அம்மாவின் மகன்



மூர்த்திக்குப் பேரே மலையன் தான் காலேஜ்ல... ஊட்டி மலையின் ஹட்டி ஒன்றிலிருந்து வருபவன்...

ஊட்டி மலையிலிருந்து கீழே இறங்கி, கோவை மாநகரத்தைப் பிடித்து அங்கிருந்து இந்த நகரத்திற்குப் படிப்புக்காக வந்து சேர்ந்தவன்...

முதுநிலைப் படிப்புக்காக வந்திருக்கிறான் மூர்த்தி. அவங்க பக்கத்துல பட்டப் படிப்பு முடிச்ச முதல் ஆளு அவன்தான். அதுக்காகவே அவன் மாமன் பொண்ணு முத்தம் கொடுத்ததை ஒரு நாள் ரகசியமாச் சொல்லி இருக்கிறான் பிரபாகர் கிட்ட.  சாயந்திரம் வேற வேற குரூப் பசங்க பதினேழு பேர் கியூவில் நின்னு கை குலுக்கிப் பாராட்டிவிட்டு ட்ரீட் கேட்டார்கள்.  "ஏண்டா, மனுஷனாடா நீ, நாயே" என்று மூர்த்தி பிரபாகரனைப் பார்த்துக் கத்தியபோது, 'அதை மட்டும் தானே சொன்னேன்...' என்று நிறுத்தி, ஏற்கெனவே கிழிந்து தொங்கிய விஷயத்தில் மேலும் பொத்தல் போட்டது மாதிரி செஞ்சிட்டு இலேசாக் கண்ணடித்துச் சிரித்தான் அவன்.

இன்னும் ஹாஸ்டல் 'அலாட்' ஆகாததால், ஓட்டல் ஒன்றில் குடியிருந்தான்.  அம்மா கொஞ்சம் நகையை வித்துப் பணம் கொடுத்து அனுப்பி இருந்தாள். ஒரு பெட்டி நிறைய புத்தகங்களும், கவிதை எழுதிய டயரி நோட்டுக்களும் சூழ எப்படா ஹாஸ்டல் அறைக்குள் போவோம் என்று காத்திருந்தான் மூர்த்தி.

ஒசஹட்டியில் ஓர் எளிய குடிசை வீடு மூர்த்தியுடையது.  எழுந்து நின்றால் தலை இடிக்கும்..பின்புறம் மலை இறக்கம்.  சருகுகள் போர்த்திய மண் தரை தாண்டிச் செல்லும்போது நாய்கள் குறைத்து எச்சரிக்கும்...அசந்தால் அதல பாதாளம் தான்.  ஊருக்குப் புறத்தே ஒரு சிற்றோடை உண்டு..காட்டு மூலிகைகளும், கிழங்குகளும், தோட்டப் பயிர்களும், பூவிரிந்த சோலையாக இரு மருங்கும் இயற்கையின் கொடையை ஏந்திப் பிடித்து அள்ளிப் பருக வேண்டிய நினைவுகளை, இந்த மாநகரத்தின் அசுத்தக் காற்றின் மூச்சுத் திணறலில் கழுவிக் கறைப்படுத்திக் கொள்வதில்லை அவன்.

கிழங்குகளைக் கீறி எடுத்து வந்து புளிக்குழம்பு வைப்பாள் அம்மா. அத்தனை வாசம் அதில்..அதற்கு மேல் அவளது பிரியம் மிதந்திருக்கும்.  கணவன், சாராயத்திற்கு வாழ்க்கையை ஒப்புக் குடுத்துவிட்ட  சோதனைக் காலங்களை அவள் காச நோயின் எச்சிலோடு சேர்த்து விழுங்கிக் கொண்டு விடப் பழகி இருந்தாள்.  மூர்த்திக்கு அவரது பெயரன்றி வேறேதும் தெரியாது.  ஆனால், ஆளற்ற வீட்டில் மோப்பம் பிடித்துவந்த காமாந்தகார நாய் ஒன்றை இத்தனை சாதுவான தன்னுடைய தாய் உயிர்நாடியில் கால்வைத்து உதைத்து விரட்டிய கதையை எஸ் எஸ் எல் சி எழுதி முடிந்த விடுமுறை நாளொன்றில் தான் உறவுக்காரன் ஒருத்தன் சொல்லக் கேள்வியுற்று அரையும் குறையுமாய் அவளது பாடுகளை உணர்ந்து கொண்டிருந்தான்.

