அன்பெனும் பெருநதி

அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன் விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும் தோழமையும் கடந்த 40 ஆண்டுகளாக அன்றுபோல் இன்றும் புத்துணர்ச்சியுடன் தொடர்கிறது.  

பாரதி கிருஷ்ணகுமார் என்கிற மாமனிதரின் அறிமுகத்துடன் தொடங்கிய நட்பு அது. சாத்தூரில் ஏ.வி. உயர்நிலைப்பள்ளி செல்லும் வழியில் ஒரு மாடியில் பாண்டியன் கிராமவங்கி ஊழியர் சங்க அலுவலகம் இயங்கியது. அந்த மாடியில்தான் மாதுவுடனான முதல் சந்திப்பு. அவர்கள் நடத்திய இதழில் வந்த கவிதைகள் பற்றிய கலந்துரையாடலுடன் நகர்ந்த அந்த இரவு, யார் யாரெல்லாம் அப்போது உடன் இருந்தார்கள் என்பது இப்போது புகைமூட்டம் போலத்தான் நினைவில் நிற்கிறது. மறதி நோயின் நுழைவாசலில் நிற்கும் இந்த வயது அந்த இரவுக்குள் முட்டி முட்டித் திரும்புகிறது. 

மாது முன்னின்று நடத்திய கலை இரவில் நாங்கள் கோவில்பட்டியிலிருந்து வந்து நாடகம் போட்டோம். தரையில் அமர்ந்து கைதட்டி ரசித்த அன்றைய மாதுப்பையனின் உற்சாகம் மனதில் அப்படியே பதிவாகியிருக்கிறது.  

அப்புறம் அவர் ‘மண்குடம்’ மாதவராஜ் என்று அறியப்படலானார். மண்குடம் என்கிற அவரது சிறுகதை செம்மலரில் வெளிவந்து அவருக்கு ஒரு அடையாளத்தைத் தந்தது. வேறு எதனாலும் அடையாளப்படாமல் தான் எழுதிய படைப்பு ஒன்றால் அறியப்படுவது ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் பெரிய கௌரவமல்லவா? எம் முன்னோடி ஜெயகாந்தன் மகளைக் காதலித்து இவர் மணம் செய்துகொண்ட காதையெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. தனுஷ்கோடி ராமசாமி அவர்களோடு நெருங்கிப்பழக ஆரம்பித்தபோதுதான் அதெல்லாம் அறிந்துகொண்டேன்.  

கோவில்பட்டியிலிருந்து நெல்லை மாவட்டம் பத்தமடைக்கு நான் குடிபோன பிறகு சந்திப்புகள் குறைந்தது. இலக்கியக்கூட்டங்கள், மாநாடுகளின் இரவு அரட்டைக் கச்சேரிகளில் சேர்ந்திருப்போம். எப்போதுமே மாநாடுகளில் பகல் பொழுதுகளின் முறைசார் அரங்குகளிலும் பார்க்க இரவுகளில் நடக்கும் முறைசாராக் கூட்டங்களில்தான் உயிர்த்துடிப்பு அதிகம் இருக்கும். மண்டபங்களில் சுற்றிலும் குறட்டைகள் சிதறிக்கிடக்க நடுவில் வட்டமாக உட்காரும் அந்த மாபெரும் சபைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட சக பயணிகளாக நானும் மாதுவும் இன்னும் பலரும் இருந்தோம். அங்கே உருவாகும் இலக்கிய நெருக்கத்துக்கு ஈடாக வேறொன்றையும் சொல்லிவிட முடியாது.அந்த நெருக்கம் எனக்கும் மாதுவுக்கும் இடையில் இன்றளவும் இருந்துகொண்டுள்ளது.  

