அசாமில் நிகழும் கதை. பள்ளிக்குச் செல்லும் டீன் ஏஜ் பெண் கூக்கி. மழை மீது பிரியம் கொண்டவள். தனக்குப் பிடித்தவனிடம் பெறும் முதல் முத்தம் மழையில் நனைந்து கிடைக்க விரும்புகிறவள். பறவை போலிருக்கும் அவள் ஒரு இரவின் மழையில் சில வெறியர்களால் மிகக் கொடுமையாக கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகிறாள்.
போலீஸ், கோர்ட், நீதி, குற்றவாளிகளுக்கு தண்டனை எல்லாம் இந்தப் படத்திலும் வருகின்றன. ஆனால் அந்தக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுவாரசியம் கூட்டும் வழக்கமான சினிமா இல்லை.
குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து விட்டதும், ’கூக்கிக்கு ஜஸ்டிஸ் கிடைத்து விட்டது’ என்று செய்திகள் வாசிக்கப்படுகின்றன. ஊர் உலகம் எல்லாம் கொண்டாடுகிறது. கூக்கியோ சலனமில்லாமல் வெறித்து போய் இருக்கிறாள்.
’தனக்கு கிடைத்த ஜஸ்டிஸ்’ எத்தகையது என சமூகத்திடம் தெரிவிக்க முன்வருகிறாள். வாழ்வெல்லாம் எத்தனை கொடிய தண்டனையை சுமந்து கொண்டிருக்கிறேன் என பேச ஆரம்பிக்கிறாள்.
நம்பிக்கைகள், கனவுகள், ரசனைகள் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அந்த சின்னப் பெண்ணின் ஒவ்வொரு சொல்லும் நம்மை உலுக்கி விடுகின்றன. இனி மழை பெய்யும்போதெல்லாம் நான் என்னாவேன் என அவள் உடைந்து போகும் போது நம் மனசாட்சி கதறி அழுகிறது. பெண் உடல் குறித்து இந்த அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள், கற்பிதங்கள் மீது பெரும் கோபம் கொள்ள வைக்கிறது. கூக்கி என்னவாகி இருக்கிறாள் என்பதை மொத்த சமூகமும் அதிர்ந்து போகும்படி உணர்த்தியிருக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் உடலை ஆண்கள் சிதைப்பதும், அந்த ஆண்களுக்கு தண்டனை கிடைப்பதும் ஊருக்கும் உலகத்துக்கும் செய்தி மட்டுமே. அதைத் தாண்டி சமூகத்தின் சிந்தனைகள் பெரும்பாலும் செல்வதில்லை. கூக்கி அதைக் கொஞ்சம் உடைத்திருக்கிறாள்.
அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteஆஹா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சி நண்பரே!
Delete