கடிதத்தில் காலம் கரை புரண்டு ஒடுகிறது!


வைப்பாற்றங்கரையோரத்திலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இது. வாசிக்கும்போது அந்த நாட்களெல்லாம் கரை புரண்டு ஓடுகின்றன.  கண்களும்தான்.  

எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘இராஜகுமாரன்’ பற்றி, அப்போது வைப்பாற்றங்கரையில், வெள்ளக்கரை ரோட்டில் குடியிருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் எழுதிய கடிதம். கதைகளைப் பற்றி மட்டுமா எழுதியிருக்கிறார்? யாரெல்லாம் அதில் வருகிறார்கள்? ஒரு கடிதம் என்பது எவ்வளவு மகத்துவமானது! காலத்தை அடைகாப்பது!  

அவரது உடல்நலம் குறித்து பகிர்ந்து கொள்கிறார். எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, லிங்கன், அ.முத்தானந்தம், பாமா, தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஷாஜஹான், காமராஜ், இரா.முருகன் கவிஞர் லஷ்மிகாந்தன், பிரியா கார்த்தி, வருகிறார்கள்.  

சாத்தூரில்தான் அவரும் இருந்தார். ஏற்கனவே அந்த தொகுப்பு பற்றி நேரிலும் பேசியிருந்தார். இருந்தாலும் ஏன் அந்தக் கடிதம் எழுதினார்?   

அவர் குறிப்பிட்டிருக்கும் காரணம் இன்றுதான், இப்படி நிறைவேறி இருக்கிறது. 

சாத்தூர்

20.5.95

 

அன்பிற்குரிய மாதவராஜ்! 

            வணக்கம். 

            இதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிற மாதிரி நெனவிருக்கு. அது அஞ்சாறு  வருஷங்களுக்கு முன்ன இருக்கலாம். 

            16.5.95 காலை 8.30 மணியளவில் உங்க ‘ராஜகுமாரன்’ தொகுப்ப படிக்க எடுத்தேன். பிற்பகல் 1.20 மணியளவில் எல்லாக் கதைகளையும் படிச்சு முடிச்சிருந்தேன். 

            கால்ல செய்துகிட்ட சின்ன ஆபரேஷன்ல படிக்கிறதே கதியாப் போச்சு. 13.5.95ல செய்தது. அன்னைக்கு விருந்தினர் வந்துட்டாங்க. 14.5.95ல பாமாவின் ‘கருக்கு’ படிச்சேன். 15.5.95ல கோணங்கி வந்து நாள் முழுக்க பேசிக்கிட்டிருந்தான். 

            16.5.95 இரவு 7 மணியளவுல உங்களுக்கு கடிதம் எழுதணும்னு உக்காந்தவுடனே… ‘தமிழ்ச்செல்வன் வந்திருக்கான்’னு மனைவி வந்து சொன்னாங்க. அப்புறம்…. நீங்க, காமராஜ், ஷாஜஹான், லட்சுமிகாந்தன், கார்த்திகேயன் இன்னுமொருவர்ன்னு வந்துட்டீங்க. 

            அன்னைக்கு கோணங்கிக்கு எம்மேல ரொம்ப கோவம் வந்திருச்சு. அதனால தான் அப்படிப்பட்ட உண்மை மயமான உரையாடல அவனோட வச்சுக்கிடறதில்ல. 

            அன்னைக்கு பத்து பேர் வந்து கண்ட மேனிக்கு பேசிக்கிட்டிருந்தது ரொம்ப நல்லாயிருந்துச்சு. எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. என் கண்மணிகள் போன்ற நீங்க, ஷாஜஹான்…. போன்றோரைப் பாக்க பாக்க சந்தோஷம். இப்போ நெனைக்கும் போது கூட அப்படித்தான் இருக்கு. 

            17,18,19 தேதிகள்ள கூட உங்களுக்கு ஒரு கடிதம் எழுத ஆசப்பட்டேன். ஆபரேஷனுக்காக சாப்பிட்டு மாத்திரைகள்ள வயிற்றுக் கோளாறு பலமா வந்திருச்சு. அத்தோடு வலது தோள் பட்டை, கழுத்தில கடுமையான வலி. 

            ’மாதவராஜ நேரில பாத்தப்போ…. தொகுப்ப முழுதும் பட்சிச்சிட்டேன்… கடிதம் எழுத நெனைச்சேன் வந்துட்டீங்கன்னு’ சொல்லியாச்சுல்ல இனி எதுக்கு கடிதம்…. மேக்கொண்டு கதைகளைப் பற்றிய விமர்சனத்தையும் சொல்லியாச்சுல’ன்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம் ஓடிச்சு.

            ஒரு தொகுப்ப பற்றி நம்ம கருத்த எழுதிக் குடுக்குறதுதான் ரொம்ப சரி… அத திரும்பத் திரும்ப படிச்சும் பாக்க முடியும்… மத்தவங்கக் கிட்ட காட்ட முடியும். எழுதிக் குடுக்கணும்னு தோணிச்சு. 

