இருந்தது. பலூனை அந்தக் குழந்தையிடம் கொடுத்தார்.
அப்படியொரு சிரிப்போடு கைகளை விரித்து பலூனை வாங்கி, அதைத் தடவி சிரித்தது குழந்தை.
அந்த மனிதர் கூட்டத்திற்குள் நுழைந்து கரைந்து போனார்.
(Facebookல் 3.3.2022ல் எழுதியது. தீராத பக்கங்களில் சேமித்துக் கொள்கிறேன்.)
தீராத பக்கங்களை பின் தொடர்வதும், வாசிப்பதும் இதமான அனுபவங்களாக இருக்கிறது.
ReplyDeleteநீங்கள் பின் தொடர்வதும், வாசிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது பரிதி தோழர்.
Deleteபலூன் கை மாறியதால் சந்தோஷமும் மாறியது மற்ற
ReplyDeleteஒரு குழைந்தையிடம்..
கரையில் நின்ற எந்தக் குழந்தைக்கும் அந்த பலூன் கிடைத்திருக்கலாம். ஆனால் பலூனை கரை சேர்க்க ஒரு குழந்தை மனது வேண்டும்!
Deleteஅருமை தோழர் உங்கள் தீராத பக்கங்கள்
ReplyDeleteதங்களுக்கு என அன்பும், நன்றியும் தோழர்!
Deleteதீராத பக்கங்கள் வசீகரிக்கிறது.
ReplyDeleteஅன்பும் மகிழ்ச்சியும். Google account மூலம் கமெண்ட் செய்ய முடியவில்லை என்றால், கமெண்ட்டின் கீழே தங்கள் பேரையும் சேர்த்தே கமெண்ட்டில் குறிப்பிட்டிருக்கலாம் தோழர். தொடர்ந்து ’தீராத பக்கங்கள்’ பக்கம் வாருங்கள்.
Delete