அவரது வலைத்தளத்தில் சாருநிவேதிதா எழுதிய சிலவற்றைப் பார்த்து, ’இப்படியெல்லாமா ஒரு எழுத்தாளர் எழுதுவார்’ என்ற எரிச்சலில்தான்“எழுதுவதெல்லாம் எழுத்தல்ல” எனும் பதிவை எழுத நேர்ந்தது. ஒரு எழுத்தாளனைப் பற்றிக் கேள்விப்பட்ட முதல் செய்தியிலிருந்து, அவர் எப்படி எனக்குள் பதிந்து போய் இருக்கிறார் என்பதைத்தான் அதில் சொல்லி இருந்தேன். விலாவாரியாக அவரைப் பற்றியும், அவரது எழுத்துக்களைப் பற்றியும் எழுதுவது என் நோக்கமல்ல. அவரை வசை பாடுவதோ, அவரை இழிவுபடுத்துவதோ என் விருப்பமுமல்ல. ஒரு எழுத்தாளன் இப்படி இழிவாக எழுதுகிறாரே, இதில் என்ன அற்புதங்கள் இருக்க முடியும் என்றுதான் “எழுதுவது எல்லாம் எழுத்தல்ல” எனக் குறிப்பிட்டு இருந்தேன். அதுகுறித்து வந்திருக்கிற சில பின்னூட்டங்களுக்கும், நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்கள் “தோழர் மாதவராஜ் இவ்வளவு அபத்தமாகக்கூட எழுதுவாரா?” என்று விட்டிருந்த கூகிள் பஸ்ஸுக்கும் சில விளக்கங்கள் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். அளிப்பேன்.
இதற்கு இடையில் தீராத பக்கங்களில் “பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள்” எழுதி வருகிற நண்பர் ம.மணிமாறன் இவ்விஷயம் குறித்து அவரது பார்வையை எழுதி அனுப்பி இருந்தார். அதை முதலில் சொல்லத் தோன்றியது.
0
தன்னுடைய பங்கேற்பிற்கு இடமளிக்காத பிரதிகளை சாதாரணமாக புறந்தள்ளிப் போகிறான் வாசகன். வாசிப்பின் அரசியல், வாசக இடைவெளிகளால் நிரப்பப்பட்ட படைப்புலகம் எனும் தர்க்கங்கள் இப்போது படைப்பாளிக்கு கூடுதல் சவாலை முன்வைக்கிறது. இவைகளை எதிர்கொள்ளும் கருவியாக, புத்தக வெளியீட்டு விழாக்களும், புத்தகக் கண்காட்சிகளும் வாய்த்திருக்கின்றன ஒரு படைப்பாளிக்கு இப்போது. புத்தக வெளியீட்டு விழாக்களின் கதைகளையும், அதற்காக படைப்பாளிகளும், பதிப்பகங்களும் செய்கிற ஏற்பாடுகளும் அதீத புனைகதைகளின் தன்மையிலானவை. அவற்றையெல்லாம் பகடி செய்தும் படைப்புகள் உருவாக வேண்டும். மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுகிற பின்நவீனத்துவ கலாச்சாரச் செயல்பாடாகவும் தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவினை நடத்திப் பார்த்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் இங்கே. ஓடும் ரயிலில் புத்தகம் வெளியிடப்பட்டதும், ஆற்றுப்பாலம் நெருங்கியதும் அப்புத்தகங்களை ஆற்றுநீருக்குத் தாரை வார்த்து, பின் தாகசாந்தி செய்து விழாவினை நிறைவு செய்ததும் நடந்திருக்கிறது தமிழகத்தில்.
இவ்வழியே, சமீபத்தில் நடைபெற்று முடிந்திருக்கிற தன் புத்தக வெளியீட்டு விழாவில் நடைபெற்ற ஒரு விஷயத்தை, பெரும் விவாதமாக்கி, கணிணியின் வெண் திரைகளில் வசைச்சொற்களால் இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கிறார் சாரு நிவேதிதா. அவ்வெளியீட்டு விழாவின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு விவரணப்படத் துல்லியமாக சாருவின் வலைத்தளக் கடிதங்களிலும், விவாதங்களிலும் காண முடிகிறது.
