காத்திருத்தல் என்பது போராட்டம் (தொடர் பதிவு)

rikshaw 1

திறக்கப்படும் கதவுகளுக்காக  காத்திருக்கிறோம். தாயின் கருவறையில் துவங்குகிற உயிரின் இயக்கமே காத்திருப்பது போலத்தான் தெரிகிறது. ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு மூடிய கதவுகளை எதிர்கொள்கின்றன. புல் பூண்டிலிருந்து, உலகம், பிரபஞ்ச வெளி வரை சகலமும் எதற்காகவோ காத்திருப்பதாகவே இருக்கிறது. எங்கோ செல்வதற்கோ, யாருடைய வருகையை எதிர்பார்த்தோ காத்திருக்கிறார்கள். மழைக்காக காத்திருக்கும் நிலம் பிறகு வெயிலுக்காகவும் காத்திருக்கிறது.  காத்திருந்ததன் சுருக்கங்களே வாழ்வின் ரேகைகள் போலும்.

காத்திருப்பது நம்பிக்கையையும் தருகிறது. ஏமாற்றத்தையும் தருகிறது. காத்திருப்பது பக்குவத்தையும் தருகிறது. பொறுமையற்றுப் போகவும் செய்கிறது. இதைத்தான் வாழ்க்கை மனிதருக்கு விதிக்கும் சோதனையாகப் பார்க்கிறார்கள். காத்திருப்பதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது  அறியாத ஒன்றாக இருப்பது சுவாரசியம். அறிந்த ஒன்றாக இருப்பது சுகம். அறிய முடியாமல் போவது வலி.

‘அம்மா’ என அழைத்து வாசலில் காத்திருக்கும் ஒரு மனிதன்  எதிர்பார்ப்பது இரக்கத்தைத்தான். அதுதான் அவனுக்குச் சோறு அல்லது காசு. திறக்கப்படாத கதவுகளின் மீது அவனது சாபங்கள் படிந்தே போகின்றன. காத்திருக்கும் ஒரு மனிதன் முன்  கதவாக இருப்பது இன்னொரு மனிதன். உலகின் இயக்கமே இதுவாக இருக்கிறது.  மாற்றம் வரும் என ஒருவன் காத்திருக்கிறான். மாற்றம் வரக்கூடாது என இன்னொருவன் காத்திருக்கிறான்.

வீட்டில், அலுவலகத்தில்,  ஆஸ்பத்திரியில் நீதிமன்றத்தில், சாலையில்,  என எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் காத்திருக்கும் நமக்கு  அவையெல்லாமும் நினைவில் இருப்பதில்லை. சருகுகளாக உதிர்ந்துகொண்டே இருக்கின்றன.  சில மறப்பதேயில்லை.

காத்திருப்பது குறித்து சொந்த அனுபவங்களாகச் சொல்ல எவ்வளவு எவ்வளவோ இருக்கின்றன. காத்திருப்பது என்பது சிலருக்குத்  தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம். காத்திருத்தல் என்றதும் இந்த நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. ஒரு எளிய மனிதர் எனக்குத் தந்து சென்ற செய்தி இது.


ன்று காலை வேலைக்குச் சென்றபோது, மெயின்ரோடே வழக்கத்துக்கு விரோதமானதாயிருந்தது. மனித நடமாட்டங்கள் அவ்வளவாக இல்லை. வாகனப் போக்குவரத்து சுத்தம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே பஸ் நிறுத்தம்  அருகேத் தெரிந்த  கூட்டமும், எழும்பிய சத்தங்களும் பதற்றம் கொண்டதாக இருந்தன. திரும்பவும் எதாவது ஜாதிக்கலவரமோ என்றுதான் முதலில் ஓடியது. பக்கத்தில் செல்ல செல்ல, எதோ யுத்தக்களம் போலக் காட்சியளித்தது. சைக்கிள் ரிக்‌ஷாக்கள் அங்குமிங்கும் தலையறுபட்ட கோழிகள் போலக் கிடந்தன.  குறுக்கும் நெடுக்குமாக வேன்களும், மினி லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. காக்கிச்சட்டைகளாய்த் தெரிந்தன. இன்னொரு பக்கம்  கோபத்தோடும், வேகத்தோடும்  சி.ஐ.டி.யூ தோழர்கள் நின்றிருந்தனர்.  ரிக்‌ஷாத் தொழிலாளர்கள், வேன் மற்றும் மினி லாரி ஒட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள்  எல்லோரும். நடுவில் சி.பி.எம் நகரச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் இருந்தார். தெரிந்த முகங்கள்தாம். என்னைப் பார்த்ததும் ரிக்‌ஷா ஓட்டும் முனியன் அருகில் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வுப் போராட்டம் இரண்டு நாளாய் நடந்துகொண்டிருந்தது. தோழர் பாலசுப்பிரமணியம் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இன்று காலையில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை என தோழர்கள் போயிருக்கிறார்கள். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் முறைப்பாக பேசியதோடு இல்லாமல் வெளியே வந்தபிறகு தோழர்.பாலசுப்பிரமணியத்தை சட்டையைப் பிடித்து அடிக்கப்  போயிருக்கிறான். விஷயம் கேள்விப்பட்டதும், பஸ் ஸ்டாண்டில் இருந்த தங்கள் ரிக்‌ஷாக்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் செய்திருக்கின்றனர் தோழர்கள். போலீஸ்காரர்கள் வந்து ரிக்‌ஷாக்களை அப்புறப்படுத்துகிறோம் என தாறுமாறாய் தூக்கி எறிந்திருக்கின்றனர். ஆத்திரமடைந்த வேன் ஒட்டுனர்த் தோழர்கள் தங்கள் வாகனங்களை பஸ் ஸ்டாண்ட் வழியாகச் செல்ல முடியாமல் அடைத்து நிறுத்திவிட்டனர். இதுதான் நடந்திருந்தது.

