வம்சி புத்தக வெளியீடுகளும், பரிசளிப்பு விழாவும்

vamsi book release 01

 

எழுத்தாளர்கள் உதயசங்கர், மம்முது, மின்னல், வேல ராமமூர்த்தி ஆகியோரது புத்தகங்களுடன் வம்சி சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்று தேர்வு பெற்ற சிறுகதைகள் அடங்கிய ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ தொகுப்பு வெளியிட்டு விழாவும், அதை எழுதிய படைப்பாளிகளுக்கான பரிசளிப்பு விழாவும் சென்ற சனிக்கிழமை (3.3.2012) மாலையில், மதுரையில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை மதுரையில் ஏற்பாடு செய்வதிலும், ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்காற்றியவர் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன்.

 

vamsi book release 04

வம்சி சார்பில் ஷைலஜா அனைவரையும் வரவேற்கிறார்

 

தமிழ்  கலை இலக்கிய ஆளுமைகளில் பலரும்  அங்கிருந்தனர். மேலாண்மை பொன்னுச்சாமி, வேல ராமமூர்த்தி, எஸ்.ஏ.பெருமாள், கோணங்கி,  கலாப்பிரியா, எம்.எஸ்.சண்முகம், முருகபூபதி, பாரதி கிருஷ்ணகுமார், பவா.செல்லத்துரை, மம்முது,  உதயசங்கர், ஷைலஜா,  ஷாஜஹான், கிருஷி, நாறும்பூநாதன், என பலரும் பங்கு பெற்றனர்.வலைப் பதிவர்கள்  சீனு சார், தருமி, போகன், கார்த்திகைப் பாண்டியன், அசோக்குமார், செ.சரவணக்குமார், க.பாலாசி, மதுரை சரவணன், மதுரை வாசகன், நேசமித்ரன், சரவணன், ஆத்மார்த்தி அகியோர்  கலந்துகொண்டனர். இவர்களோடு இலக்கிய ஆர்வலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தர,  ஹோட்டல் சுப்ரீமின் அரங்கு கொள்ளவில்லை.

 

vamsi book release 05

 

vamsi book release 09

 

ஒவ்வொரு நூலுக்கும் குறைந்தது மூன்று பேர் பேச வேண்டியதிருக்க, விழாவினை வேகமாகவே நடத்த வேண்டியிருந்தது. ஓரளவுக்கு அதைப் புரிந்துகொண்டவர்களாகவே அனைவரும் பேசினர். எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் பற்றிய சுவையான நினைவோட்டங்களாகவே பெரும்பாலும் பேச்சுக்கள் அமைந்திருந்தன. இலக்கிய உலகின் பக்கம் தன்னைக் கொண்டு வந்து நிறுத்தியவர்களில் ஒருவரான உதயசங்கரின் எழுத்துக்கள் தொடர்ந்து தங்கள் வம்சி பதிப்பகத்திலிருந்து வருவது பெருமையாயிருக்கிறது என பவா குறிப்பிட்டார். தான் முதலில் கொண்டு வந்த சிறுகதைத் தொகுப்புக்கு 1988ல் ஒரு பதிப்பகம் கிடைக்காமல் சிரமப்பட்டதையும், இப்போது அந்த சிரமமில்லையென்பதையும் உற்சாகமாகச் சொன்னார் உதயசங்கர். மைக் முன்பு கலாப்ரியா பேச வரவும், அவரை செல் அழைக்க, எண்ணைப் பார்த்துவிட்டு “வண்ணதாசன் அழைக்கிறார். பேசாமல் இருக்க முடியுமா?” என மொத்தக் கூட்டமும் ரசிக்க போனில் பேசிவிட்டு, அப்புறம் நிகழ்வில் தனது பேச்சை ஆரம்பித்தார்.

 

vamsi book release 11

எழுத்தாளர் உதயசங்கர் பேசுகிறார். முருகபூபதி, மணிமாறன், நாறும்பூநாதன்,கிருஷி உட்கார்ந்திருக்கின்றனர்.

 

vamsi book release 12

கலாப்ரியா பேசுகிறார். முதுபெரும் தோழர் ஐ.மாயாண்டி பாரதி மேடையில் இருக்கிறார்

 

சிறுகதைத் தொகுப்பையும், பரிசளிப்பு விழாவையும் சீக்கிரமாகவே நடத்திவிடலாம் என வம்சி சார்பில் பவாவும், ஷைலஜாவும் விரும்பினர். பரிசளிக்கப்படும்போது அரங்கு நிறைந்திருக்க வேண்டும் என்பதுதான்  எங்கள் நோக்கம்.  ஆனால் ‘காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்’ தொகுப்பு குறித்த பேச வேண்டிய எழுத்தாளர் ஷாஜஹான்  வேறு ஒரு நிகழ்ச்சிக்கு திருப்பூர் சென்று, அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு மேல்தான் வந்து சேர்ந்தார். அந்த சமயம் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி புத்தக வெளியீடு துவங்கியிருந்தது.