அந்த அரட்டை அரங்குகளிலிருந்து கிளை பிரிந்து ’குடிவழி’ச் சென்ற சிலபல இனக்குழுக்களோடு பின்னர் தொடர்பே அற்றுப்போனது.பகலில் அவர்களைச் சந்திப்பதோடு சரி. இரவானால் அவ்வினக்குழுவினர் நம்மிடமிருந்து ‘எஸ்கேப்’ ஆகிவிடுவார்கள். நான் தனித்தலையும் காலமும் வந்து சேர்ந்தது. 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (அப்போது தமுஎச) கலை இலக்கியப்பணிகளில் மாது இரண்டறக் கலந்து நின்றார். விருதுநகர் மாவட்டத்தின் செயலாளராகவும் தலைவராகவும் மாநிலக்குழு உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் ’இருட்டிலிருந்து..’ நூலைப்போல ஒரு நூலாக எழுதும் அளவுக்கு விரிந்தது.  

என்னுடைய கதைகளுக்கான இரண்டே விமர்சன அரங்குகள் மாது பொறுப்பிலிருந்தபோது விருதுநகரிலும் சாத்தூரிலும் நடந்ததுதான். விருதுநகர் கூட்டம் என்னுடைய வெயிலோடுபோய் நூலுக்காக மட்டும் நடந்தது. அன்றுதான் இன்று ஆலமரமாக விரிந்து நிற்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை சிறு பையனாக என் கதைகள் குறித்துக் கட்டுரை வாசிக்கும் பையனாக முதன் முதலாகச் சந்தித்தது. சாத்தூர் கூட்டம் என்னுடைய கதைகள் எல்லாவற்றையும் பற்றியதாக அமைந்தது.மிக நுட்பமான பார்வையுடன் மாது பேசிய நினைவு இருக்கிறது. மற்றதெல்லாம் மறந்து போனது.  

எழுத்தாளர்கள் பேனாவிலிருந்து ‘மௌஸ்’க்கு மாறிக்கொண்டிருந்த காலம் அது. அதில் எங்கள் எல்லோருக்கும் முன்னோடியாக மாது இருந்தார். நான் அப்போது பத்தமடையில் வாழ்ந்து கொண்டிருந்தேன். கம்ப்யூட்டர் வாங்கிக்கொண்டு மாதுவைத்தான் அழைத்தேன். சாத்தூரிலிருந்து பஸ் ஏறிப் பத்தமடை வந்து ஒருநாள் தங்கி இருந்து எனக்குக் கணிணியைப் பயன்படுத்தவும், தமிழ் எழுத்துருவில் எப்படி டைப் செய்வது என்பதையும் கற்றுக்கொடுத்தார். குருதட்சிணையாக அவ்வப்போது பில்டர் காப்பியை மட்டும் வழங்கித் தப்புவோம்.  

கணிணிப்பயிற்சிக்கெனவே அவ்வப்போது பத்தமடை வருவார். இன்று நான் சில ஆயிரம் பக்கங்கள் புத்தகமாக எழுதியிருப்பதற்கு மாதுவின் பயிற்சிதான் அடித்தளம். என் பேனாவைப் பிடுங்கித் தூர எறிந்த கை மாதுவின் கை. கடந்த கால் நூற்றாண்டாக கணிணியில் மட்டுமே எழுதிக் (டைப்பிக்)கொண்டிருக்கிறேன். கையெழுத்துப் போட மட்டுமே பேனா. கணிணியால் அவர் வருகையும் எங்கள் சந்திப்பும் மீண்டும் துளிர்த்தது.  

நன்றி மாது.  

குடும்பத்துடன் பத்தமடைக்கு வருவேன் என்று வாக்களித்தார். அவரும் பொதுச்செயலாளர் ஆனார். நானும் தமு எகசவில் பொதுச்செயலாளர் ஆனேன். குடும்பத்துடன் பத்தமடை வர அவருக்கு வாய்க்கவில்லை. அலைந்து திரியும் காலத்தில் பொது வாழ்வே முக்கியமாகும்போது தனிப்பட்ட வாக்குறுதிகள் வாடி உலர்ந்து உதிர்ந்துதான் போகின்றன. நான் பத்தமடை வீட்டையும் விற்றுவிட்டு அவருக்குப் பக்கமாக சிவகாசிக்கே வந்துவிட்டேன். இப்போதும் அவரால் இருமுறை மட்டுமே எங்கள் வீட்டுக்கு வர முடிந்தது - பாப்பாவின் திருமணத்தை முன்னிட்டு.  இனி வரலாமே மாது?  

