வாழ்த்துக்கள் ராமகிருஷ்ணன்!

esraa

 

எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் ராமகிருஷ்ணனுக்கு இந்தியாவின் முக்கிய விருதான தாகூர் இலக்கிய விருது கிடைத்திருக்கிறது. கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனத்தோடு சாகித்திய அகாடமி இணைந்து ஏற்படுத்தியுள்ள இவ்விருது முதன்முறையாக தமிழுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய யாமம் நாவல் இந்த பெருமையை அவருக்குத் தந்திருக்கிறது. மகிழ்ச்சியான செய்திதான் நமக்கும், தமிழ் இலக்கியத்துக்கும்.

 

அவர் எழுதிய கதையான ‘கபாடபுரம்’ சிறுகதையிலிருந்துதான் எஸ்.ராவோடு பழக்கம்.  அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தார் என நினைக்கிறேன். இலக்கிய ஆர்வலரான டாக்டர் வல்லபாய் அவர்கள் கிளினிக்கில் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தபோது எழுத்தாளர் கோணங்கியோடு வந்து கைப்பிரதியில் இருந்த அந்தக் கதையைத் தந்தார். நான், காமராஜ்,  டாக்டர் வல்லபாய் எல்லோரும் படித்தோம். கோணங்கியின் எழுத்துக்களைப் போல இருந்ததாகப் பட்டது. வலிந்து ஏன் மொழியை இவ்வளவு முறுக்கி இறுக்கமாக்க வேண்டும் என்று தோன்றியது. புரியவில்லை என்றோம். எஸ்.ரா சிரித்துக்கொண்டார்.

 

ஆரம்பத்தில் செம்மலரில் தொடர்ச்சியாக அவரது சில கதைகள் வந்திருந்தன. அவை புரியும்படியாகவும், அற்புதமாகவும் இருந்தன. எழுத்தாளர் வண்ணதாசனின் பிரதேசங்கள் எஸ்.ராவிடம் தென்பட்டது. ஆனாலும் அவருக்கு கோணங்கியின் பாதிப்பும், கோணங்கி எழுத்துக்களின் மீதான ஈர்ப்பும் வேறொரு திசைக்கு இழுத்துக்கொண்டு இருந்ததாகவே நான் புரிந்துகொண்டேன். இது எங்கள் வட்டத்தில் பலருக்கும் இருந்தது. பிறகு சுபமங்களாவில் வெளிவந்த அவரது  ‘தாவரங்களின் உரையாடல்’ போன்ற கதைகளின் மொழி மீது வசீகரம் இருந்தாலும், ஒருவித அயற்சியை ஏற்படுத்தியது.

 

சாத்தூரில் எங்களுக்கு நெருங்கியத் தோழராகவும், இப்போது ஹோமியோபதி மருத்துவராகவும் இருக்கிற  ச.வெங்கடாச்சலத்தின் தம்பிதான் அவர். பிறகு  அவ்வப்போது சந்தித்துக்கொள்வோம்.  பல நேரங்களில் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அவர்கள் வீட்டில். சில நேரங்களில் சி.பி.எம் விருதுநகர் மாவட்டச் செயலாளராகவும், பரந்த வாசிப்பும் கொண்டவருமான எஸ்.ஏ.பெருமாள் (எஸ்.ஏ.பி) அவர்களோடு.  எப்போதும் கோணங்கியோடுதான்.  விவாதங்கள்தான். அவருக்கும், கோணங்கிக்கும் இருக்கும் கிண்டல், விவாதங்களை ரசிக்கவும், தொடரவும் வைக்கும்.  , எஸ்.ராவின் வாசிப்பிலும், விவரிப்பிலும் எஸ்.ஏ.பிக்கு ஒரு மரியாதை உண்டு.

 

அறிவொளி காலத்தில், சாத்தூருக்கு பொறுப்பாளராக அவரது அண்ணன். ச.வெங்கடாசலம் இருந்தார். வங்கி, தொழிற்சங்கம் இல்லாத நேரங்களில் நானும் காமராஜும் பெரும்பாலும்  அறிவொளி அலுவலகத்தில்தான் இருப்போம். நாட்கணக்கில் எஸ்.ரா அங்கு வந்திருப்பார். பார்க்கிற நேரமெல்லாம் புத்தகத்தோடுதான். பேச்சு, பேச்சு, என பேசிக்கொண்டே இருப்பார். அவரோடு இருந்த பல பொழுதுகள் இரவுகள்தாம். அவர் எழுத்துக்களிலும் இரவின் ரசம் சொட்டிக்கொண்டே இருக்கும். காய்ச்சல் வந்த ஒரு பகலில், வாசிப்பவனுக்குள்ளும் மஞ்சள் நிறம் தகிக்க வைக்கும் அவரது சிறுகதை (பேர் தெரியவில்லை) என்னை பிரமிக்க வைத்த கதைகளில் ஒன்று.

