உலகில் எதுவும் சிறந்ததே”- லியோ டால்ஸ்டாய்
”கொலைகாரன்
மோடி!”
2003
ஆகஸ்டில், லண்டனின் வடமேற்கில் அமைந்துள்ள விம்ப்லேவில் மோடி கலந்து கொண்டு இருந்த
கூட்டத்திற்கு வெளியே கோஷங்கள் உக்கிரமாக எழுந்தன. அப்போது அவர் பிரிட்டனுக்கு ஒரு
அழையாத விருந்தாளி. ”அரசு ரீதியாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரவில்லை. தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறார்”
என தன் தரப்பை பிரிட்டிஷ் அரசு சொல்லி முடித்துக் கொண்டது.
வெளிநாட்டில்
வாழும் இந்தியர்கள் மற்றும் வலிந்து அழைக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் மோடி
பேசிக்கொண்டு இருந்தார். அடுத்த மாதம் குஜராத்தில் நடக்கவிருக்கும் ‘துடிப்பு
மிக்க குஜராத்’ ( Vibrant Gujarat) உச்சி மாநாட்டிற்கு அழைப்புகள் விடுத்துக்
கொண்டு இருந்தார்.
2003ம்
ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி, ‘துடிப்பு மிக்க
குஜராத்திற்கான’ உச்சி மாநாடு அகமதாபாத்திலும் சூரத்திலும் ஒரு சேர நடத்தப்பட்டது. அகமதாபாத்தில் இந்தியாவின் துணை பிரதமராயிருந்த
அத்வானியும், சூரத்தில் ஒன்றிய நிதியமைச்சராய் இருந்த ஜஸ்வந்த் சிங்கும் துவக்கி
வைத்தனர். குஜராத் மாநிலத்தில் தொழில், சுற்றுலா இரண்டையும் ஊக்குவிப்பதே அதன்
நோக்கமாய் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டின் சில கார்ப்பரேட்களும், 48 நாட்டிலிருந்து
பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் 14 பில்லியன் முதலீட்டிற்கு
76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
’துடிப்புமிக்க
குஜராத்தின்’ நோக்கம் அப்போது மேலோட்டமாகத்தான் பிடிபட்டு இருந்தது.
‘சகிப்புத்தன்மையற்ற’, ‘மதவெறி மிக்க’, ’பாசிசத்தன்மை கொண்ட’, ‘கலவர’ பூமியாகக்
கருதப்பட்ட குஜராத் குறித்த அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும், நேர்மறை சிந்தனைகளை
உருவாக்குவதற்கும் மோடி முயற்சிக்கிறார் என்று ஊடகங்கள் கோடிட்டு காண்பித்தன. தன்
மீதும், தன் அரசு மீதும் மனித இரத்தத்தோடு
படிந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்கு மோடி செய்யும் வித்தைகள் என்று ஜனநாயக
சக்திகளும், முற்போக்கு சக்திகளும் கருதின.
2003
லிருந்து 2019 வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘துடிப்புமிக்க குஜராத்தின்’
மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்திய கார்ப்பரேட்களோடு மிக நெருக்கமாகவும், அவர்களுக்கு
உகந்தவராகவும் மோடி புதிய அவதாரம் எடுத்த தருணம் அந்த மாநாடுகளுக்கு ஊடேதான் இருந்தது.
உருமாறி ‘வளர்ச்சி நாயகனாக’ தோன்ற ஆரம்பித்தது
அப்போதுதான்.
மே.வங்கத்தில்
இருந்த சி.பி.எம் தலைமையிலான அரசு, அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை
ஊக்குவிக்கும் விதமாக டாடாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதி அளித்த காலத்தையும் இங்கு சேர்த்து நினைவுகூர்வது,
வரலாற்றை அதன் பரிமாணங்களோடு அறிய உதவியாய் இருக்கும். நிலத்திற்கு ஈடாக உரிய முறையில் நிவாரணமும், வேலைவாய்ப்புகள்
போன்ற பரிகாரமும் வழங்க மே.வங்க அரசு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. சி.பி.எம்முக்கு
எதிராக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், பிஜேபி எல்லாம் தனித்தனியாகவும்,
இணைந்தும் இயக்கம் நடத்தின. கம்யூனிஸ்டுகள் என சொல்லிக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு
சோரம் போவதாகவும், மக்களை வஞ்சிப்பதாகவும் பிரச்சாரங்கள் நடந்தன. மக்களும் தங்கள்
நிலம் பறிபோவதை ஏற்காமல் போரட்டங்கள் நடத்தினர். இறுதியாக டாடாவின் நானோ திட்டத்தை
சி.பி.எம் தலைமையிலான மே.வங்க அரசு கைவிட்டது.