தமிழகத்தின் மார்க்கி தே சேத், கேர்த்தி ஆர்கரான சாரு நிவேதிதாவிற்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு புத்தக வெளியீட்டு விழாவின் போதும் இதே காரியத்தை மிகச் சரியாக அரங்கேற்றியவர்தான் இப்பின்நவீனத்துவ பிரதியாளர். உயிர்மை வெளியீட்டு விழாவில் ஜெயமோகனின் புத்தகத்தைக் கிழித்து வீசுகிற கலாச்சாரப் புரட்சியைச் செய்தார். பிறகு என்ன? மூன்று மாத காலம் அவரும், இவரும் மாறி மாறி திட்ட, இருவரின் விசுவாசப் படையும் “உங்களுக்கெல்லாம் இது தேவையா? உங்களுடைய எழுத்துக்களுக்காக தவங்கிடக்கிற எங்கள மறந்துப்புட்டு இப்படி நேரத்த வேஸ்ட் செய்றியே தலைவா” எனக் கெஞ்சிய பிறகு தற்காலிகமாகச் சண்டை ஒத்தி வைக்கப்பட்டது. “போதும்டா சாமி, நிறுத்தித் தொலையுங்க ஒங்க சொந்தச் சண்டய” என்று அக்கறையுள்ள வாசகர்கள் சத்தம் போட்டிருந்தால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாருவின் ‘மிஷ்கின் அத்தியாயங்கள்’ ஒருவேளை நிகழாமல் இருந்திருக்கக் கூடும்.
‘தேகம்’ நாவல் வெளியீட்டு விழாவில், நாவலைப் பற்றியும், நாவலை எழுதியவரைப் பற்றியும் தனது கருத்தை பகிரங்கமாக பதிவு செய்திருந்தார் மிஷ்கின். “தேகம் நாவல், தமிழில் வந்திருக்கிற சரோஜாதேவி வகை எழுத்து என்றும், சாருவை சந்திக்க வேண்டும் என்றால், உயர் ரக மதுவை வாங்கி வைத்துக்கொண்டு கூப்பிட்டால் போதும்” என்பதாக மிஷ்கின் சொன்னதில், சாருவுக்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டது. இதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று மிஷ்கினின் அந்தரங்கங்களை, அவர் இவரோடு பேசிய விஷயங்களை, கமல்ஹாசன், இளையராஜா பற்றிய விவாதங்களையெல்லாம் பகிரங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். இப்போதும் சாருவின் குறுகிய நோக்கமே வெளிப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டுச் சச்சரவுக்குப் பிறகு ஜெயமோகனின் படைப்புகள் உயிர்மையில் வெளியிடப்படவில்லை. இனி கமல்ஹாசனையோ, இளையராஜாவையோ வைத்து சினிமாவை மிஷ்கினால் உருவாக்கிட முடியாது.
சாரு நிவேதிதா தமிழில் இளம் வாசகர்களாலும், தீவீர இலக்கிய அக்கறை கொண்டவர்களாலும் கொண்டாடப்படுகிற எழுத்துக் கலைஞன் என்னும் மாயப்பிம்பம் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவரோ, தன்னுடைய கட்டுரைகளில் எல்லாம், தமிழ்ச்சமூகத்திற்கு எழுத்தாளர்களைக் கொண்டாடத் தெரியாது என்றுதான் சொல்கிறார். அவர் கேரளத்தின் விருப்பத்திற்குரிய எழுத்தாளன் என்றும், லத்தீன் அமெரிக்காவில் அவர் பிறந்திருந்தால், அவருடைய புத்தகங்களின் விற்பனை லட்சத்தைத் தொட்டிருக்கும் என்றும் தன் புகழ் பாடுகிறார். இதில் அவருக்கே அயற்சி ஏற்படும்போது, அவர் வீட்டு நாய், அவர் எழுதுகிற பேனா, அவர் குடிக்கிற வாயில் நுழையாத மதுவகை, அவர் கண்ணாடி (அதிகம் இல்லை ஜெண்டில்மேன், நாற்பதாயிரம் ரூபாய்தான்!) என எழுதிக்கொண்டு இருப்பார். அவ்வப்போது வருகிற பாப்புலர் சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதுகிறேன் என, “உலக சினிமாவே என் உள்ளங்கையில் என்பதாக” தொடை தட்டிக்கொண்டு இருப்பார். அறுபதுகளில், நாஞ்சில் மனோகரன், வை.கோபால்சாமி போன்றவர்கள் அரசியல் கூட்டங்களில் நடுநடுவில் ஆங்கிலத்தில் பேசவும் கூட்டம் ஆரவாரிக்குமே... தமிழ்ச் சினிமாவில், கதாநாயகன் திடுமென ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினால் விசிலும், கைதட்டலுமாய் திரையரங்கம் ஆர்ப்பரிக்குமே... அந்த தந்திரத்தையே இலக்கிய உலகில் சாருநிவேதிதா பின்பற்றுவார்.
