ரைன் நதியாக பெருக்கெடுக்கும் காதல்


முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ’ஆஸ்யா’ பரவசத்தோடு தவிப்பையும், இழப்பின் வலியையும் சேர்த்தே தந்திருந்தது. இப்போது கதையை படித்து முடித்தபோது அந்த வலி இல்லை. மாறாக சுகமாக இருந்தது. ஒரு புன்னகையையும் கூட தருவித்தது. இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை தந்திருக்கும் அனுபவங்களும், புரிதல்களும், வயதும் இந்த மாற்றங்களுக்கு காரணமாய் இருக்கலாம்.

இளம் வயதில் திரையில் பார்த்து பரவசமடைந்த காதலை அந்த சினிமாக்கள் பெரும்பாலும் இப்போது  திரும்பத்  தருவதில்லை. பல படங்கள் சிறுபிள்ளைத்தனமாகவும், அசட்டுத்தனமாகவும் கூட தோன்றியிருக்கின்றன. அச்சரியம் என்னவென்றால் ’ஆஸ்யா’வில் அந்த பரவசம்  குறையவே இல்லை. சொல்லப் போனால் அதிகரித்துதான் இருந்தது. இத்தனைக்கும் கதையின் போக்கு இப்படித்தான் என அறிந்ததுதான். ஆனாலும் காலத்தைக் கடந்த - அல்லது கடத்தும் - துர்கனேவின் எழுத்துக்கள் ‘ஆஸ்யா’வில் அந்த ரைன் நதியாக இன்னமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

தனக்கு துரோகம் செய்த பேரழகியான இளம் விதவையின் நினவுகளால்  குதூகலமான இளைஞன் என்.என் அலைக்கழிக்கப்பட்டுக் கிடந்த தருணம் அது. அப்படியொரு நாளில் ரைன் ஆற்றைக் கடந்து சென்று கலந்து கொண்ட, கொண்டாட்டம் மிக்க நிகழ்ச்சியில் காகினிடமும், அவனது தங்கை ஆஸ்யாவிடமும் அறிமுகம் ஆகிறான்.

பின்னர் ஒவ்வொரு முறையும் ரைன் ஆற்றை படகில் கடந்துதான் ஆஸ்யா தங்கியிருக்கும் இடத்திற்கு என்.என் செல்கிறான். நாமும்தான்.  அப்படியேக் கடந்துதான் ஒவ்வொருமுறையும் அங்கிருந்து தனது தங்குமிடத்திற்கு அவன் திரும்பவும் செய்கிறான். நாமும்தான். அவளைப் பற்றிய நினைவுகள் ரைன் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அவன் அதில் மிதக்கிறான்.

ஒருமுறை சந்தித்தது போல் ஆஸ்யா மறுமுறை அவனுக்குத் தோன்ற மாட்டேன்கிறாள். மகிழ்ச்சி, கொந்தளிப்பு, போலியான சிரிப்பு, வெறுமை, தனிமை, குதூகலம், அமைதி என மாறும் உணர்வுகளுக்குள் பிடிபடாத சித்திரமாக ஆஸ்யா அவனுக்கு போக்கு காட்டுகிறாள்.

அவனுடன் நட்புடன் பழகும் ஆஸ்யாவின் சகோதரன் காகின் ஓவியனாக விருப்பமுள்ளவன். காகின் வரையும் சித்திரங்கள் முழுமையாக இருக்கவில்லை.  ஆஸ்யா பற்றிய சித்திரத்தை கடந்த காலத்திருந்து எடுத்து வந்து என்.என்னுக்கு அவன்தான் காட்டுகிறான். அவமானமும், துயரமும் நிறைந்த அவளது வாழ்வை அறிய முடிகிறது.  அன்று ஆஸ்யா தன்னோடு  நடனமாட என்.என்னை அழைக்கிறாள். அவர்களுக்கு இறக்கைகள் முளைக்கின்றன. நாள் முழுவதும் திளைக்கிறான். தன்னை ஏமாற்றிய இளம் விதவை அவன் நினைவில் வராமல் போன நாளாகவும் அமைகிறது. ரைன் நதியின் போக்கில் படகை விடும்படி பரிசல்காரனைக் கேட்கிறான். வானம், விண்மீன்கள் பார்த்து கிளர்ச்சியுறுகிறான். கண்களில் நீர்ப் பெருக்கெடுக்கிறது.   