உடனடியாக
டாடாவின் நானோ திட்டத்திற்கு ’துடிப்புமிக்க குஜராத்தில்’ இடமளிப்பதாக மோடி
அழைத்தார். 2008ல் டாடா மே.வங்கத்தில் இருந்து குஜராத்துக்குத் தாவினார். ஒரு
புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான பூர்வாங்க காரியங்கள் முடிவதற்கு குறைந்தது
90லிருந்து 180 நாட்களாகும். மோடி இரண்டே நாட்களில் அனுமதியளித்தார். அதிவிரைவாக எல்லாம் நடந்தன.
ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் மிக எளிதாக குஜராத்தில் 1100 ஏக்கரில் டாடாவின் நானோ
கார் தொழிற்சாலை செயல்படத் துவங்கியது.
2009ம்
ஆண்டு நடந்த ‘ துடிப்புமிக்க குஜராத்’ உச்சி மாநாட்டில் ரத்தன் டாடா, “மோடியின்
தலைமையில் வேறெந்த மாநிலத்தையும் விட குஜராத் நிமிர்ந்து நிற்கிறது.” என உச்சி
முகர்ந்தார். 30000 கோடி திட்டத்திற்கு மானியம், 0.6 சதவீத வட்டிக்கு கடன், 15
சதவீத வாட் வரியிலிருந்து விலக்கு எல்லாம் சும்மாவா?
“குஜராத்
தங்க விளக்கைப் போல் ஜொலிக்கிறது. தொலைநோக்குப் பார்வையும், பயன் தரக்கூடிய
தலைமையும் கொண்ட மோடிக்கே இந்த பெருமைச் சேரும்” என்று முகேஷ் அம்பானி புகழ்ந்து
தள்ளினார்.
“ஒற்றை
ஆளாக மோடி குஜராத்தை சக்தி வாய்ந்த மாநிலமாக்கி இருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு
முன்னுதாரணமாக குஜராத் திகழ்கிறது” என்றார் அனில் அம்பானி.
“இந்தியாவே
குஜராத்தை திரும்பிப் பார்க்கிறது. வளர்ச்சியை நோக்கி செலுத்தும் திறன் இந்த அரசுக்கு
உள்ளது.” என்றார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார். (இவரும், இவரது கணவரும்தான் இப்போது 1875 கோடி பணமோசடி
வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.)
1980களில் மஞ்சள் நிற பஜாஜ்
ஸ்கூட்டர் வண்டியை அகமதாபாத் நகரத்தின் சாலைகளில் ஒட்டிக்கொண்டு குஜராத் அரசு
அலுவலகங்களுக்குள் கடன் வாங்கவும், தொழில் துவங்கவும் அலைந்து கொண்டு
இருந்த அதானி மோடியின் மிக நெருங்கிய நண்பராகி இருந்தார். அவரது கூரையைப் பிய்த்து
மோடி கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்தியாவின் கார்ப்பரேட்களில் ஒருவராக அதானி
வளர்ந்து கொண்டிருந்தார்.
மிக
இள வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான மோடிக்கு, இந்திய முதலாளித்துவத்தின்
ஆசியும்,. ஆதரவும் இல்லாமல் அதிகாரத்தைப் பெறவோ, தக்கவைத்துக் கொள்ளவோ முடியாது
என்பது தெரிந்திருந்தது. 2008ம் ஆண்டு குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் சாலைகளை
விரிவுபடுத்தும் நடவடிக்கையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பல இந்துக்
கோவில்களை இடித்திட உத்தரவிட்டார். அம்பானி, அதானி, டாட்டா உள்ளிட்ட இந்திய
முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவராய், அவர்களுக்கு மிகுந்த விசுவாசமானவராய் மோடி
தன்னை உறுதிபடுத்திக் கொண்டார்.
விகாஸ்,
விகாஸ் என சதா நேரமும், செல்லும் இடமெல்லாம்
மக்களிடம் வளர்ச்சி குறித்தே மோடி பேசினார். ”நாங்கள் வளர்ச்சியை
நம்புகிறோம். அந்த வளர்ச்சியின் நன்மைகள் கடைகோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என
நம்புகிறோம். ஒரு நல்ல காரியத்தை செய்கிறோம்.”
