Mukundan Unni Associates - மலையாள சினிமா




இந்த மலையாளப் படம் Mukundan Unni Associates குற்ற உணர்வே இல்லாத ஒரு மனிதனின் கதை. அப்படிப்பட்டவனை ஒரு வக்கீலின் கதாபாத்திரமாக்கி இருப்பது மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது.
அடையாளமும், மரியாதையுமற்று இருக்கும் ஒரு ஜூனியர் வக்கீல் முகுந்தன எப்படி தன் சீனியரிடமிருந்து விலகி, கடும் சிரமங்களுக்கும், அவமானங்களுக்கும் இடையில் படிப்படியாக முன்னேறி, இந்த சமூகத்தின் முக்கிய பிரமுகராக உயர்கிறான் என்பதுதான் கதை.
நெருக்கடியான சூழல்கள் ஒவ்வொன்றையும் மனிதாபிமானமும், கொஞ்சம் கூட குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து செல்கிறான். பார்க்கும்போது தாங்க முடியாததாய் இருக்கிறது. தான் முன்னேறுவதற்கு துரோகம், கொலை என எதையும் மிகச் சாதாரணமாகச் செய்யத் துணிவது சகிக்க முடியாததாய் இருக்கிறது. மனித உணர்வுகள், மனித உயிர்களுக்கு அவன் உலகத்தில் எந்த மதிப்புமில்லை.
“முன்னேறியவர்கள் எல்லோரும் தங்கள் திறமையாலும், உழைப்பாலும் அந்த இடத்தை அடைந்தார்கள் என நினைக்கிறாயா?’ என படத்தின் இறுதியில் அவனை நேசிக்கும் பெண் கேட்பது பார்வையாளர்களை நோக்கியதாய் இருக்கிறது.
பொருளாதாரமே சகலமும் என மனித மனங்களை தகவமைத்து, எப்படியாவது முன்னேறு என மனித மூளைகளை சலவை செய்து வரும் நவீன முதலாளித்துவ காலத்தில், இந்த படத்தின் செய்தி இளம் தலைமுறைக்கு எப்படி போய்ச் சேரும் என கவலை அப்பிக் கொள்கிறது.
படத்தின் முடிவில், திரைக்குள்ளே சென்று, அந்த முகுந்தனை அம்பலப்படுத்தி அவனை வீழ்த்த வேண்டும் என்றொரு வேகம் வந்தது. அப்படியொரு உணர்வை எல்லோருக்கும் இந்தப் படம் கடத்துமானால், இந்த சினிமாவைக் கொண்டாடலாம். அதற்கு சாத்தியமும் வாய்ப்பும் இல்லையென பயம்தான் வருகிறது.

( OTT : Disney + Hotstar. )

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!