 

அவருக்குத் திருமணமானது,  சன்.டிவிக்கு செய்தி அனுப்புகிறவராக இருந்தது, விருதுநகரில் டி.டி.பி செண்டர் வைத்து இருந்தது என அவரது நாட்களை அறிவேன்.  ஒருமுறை எங்கள் தொழிற்சங்கத்திற்கான சர்க்குலர் ஒன்றை கம்ப்யூட்டரில் டைப் அடித்து, அவர் பிரிண்ட் எடுத்து கொடுத்த போது ‘தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர் இவர்’ என்னும் நினைப்பு வந்து லௌகீக வாழ்வின் வதை உணர்ந்தேன்.  அவற்றையெல்லாம் புத்தக வாசிப்பின் மூலமே ஈடுசெய்துகொண்டவராக,  தன்னைப் புதுப்பித்துக் கொண்டவராகத் தெரிந்தார்.  கதைகளும், தொகுப்புகளுமாய் எழுதி முடித்து வளர்ந்து கொண்டே இருந்தார். அவர் சென்னை சென்ற பிறகு எப்போதாவதுதான்  சந்திக்க முடிந்தாலும், அவரை பற்றிய செய்திகள் எங்காவது இருந்து வந்துகொண்டேதான் இருந்தன. அவை எல்லோருக்கும் தெரிந்தவைகளாகவே இருந்தன. அந்த நிலைக்கு அவர் உயர்ந்து இருந்தார். 

 

அவருடைய  வாசிப்பும், பயணங்களும், பெரும் உழைப்பு கொண்ட எழுத்துக்களும் இதற்கெல்லாம் காரணம் என்ற போதிலும் எல்லோருக்கும் புரிகிற மாதிரி, ஆனந்த விகடனில்  அவர் எழுதியவையே பெரும் வாசகப் பரப்பை விரித்துக்கொண்டது. அடுத்தடுத்த தளங்களுக்குக் கொண்டு சென்றது.  எழுத்தாளர் கோணங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டும், தொகுப்புகளை வெளியிட்டுக்கொண்டும், கல்குதிரைகளை கொண்டு வந்துகொண்டும் அப்படியே இருக்கிறார். அவரைப் பார்க்கும்போது, அவர்  அருகிலேயே எஸ்.ரா இருப்பதாகவும் ஒருகணம் தோன்றி மறைவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

அமைப்புகளின் மீது எஸ்.ராவுக்கு விமர்சனங்கள் இருந்தபோதும்,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் தோழர்களோடு அவருக்கு எப்போதும் நெருக்கமும், நட்பும் உண்டு.  இந்த பரஸ்பரம் தொடர்ந்து இன்றுவரை நீடித்து வந்துகொண்டு இருக்கிறது. இது அவரது சிறப்பு.

 

விஷயம் அறிந்ததும் போன் செய்தேன்.  “வாழ்த்துக்கள்  ராமகிருஷ்ணன்!”

கருத்துகள்

15 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தமிழின் நவீன எழுத்துக்களுக்கு மிக முக்கியமான ஸ்தானத்தில் இருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர்.அவரின் சிறப்பு தொன்மத்துக்கும் நவீனத்துக்குமான அவரின் சிந்தனையும் மொழியும் தான்.

    உரிய நேரத்தில் உரிய கலைஞனுக்கு வழங்கப்படும் விருது கலைஞனையும் கௌரவித்து தன்னையும் கௌரவித்துக்கொள்கிறது.

    அளவற்ற மகிழ்ச்சி ராமகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  2. என் மனதுக்கு மிக நெருக்கமான படைப்பாளி எஸ்.ரா. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்.

    பகிர்ந்தமைக்கு நன்றி மாது அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சியான செய்தி ... வாழும் காலத்திலேயே கௌரவிக்கப் படும் தமிழ் படைப்பாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி செல்வது வாசகனாக எனக்கு மிகுந்த மன நிறைவை தருகின்றது... உப பாண்டவமும் தாவரங்களின் உரையாடலும் வாசித்திருக்கிறேன் .. அச்சுக்கோர்ப்பவர் ஒருவரைப் பற்றி ஏதோ ஒரு இதழில் அவர் எழுதிய சிறுகதையை மீண்டும் படிக்க வேண்டுமென்று இப்போது தோன்றுகிறது .. எந்த இதழ் , எந்த சிறுகதை என்பது நினைவில் தோன்ற மாட்டேன்கிறது ...பின்னர் தோன்றும்!

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு கோணங்கியை பார்க்கும் போது எஸ்.ரா நினைவுக்கு வருகிறார், சிலருக்கு எஸ்.ரா வை பார்க்கும் போது கோணங்கி நினைவுக்கு வரக் கூடும்...கிஞ்சித்தும் சமரசமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் விட சிறந்த படைப்பு அவன் தாம் ...