மிஷ்கின் அப்படியொரு விமர்சனத்தை அப்படி ஒரு நிகழ்வில், அப்படியொரு சபையில் வைத்திருக்க வேண்டுமா என்பது ஒரு கேள்வியாகவே இருந்தாலும், அவரது விமர்சனத்தில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை. இப்படியான முடிவிற்கு வருவதற்கு, சாருவின் எழுத்துக்களே உதவி செய்கின்றன. ’தேகம்’ நாவலைத்தவிர நான் அவருடைய எல்லாப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். அப்பிரதிகள் எங்கிலும், உடல் எனும் எந்திரம் குறித்தும், அது மனித மனங்களுக்குள் ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள் குறித்தும் பேசுவதற்கான வெளிகளும், சாத்தியங்களும் இருந்தபோதும் அவற்றை எப்படி தவற விட்டுவிட்டு மேம்போக்கான எழுத்துக்களாக சிறுமை கொண்டன என்பதை அவரது ஒவ்வொரு நாவலையும் வைத்து என்னால் பேசிட முடியும். வாசக மனதில் கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் பாலியல் பிரதிகளாக அவை முடிந்து போவதால்தான், அவற்றை சரோஜாதேவி வகை எழுத்துக்கள் என மிஷ்கின் சரியாகச் சொல்லி இருக்கிறார்.
இப்போது சரோஜாதேவி புத்தகங்களின் தேவையை செல்போன் மெமரி கார்டுகள் பார்த்துக்கொள்கின்றன. அந்த நாட்களில் வெளிவந்த சரோஜாதேவி புத்தகங்களின் வெளிப்பாட்டு மொழியும், உள்ளடக்கமும் எதுவாக இருக்கப் போகிறது என்பதை வாசகன் முன் உணர்ந்து கொண்டுதான் அவற்றை வாங்கினான். படித்தான். அப்பட்டங்களைத் தவிர அவைகளில் வேறு எந்தவிதமான வாசக தந்திரமும் இருக்கவில்லை. ஆனால் சாருநிவேதிதா தனது நாவல்களையும், புனைகதைகளையும், தமிழ்மொழிக்குத் தன்னால் வழங்கப்படும் கொடை என்பதாக வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அதுதான் சிக்கலே.
பொதுச்சபையில் தன்னை ’வுமனைசர்’ என்று பொருள்படும்படி எப்படி பேசலாம் என்று கோபப்படுகிற சாருநிவேதிதா, அவருடைய ‘ராஸலீலா’வையும், ‘காமரூபக்கதைகளையும்’ மட்டுமாவது திரும்ப ஒருமுறை படித்துப் பார்க்கட்டும். இப்பிரதிகளில் உலாவரும் கண்ணாயிரம் பெருமாளுக்கும், இளம் பெண்களுக்கும் இடையே நிகழும் கடிதங்களும், அலைபேசி உரையாடல்களும் தமிழ்ச்சமூகத்திற்கு கொடையெனத் தந்தது எதை? வாசக மனதில் ஏற்படுத்திய ஏற்படுத்திய உணர்வுகள் என்ன? ஆளுமைச் சிதைவுகளை ஏற்படுத்தும் சாத்தியம் கொண்டவையாகவே, ஒரு எளிய வாசகன் எனக்கு மதிப்பிட முடிகிறது.
