நிலாரசிகனின் ‘வெயில் தின்ற மழை’

 

veyil thindra mazhai

 

சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி நமது வலைப்பக்கப் பதிவர்களின் பலரது படைப்புகள் சிறுகதைகளாகவும், கவிதைகளாகவும் அச்சிலேறி வெளி வந்திருக்கின்றன. உற்சாகமான செய்தி இது. அந்நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்படி எழுத்துக்களை மொத்தமாய்த் தொகுத்துப் பார்க்கும் போது, எழுதியவர்களுக்கே அவைகள் புதிதாகவும், இதுவரை அறியாத தோற்றங்களும், அர்த்தங்களும் கொண்டதாக இருக்கும். வாசகனுக்கோ எழுத்துக்களைத் தாண்டி, படைத்தவனின் தொனி தென்படத் துலங்கும். இது ஒரு அற்புதமான விளைவு. குவளைகளில் எடுத்து உடல் நனைப்பதைவிட,  நீச்சலடித்துக் குளிப்பதில் இருக்கும் பரவசம் அறிய முடியும்.

 

நிலாரசிகனின் பதிவுகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன் என்றாலும், தொகுப்பாக இப்போது வேறொரு அனுபவமாக இருந்தது. மனநிலையும், புரிதலும் கூட வேறாகவேத் தெரிந்தது. காதல், நட்பு, பூக்கள், வானம், இரவு, அறை, தோட்டங்கள் எல்லாவற்றிலும் துயரத்தின் ரேகைகள் படிந்து கிடக்கின்றன. “நீயோ சலனமின்றி சன்னல் புழுதியில் என் பெயரை எழுதிக்கொண்டு இருக்கிறாய்” என்பதும் சிலிர்ப்பைத் தராமல் நம்முன் தெரிகின்றன. வானம் பார்த்து கதறும் இலைகள், ஈரம் படிந்த சாம்பல் மீது நடனமாடுபவள், வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள், சிறகிழந்த பட்டாம்பூச்சிகள், அறைகளை நிரப்பும் பறவையின் குருதி, வெளி நிரப்பும் உடைந்த ஓவியத்துகள்கள், தாலாட்ட யாருமற்று பீறீட்டு எழும் அழுகை, முள் தைத்த வலியுடன்  நொண்டிச் செல்லும் சிறுவன், தலை மீது எச்சமிட்டுப் போகும் பறவைகள், சடலமாக மாறிய விழிகள் என வலி மிகுந்த காட்சிகளும், அவைகளில் உறைந்திருக்கும் மௌனமும் நீள்கின்றன. வெறுமையில் சஞ்சரிக்க வைக்கிறது. இந்த வலியை யாரிடம் பகிர்ந்துகொள்ள என கவிஞன் தேடி மழையைக் காண்கிறான். அவனது வலிகள் மரமாகத் துளிர்விடக் கூடும் என நினைக்கிறான். வெயில் தின்ற மழை என்பது இங்கே பொருத்தமாகவே இருக்கிறது.

 

கவிதையை ஒரு சுவையான துணுக்காக, உண்மையைச் சட்டெனக் காட்டும் வெளிச்சமாக, உணர்வாக, தனித்த மொழியாக, படிமங்களில் விரியும் காட்சியாக, குரல்களின் எதிரொலியாக, நிகழ்வுகளின் தத்துவ தரிசனமாக ஒவ்வொருவரும் அவரவர்க்கென்ற வழியில் பார்ப்பதையும், கையாள்வதையும் அறிந்திருக்கலாம். நிலாரசிகனின் கவிதைகள் உணர்வுகளின் தளத்திலேயே பெரும்பாலும் இயங்குகின்றன. சேர்ந்திருக்கும் போது கிட்டும் சந்தோஷத்தை விட பிரிவு பன்மடங்கு துயரம் கொண்டதாயிருக்கிறது அவருக்கு. தனிமைகளில் உருமாறும் சித்திரங்களென நினைவுகள் அலைக்கழிக்கின்றன. ‘கனத்த மௌனத்தில் கரைந்தழுதபடி இரவுக்குள் நுழைகிறது இவ்வோவியம்’ என்பதும், ‘அறியப்படாத பூவொன்றின் வாசனையில் லயித்திருக்கும் உனக்கென் பிணத்தின் வாடை திடுக்கிடச் செய்யலாம் அல்லது கைதட்டவும் தோன்றலாம்’ என்பதும், “புரிந்துகொள்ள முடியாத மொழியில் இரு நிழல்களும் பேசுவதை ஊமையாய் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான்” என்பதும், “ உயிரில் படிகிறது நீங்குதலின் ரத்தக்கறை” என்பதும் இப்படித்தான் வாசகனுக்குள் தங்குகின்றன.

