திரைப்படத்தை விஞ்சும் காட்சிகளோடு நாவல்...


சமீபத்தில் தோழர் மாதவராஜ் அவர்களின் க்ளிக் நாவல் வாசித்தேன்.  

பூங்குழலிக்கும் நரேனுக்குமான நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரையிலான ஒரு மாத காலகட்டம் தான் நாவலின் மைய நீரோட்டம். திருமணம் குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகள் கொண்ட எதிர் துருவங்கள் இணையும் போது என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை மிக எதார்த்தமாக அலசுகிறது.  

வெள்ளத்தில் சிக்கிய சிற்றெறும்புக்கு கிடைத்த துரும்பு போல பூங்குழலிக்கு ஸ்ரீஜாவும் நரேனுக்கு பவித்ராவும் பக்க பலமாக இருப்பது சிறப்பானது. உலகம் இணையதளத்தால் எவ்வளவு சுருங்கி கைக்குள் அடங்கினாலும் மனிதர்களுக்கு ஒரு போதும் அவை மன ஆறுதலைத் தர முடியாது. அதற்கு பக்குவப்பட்ட ஒரு மனிதனே தேவை என்பதை மிக நுணுக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது.  

மனித மனம் எப்போதும் ஒரு பக்க சார்பாகவே சிந்திக்கும் தன்மை கொண்டது. நான் வாசித்த சில நாவல்களும் அப்படியாகவே இருந்தது. ஆனால் மிக முக்கியமான நமக்கு எதிர் தரப்பு நியாயங்களையும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதி இருப்பது மிக சிறப்பானது. பன்முகத்தன்மை வாய்ந்த மனித மனங்களை நம் மனதுக்கு மிக நெருக்கமாக உணர வைத்ததில் நாவல் மிகுந்த மதிப்பு மிக்கதாக உள்ளது.  

கதையின் இன்னொரு முக்கியமான பேசு பொருளாக இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையின் உத்தரவாதமற்ற வேலை போக்கு தற்காலத்திற்கு தகுந்த அவசியமான பேசுபொருளாகும். நமக்கு எல்லாம் தெரியும் அதிக சம்பளத்திற்கு பின்னால் அவர்கள் தலையே அழுத்தும் சுமை நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. இந்த நாவல் வாசிப்புக்கு பிறகு அவர்களை பற்றிய எனது மனநிலையும் மாறியுள்ளது.  

பணத்திற்காக வெளிநாடு சென்று பல ஆண்டுகளாக திரும்பாத கணவனுக்காக தன் உடல் தேவையை நிராகரித்து புற உலகத்திற்காக வாழும் பல பெண்களுக்கு மத்தியில் தனது உடல் தேவைக்காக பிற ஆண்களுடன் உறவு கொள்வது தவறில்லை என்பதே எனது கருத்தும்.

நாவல் பேசும் பெண்ணியம் எதையும் வலிந்து திணிக்காமல் இயல்பாக கருத்தை பதிவு செய்கிறது.  

ஒரு இடத்தில் "பெண்கள் எல்லாவற்றையும் பேசினாலும் புதிரானவள் என்கிறார்கள். ஆண்கள் எதையும் பேசவில்லை என்றாலும் வெளிப்படையானவர்கள் என்கிறார்கள்." மிக முக்கியமான சமூக சிக்கலை எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார் பாருங்கள்.  

நரேனின் அம்மா சந்திராவும் பவித்ராவும் உரையாடும் ஒரு பகுதியில் தனது இணையரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் போதாமைகளை வெளிப்படுத்தும் பவித்ராவை சந்திரா அவர்கள் தனது வாழ்வோடு பொருத்தி பார்த்து உணர்வது மிக முக்கியமாக பகுதி. அந்த காலத்து பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் ( தற்போதும் அப்படி தான் உள்ளது) எவ்வளவு அடக்குமுறை செய்யப்பட்டார் தற்போது வெளியே சொல்லவாவது செய்கிறார்கள். என்னை மிகவும் பாதித்தது சந்திராவும் மூர்த்தியும் தாம்பத்தியம் அதிகபட்சம் "ம்" என்ற வார்த்தையில் முடிவது தான்.  

இப்பல்லாம் யாருங்க சாதி மதம் பாக்குறாங்க என்போருக்கு பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வனின் காதல் திருமணமே சாட்சி. மாற்று மதத்தில் திருமணம் செய்த காரணத்தால் வீட்டை விட்டு துரத்தப்பட்டு பல ஆண்டுகளாக தொடர்பிழந்து கிடப்பது தற்காலத்திலும் தொடரும் சமுதாய சீர்கேடு.  

பூங்குழலியும் நரேனும் திரைப்படம் பார்க்கும் போது நரேன் செய்யும் செயல் திரையரங்கத்தில் நான் எனது காதலியுடன் இருந்த நாட்களை நினைவுபடுத்தியது. காமத்தை தனித்துக் கொள்ள என்னை போன்ற ஆண்கள் செய்யும் செயல்கள் மிக மோசமானவை என்பதை எனக்கு புரிய வைத்தது.  

க்ளிக் நாவல் குறித்த அதன் பெயர் காரணத்தில் எனக்கு பெரிய உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் அதில் அறிமுகமாகும் பெயர்கள் சுவையானவை.. உதாரணமாக பூங்குழலியின் தாத்தா பூசைப்பழம், ஞானப்பழம் மற்றும் நண்பர் அலையரசன். புழக்கத்தில் இல்லாத பெயர்களை வாசிக்கும் போது ஒரு வகையான சுவை கூடிய நிறைவை தந்தது.  

திருமணத்தில் பிடிப்பு இல்லாத பூங்குழலி திருமணத்தை எண்ணி கனவு காணும் நரேனின் கரம் பிடித்தாரா இல்லை பிரிந்தார்களா என்பதை மிக சுவாரசியமாக பதிவு செய்கிறது நாவல். திரைப்படத்தை விஞ்சும் காட்சி அமைப்புகள் இறுதி அத்தியாயங்கள் என மிக தரமான எழுத்தை கொண்டுள்ளது...  

நிச்சயமாக வாசகருக்கு புதிய வாசிப்பு அனுபவத்தையும் புதிய வாழ்க்கை முறையையும் பரிசளிக்கும்.  

- க்ளிக் நாவல் குறித்து செந்தில், முசிறி (வாசகர் பார்வை – 4 )


கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!