கட்டித்தங்கம் டீச்சர்!


முப்பது வருடங்களுக்குப் பிறகு அந்தப் பள்ளியின் பழைய மாணவர்கள் மீண்டும் ஒருநாள் சந்தித்துக் கொண்டார்கள்.  

முதலில் ஒருவருக்கொருவர் தங்கள் தோற்றங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு அவை குறித்து பேசினார்கள். பின்னர் தங்களைப் பற்றி, தங்கள் குடும்பம் பற்றி, தங்கள் வேலை மற்றும் வியாபாரம் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி யார் பேசினாலும் மற்றவர்களுக்கு அது ஒட்டாமல் வெறும் தகவல்களாகவேத் தெரிந்தன.  

அந்த பள்ளியைப் பற்றியும், அதன் ஆசிரியர்கள் பற்றியும் யார் பேசினாலும்  எல்லோரும் ஆர்வமாய் கேட்டார்கள்.  ஒவ்வொருவரிடமிருந்தும் கதைகள் கொட்டி வந்தன. எல்லோரிடமும் அவ்வளவு நினைவுகளும் அனுபவங்களும் நிறைந்து இருந்தன. பள்ளியும் ஆசிரியர்களும் அவர்களுக்கு பொதுவாய் இருந்தனர்.  

அப்படித்தான் கட்டித்தங்கம் டீச்சர் பற்றி அன்று பேச்சு வந்தது. எல்லோருக்குள்ளும் இன்னும் தேவதையாய் இருந்தார். அவரது நடை, உடை, பாவனை, பாடம் நடத்தும் முறை, தங்களிடம் காட்டிய பரிவு என நேரம் தெரியாமல் பேசி மகிழ்ந்தார்கள்.  கட்டித் தங்கம் டீச்சரை ஒருமுறை பார்த்து வர ஆசைப்பட்டார்கள். அதற்கென ஒருநாளைக் குறித்துக் கொண்டார்கள்.  

சில மாதங்கள் கழித்து நரைத்த முடியும், தளர்ந்த உடலும், கண்ணாடிக்குள் கண்களும் கொண்ட வயதானவராய் தங்கள் கட்டித்தங்கம் டீச்சரைப் பார்த்தார்கள். தாங்கள் எந்த வருடம் படித்தோம் என்று சொன்னார்கள். தங்கள் பேரைச் சொன்னார்கள். தாங்கள் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதைச் சொன்னார்கள். எந்த  வரிசையில் உட்கார்ந்திருந்தோம் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள். கட்டித்தங்கம் டீச்சரால் யாரையும் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.  

வகுப்பில் கட்டித்தங்கம் டீச்சர் எடுத்த பாடங்கள் குறித்துச் சொன்னார்கள். லேசாய் அவர் புன்னகைத்தார். வகுப்பில் கொஞ்சம் கூட உட்காராமல் பாடம் நடத்துவது, போர்டில் பெரிது பெரிதாய் எழுதிப் போடுவது என தங்களிடமிருந்த காட்சிகளை தீட்ட ஆரம்பித்தனர். நினைவுக்கு வருவதாய் அவரது முகம் மலர்ந்தது.  நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பேனா வாங்கிக் கொடுக்கும் அவரது வழக்கத்தை நினைவு படுத்தினார்கள். ஆச்சரியத்துடனும் அன்போடும் தன் முன்னாள் மாணவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.  

கட்டித்தங்கம் டீச்சரைப் பார்த்தது, பேசியது குறித்தெல்லாம் அவர்களுக்கு மகிழ்ச்சி இருந்தாலும், தங்கள் முகம் டீச்சருக்குத் தெரியவில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் கொண்டனர்.  

மரத்தின் கிளைகளும், இலைகளும், கனிகளும், மரத்தில் வந்து தங்கும் பறவைகளும் அதன் பாடல்களும் மண்ணிற்கு தெரிவதில்லை. அதற்குத் தெரிந்தது விதைகளும், வேர்களுமே.

Comments

6 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. இந்த பதிவும் ஒரு "கட்டி தங்கம்" தான்

    ReplyDelete
    Replies
    1. //இந்த பதிவும் ஒரு "கட்டி தங்கம்" தான் //. ஆஹா, நன்றி உங்கள் பாராட்டுக்கு. கூகுள் மூலம் கருத்து தெரிவித்தால் உங்களை நான் அறிந்து கொள்ள முடியும். அல்லது உங்கள் பெயரை சேர்த்தாவது கருத்து தெரிவிக்கலாமே நண்பரே!

      Delete
  2. அருமை

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி விஜய் ஆனந்த் குமார்! வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. கடந்த காலத்திற்கு பயணிப்பது சுகமானது தான்... அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் அற்புதமானவை...

    ReplyDelete
  4. அதிலும் நமது ஆசிரியர்கள் இருக்கிறார்களே.... நாம் வளர வளர அவர்களைப் பற்றிய சித்திரங்களும் வேறு வேறு வண்ணங்களில் தெரிய ஆரம்பிக்கின்றன.

    ReplyDelete

You can comment here