என்று மோடி பிரகடனம் செய்தார்.
24
மணி நேரமும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும் மாநிலம் என்றும், சாலைகள்,
போக்குவரத்து, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட மாநிலம் என்றும்
பெரும் அளவில் பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. வந்த செய்திகளையும்
தகவல்களையும் அப்படியே நம்பி ஃபார்வேர்டு
செய்து கொண்டு இருந்தனர் நகரத்து இளைஞர்கள். முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழலும்,
உள் கட்டமைப்பும் கொண்ட மாநிலமானது. பூவுலகின் சொர்க்க பூமி என்று வேற லெவலுக்கு குஜராத் கொண்டு செல்லப்பட்டது.
என்னதான்
குஜராத்தில் நடக்கிறது, ஏன் இப்படி குஜராத் முன்னிலைப் படுத்தப்படுகிறது என்று அரசியலறிந்தவர்கள்
கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்திருக்கிறதா,
மோடி சொன்னது போல் கடைகோடி மனிதனை வளர்ச்சியின் பலன்கள் சென்று அடைந்திருக்கிறதா
என ஆய்வுகளும், விவாதங்களும் ஒரு புறம் ஆரம்பித்தன.
வளர்ச்சி என்ற பெயரில் பொய்களும், நயவஞ்சகமும் அவிழ்த்து விடப்பட்டு
இருப்பதெல்லாம் தெரிய வந்தன.
குஜராத்தில்
தனிநபர் வருமானம் அதிகரித்து விட்டது என்று புள்ளி விபரங்கள் காட்டப்பட்டன. அதே
வேளையில் தனி நபர் கடனும் கடுமையாக அதிகரித்து இருந்தது. மோடி முதலமைச்சரான போது
குஜராத்திற்கு 6000 கோடி கடன் இருந்தது. அவர் முதலமைச்சராக இருந்த பத்து
வருடங்களில் இந்த கடன் தொகை 182000 கோடியாக வளர்ந்திருந்தது. அதாவது குஜராத்தில்
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 35000/- ருபாய் கடனோடுதான் உலகத்தை கண் திறந்து பார்க்க
வேண்டியிருந்தது.
குஜராத்தின்
நகர்ப்புறம் கண்ட வளர்ச்சிக்கும், கிராமப்புறம் கண்ட வளர்ச்சிக்கும் சம்பந்தமே
இல்லை. கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அதுகுறித்து
மோடியும், அவரது அரசும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது புள்ளி
விபரங்களில் அம்பலமானது.
நகர்ப்புறத்திலும்
முஸ்லீம்களும் இந்துக்களும் அண்டை வீடுகளில்
வசித்து வந்த நிலைமையெல்லாம்
காணாமல் போயிருந்து. கலவரங்களால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள்
வீடிழந்து, பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள்
மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பவே முடியவில்லை. அரசு அவர்களுக்கு எந்தவித
உதவியும் செய்யவில்லை. நகர்ப்புறங்களில் அவலமான பகுதிகளில் ஒதுக்கப்பட்டு அவர்களின்
வாழ்க்கை இருந்தது.
தொழில்
வளர்ச்சிக்காக கார்ப்பரேட்களுக்கு அள்ளி வழங்கிய அளப்பரிய சலுகைகளால், கல்வி,
வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு போதிய நிதியை அரசால்
ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ஊட்டச்சத்து குறைவால் இறக்கும் குழந்தைகளும்,
தாய்மார்களும் குஜராத்தில் அதிகமாயிருந்தனர்.
நோபல்
பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், “குஜராத் தொழில் ரீதியாக முன்னேறி இருந்தாலும்
சமூக ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறைந்த கல்வி, குறைந்த ஆயுட்காலம்,
அதிகரித்திருக்கும் ஆண் பெண் பாகுபாடு, சமத்துவமின்மை, மோசமான சுகாதார அமைப்பைத்தான்
காண முடிகிறது. தொழில்துறையில் காட்டும் அக்கறையும் வேகமும் மனித வளத்தின் மீது
காட்டப்படவில்லை. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது” என மிகச்சரியாக சுட்டிக்
காட்டினார்.
ஊதிப்
பெருக்கப்பட்ட ’துடிப்பு மிக்க குஜராத்’ குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பேச ஆரம்பிக்கும்போது நிலைமை கிட்டத்தட்ட கை மீறிப் போயிருந்தது. குஜராத்தைப் போல இந்தியாவை வளர்ச்சிப்
பாதையில் கொண்டு செல்ல மோடி ஒருவரால்தான் முடியும் என தொடர்ந்து கார்ப்பரேட்
ஊடகங்கள் ஊத ஆரம்பித்தன. மோடி என்றால் யாரென்று
அறியாதவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைத்தன.