குயில் தோப்பில் மாது வீட்டில் உட்கார்ந்து நாங்கள் போட்ட திட்டங்கள் அநேகம்- அடுத்தாத்துக் காமராஜும் சேர்ந்துதான். இந்திய விடுதலையின் ஐம்பதாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி ஒரு புத்தகம் கொண்டுவரும் திட்டமும் அதில் ஒன்று.மாது வீட்டில் கருக்கொண்டு தோழர் ஆதி கடை வாசலில் அது வளர்ச்சி கண்டு கோவில்பட்டியில் மாரீஸ் ஸ்டுடியோவில் (அது அன்றைக்கு எங்களுக்கெல்லாம் ஒரு குருகுலம் போல சந்திப்பு முனையமாக இயங்கியது) உருப்பெற்ற நூல் அது. மாரீஸ் ஸ்டூடியோவில் ஓரிரவு முழுக்க இந்திய சுதந்திரத்தின் கதையை நான் சொல்லச் சொல்ல மாது குறிப்புகள் தயாரித்தார்.அந்த நாட்களில் நான் சுதந்திரப்போராட்டக்கதையை பலநூறு கூட்டங்களில் கதாகாலட்சேபம் செய்துகொண்டிருந்தேன். ”வீர சுதந்திரம் வேண்டி ..” என்கிற அந்த நூலை பல்வேறு தரவுகளையும் சரிபார்த்து முழுக்க முழுக்க மாதுதான் எழுதினார்.ஆனால் புத்தகத்தில் நானும் அவரும் சேர்ந்து எழுதியதாகப் போட்டார். அதுதான் மாது. அந்நூல் இரண்டு மூன்று பதிப்புகள் கண்டது. நல்ல வரவேற்பைப்பெற்றது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, விக்கிரமாதித்தன், உதயசங்கர், காமராஜ், லட்சுமணபெருமாள்  என்று பலரும் அதில் பங்களிப்புச் செய்தனர். அவர்கள் எல்லோருடைய பெயர்களையும் நூலில் போட்டிருந்தோம்.  

அப்புறம் ஒருநாள் பத்தமடை வந்து எனக்கான வலைப்பூக்கணக்கையும் மாதுதான் தொடங்கி வைத்து எப்படிப் பதிவேற்றம் செய்வதென்று வழிகாட்டினார். ’தமிழ்வீதி’ என்கிற வலைப்பக்கமாக அது சிலகாலம் தீவிரமாக இயங்கியது.”பாரதி பிடித்த தேர்வடம் நடு வீதி கிடக்கிறது “ என்கிற பரிணாமன் வரிபோல அப்பக்கம் இப்போது அந்தரத்தில் நின்று விட்டது. முகநூல் வந்து சோம்பேறி ஆக்கிவிட்டதே நம்மை. ஆனாலும் மாது தொடர்ந்து வலைப்பக்கத்தில் எழுதிஉக்கொண்டிருந்தார். அவரது ’தீராத பக்கங்’களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டுவந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார்.  

அவருடைய பதிவுகளில் முகநூல்தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு பதிவும் தெளிவான அரசியல் பார்வையுடன் கூர்மையாக இருக்கும்.எனக்கு வியப்பளிக்கும் செயல் இது. தமிழகத்தின் பல முக்கியமான அரசியல் தலைவர்களும் மாதுவின் கருத்துக்களை விடாமல் வாசிப்பதை நான் அறிவேன். நம்ம ஆளு என்பதற்காக அவர் யாரையும் விமர்சிக்காமல் (தேவையானபோது) விட்டதே இல்லை அந்த நேர்மை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.  

எங்கள் மகன் சித்தார்த் திருமண நிகழ்வு பற்றிய அவரது வலைப்பக்கப்பதிவுதான் ஒரு முழுமையான பதிவாக இருந்தது. அதை ஒட்டி வாதப்பிரதிவாதங்களெல்லாம் அவரது வலைப்பக்கத்தில் நடந்தது. அவற்றுக்கெல்லாம் பொறுமையாகப் பதில் சொன்னது இன்றும் நெகிழ்வுடன் என் மனதில் நிற்கின்றன.  

