பக்கத்துக்கு பக்கம் மனித மனங்கள்


இப்படியா ஒரு பெண் இருப்பா எனத் தொடங்கி, உங்க ஆம்பள பையனைப் போய் கேளுங்க என புயலாக சீறி, ஒரு அழகான உறவாய் மலர்ந்து நிறைகிறது கிளிக்.

ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் எனக் கேட்டால், இப்படி தான் எனக் கூறும் சமூகத்திடம், அவளுக்கு எப்படி விருப்பமோ அப்படி இருக்கலாம் என்கிறது கிளிக்.

விருப்பங்களை திணிக்கும் மனிதர்களை கொஞ்சம் விலகி நிற்க சொல்கிறது. சொல்வதை ஏற்றுக் கொள்ளாத போதும், கலைச்செல்வன் போல அமைதி காக்க சொல்கிறது. காதல் என்ன கல்யாணமே முறிந்து போனாலும் கூட, அன்பை பகிர்ந்து கொள்ள சொல்கிறது.

நாவல் முழுக்க நிரம்பி இருக்கிறார்கள் பெண்கள். ஒவ்வொருவரும் அவரவர்க்கு உரிய வாழ்வை வாழ்கிறார்கள். அதனாலேயே அத்தனை பெரும் பேரழகிகளாக காட்சி அளிக்கிறார்கள். பூங்குழலி, ஶ்ரீஜா, ஆஷா, பவித்ரா, சோபியா என ஒவ்வொருவரும் ரெக்கை கட்டி பறக்கிறார்கள். அவரவர்க்கு உரிய வானத்தில். அதற்கு மிக முக்கிய காரணம் They are Independent. பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் அற்றவர்கள்.

இதற்கு நேர் எதிரான குணங்களோடு சித்ரா, சந்திரா குறிப்பாக பத்மாவதி என வரும் பெண்கள், இந்த சமூகத்தின் இயல்பான முகத்தை பிரதிபலிக்கிறார்கள்.

பக்கத்துக்கு பக்கம் மனித மனங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. ஒருமுறையேனும் வாசித்து விடுங்கள். மனிதர்களை புரிந்து கொள்வதில் தான் எவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு ரெஸ்டாரன்ட், ஒரு காபி, கொஞ்சம் இசை எவ்வளவு பெரிய பிரச்சனையையும் தீர்த்து வைக்க போதுமானதாக இருக்கிறது.

பூங்குழலி மிகவும் ரசித்த கவிதை எனக்கும் பிடித்தது.

 "கைகளைப் பிடிப்பதென்பது

அன்பைத் தெரிவிப்பது

அனுமதி கேட்பது

ஏதுவாய் இருந்தாலும்

ஏற்றுக் கொள்வது

எல்லாவற்றுக்கும் மேலே

உன்னை மதிப்பது"

 

- க்ளிக் நாவல் குறித்து ஊடகவியலாளர் ஜான்பால்,  (வாசகர் பார்வை - 3)


கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!