”அண்ணி, அண்ணன் குறித்த உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர வேண்டும்” என்று அன்பு கட்டளையிட்டான் அண்டோ. எப்போதும் என்னை எழுத வேண்டும் என்று கேட்ட ஊக்கத்தில் என் எண்ணத் துளிகளை வெளிப்படுத்தி உள்ளேன்.
“அம்மா, இவர் வங்கியில் பணியாற்றுகிறவர். காலை 10 மணிக்கு போனால் 6 மணிக்கு வந்து விடுவார்” என்று இவருக்குள் ஒரு ‘அந்நியன்’ இருப்பது தெரியாமல் திருமணத்திற்கு முன்பு திமிராகப் பேசியவள் நான். அந்தப் பேதமையை நினைத்தால் இன்றும் வெட்கமாக இருக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா, இது என் வாழ்க்கை, எல்லாமே என் தேர்வு என்று நான் எண்ணினேன்.
சென்னையில் எங்கள் வீட்டு அருகாமையில் வேலை தேடும் 21 வயது இளைஞனாக இருந்த போது என் தம்பி அப்பு இவரைப் பற்றி பல தகவல்களை அவ்வப்போது வந்து ஆசையுடன் சொல்வான். இவர் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்த சிறிது நாளில் மேலதிகாரியை அடித்தோ, சண்டையிட்டோ கம்பெனியிலிருந்து வெளியேறினார் என்று அப்பு சொன்னான். பிறகு அசிஸ்டெண்ட் ஜெயிலர் வேலை இண்டர்வியூ மட்டும் அட்டெண்ட் செய்துவிட்டு வேலையில் சேரவில்லை என்றும் இவர் இருந்த வீட்டு உரிமையாளர் குறைபட்டுக் கொண்டார். அதைப் பற்றி பின்னால் விசாரிக்கும்போது, “அதையெல்லாம் மனுஷன் பார்ப்பானா?” என்றார். எனக்குப் புரியவில்லை. ஒருவழியாக வங்கிப்பணியில் (பாண்டியன் கிராம வங்கி) சேர்ந்தாகி விட்டது. அதைப்பற்றி அச்சப்படவோ அல்லது வேறு மாதிரி சிந்திக்கவோ எனக்குத்தான் அனுபவமோ அறிவோ இல்லை என்பேன்.
இவர் மாறுபாடான குணாதிசியங்களுடன்தான் எப்போதும் இருந்திருக்கிறார். என்னுடைய பார்வைதான் சிறிது சிறிதாக வளர்ந்து இந்த 32 ஆண்டுகள் கழித்து முழுமையாக மாறிய தொழிற்சங்கவாதியை தரிசித்தது என்பேன்.
1986ம் ஆண்டு நான் பி.ஏ கடைசி ஆண்டு படித்து முடிக்கும் சமயம் “அம்மு நீ ரஷ்யாவுக்கு சென்று படிக்கிறாயா?” என்று அப்பா கேட்டார். முடிவெடுக்கும் சூழலில் நான் இல்லை. மாதவராஜ் வீட்டில் திருமணப் பேச்சை தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் இவரிடம் அப்பா சொன்னதை தெரிவித்தேன். மிக நீண்ட கடிதம் பதிலாக வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. கவிதை நடையில் ரஷ்ய மண்ணின் சிறப்பினைச் சொல்லி, நீ ரஷ்யா சென்று படித்து வா, அந்த புண்ணிய பூமியை தரிசித்து வா என்று ஐந்தாறு வரி இடைவெளியில் திரும்பத் திரும்ப எழுதி இருந்தார். இந்த தருணத்தில் இந்த நிகழ்ச்சியை குறிப்பிடத் தோன்றக் காரணம் ஒருவரையொருவர் ஆட்கொள்ளாத சுதந்திரக் காதலாக எங்களின் அன்பு எப்போதும் இருக்கிறது.
1989ம் ஆண்டு திருமணம் முடிந்து செங்குழியில் (பூச்சிக்காடு கிளை, திருச்செந்தூர் அருகில் ஒரு குக்கிராமம்) குடியேறியாகிவிட்டது. அத்தை, மாமாவிற்கு இவரின் சங்க வேலைகள் மற்றும் நடவடிக்கைகள் சிறிதும் திருப்தியளிக்கவில்லை. எப்போதும் கவலையோடும், இவரின் வளர்ச்சி குறித்தும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். இவரை சங்கத்திலிருந்து விடுவிக்கும் முயற்சியிலேயே இருந்தனர். ஒருமுறை என்னிடம், “நீ எப்படியாவது அவனைத் திருத்தி அவனை வெளியேக் கொண்டு வா” என்றனர். எனக்கு அதெல்லாம் ஒன்றுமே புரியவில்லை என்றுதான் சொல்வேன்.