ஒரு படைப்பின் கதாபாத்திர செயல்பாட்டிற்கு எப்படி படைப்பாளி பொறுப்பாக முடியும் என கேட்கலாம். இதற்கான பதிலையும் கூட சாரு நிவேதிதா தனது ஆனந்த விகடன் தொடரில் கூறுகிறாரே. உலகமொழிகளில் இப்போதெல்லாம் ’ஆட்டோ ஃபிக்ஷனல் ரைட்டிங்’தான் கொண்டாடப்படுகிறது என்றும், ‘ஆட்டோ ஃபிக்ஷன்’ என்றால் என்கிற விளக்கத்தையும் சாருநிவேதிதாவே தருகிறார். ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த அனுபவங்களின் மீது புனைவை ஏற்றி, புதுத்தன்மையிலான எழுத்தைப் படைப்பதே ‘ஆட்டோ ஃபிக்ஷன்’ என்கிறார். தமிழில் தன்னைத் தவிர அப்படி வேறு யாரும் தென்படவில்லை எனவும் ஆதங்கப்படுகிறார். தன் வரலாற்றுப் புனைவான தன் நாவல்கள் யாவும் இவரே உலவித் திரிகிறார் என்றால், சாரு நிவேதிதாவை, மிஷ்கினின் வார்த்தைகளால்தானே புரிந்துகொள்ள முடியும்?
இவர் போன்றவர்களை வகை தொகையில்லாமல் பாராட்டிட ஒரு கூட்டம் திட்டமிட்டு உருவாக்கப்படுவதையும், இவருடைய பின்னத்திகளாக வா.மு.கோ.மு போன்றோர் “சாந்தாமணியும் இன்னபிறக் காதல் கதைகளும்” எழுதிக்கொண்டு இருப்பதையும் சகித்துக்கொள்ள வேண்டியிருப்பதே, தமிழ் இலக்கிய உலகைப் பீடித்த சாபக்கேடு. சமகாலத்தில் வந்திருக்கிற தமிழின் முக்கிய நாவல்களைப் படித்துவிட்டு, சாரு நிவேதிதாவின் ஐந்து நாவல்களுக்கு தமிழ் இலக்கிய வெளியில் என்ன மரியாதை கொடுக்கலாம் என்பதை பேசத் துணிவோமே. இதற்கு உலக இலக்கியத்தை எல்லாம் இழுக்க வேண்டிய தேவையில்லை.
- ம. மணிமாறன்
நல்ல பதிவு(கள்) மாதவராஜ் அவர்களே, அனேகமாக பலர் மனதிலும் இருந்ததை சரியாகச் சொன்னீர்கள் என்றே நினைக்கிறேன். வெறும் காலிப் பாத்திரத்தின் உருட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. அவரை வேண்டுமென்றே புகழ்ந்து ஏற்றி விடுகிறார்களோ? 40000 ரூபாய் கண்ணாடி மற்றும் 1000 ரூபாய் பேனா ஆபாசம் (முன்பு ஜட்டி) சகிக்கவில்லை. வுமனைசர் என்று எழுதிவிட்டு பிறகு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்னவர் அவர்.
ReplyDeleteநித்தியைப் பார்த்துவிட்டு "சாமியார் தொழிலில்" ஆர்வம் ஏற்பட்டு அவருடைய மனைவி இவரைப் பார்த்து "15 வயதிலிருந்து நீ வணங்கி வரும் துர்கா தேவி நான்" என்று சொன்னதாக சொன்னவர். அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டுமே இலக்கியம் என்று எண்ணுபவர். பாராட்டினாலும் திட்டினாலும் அதை புகழ்வதாகவே எடுத்துக் கொள்பவர். மதிக்காத தமிழகத்தில் எதற்காக இவர் வாழ்கிறார்? அவர்களுக்காக ஏன் எழுதுகிறார்? இவரை ஒரு பெண்மணி அலட்சியம் செய்தததற்காக அவரை அசிங்கமாக திட்டுபவர், சென்ற புத்தக வெளியீட்டு விழாவின் முடிவில் நடந்த விருந்தின் போது இவரால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பதிவர் (பதிவின் பெயரை மறந்து விட்டேன்) எழுதியதை என்ன சொல்கிறார்?