            ’தோழர்’ நாவலப் படிச்சுட்டு மாதவராஜ் எவ்வளவு நல்ல கடிதம் எழுதி கையில கொண்டு வந்து குடுத்தார்! ஏதோ  ஒரு சிறுகதைய…. என் கதையைத்தான்… அது ‘அன்புள்ள..’வாக இருக்கலாம். காமராஜ் படிச்சுட்டு எவ்வளவு அற்புதமான கடிதம் எழுதி எங்கிட்ட குடுத்தார். அந்தக் கடிதம் என் கதைய விட நல்லாயிருக்கிற மாதிரி இருந்துச்சு…. காமராஜுக்குள் உள்ள படைப்பாற்றலை அது காட்டியது. 

            சின்ன ஆபரேஷன் வலி…. சிறிதாகவுள்ள தோள் வலி இவற்றுக்கிடையே… ஒரு பொதுவான… அன்பான… அபிப்பிராய கடிதத்த எழுதுறேன். 

            ’ராஜகுமாரன்’ தொகுப்ப கையில எடுத்து  வாசிக்க தொடங்கியலேர்ந்து மேலும் மேலும் சந்தோஷமாயிருந்தது. எவ்வளவு நுட்பமா யாருக்கோ நேர்ந்தத எல்லாம் எழுதியிருக்காரேன்னு ஆச்சரியமாயிருந்தது. சமூகத்தில பொருளாதார மிகுதியால (முதன்மையால ) அழிஞ்சு போயிருக்கிற மனுஷத்தனம்…. சமூக வாழ்க்கை நெருக்கடி களுக்கிடையே  தவித்து துளிர் விட்டிருக்கிற வாழ்க்கை நேசம்… இவற்றை ரொம்ப ஆச்சரியப்படும்படி சிறுகதைகளாக ஆக்கியிருக்கீங்க. 

            இந்தக் கதைகள் எல்லாவற்றையுமே ஏற்கனவே படிச்சிருக்கேன். ரெண்டு மூனு கதைகளத் தவிர மற்ற கதைகள எழுதுறதுக்கு முன்னாடி ஏங்கிட்ட சொல்லியிருக்கீங்க. அப்படியிருந்தும் திரும்ப வாசிக்க ஆனந்தமா யிருக்கு. அதுக்குப் பேருதான் கவித்துவம். இதில் பல கதைகள் அற்புதமான கவிதைகள்தான். 

            இந்தக் கதைகளில் எதப் படிச்சிட்டும் யாருடைய மனசிலும் கெட்ட நெனப்பு, பயம், வக்கிரம் பிற தீமைகள் ஏற்பட்டிராது. 

            எனக்கு கு.அழகிரிசாமி கதைகள் ரொம்ப பிடிக்கும். என் கால எழுத்தாளர்களில் ‘லிங்கன்’, ‘அ.முத்தானந்தம்’ கதைகள் பிடிக்கும்.  வருகிற  தலைமுறையில் ஷாஜஹான், இரா.முருகன் கதைகள் ரொம்ப பிடிக்குது. உங்க கதைகளும் ரொம்ப பிடிக்கு. 

            இதிலுள்ள பதினோரு கதைகளும் நல்ல கதைகள். ‘இயேசுவானவன்’, ’இன்னும் கிளிகள்’ இந்த ரெண்டைத் தவிர மற்ற ஒன்பது கதைகள் ரொம்ப நல்ல கதைகள். 

            ’வேகாத வெயில்’ கதையெல்லாம் ரொம்ப அற்புதமான கதை.  பேச்சிகளுக்கு உள்ள பாடுகளும் துன்பங்களுந்தா எவ்வளவு? அங்கே போனா சோறு காச்சிப் போடாத அம்மாவ குடிகார அப்பன் தெருவுல போட்டு அடிச்சுக்கிட்டுருக்கான்…. 

            ’சாணி மெழுகிய களிமண் தரையில் கிடந்த வேர்க்கடலைத் தோல்கள் புழுக்கள் மாதிரி நெளிந்தன…..’ ‘அவளை உரசிப்போன கிடாவிடமிருந்து அசிங்கமான நாற்றம் வந்தது…’ போன்ற இயல்பான விவரணை மூலமா மிக நுட்பமான மன உணர்வுகளைக் காட்டியிருக்கீங்க. 

            ராஜகுமாரன் கதையின் இறுதிப் பகுதியை படிக்கும் போது பெரிதும் விம்மி அழுதுட்டேன். மீண்டும் அந்தக் கதையப் படிச்சேன். ‘தியாகு கொஞ்சம் உள்ள வாப்பா”ன்னு கூப்பிட்டு அம்மா ருபா கொடுக்கும்போது மீண்டும் தாயமையைத் தழுவி அழுகிறேன். 

            ’சுடலை குடிபோதையில் அவர்கள் யாருக்கும் அடங்காமல் நின்ற நிலையை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க ஆசையாய் இருந்தது. எதிரே ஓடி வந்த ரெண்டாவது மகனை வாரியெடுத்து “எம்புள்ளா” என்று உச்சி முகர்ந்து கொடுத்தாள்’னு ஒரு தலித் பெண்ணைக் காட்டியிருக்கீங்க. அந்த என் மகளை உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிடுகிறேன். உங்கள் நெஞ்சிற்கும் விரல்களுக்கும் என் முத்தங்கள்.