நாங்கள் காவல்கோட்டம்நாவல் தொடர்பாக மட்டுமே கருத்து ரீதியாக முரண்பட்டு நின்றிருக்கிறோம். மற்றபடி நானும் அவரும் அவரும் நானும் ஒன்றாகவே சிந்தித்தோம்.  

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் திருநெல்வேலிக்கு ஒரு மகளிர் மாநாட்டுக்கு அழைத்திருந்தார்.போனால் ஆச்சர்யம் காத்திருந்தது. இவ்வளவு இளம் தோழர்களை எப்படி அய்யா திரட்டினீர்கள்? ரொம்ப காலத்துக்குப் பிறகு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த நாள் அது. தொழிற்சங்க இயக்கத்தில் இளம் தோழர்களைப் பார்த்தே பலகாலம் ஆன வறட்சி மனதில் வெடித்துக்கிடந்தது. நீர் வார்த்த கிராமப்புற வங்கி ஊழியர் சங்கத்தை மறக்கவே முடியாது. அதன் பிறகு தோழர்களுக்கு வகுப்பு எடுக்க என்று மாது எப்போது அழைத்தாலும் போய் வந்தேன். அவையெல்லாம் முக்கியமான நாட்கள்.  

மாது-காதம்பரி யின் மகள் ஜோத்ஸ்னா  திருமணத்தன்று அவர்களது குடும்பத்தில் 10க்கு மேற்பட்ட காதல் திருமணங்கள் என்று அறிய வியப்பும் மகிழ்சியும் கரை புரண்டது. மகளுக்கும் சாதி மறுப்புக் காதல் திருமணம்தான் செய்து வைத்தார்கள்.  

மாதுவின் வலைப்பக்கத்தின் வழியாகத்தான் செல்லக்குறும்புகளுடன் எங்களோடு நட்பாக இருக்கும் எங்கள் மகள் போன்ற தீபலட்சுமியும் அறிமுகம் ஆனார்.  

சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமையற்ற வாழ்வை மாதுவைப்போல நடத்த வேண்டும் என அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.  

ஒரு கார் வாங்கிக்கொடுத்தான் எங்கள் மகன் எங்களுக்கு. 15 ஆண்டுகளுக்கு முன்னால். ஆனால் இன்று வரை எனக்கு ஓட்டத்தெரியாது. பயம்தான். ஆனால் மாது சமீபத்தில் கார் வாங்கி சர் சர் என்று அவரே ஓட்டி வந்து பொறாமைத்தீ வளர்க்கிறார்.  

எப்போதும் இளைஞர்களோடு இருக்கும் இளம் மனம் அவருடையது. இளைஞர்களிடம் பொறுப்புக்களைப் பிரித்தளிக்கத் தயங்காத மனிதராக தோழராக அவர் எப்போது இருக்கிறார். இது தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கியம். உரிய நேரத்தில் இளஞர்களைப் பொறுப்புக்குக் கொண்டு வருவதும் உரிய நேரத்தில் மூத்த தோழர்கள் விடைபெறுவதும் மிகவும் அவசியம்.  

மாது விடைபெறுகிறார். விலகிச்செல்லவில்லை. விடைபெறுவதற்கான சரியான நேரத்தில் விடைபெறுகிறார். இனி அவர் வளர்த்த பிள்ளைகள் கொடியை உயர்த்திப் பிடித்து முன் செல்வார்கள்.  

வாங்க மாது, நாம் பேச வேண்டிய வேறு கதைகளை பேசலாம். அதற்கான நேரம் இது.

(   2021ல் எனது வங்கிப்பணி நிறைவையொட்டி வெளியிட்ட மலரில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய பதிவு. இத்தனைக்கும் நான் பொருத்தமானவனா என்று தெரியவில்லை. அன்பில் நனைய வைக்கிறது.)


Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அருமையான அனுபவங்கள்.. சிறப்பு!!!

    ReplyDelete
  2. பரவா ல்லியே.. சரியா எழுதி ருக்கனே

    ReplyDelete
    Replies
    1. தோழர்..... ! வாங்க. உங்கள் அன்பை ஏந்திக்கொண்டு இருக்கிறேன்.

      Delete

You can comment here