உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு



    ‘ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆயிரம் முகங்களும்’ என ‘தமிழ் இந்து’வில் பத்திரிகையாளர் சமஸ் எழுதிய கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ் குறித்த அச்சத்திற்கு பதிலாக ஒருவித வியப்பு தொனித்தது. மோடி வெல்லப்பட முடியாதவர் என்னும் அவநம்பிக்கையை ஜனநாயக சக்திகளுக்கு ஏற்படுத்துவதாகவும் புரிந்தது. அதற்கு எதிர்வினையாக ’ஆயிரம் முக ஆர்.எஸ்.எஸ்ஸும் கோடிக் கால் பூதமும்’ என மாதவராஜ் எழுதிய கட்டுரை ஃபேஸ்புக்கிலும், பின்னர் ‘தீக்கதிர்’ பத்திரிகையிலும் வெளியானது.

    அதோடு ‘காவியற்ற தமிழகம்’ எனவும், ‘உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு’ என மேலும் இரண்டு கட்டுரைகளோடு இந்த புத்தகம் அமேசானில் வெளியாகிறது. இந்திய பாசிசம் குறித்த புரிதலை ஓரளவுக்கு இந்த புத்தகம் தரலாம்.

    இந்திய பாசிசம் மக்களிடம் அவநம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே இருக்கிறது. அருகில் இருப்பவர்களையே நம்ப முடியாத சூழலை ஏற்படுத்துகிறது. வேறு வழியில்லை என்னும் நிலைமைக்குத் தள்ளுகிறது. இந்த உளவியலை பயன்படுத்தி, ‘ஒரு தலை, பல கால்கள்’ என்பதை ஏற்க வைக்கிறது. அதாவது ஒரு தலை. அதுதான் சிந்திக்கும். பேசும். ஆணையிடும். கால்கள் அனைத்தும் ஒன்று போல அதற்கு கட்டுப்பட்டு நடக்கும். கூடவே நடக்கும் கால்களோடு தன் கால்களும் இருக்கின்றன என்பது எதொவொரு விதத்தில் மனிதனுக்கு நம்பிக்கையளிக்கிறது என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எரிக் ஹோப்ஸ்வாம்.

    இந்த ஆறு ஆண்டுகளும் தொடர்ந்து மக்களை ஒரு பதற்றத்திலேயே வைத்திருக்கிறது அரசு. மக்களை கீழ்படிய பழக்குவது பாசிசத்தின் தன்மை. அது ‘லெப்ட்’, ‘ரைட்’ என்று உத்த்ரவிட்டுக்கொண்டே இருக்கிறது. அது நில் என்றால் அனைவரும் நிற்க வேண்டும். உட்கார் என்றால் அனைவரும் உட்கார வேண்டும். ஓடு என்றால் அனைவரும் ஓட வேண்டும். வரிசையில் போய் நில் என்றால் நிற்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை ஓட வைத்தது. வரிசையில் போய் நிற்க வைத்தது. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது தோல்வி என்றும், மக்கள் விரோதமானது என்றும், கருப்புப் பணத்தை பிடிக்கவில்லை என்றும் நாம் பேசுகிறோம். இன்னொரு பக்கம் அரசு சாதித்தது என்னவென்றால் இந்த மக்களை கீழ்படிய வைத்தது. அரசு சொல்கிற படி கேட்க வைத்தது. ஜி.எஸ்.டி, ஆதார் என எதாவது சொல்லி மக்களை அலைக்கழிக்க வைத்தது. எதாவது ஒரு பயிற்சியைத் தொடர்ந்து கொடுத்து ஒரு பதற்றத்தில் மக்களை வைத்துக்கொண்டே இருக்கிறது.

    வரலாற்றின் இருண்ட தருணங்களை கடப்பதற்கான வெளிச்சத்தை வரலாற்றிலிருந்தே பெற முடிகிறது. அவநம்பிக்கையிலிருந்து மீட்டு நம்பிக்கைகளை ஊட்டவும் வரலாற்றால் சாத்தியமாகிறது. அதைத்தான் இந்த புத்தகம் பேசுகிறது. 


அமேசானில் புத்தகத்தை பெற :  உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!