குமாரபுரம் ஸ்டேஷன் கனவு

kumarapuram 01

உதயசங்கர், கிருஷியுடன்…

 

குமாரபுரத்தில்தான் இப்போது ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிவதாக எழுத்தாளர் உதயசங்கர் சொன்னதும்,  “கு.அழகிரிசாமியின்  குமாரபுரம் ஸ்டேஷனா!” என்றேன். சிரித்துக்கொண்டே “அதேதான்” என்றார்.  ஒருதடவை அங்கு சென்று கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வரவேண்டும் என்று ஆசை வந்தது. ‘பவுர்ணமியன்று வாருங்கள். அப்படியொரு தனிமையும் ஏகாந்த மனநிலையும்  வாய்க்கும்” என்றார் அவர். கவிஞர் கிருஷியிடம் இதைப் பற்றி போனில் சொன்னதும், “சார்வாள் நானும் வர்றேன்” என்றார். இப்படித்தான் குமாரபுரம் செல்வது முடிவானது.

 

நேற்று பவுர்ணமி. சாயங்காலத்திலிருந்தே மேகமாய் இருந்தது. சின்னதாய் மழை பெய்துவிட்டும் கலையாமல் ஒரு முடிவோடு இருந்த மாதிரி இருந்தது. கோவில்பட்டி திருநெல்வேலி நெடுஞ்சாலையில், நாலட்டின்புதூர் தாண்டியதும்  இடப்பக்கம் குமாரபுரம் என குறுஞ்சாலை பிரிந்தது. பத்து நிமிடங்களுக்குள் ஒரு ரெயில்வே கேட் வந்தது. அதனையொட்டி நான்கைந்து டியூப் லைட்டுகள் வெளிச்சத்தில் அந்தக் கட்டிடம் மரங்கள் சூழ நின்றிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறெந்தக் கட்டிடமும் இல்லை. கைகாட்டியின் சிவப்பு வெளிச்சங்களைத் தவிர, சின்னச் சின்னப் புள்ளி வெளிச்சங்கள் மிகுந்த இடைவெளியோடு வெகுதூரத்தில் தெரிந்தன. நிலவைக் காண முடியவில்லையென்றாலும்  அதன் ரசம் ஊறிய வெளியெல்லாம் புலனாகியது. இரவின் நிழல் உருவமாய் மயங்கிக் கிடந்தது குறுமலை .  ‘பிளாட்பாரத்தில் நான்கைந்து மரங்கள் இருந்தன’ என்று கு.அழகிரிசாமி எவைகளைச் சொல்லியிருப்பார் என பார்த்துக்கொண்டு இருந்தேன்.

 

உதயசங்கருக்கு நேற்று நைட் ஷிப்ட் கிடையாது.  எங்களுக்காக காத்திருந்தார். “வந்தாச்சா” என்று சிரித்தார்.   “அண்ணே , இங்க வண்டியேற இறங்க யாராவது வருவாங்களா?” என்று அவரிடம் கேட்டான் கார்த்தி.  “நாப்பது வருசத்துக்கு முன்னால கு.அழகிரிசாமி கேட்டது இது. இங்க வர்றவங்க எல்லாரும் கேட்டுக்கிட்டு இருக்காங்க.  கிராஸிங் சமயத்துலதான்  இங்க வண்டிகள் நிற்கும்” என்றார். 

 

நைட் ஷிப்டுக்கு வந்திருந்த பன்னீர் செல்வ பாண்டியனும் எங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்தான். “இருபது வருசத்துக்கு முந்தி இதே ஸ்டேஷனில் வேலை பார்த்திருக்கேன். அப்ப இந்த இடம் பூராவும் கொத்தமல்லி, தட்டாம் பயிறு, கடலைன்னு ஒரே பச்சை பசேல்னு இருக்கும். இப்ப எல்லாம் போச்சு அப்பல்லாம் வெவசாயத்துக்கு இங்க ஆட்கள் வரப் போக இருப்பாங்க “ என்றார்.  ஸ்டேஷன் எதிரே  கருவேல மரங்களும் உடை மரங்களும் நின்றபடி எங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தன.

 

கவிஞர் கிருஷியும் திருநெல்வேலியிலிருந்து வந்து சேர்ந்தார்.  “நிறைந்திருக்கும் இந்த அமைதியே  ஒரு சங்கீதம்  போல இருக்கு” என்றார்.  கு.அழகிரிசாமிக்கு பிடித்து இருந்த இசைப் பைத்தியமும்  அவருக்கு தெரிந்திருக்க வேண்டும்.  தாடியைத் தடவிக்கொண்டே கிருஷி பேசுவதும், கேட்பதும் ஒரு அழகு. பிடித்தமான பானத்தை சுவையோடு மெல்லப் பருகுவது போல இருக்கும்.  ஸ்டேஷனை சுற்றி வந்தோம்.  ரெயில்வே கிராஸிங்  சாலையில் அப்படியே நடந்து சென்றோம். அங்கங்கு உட்கார்ந்து கொண்டோம். எல்லாம் பேச்சின் திசையிலேயே நடந்தது.

 

kumarapuram 02

 

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எல்லாம் போன பிறகு, இரவு பதினோரு மணிக்கு மேல்தான் நிலா வந்தது. கு.அழகிரிசாமிதான் குறுமலையாய் இருக்கிறார் என அப்போது தெரிந்தது. கரிசல் மண்ணில் ஒரு விழா எடுக்க வேண்டும் அவருக்கு.  அந்தக் கனவை மீண்டும் எங்களுக்கு குமாரபுரம் ஸ்டேஷன் தந்திருந்தது. 

