வீடு என்ன ஸ்கூலா?

nikhil 01

 

வாஷ் பேசின் முன்னால் நின்று கண்ணாடியை எட்டிப் பார்த்து பிரஷ் துலக்கும் போது ஈயென்று சிரித்துப் பார்த்தேன். “சும்மா ரெண்டு தேய் தேய்ச்சுட்டு வாயக் கொப்பளிக்காம அப்படியே வந்துராத” என்பது கேட்டது. இந்த அம்மா எங்கிருந்தாலும் என்னைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள். எரிச்சல் வந்தது. திரும்பவும் ஹாலுக்கு வந்து சோபாவில் படுத்துக் கொண்டேன்.

 

பேப்பரில் இருந்து தலை நிமிர்ந்த  அப்பா, “சித்தார்த், குட்மார்னிங்” என்றார்.

 

“ம் ” என்றேன்.

 

“குட்மார்னிங் சொன்னா குட்மார்னிங்னு சொல்ல மாட்டியா. அது என்ன ம்முன்னு சொல்ற. இப்படி சொல்லக் கூடாதுன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்”.  அப்பா குரல் கண்டிப்பாய் ஒலித்தது.

 

“இப்படித்தாங்க. நாம என்ன சொன்னாலும் காதுலயே வாங்க மாட்டேங்கிறான். அவஞ் செய்றதயே செய்றான்.  நல்ல புத்தி கெடையாது இவனுக்கு”. அம்மா சமையலறையிலிருந்து பாய்ந்து வந்தாள். எதுவும் நடக்கலாம் என வேகமாக எழுந்து உட்கார்ந்தேன்.


 
“சரி சரி. விடு. சித்தார்த்!  குட்மார்னிங்னு அழகாச் சொல்லணும். என்ன?” என்றார் அப்பா. சரியென்பதாய் தலையாட்டினேன்.

 

“இந்த தலைய ஆட்டுறதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லை. நீங்க வேண்னா பாருங்க.  நாளைக்கும் ம்முன்னுதான் சொல்வான். மொதல்ல அப்பாக்கு குட்மார்னிங் சொல்லுடா.” அம்மா அருகே வந்து நின்றாள்.

 

பதற்றத்துடன் வேகமாய் “குட்மார்னிங்பா” என்றேன். கொஞ்ச நேரம் என்னையும், கண்களையும் உற்றுப் பார்த்துவிட்டு அம்மா சென்றாள். அப்பா என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார். உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டேன். இந்த வீட்டில் என்ன செய்தாலும் தவறாகவே இருக்கிறது. இங்கு மட்டுமில்லை. ஸ்கூலிலும்தான்.

 

அம்மா தந்த காபி டம்ளர் சூடாயிருந்தது. பக்கத்தில் இருந்த கம்யூட்டர் டேபிளில் வைத்தேன். “குடிச்சுரு. ஆறிப் போயிரும்” என்று சொல்லிக்கொண்டே போனாள்.

 

எடுத்துக்கொண்டு பின்னாலேயே சென்றேன். “ஏம்மா,  காலைலயிருந்து கோபப்படுற.... நாஞ் சின்னப்பையந்தான..” என்றேன்.

 

“ஆமா. சின்னப் பையன். ஃபோர்த் முடிச்சு ஃபிஃப்த்  போகப் போற. இன்னும் ஒரு நல்ல பழக்கம் பழக மாட்டேங்குற”

 

“பழகிட்டுத்தான இருக்கேன்” முணுமுணுத்தேன்.

 

“என்ன பழகிட்ட. ஸ்கூல்ல ஒங்க மிஸ்ஸுக்கு குட்மார்னிங் சொல்வியா இல்லியா. ஆனா அப்பாவுக்கு, அம்மாவுக்குல்லாம் சொல்ல மாட்டேங்குற?”

 

“வீடு என்ன ஸ்கூலா?”

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வீடு என்ன ஸ்கூலா?"

    நியாயமான கேள்விதான்...

    பதிலளிநீக்கு
  2. ஆரம்ப ஸ்கூலே வீடு தானே!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவ்

    நீண்ட நாளைக்குப் பிறகு மீண்டும் களை கட்டுகிறது உங்களது சொற்சித்திரங்கள்..

    இந்த ரசமான உரையாடலை குறும்படமாகவே செய்யுங்களேன்.
    ஒன்றே முக்கால் நிமிடங்கள் வந்தாலும் போதும்..

    டமால் டிமீல் தடாலடி இசை எதுவும் குறுக்கிடாமல் அந்த கடைசி
    ஷாக் வசனம் இயல்பாக அது இப்போது வந்திருப்பது போலவே வரட்டும்
    உறைக்கிற மாதிரி!

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  4. வீட்டுலதான் ஆசிரியர் இருக்கங்களே !!! (அம்மா ) பள்ளி ஆசிரியை (அப்பா) கதை ஆசிரியர் !!!!

    பதிலளிநீக்கு
  5. @ இராஜராஜேஸ்வரி!
    நன்றி.


    @ அமைதிச்சாரல்!
    நன்றி.



    @kovaikkavi!
    குழந்தைகளுக்கு ஸ்கூல் பிடிப்பதில்லை. வீடு பிடிக்கிறது.


    @venu's pathivukal !
    நன்றி தோழா. இப்படி எவ்வளவு நம் வீடுகளில் உரையாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன.


    @swarnavelkumar!
    வீட்டில் டீச்சரும் இல்லை. ஸ்டூண்ட்டும் இல்லை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!