ஆனாலும் விடுதலை-2 முக்கியமான சினிமா!


திரைக்கு வரும் ஒரு சினிமா இந்த சமூகத்தில் என்ன தாக்கங்களை, விளைவுகளை ஏற்படுத்தும் என கவனிப்பதும், கவலைப்படுவதும் அல்லது உற்சாகம் கொள்வதுமே இப்போதெல்லாம் முக்கியமானதாய்ப் படுகிறது.

விடுதலை-2 படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்பு ‘தினரத்ரங்கள்’ என்னும் மலையாளப் படத்தை நினைவுபடுத்திக் கொள்ளத் தோன்றுகிறது. 40 வருடங்களுக்கு முன் 1983ல் வந்த படம். மம்முட்டி, சுமலதா நடித்திருந்தார்கள். ஜோஷி இயக்கியிருந்தார்.

ஒரு பண்ணையாரை அவரது குடும்பத்தினர் கண்ணெதிரே தீவைத்து கொளுத்திக் கொன்று விடுவார் மம்முட்டி. செங்கொடி ( அரிவாள் சுத்தியல் சின்னத்தோடு காட்டப்படும் ) இயக்கத்தைச் சேர்ந்த அவரைத் தேடி சுட்டுப் பிடிப்பார்கள் போலீஸார். கொல்லப்பட்ட பண்ணையாரின் மகளான சுமலதாவே மம்முட்டிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய டாக்டராய் இருப்பார். கோபத்திலும், வெறுப்பிலும் அவர் மறுப்பார். ‘இப்போது அவர் உனக்கு நோயாளி’ மட்டும்தான் என உயரதிகாரிகள் போதித்து, ஆபரேஷன் செய்ய வைப்பார்கள். குணமடைந்த பிறகு மம்முட்டியை விசாரணை செய்து அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்பது அரசு மற்றும் அதிகாரி வர்க்கத்தின் நோக்கமாய் இருக்கும். ஆஸ்பத்திரிக்கு வெளியே திரண்டிருக்கும் மக்கள், மம்முட்டியைக் காண வரும் அவரது தாய் மற்றும் உறவினர்கள், ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்ஸ் ஆகியோர் மூலம் சுமலதாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் மம்முட்டியைப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். உண்மைகள் தெரிய வரும். கூலி விவசாயிகளுக்கு தனது தந்தை இழைத்த கொடுமைகள் எல்லாம் அவருக்கு அநியாயமாகத் தோன்றும்.  மம்முட்டி அதைப் பற்றியெல்லாம் எங்கும் பேசியிருக்க மாட்டார். உடல்நலம் பெற்றதும் எங்காவது தப்பிச் சென்று விடட்டும் என மம்முட்டியைக் காப்பாற்ற முயற்சிப்பார் சுமலதா. இதுதான் படம்.

சபையர் தியேட்டரில் ’நைட் ஷோ’ பார்த்துவிட்டு நானும் பாரதி கிருஷ்ணகுமாரும் மவுண்ட் ரோட்டில் எதுவும் பேசத் தோன்றாமல் பித்து பிடித்த மாதிரி நடந்து கொண்டிருந்தோம். தொண்டை அடைத்து கண்கள் பொங்கியபடி இருந்தன. காட்சிகளும், கதை சொன்ன விதமும் அதிலிருந்த தெளிவும் படத்தோடு அப்படியே நம்மை இணைத்துக் கொள்ள முடிந்தது. மொழி ஒரு தடையாய் இருக்கவே இல்லை. அந்த இளம் வயதில் இடதுசாரி இயக்கத்தின் மீது பிடிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்திய படம் அது.

இனி விடுதலை-2க்கு வருவோம்.

விடுதலை-2 படத்தை எனது மகனோடு பார்த்தேன். விடுதலை-1ஐயும் அவனோடுதான் பார்த்திருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன் ‘தினரத்ரங்கள்’ படம் பார்க்கும் போது நான் அவன் வயதுடையவனாய் இருந்தேன்.

விடுதலை-1ல் ’வாத்தியார்’ என்று அழைக்கப்பட்ட பெருமாள், விடுதலை-2 முழுக்க ‘தோழர்’ என அழைக்கப்படுகிறார். விடுதலை-1ல் போட்டோவில் கூட பிடிக்க முடியாதவராய் சொல்லப்படும் பெருமாள் விடுதலை-2ல் பிடிபட்டவராய் படம் முழுக்க வருகிறார்.

அறிந்து கொள்ள முடியாத வரைக்கும் புனைவாகவும் புதிராகவும், உயரத்திலும் இருப்பது, அறிந்து கொள்ளும்போது உண்மையாகி தரையிறங்கி நெருக்கம் கொண்டு இயல்பானதாகி விடும். பார்வையாளர்களுக்கு அது நடந்ததா இல்லையா என்பதில் விடுதலை-2 படத்தின்  அர்த்தம் இருக்கிறது.

