“ரெயிலைக் காணோம்”

train

உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுணுக்குச் சென்று  ரெயிலில் முன்பதிவு செய்து வைத்தேன். “ரெயிலைப் பார்க்க வேண்டும், ரெயிலைப் பார்க்க வேண்டும்”  என அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக்கொண்டு இருந்தாள். ‘இன்னும் எத்தனை நாளிருக்கு’ என  ஒவ்வொரு காலையிலும் ரெயிலைப் பார்க்கக் கேட்டுக்கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை.

 

போகும் நாளன்று சீக்கிரமே ரெயில் நிலையத்திற்கு சென்று விட்டிருந்தோம்.  தண்டவாளங்களைப் பார்த்தபடி, ‘இதிலா ரெயில் வரும்’ என ஆச்சரியத்தோடு கேட்டாள். ரெயில் வரும் திசையைக் கேட்டு, அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். இரைச்சலோடு தூரத்தில் சின்னப் புள்ளியாய்  இருந்து  மெல்ல மெல்ல பெரிதாவது அதிசயம் போலிருந்திருக்க வேண்டும். அதை நோக்கிக் கையைக் கையை நீட்டியவளைத் தூக்கி  வைத்துக் கொண்டேன்.  ‘தடக்’ ‘தடக்’கெனக்  கடந்து நின்ற அந்த நீண்ட  இயந்திரம் பார்த்து  ‘ரெயில் ’, ‘ரெயில்’ எனக் கத்தினாள்.

 

ரெயிலின் உள்ளே ஏறிக் கொண்டோம்.  உட்கார இடம் பார்ப்பதில், சாமான்களை  பத்திரமாக வைப்பதில் கவனமாக இருக்கும்போது குழந்தை எதேதோ பேசிக்கொண்டு இருந்தது. சில நிமிடங்களில் ரெயில் புறப்பட்டது. ‘நாம இப்போ ரெயிலில் போறோம்’ என்றேன் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் மகளைப் பார்த்து.  ‘ரெயிலைக் காணோம்’ என வெளியேக் கை நீட்டியபடி அவள் அழ ஆரம்பித்தாள்.

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பு மாதவ்

    அருமையான பதிவு...

    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    என்பது நினைவுக்கு வந்தது....

    ரயில் என்பதும், விமானமும், யானையும்
    எந்த வயதிலும் அளப்பரிய வியப்பூட்டுபவை..
    அதுவும் குழந்தைகள் ரயிலின் பிரும்மாண்டத்தில் தாங்கள் மனத்தை இழப்பார்கள்
    விழுங்க முடியாத ஒரு பெரிய கொய்யாப் பழத்தை வாயில் போட்டுக் கொண்டு திணறுவது போல்
    திக்கு முக்காடி ரசித்துக் கொண்டே இருப்பார்கள்...
    சிறு வயதில் ஏற்படும் மயக்கங்களின் திசையை யார் கண்டெடுப்பது
    பேருந்தில் பயணப்படும் இளவயதுக் காலங்களில் சீட்டில் முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் சாய்ந்து
    வாயில் சத்தம் கொடுத்தபடி பெரிய சாலையில் அந்த வாகனத்தை நானே இயக்குவது போல் நான் பலமுறை
    உணர்ந்திருக்கிறேன்.

    ரயிலைப் பார்ப்பது வெறும்,
    அதில் ஏறி அமர்ந்ததும் அதன் காட்சி இன்பத்தை இழப்பது வேறு..
    இந்த இரண்டின் உளவியல் கூறுகளையும், குழந்தைப் பருவ ரசனைகளையும்
    எளிதாகச் சொல்லி இருந்தீர்கள்..வாழ்த்துக்கள்.


    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  2. இளம்வயதில் இருந்தே ரயில்பயணம்தான் நெருக்கமானது. பார்க்க பார்க்க சலிக்காத விசயங்கள் யானை,கடல்,ரயில்!
    என்னை ஒருமுறை ரயில் நிலையத்தில் தொலைத்துவிட்டார்கள், இன்றுகூட ரயில்நிலையம் சென்றால் அந்த ஞாபகம்தான் வரும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கவித்துவமான அழகு.. உணர்வுகளை வார்த்தையாக கோர்க்கும் உங்கள் லாவகம் பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மாதவ்,
    எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
    தல்ஸ்தோயின் ஒரு சிறுகதை நினைவுக்கு வந்தது. அந்தச் சிறுகதையை இந்தப் பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.
    ‘ரம்பத்தை நக்கிய பல்லியின் நாக்கிலிருந்து ஒழுகிய ரத்தத்தை, இது ரம்பத்தின் ரத்தம் என்று எண்ணி தொடர்ந்து நக்கி தன் நாக்கைப் புண்ணாக்கிக்கொண்டது பல்லி.’

    பதிலளிநீக்கு
  5. @suryajeeva!
    புரிதலுக்கு நன்றி.

    @வானம்பாடிகள்!
    ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. @venu's pathivukal!

    தோழா, எவ்வளவு அழகும், விளக்கமும்! நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @Rathnavel !
    நன்றிங்க.

    @சித்திரவீதிக்காரன்!
    இதுபோன்ற அற்புதங்களை தொலைத்துவிட்டுத்தான் மனிதன் வளர்கிறான்!

    ஓலை!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. @kaiyedu!
    ரம்ப சந்தோஷம். புரிதலுக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    @சே.குமார்!
    நன்றி.


    @சென்னைப் பித்தன்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. @ரமேஷ் வைத்யா !

    உங்களது பின்னூட்டம், இந்தப் பதிவுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன.

    எப்படியிருக்கீங்க?

    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பிரமாதம்
    இதை எழுதுவதற்குக் குழந்தையாகவேண்டுமே.
    எப்படி மாதவ்?
    தோழமையுடன்
    நா வே அருள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!