க்ளிக் - நாவல் வெளியீடு




ஆம்னி பஸ்ஸூக்காக ஊரில் காத்திருக்கும்போது  அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும். வழியனுப்ப வந்த அம்மாவும் அப்பாவும் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவளும் கையைக் கட்டிக்கொண்டு சரியென்பதாய் தலையைத் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.  சுற்றிலும் பொங்கல் முடிந்து சென்னைக்குச் செல்லும் பெரும் கூட்டம் நின்றிருந்தது. 

நான் ஏறிய பஸ்ஸில்தான் அவளுக்கும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முதுகில் பையை மாட்டிக்கொண்டு எனக்கு முன்னால் சென்று அப்பர் பெர்த்தில் ஏறினாள். அவளுக்கு நேர் கீழே என் பெர்த். ஜன்னலில் அவளது அப்பாவும், அம்மாவும் வந்து நின்று தங்கள் மகளிடம் பேசினார்கள். தொலைதூரத்தில், சென்னை போன்ற நகரத்தில் தங்கள் மகள் எப்படி சமாளிப்பாளோ என்ற கவலையும் அக்கறையும் அவர்கள் முகத்திலும் வார்த்தைகளிலும் இருந்தன. 

காலை ஏழு மணிக்கு பெருங்குளத்தூரை நெருங்கும்போது பஸ் ஊர்ந்து ஊர்ந்து சென்றது. முன்னால் எட்டிப் பார்த்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. பத்து நிமிடங்கள் போலிருக்கும். மேலிருந்து அந்த பெண் கவனமாக கீழே இறங்கினாள். பையை முதுகில் மாட்டிக்கொண்டு முன்னால் சென்றாள். நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். டிரைவரிடம் எதோ பேசினாள். கதவு திறக்கவும் இறங்கிக் கொண்டாள்.

இந்த போக்குவரத்து நெரிசலுக்குள்ளிருந்து எப்படி வெளியேறப் போகிறாள், அவள் எங்கே போக வேண்டும் என ஜன்னல் கண்ணாடியில் பார்த்தேன். இறங்கியவள் வாகனங்களுக்கு இடையே நின்று அங்குமிங்கும் பார்த்தாள். பைக்கில் ஒரு இளைஞன் கிடைத்த இடைவெளியில் முன்னேறி வந்து கொண்டிருந்தான். அவனை நெருங்கி நிறுத்துமாறு கைகாட்டினாள்.  நிறுத்தினான் அதிலிருந்த இளைஞனிடம்  பேசினாள். ஹெல்மட்டைக் கழற்றி அவன் “ஏறிக்க” என்பது போல் தலையசைத்து ஹெல்மட் மாட்டிக் கொண்டான். பைக்கில் ஏறிக்கொண்டாள். பஸ்களும், கார்களும் போக முடியாமல் நின்று கொண்டிருக்க, அவள் அவனோடு பைக்கில் சட்டென அந்த நெருக்கடியிலிருந்து மறைந்து விட்டாள். நேற்றிரவு பார்த்த அவளின் பெற்றோரின் முகங்கள் நினைவுக்கு வந்தன. எல்லாம் மேஜிக் போல் இருந்தது. 

இந்தக் காட்சியை அவ்வப்போது நினைத்து அதிலிருந்து விரிந்த சிந்தனைகளையும், மனிதர்களையும்தான் ‘க்ளிக்’ நாவலில் கதையாய் எழுத ஆரம்பித்தேன். ’தீராத பக்கங்களில்’ தொடராய்  வந்தது. நாவலாய் வெளியிடவேண்டும் என நிறுத்தி விட்டேன். 

முழுக்கதையையும் வெளியிடாமல் முடித்துக் கொண்டதால், கதை என்னவாயிற்று, கல்யாணி என்னவானாள், நரேனுக்கும் பூங்குழலிக்கும் திருமணம் நடந்ததா இல்லையா என்னும் பல கேள்விகளோடு வாசகர்கள் இருக்க வேண்டியதாயிற்று. 

இந்த இடைப்பட்ட காலத்தில் ’க்ளிக்’கையும், கதையையும் கூட வாசகர்கள் மறந்துவிட்டிருக்கக் கூடும்.

அதுவும் நல்லதற்கே. நிறைய திருத்தங்களோடும், மாற்றங்களோடும், ‘க்ளிக்’ நாவல் இப்போது இருபத்தைந்து அத்தியாயங்களோடு வெளிவந்திருக்கிறது. 

2023 ஜனவரி 6ம் நாள் துவங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘க்ளிக்’ நாவல் கிடைக்கும்.  அதற்கும் முன்னரே பெற விரும்பும் வாசகர்கள் கீழ்கண்ட லிங்க்கில் பணம் செலுத்தினால் புத்தகம் தங்கள் முகவரிக்கே வந்து சேரும்.


‘க்ளிக்’  எனது முதல் நாவல்.
உற்சாகப்படுத்திய, ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.

‘க்ளிக்’ வெளியீடு:
பக்கங்கள் :  250/- 
விலை ரூ. 250/- 
பாரதி புத்தகாலயம் 

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  2. ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறோம்... பொன்ராஜ்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!