 

நிலாரசிகனால் முடிந்திருக்கும் மொழியின் அடர்த்தியை சொற்றொடர்கள் அங்கங்கு நமக்குத் தெரிவிக்கின்றன. ‘கடல் குடிக்கும் பறவைகள்’, ‘வெயில் தின்ற மழை’, ‘வார்த்தை வடிவ விழிகள்’, ‘கூழாங்கற்களின் கதறல்’,  ’உலகின் மிகப்பெரும் துளி’ என்பவைகளில் நின்று நிதானித்தே பயணிக்க முடிகிறது. அவ்வப்போது எழுதியவைகளைத் தொகுக்கும் போது, ஒரே தொனியும், லயமும் வாய்ப்பது முக்கியமானது. அது நிலாரசிகனின் கவிதைகளில் இருக்கிறது. ஒரேவித மனநிலையாகவும் மாறாமல் இருக்கிறது.

 

பொதுவாகவே கவிஞர்கள் பலரிடம் ஒரேவித வார்த்தைகள் நிறைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். நிலாரசிகனிடமும் அது இருக்கிறது. கனவு,  தனிமை, பிரியம், சிதறி, இரவு, உதிர்ந்த, நிறம், வண்ணத்துப் பூச்சி, சப்தம், நிசப்தம், மழை, பறவை, பூக்கள், அறை, காயம், மரணம், சுயம், மௌனம் போன்ற சொற்களும், குறிப்பிட்ட சொற்றொடர்களும் மாறி மாறி தொடர்ந்து வருகின்றன.


கவிதைத் தொகுப்பை படித்து முடித்த பிறகும்,  ‘கால்களையிழந்த கிழவனொருவன்’, ‘முதலில் அது நத்தையென்றே’, ‘சிறுவனின் மணல் வீட்டை’ , ‘சுயமிழப்பது’, ‘சப்தங்களால் மௌனம்’, ‘நீங்கள் இறந்து போவீர்கள்’  ‘இந்த வலியை யாரிடம்’ போன்ற கவிதைகள் நிழலாடுகின்றன. இந்த கவிதைத் தொகுப்பு அவருக்கும் ஒரு வெளிச்சமாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதிலிருந்து இன்னும் கவிதைகள் அற்புதமாகவும், வீரியமாகவும் வெளிவரும் என நம்பிக்கையிருக்கிறது. வெறுமைகளைத் தாண்டிய நம்பிக்கைகளைச் சொல்லும் இந்த வரி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.

’ஒரு இலையை இழுத்துக்கொண்டு
மரமேறிக்கொண்டு இருக்கிறது
கட்டெறும்பு’

 

நிலாரசிகனுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!

 

வெயில் தின்ற மழை
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ. 50/-

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. வெயில் தின்ற மழையை விமர்சனத்தால் அழகிய சாரலாய் தந்திருக்கிறீர்கள். விமர்சனம் தந்த உங்களுக்கும், கவிஞருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //இப்படி எழுத்துக்களை மொத்தமாய்த் தொகுத்துப் பார்க்கும் போது, எழுதியவர்களுக்கே அவைகள் புதிதாகவும், இதுவரை அறியாத தோற்றங்களும், அர்த்தங்களும் கொண்டதாக இருக்கும். வாசகனுக்கோ எழுத்துக்களைத் தாண்டி, படைத்தவனின் தொனி தென்படத் துலங்கும். இது ஒரு அற்புதமான விளைவு. குவளைகளில் எடுத்து உடல் நனைப்பதைவிட, நீச்சலடித்துக் குளிப்பதில் இருக்கும் பரவசம் அறிய முடியும்.//

    இந்த வரிகளை திரும்பத் திரும்ப வாசித்தேன். அற்புதம் மாது அண்ணா.

    நண்பர் நிலாரசிகனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!