அப்போது சாத்தூரில் சங்க அலுவலகம் இருந்ததால், அடிக்கடி இரண்டு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் போய் தங்கி விடுவார். அந்தப் பிரிவுதான் எனக்கு கஷ்டமாக இருந்தது. அத்தையும் மாமாவும் இவரது பணிக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம் என்ற கவலையில் எனது தந்தையிடம் இதுகுறித்து பேசினர். அப்பா, “இதில் எல்லாம் நான் எப்படி தலையிடுவது. இது அவரின் லட்சியம், நோக்கம்” என்றார்.
என் அம்மாவிடம் நான் குறைபட்டுக் கொண்ட போது, ”அவர் ஒரு பணியில் ஈடுபட்டு இருக்கிறார், நீயும் உனக்கான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதானே” என்று புதுமைப்பெண்ணாய் சொன்னார்.
ஆக இது குறித்து கவலைப்பட்டு வாழ்க்கையை நாசம் செய்யக் கூடாது என உறுதியாக இருந்தேன். ஒரு வருடம் கழித்து சாத்தூரில் தனிக்குடித்தனம். இவரின் நண்பர்கள் எல்லோரும் அம்மு என்றும், தங்கச்சி என்றும் பாசமாக அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வருவார்கள். “ரொம்ப படுத்துறானா” என்பார்கள். அண்ணா, அத்தான், சம்பந்தி, தோழர் என்றெல்லாம் உறவு முறையில்தான் நண்பர்கள் கூட்டம் இருந்தது. இவரின் தீவீரமான சங்க வேலைகள் குறித்த புரிதல் எனக்கு இல்லை. நானும் சாத்தூரில் ஒரு தனியார் பணியில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
“என்னங்க நமக்கு மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் அரசு விடுமுறை வருகிறது. எதாவது பிளான் பண்ணலாமா?” என்றால், தொடர்ந்து ஆறு மாத அரசு விடுமுறைகள் அனைத்தும் சங்கக் கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். கேட்டால், லீவு நாட்களில்தான் எல்லோரும் வர முடியும் என்பார். அப்போதெல்லாம் இவருக்கு அரசுப் பேருந்தில்தான் தொடர் பயணம். ஊர் ஊராகச் சென்று விட்டு சிவந்த கண்களோடும், சீரியஸான முகத்தோடும், சீவப்படாத பரட்டைத் தலையோடும் ( முடி கொட்ட ஆரம்பித்த பிறகுதான் சீப்பெல்லாம் ) வீடு வந்து சேர்வார்.
மேஜை, நாற்காலி என எதையும் தேடாமல் தரையில் அமர்ந்து பல மணி நேரமானாலும் சர்க்குலர், சங்கக் கடிதங்கள் எழுதி அதை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்று விடுவார். குறிப்பாக சனிக்கிழமை முழுவதும் இந்த வேலைகள்தான் நடைபெறும்.
பிறகு 2000த்திற்கு பிறகு கணிணி வீட்டிற்கு வந்த பிறகு, வீட்டிலிருக்கும் நேரம் கூடுதலானது. என்ன, சாப்பிடாத தின் பண்டங்களும், ஆடை படிந்த காப்பி, டீ டம்ளர்களும் எப்போதும் இவரைச் சுற்றி இருக்கும் கொடுமையான காட்சிகள் வீட்டில் அரங்கேறியதுதான் நாங்கள் கண்ட பலன். எப்போது தூங்குவார், எப்போது எழுவார் என்று தெரியாமல் எதோ வேலை பார்த்துக்கொண்டே இருப்பார். எங்களுக்குள் எதாவது பிரச்சினை வரும்போது, ‘நான் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு எங்காவது போய் விடுகிறேன்” என்பார். நான். “தாராளாமாகப் போங்கள். வீட்டிற்கு வரும் நாளாவது எங்களுக்காகவே இருக்க வேண்டும்” என்பேன்.