உண்மையைத் திறந்து காட்டும்போது, அது ஏற்கனவே அறிந்த உண்மைகளோடு பொருந்திப் போக வேண்டும். அறியாத உண்மைகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கதையோடு தங்களை பார்வையாளர்கள் இணைத்துக் கொள்ள முடியும்.

படம் முடிந்த பிறகும் அறிந்தும் அறியாமலும் இருப்பதுதான் விடுதலை-2ன் பிரச்சினை எனத் தோன்றுகிறது. பிடிபட்ட பெருமாளின் கதையை யார் சொல்வது, எப்படிச் சொல்வது என்பதிலிருந்து அந்தப் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

இரவில் காட்டுக்குள் பெருமாளை சில போலீஸார் அழைத்துச் செல்வதாகவும் வழி தெரியாமல் திணறும் போலீஸாருக்கு பேச்சுத்துணையாய் பெருமாள் நடந்த கதையைச் சொல்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தன் கதையைத் தானேச் சொல்ல நேர்வது ஒரு அவலம்தான். அப்படிச் சொல்லப்படுவது உண்மையாவதில் சிக்கல் உண்டாகும். அதன்  மேல் பார்வையாளர்கள் நம்பிக்கை பிறக்காமல் தயக்கம் கொள்வார்கள்.

அடுத்தது, கதை சொல்லும் மொழி. வாத்தியார் பெருமாள் எப்படி தோழர் பெருமாள் ஆனார், தோழர் பெருமாள் எப்படி அழித்தொழிப்பு பெருமாளானார்,  அழித்தொழிப்பு பெருமாள் எப்படி மீண்டும் தோழர் பெருமாள் ஆகிறார் என்பதெல்லாம் ஒருவித நாடகத்தன்மையோடு இருக்கிறது. குறிப்பாக செங்கொடி இயக்கம் குறித்த சொல்லாடல்கள் மக்களின் பேச்சு மொழியில் இல்லை. பல காட்சிகளோடு ஒட்ட முடியவில்லை. இளையராஜாவின் இசைதான் பெரும்பாலான காட்சிகளில் அந்த இடைவெளியை குறைக்கிறது. குறைக்க முயற்சிக்கிறது.

அதிகார வர்க்கத்தின் மொழியும், அரச பயங்கரவாதத்தின் மொழியும் காட்சிகள் மூலம் எளிதாக கடத்தப்படுகின்றன. பார்வையாளர்கள் அதனோடு எளிதாக இணைத்துக்கொண்டு பார்க்க முடிகிறது.  மக்களின் எதிரிகள் வெல்லப்பட முடியாதவர்களாய் ஒரு சித்திரம் அரூபமாய் பார்வையாளர்களைக் கவ்வும் ஆபத்து அதில் இருக்கிறது.

தர்க்கங்களும்  பல இடங்களில் இடறுகின்றன. “நீங்கள் காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள். பிரேக் இல்லாமல் போகிறது. எதிரே ஐந்து பேர் வருகிறார்கள். அவர்களை இடித்து விடக் கூடாது என்று இடது பக்கம் திருப்புகிறீர்கள். அங்கும் ஒருவர் எதிரே இருக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?’ என்று போலீஸாரிடம் கேட்க ஆரம்பித்து ஒவ்வொன்றாக பேசி கடைசியில் ”ஒரு இடத்தில் இருந்து ஒருவனை வெளியேற்ற வேண்டுமென்றால் உங்கள் உத்தரவு முக்கியமானது இல்லை. வெளியேறுகிறவரின் சம்மதம் முக்கியம் ” என முடிக்கிறார். இப்படி சரியான செய்திகளும்  அங்கங்கு குழப்பமாகவேச் சொல்லப்படுகின்றன. பாலத்தில் குண்டு வைப்பது குறித்த பெருமாளின் விளக்கமெல்லாம் பெரும் அபத்தம்.

இவையெல்லாவற்றையும் தாண்டி விடுதலை-2 முக்கியமானப் படமாகவே இருக்கிறது.

படத்தில் வரும் பெருமாளை விடவும் சித்தாந்தத் தெளிவும், தீர்க்கமும், உறுதியும், போர்க்குணமும் நிறைந்த பல தோழர்களை அறிய முடிந்திருக்கிறது. செங்கொடி இயக்கத்தின் தியாக வரலாறு அத்தகையது. தூக்கு மேடையிலும் ‘கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க’ என ஆர்ப்பரித்த தோழர் பாலு, சின்னியம்பாளையம் தியாகிகள், ’காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில் தாரகை போன்று ஜொலித்து நின்ற’ மணவாளன், பாரியிலிருந்து எத்தனை எத்தனையோ தோழர்கள் நிறைந்த பெருங்கதை அது. அவர்களைப் பற்றிய சினிமாக்கள் வரவில்லை என்றாலும், அவர்களைப் போன்ற ஒருவரை சினிமாவில் காட்டி இருக்கிறார்கள் என்ற உத்வேகத்தை இந்த படம் தருகிறது.