அந்த ஒருநாள்தான் அப்படி இருந்தது. அடுத்த நாள், அதற்கு அடுத்த நாள் அவன் ரைன் ஆற்றைக் கடந்து சென்று அவளைப் பார்க்கும்போது ஆஸ்யா வேறு வேறாய் தென்படுகிறாள். காகின் அவனை சந்தித்து, ஆஸ்யா என்.என்னை காதலிப்பதாய்ச் சொல்கிறான். அதைச் சொன்னதோடு மட்டும் நிறுத்தவில்லை அவன். தடுமாறுகிறான் ஆணாகிய என்.என்.  

தன்னை வந்து சந்திக்குமாறு ஆஸ்யா என்.என்னை அழைக்கிறாள். அவள் எதிர்பார்க்கும் ஒரே ஒரு வார்த்தை அவனிடமிருந்து கிடைக்கவில்லை.  அந்த ஊரை விட்டு, நாட்டை விட்டு கண் காணாத இடத்திற்கு தனது அண்ணன் காகின்னோடு சென்று மறைந்து விடுகிறாள் ஆஸ்யா. பித்துப் பிடித்தவனாய் அலைந்து திரிகிறான் என்.என். தன்னையே திட்டித் தீர்க்கிறான். ரைன் ஆற்றின் கரையிலிருந்து அவனும்  அவளைத் தேடி புறப்படுகிறான். பிறகு அவன் காலம் முழுவதுமே அவளை அவனால் பார்க்கவே முடியவில்லை.

முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் படித்தபோது ”ஆஸ்யா’வின் கதை இந்த  இடத்தோடு முடிந்து போயிருந்தது. இப்போது படிக்கும்போதோ கதை முடியாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ரைன் ஆற்றை விட்டு ஆஸ்யாவும் என்.என்னும் எங்கோ போய் விட்டாலும் ரைன் ஆறு தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதைப் போல.

ஆஸ்யா விரும்பிய அந்த ஒரு வார்த்தையை என்.என் சொல்லியிருந்தாலும், அவர்கள் இருவரும் அப்போது இணைந்திருந்தாலும் அந்த பிணைப்பு தொடர்ந்திருக்குமா என்ற சந்தேகம் என்.என்னுக்கு பிற்காலத்தில் வருகிறது. நமக்கும்தான். பிரிந்தது நல்லதெனவும் கூடத் தோன்றுகிறது அவனுக்கு. ஆனாலும் ஆஸ்யாவைப் பற்றிய நினைவுகள் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

என்.என்னின் நினைவுகள், உணர்வுகள், சிந்தனைகள் வழியாக ஆஸ்யாவின் கதை வாசகனுக்கு சொல்லப்படுகிறது. ஆஸ்யாவின் தரப்பிலிருந்து சொல்லப்படவில்லை. அறிய முடியாமல் போகும்போதுதான் மனித மனம் ஏங்கவும் தவிக்கவும் செய்கிறது.

ஆண் பெண் உறவுகளில் பொதிந்திருக்கும் ரகசியமான ஒன்றை – பிரிவிலிருந்து சுரக்கும் அழியாத சுகத்தை - மனித மனம் சுமப்பதில் இன்பத்தையும் துன்பத்தையும் சேர்ந்தே காண்கிறது. அதில் பரவசம் அடைகிறது. அற்பப் புல்லின் மீது இருக்கும் பனித்துளியின் காலத்தை விட மனிதனுடைய மகிழ்ச்சியின்,  துக்கத்தின் காலம் குறைவானதாய் இருந்தாலும் – மனிதன் தனக்குள் பத்திரப்படுத்திக்  கொள்ள முடிவதாய் ‘காதலை’ காட்டுகிறார் துர்கனேவ். ரைன் நதியைப் போல ஜீவநதியாய் காதலைப் பெருக்கெடுக்க வைக்கிறார்.

*

1858ம் ஆண்டில் ருஷ்ய எழுத்தாளர் எழுதிய ‘;ஆஸ்யா நாவலைத் தமிழில் கொண்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அந்த நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

Comments

2 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete

You can comment here