மணிமாறன் அவர்களே! உங்கள் "பத்தாண்டுகால நாவல்......" தொடரை வாசித்துவிட்டு அவற்றில் நான் படிக்காத நாவல்களை தேடிக்கொண்டிருப்பவன் நான்.என் போன்றவர்களை சாரு போன்றவர்களைப் படிக்க வைக்காதீர்கள்.சனியனை ஒதுக்கித்தள்ளுங்கள. மாதவ்ஜி! உங்களுக்கும் தான்---காஸ்யபன்
ReplyDeleteஅவனுக்கு இதெல்லாம் குளு குளுன்னு தான் இருக்கும்! பேசாம சொற்சிலம்பத்துல எறங்குங்க!
ReplyDelete"நல்ல பதிவு(கள்) மாதவராஜ் அவர்களே, அனேகமாக பலர் மனதிலும் இருந்ததை சரியாகச் சொன்னீர்கள் என்றே நினைக்கிறேன். வெறும் காலிப் பாத்திரத்தின் உருட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. அவரை வேண்டுமென்றே புகழ்ந்து ஏற்றி விடுகிறார்களோ? 40000 ரூபாய் கண்ணாடி மற்றும் 1000 ரூபாய் பேனா ஆபாசம் (முன்பு ஜட்டி) சகிக்கவில்லை. வுமனைசர் என்று எழுதிவிட்டு பிறகு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்னவர் அவர்.
ReplyDeleteநித்தியைப் பார்த்துவிட்டு "சாமியார் தொழிலில்" ஆர்வம் ஏற்பட்டு அவருடைய மனைவி இவரைப் பார்த்து "15 வயதிலிருந்து நீ வணங்கி வரும் துர்கா தேவி நான்" என்று சொன்னதாக சொன்னவர். அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டுமே இலக்கியம் என்று எண்ணுபவர். பாராட்டினாலும் திட்டினாலும் அதை புகழ்வதாகவே எடுத்துக் கொள்பவர். மதிக்காத தமிழகத்தில் எதற்காக இவர் வாழ்கிறார்? அவர்களுக்காக ஏன் எழுதுகிறார்? இவரை ஒரு பெண்மணி அலட்சியம் செய்தததற்காக அவரை அசிங்கமாக திட்டுபவர், சென்ற புத்தக வெளியீட்டு விழாவின் முடிவில் நடந்த விருந்தின் போது இவரால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பதிவர் (பதிவின் பெயரை மறந்து விட்டேன்) எழுதியதை என்ன சொல்கிறார்?"
MM
ReplyDeleteOnly Charu's writings are more readable and friendly to the reader, than any of the present day writers.
ReplyDeleteMathavaraj, try to speak to a 16 year old in TN and try to understand them....!!!! Your writings are didactic and archaic, whether you accept or not....
Enjoy!!!
//தமிழ்ச் சினிமாவில், கதாநாயகன் திடுமென ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினால் விசிலும், கைதட்டலுமாய் திரையரங்கம் ஆர்ப்பரிக்குமே... அந்த தந்திரத்தையே இலக்கிய உலகில் சாருநிவேதிதா பின்பற்றுவார்.//
ReplyDeleteசாருவை பற்றிய என்னுடைய மதிப்பீடும் இதுவே!! இதோ இதற்கு ஒரு எடுத்துக்காட்டு:
http://charuonline.com/blog/?p=1200
அந்த கவிதை நன்றாகதான் உள்ளது..ஆனால், சாருவின் இந்த வார்த்தைகளை கவனியுங்கள்
//இது போன்ற கவிதைகளை நம் நூற்றாண்டில் பாப்லோ நெரூதா போன்ற ஒரு சிலரே எழுதியிருக்கின்றனர். உலக அளவிலேயே விரல் விட்டு எண்ணி விடலாம். //
இது தான் அவரின் அதிமேதாவித்தனம்!! படிக்கிறவனுக்கு ஏதாவது புரியுமா??