மானமான ஒரு வீடு, ஒரு வாழ்க்கை, அவளது கையில் ஒரு வளமான ரூபாய்க் கட்டு, அவளுக்குப் பிடித்தமான வெளிர் நீலத்தில் தரமான ஒரு சேலை... இந்தக் கனவுகளாலான வைராக்கியமும் இருந்தது மூர்த்தியின் பெட்டிக்குள்.

"டேய் மலையா...திங்கக் கிழமை ஹாஸ்டல் கெடச்சிரும்..குடி போயிறலாம்..." என்று நெல்லை மாவட்டக்காரக்  கண்ணன் குரல் கொடுத்தான்.

எதிர்பார்த்தபடி அப்படியான குடியேற்றத்திற்குப் போனபோது ஹாஸ்டலைப் பார்த்த மாத்திரத்தில் குமட்டிக் கொண்டு வந்தது மூர்த்திக்கு.

யுகாந்திரக் கறை பிடித்திருந்தது சுவர்களில்.....வாசல் கதவில் நீட்டிக் கொண்டிருந்த ஆணிகளில் ஒன்று அவனது சட்டைப் பாகத்தை ருசித்துக் கிழித்துவிட்டது.  கழுவி மாதக் கணக்கு ஆகியிருக்கும் போலான தரை மீது எத்தனை இஞ்சு தூசி கப்பியிருந்தது என்று சொல்ல முடியவில்லை.  அறைகளில் ஏற்கெனவே இடம் பிடித்துவிட்டிருந்த பூச்சி வகையறாக்கள் உயிரியல் மாணவனுக்கான புதையல் போலப் பல்கிப் பெருகிப் பரவித் தெரிந்தன. தெரு நாய்கள் நாலைந்து சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தான் உள் பாதை நெடுக.

இதன் அதிர்ச்சியில் இருந்த அவனது தோளைத் தட்டிய கண்ணன், "தம்பி மலையா, இதுக்கே மலைச்சுட்டா எப்படி, பாத்ரூம், டாய்லெட் கண்டிசன்லாம் இன்னும் எந்தக் கதியில் வச்சிருக்கானுவன்னு பாக்காண்டாமா" என்று இழுத்துப் போனான். 

ஒரு மாநகரத்தின் விடுதி அறை குறித்த மூர்த்தியின் குறிப்புகள் அவனது கவிதைப் புத்தகத்தில் ஒரு குறு ஓவியத்துடன்  வேறு கற்பனையில் பதிவாயிருந்ததை இப்போது எங்கே கிழித்துப் போடுவது என்று தோன்றியது.  எங்கும் போடலாம் என்னும் அளவு குப்பைகளின் காதலராய் இருந்தது ஹாஸ்டல் வெராந்தா.

வெளியே எல்லாவற்றுக்கும் சாட்சியாக வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை, தனது மவுனத்திற்குள் எரிமலையாகக் கேள்விகள் இருக்கக் கூடும் என்பது போல் காட்சியளித்தது.

அன்று காலையில் சாதிச் சான்றிதழை இங்கிட்டும், அங்கிட்டும் எடுத்துக் கொண்டு கல்லூரியில் அலைமோதியதில், புதிய அறை வாசத்துக்காக ஒரு தரை விரிப்பு வாங்க அலைந்ததில் என்று மூண்டிருந்த களைப்பின் வேகத்தில் அழுக்குக் கடலில் சங்கமமாகித் தூங்கித் தொலைத்தான் அந்த இரவு.