 

vamsi book release 02

முன்னால் இருப்பவர் வேல ராமமூர்த்தி, பின்னால் இருப்பவர் கிருஷி

 

“எஸ்.ராமகிருஷணன், கோணங்கி, கந்தர்வன், பாரதி கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் ஆசான் இவர்” என எஸ்.ஏ.பெருமாள் அவர்களை, வேல ராமமூர்த்தி கதைகளை வெளியிட அழைத்தார் பவா. எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, நாடகக்கலைஞர் முருகபூபதி ஆகியோரின் தந்தையும் நாவலாசிரியருமான எம்.எஸ்.சண்முகம் அவர்கள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். வேல ராமமூர்த்தி கதைகளைப் பற்றி பேசாமல், அவரோடு இருந்த நட்பையும், கறிச்சோற்றின் ருசி குறித்தும் பாரதி கிருஷ்ணகுமார் அவருக்கே உண்டான ஆளுமையோடு பேசினார்.

 

vamsi book release 10

கூட்டத்தில் பாரதி கிருஷ்ணகுமார்…

அதற்குப் பிறகு, நாங்கள் மேடையேறினோம். அரங்கத்தில் ஆங்காங்கே காலி இருக்கைகள் தென்பட்டன. எழுத்தாளர் வேல ராமமூர்த்தி  புத்தகம் வெளியிட, நமது பதிவர் செ.சரவணக்குமார் பெற்றுக்கொண்டார். மொத்தம் வெற்றி பெற்ற 17 பதிவர்களில்  போகன், அசோக்குமார், க.பாலாசி, கார்த்திகைப் பாண்டியன் ஆகிய நான்கு பேரே நேரில் வந்திருந்தனர். நிலாரசிகனுக்குப் பதிலாக ஆத்மார்த்தி பரிசை பெற்றுக்கொண்டார்.

 

book cover

கூட்டம் குறைந்திருந்த அந்த வேளை எனக்கு சிறு வருத்தத்தையே ஏற்படுத்தியது. நமது அருமையான பதிவர்கள் குறித்தும், இணையத்தில் வரும் அற்புதமான எழுத்துக்களையும் இதர எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் சொல்ல வேண்டிய தருணம் அப்படி வாய்த்திருக்கக் கூடாது. ஒரு ஐந்து நிமிடத்தில், என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். “இங்கு இருக்கும் பல எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கும், அச்சு உலகுக்கும் நன்கு அறிமுகமானவர்கள். ஆனால் இந்த இணைய எழுத்தாளர்கள் அப்படியில்லை. அவர்களை நாம் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. ஆனால் அங்கு அற்புதங்களும், புதுமைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களும் ஒருநாள் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களாக அடையாளம் காணப்படுவார்கள்.” இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன். சரியாகச் சொன்னேனா என்று தெரியாது.

 

vamsi book release bloggers

பதிவர்கள் அசோக்குமார், மாதவராஜ், க.பாலாசி, போகன், செ.சரவணக்குமார், கார்த்திகைப் பாண்டியன்

 

விழா மிகுந்த சினேகமாகவும், நெருக்கமாகவும் இருந்தது. ஆற அமர  உட்கார்ந்து உரையாட முடியாவிட்டாலும் சந்தோஷமான முகங்களோடு சிரிக்கும், கையசைக்கும் சில கணங்கள் உயிர்ப்பானவையாக இருக்கின்றன. இனிய நினைவுகள் நிழலாடும் ஒரு நிகழ்வு.

 

vamsi shields

பி.கு:
முதலிரண்டு பரிசு பெற்ற ரிஷான் ஷெரிப், கிரிதரன், அப்பாதுரை ஆகியோர் வரவில்லை. அப்பாதுரையும், ராகவனும் தங்கள் பரிசுத்தொகையை அவர்கள் விரும்புகிற அமைப்புக்கு வழங்கிவிடச் சொல்லியிருக்கிறார்கள். மற்ற பதிவர்கள் வம்சியை (email: kvshylajatvm@gmail.com, cell: 91 9444867023) தொடர்பு கொண்டு, தங்கள் பரிசுத்தொகையை எந்த முகவரிக்கு, எப்படி அனுப்ப வேண்டும் என உடனடியாக தெரிவிக்க வேண்டுகிறோம்.

கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பின் நண்பருக்கு,

    விழா சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள்!

    //மொத்தம் வெற்றி பெற்ற 17 பதிவர்களில் போகன், அசோக்குமார், க.பாலாசி, கார்த்திகைப் பாண்டியன் ஆகிய நான்கு பேரே நேரில் வந்திருந்தனர்.//

    இந்த விழா நடந்தது பற்றி உங்களது இந்தப் பதிவின் மூலமாகத்தான் அறிய முடிந்தது.

    மற்றப்படி விழாவில் கலந்து கொள்ளும்படியோ, இவ்வாறான ஒரு விழா இந்தத் திகதியில் நடைபெற இருப்பது குறித்தோ, எந்தவொரு மின்னஞ்சலோ, அழைப்பிதழோ கூட எனக்கு வரவில்லை.

    இவ்வாறான நிலையில் நான் எவ்வாறு சமூகமளிக்க முடியும்? அழைப்பிதழோ அல்லது இவ்வாறானதொரு விழா, இந்தத் திகதியில் நடைபெற இருப்பதாகவோ முன்னரே ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் சமூகமளிக்க முயற்சித்திருப்பேன்.

    //முதலிரண்டு பரிசு பெற்ற ரிஷான் ஷெரிப், கிரிதரன், அப்பாதுரை ஆகியோர் வரவில்லை. //

    உங்களது பதிவில் இந்த வரிகளில் காணப்படும் என்னைக் குற்றம் சாட்டும் தொனி, வருத்தத்தைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விழா. சினிமா கலைஞர்கள், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அளவுக்கு நம்முடை இலக்கிய மேடைகள் வரவேற்பு பெறவில்லை என்பது வருத்தத்துக்குரியது. அருமையான பதிவு. அழகான புகைப்படங்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தோழர்! அமைதி வழியில் 'கத்தியின்றி இரத்தமின்றிப்' போராடி வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இராசபாளையத்தில் மீண்டும் காங்கிரசுக்காரர்களும் பாரதிய சனதாவும் முயன்றுள்ளனர். இம்முறையும் உங்கள் கட்சி அதைக் கண்டித்ததாகத் தெரியவில்லை! சென்ற முறை இதே கேள்வியைக் கேட்ட போது "தீக்கதிரில்" கண்டனத்தைப் பார்த்த நம்பிக்கை என விடை சொல்லியிருந்தீர்கள்! அந்த நம்பிக்கையோடு இம்முறையும் தீக்கதிரிலாவது உங்கள் கட்சி கண்டித்திருந்தால் இணைப்பைத் தெரியப்படுத்த பணிவுடன் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. "நடிகர் விஜய் வீடு மீது தாக்குதல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா?" (http://www.theekkadhir.com/theekkadhir/art-lit/016) என்று கவலைப்படும் உங்கள் கட்சிக்கு அமைதி வழியில் மக்களை வழிநடத்தும் உதயக்குமாரின் பள்ளிச்சுவர் இடிக்கப்பட்டது தெரியாமல் போனது ஏனோ தெரியவில்லை! இப்படி இந்து முன்னணிக்கும் பா.ஜ. வுக்கும் காங்கிரசுக்கும் வெளியில் இருந்து மறைமுக ஆதரவு கொடுப்பதன் பெயர் 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டா" என்று எனக்குத் தெரியவில்லை என்பதை எண்ணி எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //அமைப்பைத் தாண்டியும் ஒரு நியாயவாதியாக இருக்க எனக்கும் ஆசைதான்.// என்று முடித்துக் கொண்டார் உங்கள் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன். கூடங்குளம் போராட்டத்தில் நீங்களாவது அமைப்பைத் தாண்டியும் ஒரு நியாயவாதியாக இருப்பீர்களா? இல்லை அமைப்பு - கூடங்குளம் அணு உலை எதிர்ப்பைப் பற்றிச் சொல்லும் நியாயங்களையாவது எடுத்துச் சொல்வீர்களா? மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டுத் தாங்கள் இயங்குவீர்கள் என்னும் நம்பிக்கையுடன்
    முத்து

    பதிலளிநீக்கு
  6. இதில் கலந்து கொண்டவர்கள் எல்லோரையும் நேரில் சந்திக்க ஆசை தான். வாசித்து திருப்தி பட்டு கொள்ள வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  7. @எம்.ரிஷான் ஷெரீப்!
    தங்களைக் குற்றம் சுமத்தும் தொனியில் அதைச் சொல்லவேயில்லை. அப்படி இருந்தால்
    மன்னிக்க வேண்டுகிறேன்.