ஈவிரக்கமற்ற அதிகார பீடங்களையும், அரச பயங்கரவாதத்தின் கற்பனைக்கும் எட்டாத குரூரத்தையும் நம் ரத்தம் துடிக்க உணர்த்துகிறது. ஏற்றத்தாழ்வுகளை, ஜாதீய அடக்குமுறையை பேசுகிறது.  வர்க்க அரசியலை முன்வைக்கிறது. மக்களைத் திரட்டி போராடுவதுதான் வழி என்று முடிகிறது.

போராடும் மக்களை பயங்கரவாதிகளாகவும் அரசின் ஏவலர்களான இராணுவ வீரர்களை புனிதர்களாகவும் உயர்த்திப் பிடிக்கும் அமரனும், ஜாதீயக் கட்டமைப்பை அழகான உறவுகளாகச் சித்தரிக்கும் ‘மெய்யழகனும்’, அறத்திலிருந்து வழுவி மனிதர்களை பலவீனர்களாக்கும் ‘லக்கி பாஸ்கரும்’ வந்து கொண்டிருக்கும் காலக் கட்டத்தில் விடுதலை-2 நிச்சயம் முக்கியமான படம்தான்.

நினைவை விட்டு அகலாத காட்சிகளையும், தருணங்களையும் அங்கங்கு கொண்டிருக்கிறது படம். இரவின் காட்டை அடர்த்தியாக்குகிறது  ஒளிப்பதிவு. விஜய் சேதுபதி சில இடங்களில் தடுமாறினாலும், பல இடங்களில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

இந்த படத்தின் உச்சம், துடிப்பு, ஆன்மா எல்லாம் இளையராஜாதான் என்று சொல்ல வேண்டும். அவரின்றி காட்சிகள் உயிர் பெற்றிருக்காது. அப்படியொரு அனுபவத்தை பெற முடியும். கண்ட மேனிக்கு இசைக்கருவிகளை முழக்கி இரைச்சலாக பிண்ணனி இசை என்று அலப்பறை செய்பவர்கள் கொஞ்சம் இளையராஜாவின் இசையைக் கவனிக்க வேண்டும்.

அவரது முந்தையப் படங்களில் இருந்த செய் நேர்த்தி இந்தப் படத்தில் இல்லை என்றாலும் வெற்றிமாறன் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

படம் முடிந்து வெளியே வந்த பிறகு மௌனம் அடர்ந்திருந்தது. “விஜய்சேதுபதியின் உடலை அந்த ஜீப்பில் போட்டிருக்கும் காட்சி தாங்க முடியலப்பா...” என்ற மகன் ”அந்த முகம் கஷ்டப்படுத்துது” என்று முனகினான்.

நான் அவனிடம், ”இந்தப் படத்தில் கே.கே தோழர்னு ஒருத்தர் வர்றார்ல… உண்மையிலேயே அப்படி ஒருத்தர் இருந்தார். அவர் பேர் சீனிவாசராவ். அவர்தான் அந்த விவசாயிகளிடம் உங்கள அடிச்சா நீங்களும் திருப்பி அடிங்கன்னார்” என்றேன்.

கண்கள் விரிய ‘அப்படியாப்பா” என்றான். அவனிடம் மேலும் பேச வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார் இயக்குனர் வெற்றி மாறன். இதுதான் இந்தப் படத்தின் மூலம் அவர் செய்திருப்பது. 

Comments

6 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. படம் பார்த்தால் தான் பல்வேறு விமர்சனங்களை புரிந்து கொள்ள முடியும்

    ReplyDelete
  2. ஆமாம், அவசியம் படம் பாருங்கள்.

    ReplyDelete
  3. சிறப்பான அறிமுகம் தோழர்.விடிந்ததும் படம் பார்த்து விடுகிறேன்.
    - இரா.தெ.முத்து

    ReplyDelete
    Replies
    1. நல்லது தோழர். அவசியம் பாருங்கள். பேசுவோம்.

      Delete
  4. செயலி அறிமுகம் என்பது அருமையான தொடக்கம் தோழர்... Installed.. Wil keep on reading❤

    ReplyDelete
  5. இப்போதான் விடுதலை 2 பார்த்தேன். செம்மலருக்கு எழுதணும்

    ReplyDelete

You can comment here