காலைப் பொழுதுகள் ரம்மியமானவை ஒசஹட்டியில். மழை போட்ட தரையாயிருந்தாலும், உரச் சாக்குக்குள் புகுந்து கொண்டோ, கைகளை நெருக்கமாகக் கட்டிக் கொண்டு பாட்டு படித்துக் கொண்டோ அந்த சனம் தம்பாட்டில் தங்கள் வேலைக்கு  இறங்கிப் போய்க் கொண்டிருக்கும்... எப்பொழுதாவது சத்தத்தோடு கடக்கும் மினி பஸ்கள், உல்லாசப் பயண வாகனங்களைப் பழிப்பு காட்டிவிட்டு ஓடிக் கொண்டிருப்பார்கள் சிறுவர்கள் கிழிந்த கால் சராயோடு. புகையாக இறங்கும் பனி மூட்டத்தின் போது தீக்குச்சி கிழித்துப் போட்ட மாதிரி மின்மினிகள்  புள்ளியாய்த் தோன்றி மறையும்.

அன்றைக்கு மாநகர வாழ்க்கையில், நாராசத்தில் கண் விழித்தான் மூர்த்தி. ஒரே கூச்சல்....ரகளை! தண்ணீர் வரவில்லை. குடிக்கவோ, குளிக்கவோ  அல்ல, பல் தேய்க்கக் கூட ஒரு போட்டு தண்ணி கிடையாது.

நிராகரிப்பின் சுவையிலேயே வாழப் பழகியிருந்த பணியாளர்களும் இலேசில் பிடிகொடுப்பதாயில்லை.  பெருஞ்சண்டை, மோதலுக்குப் பிறகு எங்கிருந்தோ கொண்டு வந்து கொட்டினார்கள் குடங்குடமாய்த் தண்ணீரை.

மூர்த்தியும் கண்ணனும் உடைகளை மாற்றிக் கொண்டு புறப்பட்டார்கள் வெளியே ஏதாவது பார்த்துக் கொள்ளலாம் என்று.  அருகே ஏதோ ஒரு பழைய கால ஓட்டலைப் பிடித்து அங்கே போய் குளியல் போட்டு விட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே கல்லூரிக்குப் போயாகிவிட்டது.
 
முதல் நாள் வகுப்பு ஏதும் பெரிதாய்த் தொடங்கவில்லை.  படிப்பின் திசை குறித்த இலேசான பதட்டம் கூடத் தோன்றியது மூர்த்திக்குள்ளாக...இந்த இடம் தனக்குத் தோது பட்டு வருமா.. நமக்கான எதிர்காலம் இங்கிருந்தா வேர் விடப் போகிறது?  ரெண்டாம் வகுப்பில் காது வலிக்கக் கிள்ளி இழுத்த முரட்டு வாத்தி எத்தனை நல்லவர்,  பள்ளி இறுதி ஆண்டில் கணக்கு தெரியாது முழித்த போது தலையில் குட்டிய டீச்சர் எத்தனை பரவாயில்லை என்று சம்பந்தமில்லாமல் கண்ணில் வந்து போனது.

எதற்கு அழுதோம், எதற்குக் கோபப் பட்டோம் வாழ்க்கையில்... சில்லறை சரியாகக் கொடுக்காததைக் கேட்டதற்கு 'அப்பனில்லாம வளர்ந்த வளப்பு இல்ல..' என்று ஓங்கி அறைந்த பக்கத்தூர்க் கடைக்காரனையே ஒண்ணும் செய்ய முடியல..

இரவு விடுதிக்குப் போகையில் கண்ணன் வலுக்கட்டாயமா உணவு சாப்பிட அழைத்துப் போனான். அமரவும், சாப்பிடவும் எதிரெதிர் சிமெண்டு பெஞ்சு, மேலே அடையாளம் பறிகொடுத்த கருங்கல் நீளப் பலகை.  தட்டை எடுத்து வைத்து நிமிர்ந்த போது, பரிமாற ஆள் இல்லாமல் சக மாணவன் ஒருத்தனே எழுந்துபோய் உள்கட்டிலிருந்து சோறு எடுத்து வந்த விதத்தைப் பார்த்து அதிர்ந்துபோய் எழுந்து நின்று குமட்டி வாந்தி எடுத்துவிட்டான் மூர்த்தி. 

பாதி உசரத்துக்கு உடைந்துபோன பழைய அழுக்கு பிளாஸ்டிக் வாளியில் வந்து கொண்டிருந்தது சோறு.  தட்டுக்கள் ஓங்கி அறையப்படும் சத்தம் வலுத்தது உணவறை எங்கும்.  பட்டப் படிப்பின் இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் இருந்த பழைய மாணவர்கள் பொறுமை இழந்து உலகின் அத்தனை கொச்சை வார்த்தைகளையும் அறைகூவி அழைத்துக் கத்திக் கூச்சலை எழுப்பலாயினர்....