    இந்த நிகழ்வைப் பற்றி தீராதபக்கங்களில் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், வம்சி சார்பில் அனைவரது இ-மெயில் முகவரிக்கும் அழைப்பிதழை அனுப்பி வைக்கவும் சொல்லியிருந்தேன். அவர்களும் அனுப்பி வைத்ததாய் சொன்னார்கள். நமது நண்பர்கள் சிலருக்கு அழைப்பிதழ் கிடைத்ததாகவும் சொன்னார்கள். சிலர் வரமுடியவில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்கள். தங்களுக்கு இப்படியொரு நிகழ்வே தெரியாது என்பது எனக்கு மிகுந்த குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வருந்துகிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  8. விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. இணைய எழுத்துகளை பரவலாக்க தாங்கள் மேற்கொள்ளும் முயற்சி மெச்சத்தக்கது.

    உங்கள் முயற்சி தொடர மென்மேலும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. விழா சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள். நேரில் வரமுடியவில்லை என்பதில் எனக்கு மிகுந்த வருத்தம். தொகுப்புக்கும், பதிவுக்கும், படங்களுக்கும் நன்றி. அட்டைப்படம் அட்டகாசம். புத்தகம் வணிக ரீதியிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. நேரில் செல்ல முடியாத குறையை நிவர்த்தி செய்த பதிவுகள்!

    பதிலளிநீக்கு
  11. எப்போதுமே பதிவர்களுக்கான தங்களின் மெனக்கெடல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் உரையிலும் அதை தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி..

    நிகழ்ச்சி சிறப்பாகவே நடைபெற்றது. எந்தவொரு மேடை நிகழ்ச்சியும் இறுதிகட்டத்தையடையும்போது ஏற்படுகிற வெறுமைதான அன்றும், வேறொன்றுமில்லை. ஆனாலும் கன கச்சிதமாக நிகழ்ச்சி முடிந்தது.

    தங்களையும் மற்ற பதிவர்களையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. உங்கள் இருவரின் கேள்விப்பட்ட ஆர்ப்பரிப்பை (பவா, மாதவராஜ்) நேரில் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வம்சி புத்தகவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தமிழின் முக்கிய எழுத்தாளுமைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையில் இந்நிகழ்வை நடத்திய வம்சி பதிப்பகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. /////வேல ராமமூர்த்தி கதைகளைப் பற்றி பேசாமல், அவரோடு இருந்த நட்பையும், கறிச்சோற்றின் ருசி குறித்தும் பாரதி கிருஷ்ணகுமார் அவருக்கே உண்டான ஆளுமையோடு பேசினார்./////
    அய்யா...
    வேலராமமூர்த்தியின் சிறுகதைகளைத் தனித்தனியாக குறிப்பிடாத பாரதிகிருஷ்ணகுமார் அவரது சிறுகதைகள் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுடைய ஒற்றுமை குறித்தும் அவற்றின் அவசிய்ம் குறித்தும் முதலாவதாக எழுதப்பட்டன என்றும்,அத்தகைய தன் கதைகளுக்காக திரு வேலராமமூர்த்தி அவர்கள் கையை தலையை வெட்டிவிடுவதாக சில சமூகவிரோத சக்திகளிடமிருந்து மிரட்டல்களை சந்தித்தபோதும் தன் மன உறுதியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து திரு.வேலராமமூர்த்தி அவர்கள் தன் கதைகளை எழுதி வந்தமையையும் குறிப்பிட்டார்.திரு.வேலராமமூர்த்தியின் ஒட்டுமொத்த சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை தீரவாசித்த பிறகு பேசுவதாகவே திரு.பீகே அவர்களின் அன்றைய பேச்சு இருந்தது.ஒருவேளை அவற்றை நீங்கள் அன்றைய விழாவை பொறுப்பேற்று நடத்திய பரபரப்பினால் கவனியாது இருந்திருக்கக் கூடும்.வெறும் கறிச்சோற்றை பற்றிய,இருவரிடையிலான நட்பைப் பற்றிய பேச்சு அல்ல அது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

    ஆத்மார்த்தி

    பதிலளிநீக்கு
  15. விழாவுக்கு வர இயலவில்லை... காரணம் நான் இருப்பது அபுதாபியில்...

    விழா சிறப்பாக நடைபெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    இது போன்ற முயற்சிகள் தொடரட்டும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. அன்பின் மாதவராஜ் - வெளிநாட்டில் உள்ளதால் இந்த விழாவுக்கு வர இயலாது என முன்னர் வம்சி பதிப்பக நண்பர்களுக்கு மடல் அனுப்பியிருந்தேன். நேரில் வர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தபோதும், விழா நன்றாக நடந்ததில், புகைப்படங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!