இளைஞர்களின் மனநிலையை வாசகர் மனதிலும் எழச் செய்கிறது!


“இப்படியா இருப்பா ஒரு பெண்?”  இந்த கேள்வியோடுதான் தொடங்குகிறது நாவல்.  

மனித இனத்தின் சரிபாதி, சகமனுஷியான பெண் எப்படி இருக்க வேண்டும் ? எல்லா பெண்களும் ஒரே போல் இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா ? பெண்ணின் படிப்பு, உடை, வேலை, நண்பர்கள், திருமணம், பேசும் வார்த்தைகள்  வரை எல்லோராலும் கேள்விக்குள்ளாக்கபடுவது ஏன்? பெண்ணின் செயலில் குறைகளையும், உள்ளீடுகளையும் செய்யத் தோன்றுகிறது ஏன்? பெண்ணுக்கு என விருப்பு, வெறுப்பு, தனித்தன்மை, இயல்பாக இருப்பது தவறா? அவ்வாறான பெண்களை குடும்பமும், சமூகமும் ஏற்க மறுப்பது ஏன்?  பெண் புரியாத புதிரா? அல்லது புரிந்து கொள்வதில் ஆண்களுக்கு உணர்வுத்திறன் குறைபாடா? திருமணம் எதற்காக குடும்பத்தால் நடத்தி வைக்கப்படுகிறது?  திருமண அவசியம் தானா? தன்விருப்ப திருமணமோ, குடும்ப விருப்ப திருமணமோ இணையும் ஆண், பெண் இருவருக்குள் அன்பு, நட்பு, புரிதல், மதித்தல், சகிப்புத்தன்மை உருவாக்குகிறதா? உருவாகாத திருமணமோ, உறவோ எதற்கு ?  

பல கேள்விகளோடு உள்ள இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மனநிலையை வாசிப்போர் மனதிலும் எழச்செய்வதே நாவலின் சிறப்பு !

 தென் தமிழகத்தில் கணவனை இழந்து தாய் வீட்டில் தன் (ஆண், பெண் என) இரு குழந்தைகளுடன் பிழைத்து வரும் பெண். இளமை பருவம் அடைந்த தன் மகனின் சுயசாதி மறுப்பு விருப்ப திருமணம் அதனால் உருவாக்கப்படும் நெருக்கடிகள், கல்லூரி படிப்பு, வேலை என தன்விருப்பத்தை முன்னெடுக்கும் மகளின் போராட்டம், கணவன் இல்லாது வாழ்வின் தேவைகளுக்கு அல்லாது பாதுகாப்பிற்காக சுயமரியாதை சுயசிந்தனையற்று தன் அம்மா, அப்பா, சகோதர்கள், உறவினர்கள் கட்டுபாட்டை மீற இயலாது தவிக்கும் தாயின் தவிப்பையும், இறுதியில் அவளின் வீராவேஷத்தையும் நம்முள்ளும் ஏற்படுத்துகிறது நாவல்.

ஐ.டி துறை குறித்த மாயைகளை, உருட்டுகளை, உடைத்து அதில் பணிபுரிவோர், எந்த பணிப்பாதுகாப்பும் அற்ற அத்துகூலிகள் தான் என்றும்.. அவர்களின் இயந்திர வாழ்வு, நெருக்கடி, உளவியல் பாதிப்பு, குடும்பம், குழந்தை வளர்ப்பு என புதிய கோணத்தில்  கூடுதலாக பெண்களின் நிலையிலிருந்து பிரச்சனைகளின் உண்மையை வாசிப்போருக்கு உறைக்க பதிவு செய்துள்ளார்.

கணணித் துறையின் வளர்ச்சி, பாலின தடைகளை கடந்து பணிக்கு செல்லும்  இளம்பெண்களின் பொருளாதார சார்பற்ற சுயசிந்தனையான வாழ்வு அதில் ஏற்படும் வளர்ச்சி, வீழ்ச்சி, நுகர்வு கலாச்சாரத்தின் அகோரபசிக்கு இரையாகும் குடும்பங்கள், தன்விருப்பு வெறுப்புகளை உரக்கப் பேசிட, நடைமுறைபடுத்த தடையாக உள்ள சமூக ஒழுக்க நடைமுறை விதிகள் மீறிடவும், மீறிடாதும்  போராடும் இளம்பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்புகிறது நாவல்.

குடும்ப விருப்ப திருமணத்தை எதிர்நோக்கி ஐ.டியில் பணிபுரியும் ஆண், பெண்ணின் கதையாக நாவல் விரிகிறது. எதையும் சுயமாக யோசித்து, தீர்க்கமாக முடிவு எடுக்கும் பெண்ணுக்கும், அம்மா பிள்ளையாக வளர்ந்த ஆணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடு, பிரிவு என அவர்களின் உளவியலையும், குடும்பத்தாரின் மனநிலையையும் இயல்பாய் பேசியிருக்கிறது நாவல்.

காதல், காமம், நட்பு, அரவணைப்பு, பொறாமை, கோபம், இயலாமை, குடும்ப வன்முறை, சாதியம்,என நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும், இளம் தலைமுறையின் மனநிலையையும், எதிர்பார்ப்பையும் காதலோடு கலந்து அழகிய சித்திரமாக தீட்டியிருக்கிறார் எழுத்தாளர்.

 அவசரகதியில் சுழலும்  நம்மை எதார்த்த  மனநிலைக்கு கொண்டுவந்து ஆசுவாசப்படுதும்  அற்புத ஔடதம் இந்த நாவல். 

- க்ளிக் நாவல் குறித்து ஹீலர் சுமதியின் பார்வை (வாசகர் பார்வை - 2)

 


கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!