எழுத்து மேஜிக்கில் யாரும் தலையைத் தரலாம்!


வில்லா வீடு, எக்கச்சக்க சம்பளம் , கார் , நவநாகரீக வாழ்க்கையின் அனைத்து சொகுசுகளும் கொண்ட வாழ்க்கை வேண்டுமா என்று கேட்டால் யாராவது மறுப்பார்களா? இவையனைத்தும் ஒரு தீப்பெட்டிக்குள் அடைந்து கிடந்தால் கிடைக்கும் என்பது எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. அந்த "தீப்பெட்டியாபிஸ்" எப்படி ஐ.டி வாழ்வியலில் பொருந்தக்கூடிய  சாத்தியம் என்பதை சொல்ல வந்த நாவல் "க்ளிக்". 

ஐ.டி  பின்புலம் என்றாலும் இந்த நாவல் பேசுவது மனித மனத்தைப் பற்றி. மனித உறவுகளைப் பற்றி. பெண் சந்திக்கும் பிரச்சனைகள், ஆணாதிக்க மனோபாவம், குடும்ப அமைப்பின் வன்முறை பற்றி.  அந்த அதிகாரத்தின்  மையத்தில் இருக்கும் பெண்  மனங்கள் பற்றியும் நாவல் பேசுகிறது. அதற்காக துன்பியல் நாவல் என்று முடிவுக்கு வந்து விடக்கூடாது. மெல்லிய மயிலிறகின் வருடலாக ஒரு ஃபீல் குட் நாவல்,  மௌஸின்  லெஃப்ட் க்ளிக் போல உடனே நாவலில்  நுழைந்துவிட விடலாம் .

அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று வாசகனை படிக்கத் தூண்டும் சாத்தியம் துப்பறியும் நாவல்களில் மட்டும் இருக்கிறது. அதே சுவாரசியத்தை - மனித மனங்களை பற்றி,  உறவுகளைப் பற்றி சொல்லும் நாவலிலும் சாத்தியம் என்பதை  நிரூபித்து இருக்கிறார் நாவலாசிரியர். 

மனித மனம் மேலிருந்து குதி என்று சொல்லும். பிறகு ஏன் குதித்தாய் என்ற கேள்வியும் கேட்கும். இரட்டைத்தன்மை கொண்ட இந்த மனது, உறவுகளில் நிகழ்த்தும் மாறுதல்களை சம்பவங்களோடு கோர்த்து நாவலாக தந்திருக்கிறார். எந்த இடத்திலும் பிரச்சாரமோ இலக்கிய மேதைமையோ இல்லை. எளிமையான நடையில்  நாவல் செல்கிறது. 
 
தமிழ் நாவலுக்கு எதுக்கு ஆங்கில தலைப்பு என்று யோசிக்கலாம். அதற்கு ஏற்ற ஒரு அருமையான விளக்கத்தை நூலில் ஆசிரியர் வைத்துள்ளார். நாவலில் வரும் கவிதைகளும், திரைப்பாடல்களும் ரசிக்க தக்கவை.  ரொமான்ஸ்  காட்சிகள் அழகானவை. நாவலாசிரியரின் எழுத்து நடை காட்சியை வாசகருக்குள்ளும் கடத்தும் திறமையான நடை 

"பைக்கில்  பயணித்தார்கள்" என எழுதாமல் உணர்வுகளோடு எழுதும் மேஜிக்கை கதைமாந்ரும் பைக் பயணமாக மனக்கண்ணில் உணர்வார்கள். பஸ் பயணத்தில் நாம் தினமும் பார்க்கும் ஒரு சாதாரணமான விஷயம் ஒரு கோவிலோ, குளமோ, ஊரோ இருக்கும். ஒரு நாள் அந்த நிறுத்தத்தில் இறங்கி   நாமும் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனிதருக்கு உண்டு. இதே ஆவல் நமக்கும்  ஏற்பட்டு நாவலுக்குள் ஈர்த்துவிடுகிறது.

கணத்துக்கு கணம் மாறும் மனித மனத்தை போல ஒரே காட்சியில் அழுகை அடுத்து சிரிப்பு என நமது மனமும் நாவலோடு இணைந்து மாறும் ரசவாதம் நிகழ்கிறது. க்ளிக், என்று தலைப்பிற்கு ஏற்றபடி ஒன்றிலிருந்து ஒன்றாக நாமும் கதையோடு பயணிக்கிறோம். நாவல் ஒரு சார்பாக எழுதப்படவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் மூலமாக எதிரெதிர் நிலைகளைப் பற்றி கேள்விகளும் வருகிறது.

"ஆற்றை கேள் " என்ற  சித்தார்த்தனின் நீட்சியாக கடலிடம் கவலைகளைச் சொல்லிவிடும் கதாபாத்திரம் எதார்த்தமானது. யாருமற்ற மனித மனம் கடலிடம் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறது. ஆனால் இப்பொழுது இந்த நாவலே கடலாக இருந்து புரிதல் தந்து நம்மை ஆற்றுப்படுத்துகிறது.

கதையின் எழுத்து மேஜிக்கில் யாரும் தாராளமாக தலையை தரலாம் . பரிசாக நமக்கு  கிடைப்பது புரிதல் மகிழ்ச்சி எனும் பூமாலைகள். 

- க்ளிக் நாவல் குறித்து கோவையைச் சேர்ந்த ராஜேஷின் பார்வை இது. (வாசகர் பார்வை - 1)

நன்றி : Rajesh (Luciddreamer), Coimbatore

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!