 

தனுஷ்கோடி ராமசாமி.

 

 

Comments

17 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. ஆம். காலப்பெடடகம் தான் இக்கடிதம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர் தமிழ்ச்செல்வன்! வாழ்வெல்லாம் கூட வருகிற அற்புதமான மனிதர்.

      Delete
  2. இப்படியான கடிதங்கள் நம் வாழ்வின் அர்த்தத்தை முழுமையாக்குகிறது தோழர் 💐

    ReplyDelete
    Replies
    1. //இப்படியான கடிதங்கள் நம் வாழ்வின் அர்த்தத்தை முழுமையாக்குகிறது தோழர் 💐// உண்மை. கடிதத்தை படித்து முடித்த போது உணர்ந்தேன்.

      சரி. உங்கள் பெயரைத் தெரிவிக்கலாமே. உங்களுக்கு கூகிள் அக்கவுண்ட் இருந்தால் அதன் மூலம் கருத்திட்டால், உங்கள் பெயரும் ஆட்டோமெட்டிக்காக தெரியும்.

      Delete
  3. காலத்துளிகளின் தெறிப்பு 💐

    ReplyDelete
    Replies
    1. //காலத்துளிகளின் தெறிப்பு 💐// மகிழ்ச்சி நண்பரே!

      சரி. உங்கள் பெயரைத் தெரிவிக்கலாமே. உங்களுக்கு கூகிள் அக்கவுண்ட் இருந்தால் அதன் மூலம் கருத்திட்டால், உங்கள் பெயரும் ஆட்டோமெட்டிக்காக தெரியும்.

      Delete
  4. மகேந்திரன் PGB

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தோழர் மகேந்திரன். உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. வருகைக்கு மிக்க நன்றி.

      உங்களுக்கு கூகிள் அக்கவுண்ட் இருந்தால் அதன் மூலம் கருத்திட்டால், உங்கள் பெயரும் ஆட்டோமெட்டிக்காக தெரியும்.

      Delete
  5. Replies
    1. //Arumai Tholar// மகிழ்ச்சி தோழர்.

      தாங்கள் யார் என தெரிவிக்கலாமே. அல்லது உங்களுக்கு கூகிள் அக்கவுண்ட் இருந்தால் அதன் மூலம் கருத்திட்டால், உங்கள் பெயரும் ஆட்டோமெட்டிக்காக தெரியும்.

      Delete
  6. அற்புதம்
    உள்ளார்ந்த கடிதம்
    காதல் மணக்கும் ஈர வாசனை சொல் ஒவ்வொன்றிலும்...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர் எஸ்.வி.வி. இத்தனை காலம் கழித்துப் படிக்கும்போதும், அவ்வளவு உயிர்ப்போடு இருந்தது. எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் ஆன்மாவை தரிசிக்க முடிந்தது. உண்மைகளும், உணர்வுகளும் நிரம்பிய எழுத்துக்கள் காலம் தாண்டி நிற்கும் என்பதற்கு இந்தக் கடிதமே சாட்சியாய் இன்று..

      Delete
  7. கடிதமும், நினைவுகளும் அருமை

    ReplyDelete
    Replies
    1. //கடிதமும், நினைவுகளும் அருமை// வருகைக்கும் கருத்துக்கும் என் அன்பும், நன்றியும். தாங்கள் யார் என தெரிவிக்கலாமே. அல்லது உங்களுக்கு கூகிள் அக்கவுண்ட் இருந்தால் அதன் மூலம் கருத்திட்டால், உங்கள் பெயரும் ஆட்டோமெட்டிக்காக தெரியும்.

      Delete
  8. இரா.சிந்தன்January 16, 2025 at 11:14 PM

    தனிப்பட்ட இருவருக்கான உரையாடல் போல் இல்லை. காலத்தை பெயர்த்து எடுத்து வந்தது போல எல்லோருக்கும் சுவைக்கிறது. மகிழ்ச்சி தோழர்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, வாங்க தோழர் சிந்தன். எப்படியிருக்கீங்க. //தனிப்பட்ட இருவருக்கான உரையாடல் போல் இல்லை. காலத்தை பெயர்த்து எடுத்து வந்தது போல எல்லோருக்கும் சுவைக்கிறது. //. ஆமாம் தோழர் காலத்தை பெயர்த்து எடுத்து வந்து தந்திருக்கிறது ஒரு கடிதம்.

      Delete
  9. இந்த பதிவுக்கு எழுத்தாளர் ஷாஜஹான் ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்தை இங்கு பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்
    -------------------

    எழுத்தாளர் ஷாஜஹான் : அருமையான நினைவு பகிர்தல்... தனுஷ்கோடி தோழரை இன்னும் சரியாக புரிந்து கொண்டிருக்கலாம் என்று என்னளவில் ஒரு குறையுண்டு...

    ReplyDelete

You can comment here