“அறுவடை முடிந்த வயக்காட்டில் நான் ஆண்பிள்ளைகளோடு சேர்ந்து கைப்பந்து விளையாடினேன். கிட்டிப்புல் விளையாடினேன். தூண்டில் போட்டு மீன் பிடித்தேன். மழைவெள்ளத்தில் பெரிய வள்ளத்தைச் செலுத்திப் போயிருக்கிறேன். மிகவும் உயரமான மாமரத்தைப் பிடித்து ஏறியிருக்கிறேன். பெண் என்பதையே மறந்து போனேன். அதனால்தானோ என்னவோ பெண்தானேயென்ற இளக்காரக் குற்றச்சாட்டு பின்னால் என்னைப் பாதிக்கவில்லை.”
தான் எழுத வந்த கதை பற்றிச் சொல்லும்போது மலையாள எழுத்தாளர் கிரேஸி இதைக் குறிப்பிடுகிறார். அதன் பரிமாணங்களை அவரது கதைகளை வாசிப்பவர் அறிய நேரிடலாம்.
அவரது கதைகள் சமூகத்தை அதிர்வுகளுக்குள்ளாக்குகின்றன. வாசிப்பவரை அலைக்கழிக்கின்றன. யாராலும் அவரது கதைகளை எளிதில் வாசித்துக் கடந்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அடி ஆழத்திலிருந்து பெருமூச்சுக்களும், புன்னகைகளும் வெளிப்படுகின்றன. எழுத்தாளர் கிரேஸி எழுதிய கதைகளை தமிழில் எழுத்தாளர் உதயசங்கர் ‘நட்சத்திரம் விழும் நேரத்தில்’ என மொழியாக்கம் செய்திருக்க, வாசல் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அவரைப் பற்றியும், அவரது கதைகள் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாகப் பேசுவோம். அதற்கு முன்பாக கிரேஸியின் ஒரு சிறிய கதை இங்கே-
ரத்தமும் மாமிசமும்
கர்த்தரிடம் அன்பு முற்றிப் போனதால்தான் குஞ்சுமேரி அவருடைய மனைவியானாள். சிறகுகள் இல்லையென்றாலும் அவள் சிஸ்டர் ஏஞ்சல் மேரியாகிவிட்டாள். எல்லா இரவுகளிலும் கர்த்தர் சுவர்க்கத்திலிருந்து செம்மறியாட்டின் ரோமங்கள் போல் மிதக்கிற மேகங்களின் துணையோடு அவளுடைய உறக்கத்திலிருந்து இறங்கி வந்தார். அவளுடைய இதயம் கர்த்தர் உதடுகளிலிருந்து உதிர்மணிகளைப் போலப் பொழிகிற வசனங்களைக் கொத்தியெடுத்துக் கொண்டு அதிகாலையின் பரிசுத்தத்தை நோக்கிப் பறந்து செல்கிறது.
படிப்பில் கெட்டிக்காரியானதால் சபை நடத்துகிற காலேஜில் ஆசிரியையானாள் சிஸ்டர் ஏஞ்சல் மேரி. டிபார்ட்மெண்ட்டிற்குள் வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்ததும் சிஸ்டர் ஏஞ்சல்மேரி அதிர்ந்து போய் நின்றாள்.
அங்கே கர்த்தர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இடதுகால் விரல்களை ஊன்றி கைகளை லேசாய் விரித்துக்கொண்டு முன்னால் சாய்ந்து நின்ற சிஸ்டர் ஏஞ்சல்மேரி ஒரு அன்னப்பறவையை நினைவுபடுத்தினாள். வெண்மையின் நிழல் கண்களில் குத்திய போது கர்த்தர் தான் வாசித்துக்கொண்டிருந்த தடிமனான புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தினார். கர்த்தருடைய அமைதியான நீலக்கண்களிலும், கருத்த முந்திரிப் பழக்குலைகளைப் போல தோள்களை உரசிக்கொண்டு கிடக்கிற தலைமுடிச் சுருள்களிலும் சிஸ்டர் ஏஞ்சல் மேரியின் பார்வை ஆச்சரியத்துடன் பறந்து சென்றது.
ஆர்வம் தாங்காமல் சிஸ்டர் ஏஞ்சல்மேரி, முன்னால் சென்று அவள் கையில் எடுத்த கர்த்தருடைய கைகளில் ஆணித்துளைகளைத் தடவினாள். கர்த்தர் அமைதியான புன்னகையோடு சொன்னார்: “காலம் எல்லா முறிவுகளையும் ஆற்றிவிடும்”
மாடப்புறாக்களைப் போன்ற மென்மையான இளம் சூடுள்ள அந்தக் கைகளில் ஆசையோடு முத்தமிட்டு கீழே வைத்த சிஸ்டர் ஏஞ்சல்மேரி பொங்கி வழிகிற கண்களைத் துடைத்தாள்.
அன்று இரவு சிஸ்டர் ஏஞ்சல்மேரி உறங்கவில்லை. கர்த்தர் ஆகாயத்திலிருந்து இறங்கி வரவுமில்லை.
அடுத்தநாள் மன உளைச்சலோடு சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய அறைக்குச் சென்றாள். கர்த்தருடைய மேலங்கியை உருவி ஒற்றை ரோமமும் இல்லாத நெஞ்சில் கருணையின் கனல் போல் ஜொலிக்கின்ற திருஹிருதயத்தைத் தடவினாள். அப்போதும் கர்த்தர் அமைதியாகச் சிரித்துக்கொண்டே சொன்னார்: “இதயத்திற்குப் போகிற வழி சரீரத்தினூடாகத்தான்”.
சிஸ்டர் ஏஞ்சல்மேரி கர்த்தருடைய திருமேனியில் சாய்ந்தாள்.
//அவரது கதைகள் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்.//
பதிலளிநீக்குi am waiting...
nalla pakirvu...vaalththukkal
பதிலளிநீக்கு//அவரைப் பற்றியும், அவரது கதைகள் பற்றியும் இன்னொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்//
பதிலளிநீக்குநல்ல எழுத்தாளர் குறித்த பகிர்வு. பேசுங்கள் அண்ணா... காத்திருக்கிறோம்.