பிறந்த நாட்கள், திருமண நாட்கள் எல்லாம் வரும். போகும். பாதி நாட்கள் இவருக்கு மறந்த நாட்கள்தான். ஆரம்ப காலங்களில் இதனை ஞாபகப்படுத்திக்கொண்டு இருந்தேன். பிறகு எனக்கும் சலிக்கத் தொடங்கியது. காரணம், எந்த உற்சாகமும் காட்ட மாட்டார். மேலும் அன்று இவர் ஊரில் இருக்கப் போவதும் இல்லை என்று தெரிய வரும். வீட்டில் இருந்தாலும் நினைவு வரப் போவதில்லை. நானும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்தேன். ஆனால் இருபத்து நான்கு மணி நேரத்தில் இவருக்கு நினைவுக்கு வந்து விடும். போன் தொடர்பு இல்லாத காலம் ஆதலால் ‘அம்மு’ என்று ஆரம்பித்து அழகு நடையில் கவிதைகள் தாங்கிய தாள்கள், நான் பள்ளியிலிருந்து வரும்போது என்னை வரவேற்கும். பிறகு இந்த ஆச்சரியமே எனக்கு சுவையாக மாறி விட்டது.
சங்கப் பணிகள் குறைந்த காலத்தில் புத்தகம் வெளியிடுவது, குறும்படம் எடுப்பது என எதையாவது இழுத்துப் போட்டுக்கொண்டு வேலை செய்து கொண்டே இருப்பார். ஒரு விஷயத்துக்கு மெனக்கெடுவது என்பது இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஜஸ்ட் லைக் தட் என்று எதையும் செய்ததாக சரித்திரம் இல்லை. ஒரு வேலையை நேர்த்தியாகவும், அர்ப்பணிப்புடனும் செய்வதை இவரிடமிருந்து இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
வீட்டிற்கு நண்பர்கள், உறவினர்கள் என வருகை புரியும் தருணங்கள் உண்மையிலேயே இனிமையான கணங்கள். நாங்கள் இருவரும் பல விஷயங்களை மனம் விட்டுப் பகிரும் நேரம் அதுவாகவே இருக்கும்.
பக்கத்து வீட்டில் இருந்து திரு.காமராஜ் அவர்கள் “பேரன்பு கொண்டவனே” என இவரை உரத்து அழைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். அண்ணி…., அம்மு அண்ணி….., அக்கா,,,,, அம்மு….. என்று அழைக்கும் அத்தனை இளம் தோழர்கள் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! சங்கத்தின் முக்கிய நிகழ்வுகளுக்கும் நான் குடும்ப விழாவைப் போன்று கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம், அத்தனை தோழர்களும் என் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடே.
விருதுநகர் சங்கக் கட்டிட விழாவுக்கு சென்று இருக்கிறேன். சேலத்து சங்கக் கட்டிடத்தை பெருமையாக காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் சாத்தூரில் இருந்த அந்த சிறிய அலுவலகத்தை நான் பார்த்ததில்லை என்பது இன்றளவும் குறையாக உள்ளது.
பல லட்சிய கனவுகளுடன் இந்த சங்கம் மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கையும் ஒரு சேர வளர்ந்தது. ஒவ்வொரு படி நிலையிலும் கோரிக்கைகள் வெற்றி பெறும் போது, எங்கள் குடும்பத்திலும் அந்த மகிழ்ச்சி வெளிப்படும்.
அரும்பாடு பட்டு வளர்த்தெடுத்த சங்கத்தை நம்பிக்கையும், நல்லெண்னமும் உடையவர்கள் கையில் ஒப்படைத்த திருப்தியுடன் பொறுப்பிலிருந்து விடை பெறுகிறார் என்பது எனக்கும் பெருமையே.
இவரது தாத்தா இவருக்கு இட்ட பெயர் ‘மேகநாத மெய்கண்ட மாதவராஜ்’ என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இந்த மலரில் அந்த பெயர் இடம் பெற வேண்டும் என நினைக்கிறேன். மேக நாதமாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்து மெய்தனைத் தேடும் திரு.மேகநாத மெய்கண்ட மாதவராஜ்க்கு நானும் செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த தருணத்தில்.
இதுவல்லவோ
ஆனந்தம்.
( 2021ல் எனது வங்கிப்பணி நிறைவையொட்டி வெளியிட்ட மலரில் என் இணையர் அம்மு என்னும் காதம்பரி எழுதிய பதிவு. பாவம் பிழைத்துப் போகிறான் என்று விட்டிருக்கிறாள் )
இரண்டு முறை படித்தேன்... ஒரு தியாகியின் அனுபவங்கள் போல் இருந்தது..
ReplyDeleteஅம்முவின் வாழ்க்கை தியாகியின் வாழ்க்கைதான் :-)
Deleteமிகவும் அருமை
ReplyDeleteதங்களுக்கு என் அன்பும், வணக்கமும் தோழர்.
Deleteஇந்த புத்தகத்தில் இரண்டு பக்கங்கள் காணவில்லை....
ReplyDelete( பிள்ளைகளை பற்றி )
குமார்
அவர்கள் எங்கள் இருவரோடும் இருக்கிறார்கள்!
Delete