“வாங்க போலிஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்க போய் முற்றுகையிடுவோம். கலெக்டர் வரட்டும். சப்-இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேக்கணும். ரிக்‌ஷாக்களுக்கு இழப்பீடு தரணும்” என்று கூட்டமாக அவர்கள் செல்ல ஆரம்பித்தனர்.  பஸ் ஸ்டாண்ட் அருகேதான் எங்கள் வங்கி அலுவலகம். கேஷ் கீ என்னிடம் இருந்தது. டீக்  குடித்துவிட்டு வேலைக்குச் செல்வோம் என கடைக்குச்  சென்றேன். ஜே ஜே என்று வழக்கமாய் இருக்கும் கூட்டம் அங்கு இல்லை.

“திமிரு பிடிச்சவங்க. உடனே வண்டிய வந்து நிப்பாட்டிறானுங்க.  ரோடு இவங்க அப்பனுக்காச் சொந்தம். இப்ப பாருங்க பஸ்ஸெல்லாம் பைபாஸ் சுத்திப் போ வேண்டியிருக்கு. இவனுங்களால எவ்வளவு பேருக்குக் கஷ்டம்” என்று கத்திக்கொண்டு இருந்தார் டீக்கடைக்காரர். சிகரெட் குடித்துக் கொண்டிருந்த ஒரு டீசண்ட் பேர்வழி “இந்த ரிக்‌ஷாக்காரங்க பண்ற அநியாயம் தாங்க முடியல. பஸ்  ஸ்டாண்டச் சுத்தி எந்நேரமும் கஞ்சா அடிச்சுக்கிட்டு, வம்பளந்துக்கிட்டு..” என்று கோபங்களை நீட்டிக்கொண்டு இருந்தார். வேர்க்க விறுவிறுக்க சாலைகளிலும், தெருக்களிலும்  ரிக்‌ஷா அழுத்திச் செல்லும் இவர்களின் வாழ்க்கை பற்றி அவனுக்கு என்ன தெரியும். காலையில் எங்களது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வரும் முனியன் அந்தக் குழந்தைகளுக்கு ஷூ ஷாக்ஸ் அணிந்து ரிக்‌ஷாவில் தூக்கி வைப்பதையும், மூக்குச் சளி பிடித்து தன் லுங்கியில் துடைத்துக் கொள்வதையும் இவன் பார்த்திருப்பானா? கஷ்டமாகவும், எரிச்சலாகவும் இருந்தது. யோசித்தபடியே வங்கிக்கு  சென்றேன்.

வேலையில் இருந்தாலும் அவ்வப்போது வங்கியில் இருந்து வெளியே வந்து, என்ன நடந்தது என்று விசாரித்துக்கொண்டு இருந்தேன். எல்லோரும் போலீஸ் ஸ்டேஷன் முன்னால் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிய வந்தது. முதலில் கலெக்டர் வருவார் என்றார்கள். பிறகு வரவில்லை என்றார்கள். சிதறிக்கிடந்த ரிக்‌ஷாக்களும், வேன்களும் அப்படி அப்படியேக் கிடந்தன. நேரம் ஆகிக்கொண்டிருந்தது.