    பதிலளிநீக்கு
  5. மகிழ்வான செய்தி....
    வாழ்த்துகள் எஸ்.ரா....
    எழுத்திலும் மேடைகளிலும் தொடர்ந்து கலக்குங்க... :)

    பதிலளிநீக்கு
  6. /-- ‘தாவரங்களின் உரையாடல்’ போன்ற கதைகளின் மொழி மீது வசீகரம் இருந்தாலும், ஒருவித அயற்சியை ஏற்படுத்தியது. --/

    இந்த வரிகளுடன் நானும் உடன்படுகிறேன் தோழர். சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அவரிடமே இதைத் தெரியப்படுத்தினேன். எல்லாவற்றையும் மீறி அவரின் மீதான ஈர்ப்பும் மரியாதையும் குறையவில்லை.

    பதிலளிநீக்கு
  7. எஸ்ரா வை என்னைவிட எனது 6 வய்து மகனுக்கு மிகவும் பிடிக்கும். கிறுகிறுவானம் என்ற சிறுவல் இலக்கிய நாவலை தினமும் வாசிக்கச்சொல்லி நச்சரிப்பான். எனக்கும் அந்த நாவல் கிராமத்துச் சிறுவனாக இருந்தபோது கிடைத்த சில அனுபவங்களை சொன்னமாதிரி இருந்தது.

    மேலும் சிறப்பாக மேன்மையடவேண்டும் என வாழ்த்துகிறேன். பகிர்வுக்கு நன்றியண்ணா!!

    பதிலளிநீக்கு
  8. தமிழிலக்கிய உலகில் தனக்கென்று ஓர் தனி இடத்தை தக்கவைத்தும், தனக்கென ஓர் தனி பாணியையும் உருவாக்கிக்கொண்டு எழுதி வரும் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்போதைய சிறப்பு விருது அவரின் எழுத்துக்கு மேலும் ஓர் அங்கீகாரமே. அவருக்கு எனதினிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. எழுத்தின் மீதுள்ள காதல், ஆர்வம், ஈடுபாடே அவரை இந்த அளவு உயர்த்தி உள்ளது. இன்னமும் உயர்த்தும்.

    இவரது வளர்ச்சி, வெற்றி - படிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

    நமக்கு விருப்பப் பட்ட தொழிலை முனைப்புடன் செய்தால் , ஆரம்பத்தில் பணம் வரா விட்டாலும், காலப் போக்கில் அது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே பணமும் புகழும் பெயரும் நமக்குப் பெற்றுத் தரும்

    பதிலளிநீக்கு
  10. // ...கிஞ்சித்தும் சமரசமற்ற வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் விட சிறந்த படைப்பு அவன் தாம் ...//

    அருமை!

    வாழ்த்துகள் எஸ்.ரா! பகிர்வுக்கு நன்றி மாது!

    பதிலளிநீக்கு
  11. Congratulation S. Ra.

    வாழ்த்துக்கள் -> வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான‌ திரு. எஸ்.ரா வுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரான‌ திரு. எஸ்.ரா வுக்கு எனது வாழ்த்துகளும் ஒரு பூங்கொத்தோடு!

    பதிலளிநீக்கு
  14. திரு எஸ்.ராமகிருஷ்ணன் விருது நகரில் கச்சேரி சாலையில்(பழைய மெஜுராகோட்ஸ் காம்பவுண்டு)குடியிருந்த சமயம் அவரது உபபாண்டவம் வெளியாகி இருந்தது. அந்த நூலை விருது நகர் த மு எ ச கலை இலக்கிய இரவில் வெளியிட்டுப்பேசக்கோரி நானும் தோழர் தேனி வசந்தனும் சென்றிருந்தோம். ஒப்புதல் கொடுத்தார். அதே போல் விழாவிலும் கலந்து கொண்டார். சிறப்பித்தார்.வணிக வரித்துறையின் உயர் அதிகாரியாக இருக்கும் எழுத்தாள நண்பரும் உடன் வந்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  15. வாழும் காலத்திலேயே மக்களுக்காக கலைகளைப் படைக்கும்
    வளரும் படைப்பாளிகளை
    வாழ்த்தும் எண்ணங்கள்
    மேலோங்கும் இம்மண்ணில்

    சமூகத்தின் அடித்தட்டு மக்களின் ஏகோபித்த குரல்கள் எழுகின்ற ஒரு உன்னத படைப்புலகப் பாதையில் நடைபோட்டு நல்ல உழைப்பாளிகளின் தலைமையிலான சமூக அமைப்பினை உருவாக்கிடும் பொற்காலத்தை ஏற்றிவைக்கும் !
    விருதுகள் எல்லாம் இன்னும் தொடர்வதற்கே !
    வாழ்த்துக்கள்
    மென்மேலும் உங்கள் படைப்புலக சாம்ராஜ்யம் எல்லையின்றி விரியட்டும்!
    அதில் இவ்வுலக மக்களின் நல்வாழ்வுக்கான கருத்துக்கள் மிளிரட்டும்!
    வாழ்த்துககள்
    தோழர்,ராமகிருஷ்ணன் அவர்களுக்கு
    தோழமையுடன் ,
    கவிஞர்,தமிழ்பாலா----

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!