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. கனவு நினவாயிடுச்சு இப்ப. நீங்களும் நிவர்த்திக்கு ஒரு குமாரபுரம் பார்த்தாச்சு. :-)).

  வெளிச்சத்தில் ஒரு படமும் போட்டிருக்கலாம். Nice. Thanks for sharing.

  பதிலளிநீக்கு
 2. வித்தியாசமான பயண அனுபவங்கள்..

  பதிலளிநீக்கு
 3. பயண அனுபவங்கள் பகிர்ந்து கொண்டவிதம் அழகு.

  பதிலளிநீக்கு
 4. நல்ல சந்திப்பு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. மதுரை சரவணன்!
  நாமே அமைத்துக்கொள்ள வேண்டியதுதானே நண்பரே!

  ஓலை!
  இரவில்தான் போயிருந்தோம். இன்னொருமுறை உங்களுக்காக பகலில் போய் வெளிச்சமாய் ஒரு படம் போட்டுருவோம்.... :-)))

  சூர்யாஜீவா!
  ஆமாம்... மிக்க நன்றி.

  லஷ்மி!
  நன்றிங்க.


  ரத்னவேல்!
  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 6. குமாரபுரம்...! யாருமற்ற தனிமையில் ஏகாந்தமும் மரங்களும் மட்டுமே அவதானிக்க இரவு நேரத்தில் புல்லாங்குழலில் இருந்து புறப்பட்ட அந்த இசையில் நனைந்த உதயசங்கரின் ரயில்வே நிலையக் கதையும் பல திசையில் நினைவைக் கலைத்துப்போட்டது...இக்பால்

  பதிலளிநீக்கு
 7. கு.அழகிரிசாமியின் அந்தக் கதையை படிக்கவில்லை. உடனே, படிக்க வேண்டும் போல இருக்கிறது. துயில் நாவலிலும் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு ரயில்வே ஸ்டேஷனின் பகல் பொழுதை மிக அற்புதமாக விவரித்திருப்பார். இது போன்ற பயணங்கள் நம் வாசிப்போடு நெருங்கிவருவதே பெரும் சுகம் தான். ஒருமுறை கழுகுமலைக்கு வந்தபோது கோயில்பட்டி வந்தது. குறுமலை குறித்து எஸ்.ரா'நிறைய எழுதியிருக்கிறார். அதையும் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறது. இப்படித்தான் ஒருமுறை நானும் சகோதரனும் இராஜபாளையம் இரயில்நிலையத்தில் இறங்கி அருகிலிருந்த மருந்துவாழ் மலைக்கு சென்றோம்.அற்புதமான பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. கொஞ்ச நாளைக்கு முன்பு, இந்த பதிவின் சுட்டியை என் அண்ணனுக்கு அனுப்பியிருந்தேன். (அண்ணன் - கு. அழகிரிசாமியின் மகன், சாரங்கராஜன் அழகிரிசாமி). தற்சமயம், கு.அழகிரிசாமியின் வாழ்க்கையை ஒரு ஆவணப் படமாக எடுத்துக் கொண்டிருக்கும் அவர், குமாரபுரம் ஸ்டேஷனைப் பற்றி ஒரு சுவையான கதையைச் சொன்னார்.

  முதன்முதலில் குமாரபுரம்-இடைசெவல் பகுதியில் ஸ்டேஷன் அமைப்பதாக முடிவெடுத்தபோது, அந்த இரயில் நிலையம், இடைசெவலில்தான் அமைக்கப்படப் போவதாக முடிவெடுக்கப்பட்டது. எப்படியும் குறுக்கே இரயில் நிலையம் வந்தால் நிலமெல்லாம் சர்க்காருக்கு போய்விடும், சின்ன கிராமம் தானே. அதனால் ஊர்க்காரர்கள் எல்லாம் கூடி ஒரு என்ன செய்வது என யோசித்தார்களாம்.

  மறுநாள் ஊர்க்காரர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து, அந்த திட்டத்துக்கு தலைமை வகித்த பிராமணரின் வீட்டிற்கு போனார்களாம். அங்கே போய், அவர் வீட்டு வாசலில் ஒரு காராம்பசுவை கட்டினார்கள். இதையெல்லாம் பார்த்த அந்த மனிதர், என்ன வேண்டும் என கேட்க, இவர்களெல்லாரும், இடைசெவலில் இரயிலடி வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள, அவரும் அதை ஒத்துக்கொண்டாராம். இப்படிதான் இடைசெவலுக்கு வர வேண்டிய ஸ்டேஷன் குமாரபுரம் ஸ்டேஷன் ஆனதும், ஊர்க்காரர்களின் நிலமெல்லாம் காபந்து பண்ணப்பட்டதும்.

  இதை கி.இராஜநாராயணன் அவர்களை ஆவணப்படத்தின் விஷய சேகரிப்பிற்காக போய் பார்த்தபோது, அவர் இந்த கதையை இன்னும் சுவைபட சொன்னதாக சொன்னார். சம்சாரிகளின் வாழ்க்கையும், அதில் அவர்கள் செய்கிற சின்ன சின்ன யோசனைகளும், அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை தக்க வைத்துக்கொள்ள அவர்கள் செய்கிற விஷயங்களும் சுவையாகத்தான் இருக்கின்றன.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!