மெத்தப் படித்த இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை என்ன ஏதென்று
தெரியாமலே மோடி என்றவுடன் கையைத் தூக்க வைத்தனர். அதற்கு ‘மோடி அலை’, ‘மோடி அலை’ என அவர்களே பேரும் சூட்டிக் கொண்டனர். 2002ம் ஆண்டு
குஜராத் குறித்த கொடும் நினைவுகள் எல்லாம் பழங்கதைகளாகவும், கெட்ட கனவாகவும்
மங்கிப் போயின.
வளர்ச்சி என்பது புனிதச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் ஆகிப் போனது. வளர்ச்சிக்கு எதிராக சிந்தித்தாலும், பேசினாலும் துரோகிகள் போல சித்தரிக்கப்பட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக அதன் பிரஜைகள் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் சித்தம் கொள்வதே அறம் என்பதாக நம்ப வைக்கப்பட்டு இருந்தது.
நாட்டின் வளர்ச்சி என்பது ஸ்டாக் மார்க்கெட்டின் குறியிடுகளோ, வளர்ச்சி விகிதம் குறித்த பொருளாதார புள்ளி விபரங்களோ அல்ல. அந்த நாட்டில் வாழும் அனைவரின் வாழ் நிலையையும்,. அந்த குடும்பங்களின் முன்னேற்றங்களையும் சேர்த்துதான் வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக கணக்கிட வேண்டும்.
மக்களையும், உழைப்பவர்களையும் விலக்கி வைத்து, அவர்களை ஒரு பொருட்டாக கருதாமல் வளர்ச்சி, வளர்ச்சி என முன் வைக்கப்படும் கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை மட்டுமல்ல, அயோக்கியத்தனமானவை. அதன்மூலம் அடைகிற அதிகாரம் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்களுக்கானது மட்டுமே.
இப்படி குஜராத்திலிருந்து தனது அதிகார எல்லையை இந்தியாவுக்கு வளர்த்துக் கொண்துதான் மோடியின் ‘வளர்ச்சி’.
தனி நபரை விட இயக்கமும், சித்தாந்தமும்தான் பெரிது என சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ் மோடியின் இந்த வளர்ச்சி குறித்து மௌனம் சாதித்தது. இந்துத்துவாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், இந்துத்துவாவுக்கான வெறியர்களை மேலும் உருவாக்கவும் மோடி அவர்களுக்குத் தேவைப்பட்டார். பிரதமர் பதவிக்காக காத்திருந்த அத்வானி ஓரம் கட்டப்பட்டார். மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
“அடுத்த பிரதமர் யார்?” பாராளுமன்றத் தேர்தல் என்றவுடன் இதுதான் முதல் கேள்வியாகவும், சுவாரசியம் நிறைந்த புதிராகவும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் களம் பற்றி உரையாடுகிற அனைத்து ஊடகங்களிலும் ’அடுத்த பிரதமர் யார்’ குரல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு ஆய்வுகளும் ‘அடுத்த பிரதமர் யார்’ என்பதைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அனைத்தும் கார்ப்பரேட்களின் பொம்மலாட்டம் என்பது மக்களின் சிந்தனைகளில் படிவதில்லை.
அந்த நாயகனை ‘நீங்கள்தாம் தேர்ந்து
எடுக்கப் போகிறீர்கள்’ என இரண்டு அல்லது மூன்று முகங்களை நீட்டுகிறார்கள். ‘அவர்
அப்படிப்பட்டவர்’, ‘இவர்
இப்படிப்பட்டவர்’ என பின்னணியில் குரல்கள் கேட்கின்றன. ஏற்பாடு செய்யப்பட்ட சிலர்
வேகமாக அந்த முகங்களை நோக்கி கை நீட்டுகிறார்கள்.
மக்களும் தங்களை அறியாமல் அந்த முகங்களை நோக்கி கைகளை
நீட்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த முகங்கள் பெரிது
பெரிதாய் ஆகின்றன. ஒன்று மிகப் பெரிதாகிறது. அவரே ‘அடுத்த பிரதமர்’ ஆகிறார். ஒரு
மாபெரும் தேசத்தின் மக்கள் தங்கள் மகத்தான ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டதாக பெருமை
பேசப்படுகிறது.