மதியம் பனிரெண்டு மணி போல இருக்கும். முனியன் மட்டும் அந்த டீக்கடை முன்பு அவருடைய ரிக்‌ஷாவை தூக்கி நிறுத்தி சரி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். பக்கத்தில் இரண்டு மூன்று தோழர்கள் அவரிடம் எதோ வாக்கு வாதம் செய்துகொண்டிருந்தனர். அருகில் சென்றேன். “தோழர், கொஞ்சம் பொறுங்க. பேசிக்கிட்டு இருக்கோம். அதுவரைக்கும் ரிக்‌ஷாவை எடுக்காதீங்க” என்றனர். முனியன் ஒன்றும் பேசாமல் அவர் காரியத்தில் கவனமாயிருந்தார்.  “இப்படி ஆள் ஆளுக்கு வண்டியெடுத்தா, நம்ம போராட்டம் என்னாவது? சங்கத்தோட முடிவை நீங்களே மீறலாமா?” என்று ஒருவர் முனியனின் கைகளைப் பிடித்தார். சட்டென்று அவரது கையை  சுண்டிக்கொண்டு, “தோழர், காலைல பிள்ளைங்கள ஸ்கூல்ல விட்டுட்டு வந்திருக்கேன். மத்தியானம் சாப்பாட்டுக்கு அதுங்க காத்திட்டிருக்கும். நாம் போகலன்னா என்ன செய்யும். பாவம் அந்தக் குழந்தைங்க. நா வேண்ணா ஒரு நா இல்ல ரெண்டு நா இல்ல எத்தன நாள்னாலும் இந்தப் பாழாப்போன வயித்தோட உங்க கூட காத்துக்கிட்டு இருந்துருவேன்” என்று தன் வயிற்றில் சடாரென ஓங்கி அடித்துக்கொண்டார். சுற்றியிருந்த தோழர்கள் பேசமுடியாமல் அமைதியானார்கள். “குழந்தைங்க ஒருநாளும் பசியோட காத்துட்டு இருக்கக் கூடாது” என்று கண்ணெல்லாம் பொங்க குரல் உடைந்து போனார்.

கழன்ற சைக்கிள் செயினை மாட்டி புறப்படப் போனவர் நின்றார்.  ஹாண்ட் பாரில் வளைந்து நெளிந்திருந்த இரும்புத்தகடாலான, சிவப்பு வண்ண  அரிவாள் சுத்தியல் சின்னத்தை சரி செய்து, ரிக்‌ஷாவில் ஏறிக் கொண்டார். ஆற்ற முடியாத எதுவோ ஒன்று என்னை அழுத்தியது. பார்த்துக்கொண்டிருந்த அந்த டீக்கடைக்காரரின் முகத்திலும் வலி தெரிந்தது. நீண்ட சாலையில் சென்று கொண்டிருந்தார் முனியன். எந்தக் கதவுகள் திறக்க அவர் காத்திருக்கிறார்?

னித வாழ்வு எனும்  பெரும் சமுத்திரத்தின் முன் காத்திருக்கும் நம் ஒவ்வொருவரையும் இதுபோல நீர்த்துளிகள் நனைத்தே இருக்கும். அதில்  ஒரு துளியை பகிர்ந்திருக்கிறேன். அது போராட்டமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த தொடர் பதிவு. இப்போது நான் அழைப்பது:

1.செ.சரவணக்குமார்
2.
க. பாலாசி
3.கார்த்திகைப் பாண்டியன்
4.கயல்விழி சண்முகம்
5.mayoo mano

(இதையும் வாசிக்கவும்: காத்திருப்பு- எஸ்.வி.வேணுகோபால்)

கருத்துகள்

9 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //காத்திருப்பதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது அறியாத ஒன்றாக இருப்பது சுவாரசியம். அறிந்த ஒன்றாக இருப்பது சுகம். அறிய முடியாமல் போவது வலி.
    //
    Wow!!!

    ரொம்ம்ம்ப அழகான பதிவு அங்கிள். படித்து முடித்ததும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. Hats off to Muniyan.

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நெகிழ்வான பகிர்வு.. அந்த தோழரின் மனநிலை உணரமுடிகிறது.. இதுதான் எதார்த்தம்.

    எனக்கான அழைப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். நன்றி..

    பதிலளிநீக்கு
  3. \\காத்திருப்பது என்பது சிலருக்குத் தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம். காத்திருத்தல் என்றதும் இந்த நிகழ்வுதான் என் நினைவுக்கு வருகிறது. ஒரு எளிய மனிதர் எனக்குத் தந்து சென்ற செய்தி இது.\\

    எளிய மனிதரில்லை; உயர்ந்த மனிதர். தீபா கூறுவதைப் போல படித்து முடித்ததும் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு. அழைத்திருப்பவர்களும் எழுதக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. \\காத்திருப்பது என்பது சிலருக்குத் தத்துவம். சிலருக்குத் தவம். சிலருக்கு போராட்டம்.//

    அற்புதம் மாது அண்ணா. திரும்ப திரும்ப வாசித்தேன்.

    நண்பர்களின் பகிர்வுகளையும் வாசிக்க ஆவல்.

    என்னையும் அழைத்ததற்கு மிக்க நன்றி மாது அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. உயிரோட்டமுள்ள பதிவு,
    எனக்கான அழைப்பையும் ஏற்றுக் கொண்டு பதிவு செய்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. காத்திருப்பு என்பது பல வகையான அனுபவங்களைத் தருகிறது. நமது மன நிலைக்கு ஏற்ப தத்துவமாய், தவமாய், போராட்டமாய்.....



    நல்ல பகிர்வு.



    இன்று தான் உங்கள் வலைப்பூவுக்குள் நுழைந்தேன். மணக்கிறது......

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!