அடுத்த இரண்டு மணி நேரங்கள் அவமானத்தின் வலியிலிருந்து புறப்பட்ட கோபத்தின் நெருப்பு  பரவிக் கொண்டிருந்தது... மூர்த்தி கழன்றுபோய்க் கிடந்தான். கண்ணன் சொன்ன எந்த வார்த்தையும் சமாதானப் படுத்தலின் பக்கம் கூட நெருங்கவில்லை.

திடுதிப்பென்று உள்ளே நுழைந்த காவல்துறையின் படை நிலைமையை விபரீதப் படுத்தத் துவங்கியது.

என்னடா...என்னடா இங்க கலாட்டா...என்று உதவி ஆணையர் போலத் தோன்றிய அதிகாரக் குரல் ஒன்று உச்சத்தில் ஒலித்தது.   மூர்த்தி தலையைத் தூக்கிப் பார்த்தான். குட்டையாயிருந்த ஒரு கருத்த மாணவன் உடைந்து போன அந்த பச்சை வாளிச் சோற்றை  எடுத்து வந்து அந்த அதிகாரக் குரலுக்குப் படையல் போலக் கொண்டு வைத்து இது என்னது சார்.....சொல்லுங்க....என்று இரைந்தான்.

அந்தக் கேள்வியில் தெறித்த உரிமையைப் பொறுக்க மாட்டாத அந்த அதிகாரி, அப்படியே அந்தக் கருத்தவனின் தலை முடியைக் கொத்தாகப் பற்றி, "நாய் யாராடா கேக்கறா என்னதுன்னு...ஓசிச் சோத்துக்கே இத்தனை முழக்கமா உனக்கு..வெக்கிற எடத்துல வைச்சிருக்கணுண்டா  பன்னிங்கள..அப்பன் பேரே தெரியாத வேத்தாளுக்குப் பொறந்தவனுங்களா.." என்று அறையப் போனான்.

நிறுத்து....நிறுத்து என்று வெறி பிடித்தவன் போல  எழுந்த குரல் மூர்த்தியுடையது.  "அடிக்கறதுன்னா எல்லாததையும் அடி. உடம்புல அடி....அம்மாவோட  கர்ப்பத்துல  அடிச்சே  செத்தீங்கடா  ஒவ்வொருத்தனும்...." என்று இரண்டு கைகளையும்  காற்றில் வீசிக் காட்டிப் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.  ஓங்கி வரும் பிரம்புகளோ, காத்திருக்கும் தாக்குதலோ எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அருகே அணைகட்டி நிற்க சூழ்ந்த மற்ற மாணவர்களும் தான்...

அம்மாவின்  மகனாகி விட்டிருந்தான்....

- எஸ் வி வேணுகோபாலன்

கருத்துகள்

5 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. எப்போ ஒரு நல்ல பதிவு போடுவிங்க....
    ரொம்ப நாளாச்சு... சோதிக்காதிங்க
    ப்பிஸ்.....

    பதிலளிநீக்கு
  2. //அம்மாவின் மகனாகி விட்டிருந்தான்...//

    இது ஒன்று போதும்... கதை சொல்ல...
    அருமையண்ணா...

    நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  3. "எப்போ ஒரு நல்ல பதிவு போடுவிங்க....
    ரொம்ப நாளாச்சு... சோதிக்காதிங்க
    ப்பிஸ்....."

    இதை நான் வழிமொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  4. இந்த அறிமுகத்துக்கு நன்றி மாது சார்

    பதிலளிநீக்கு
  5. நன்றி.....மாதவ்....
    சம காலத்து நடப்பு ஒன்றின் மீதான உடனடி எதிர் வினை இது.....
    ஆனாலும் உங்களது வலைப்பூ வாசகர்களை இது பாதிக்கவில்லை என்பது படைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது.

    நிகழ்வின் வீச்சு இன்னும் அழுத்தமான வெளிப்பாடுகளைக் கோருகிறது. என்னை இன்னும் அதிகமாகத் தகவமைத்துக் கொள்வேன்.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!