எங்கே தவற விட்டோம்?

balusir

ன்றோடு 2010 முடிகிறது’ என்பது முன்வந்து நிற்க வங்கிப்பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் 'balu sir calling...' என்று மொபைல் சொன்னது. பேரைப் பார்த்ததும் உற்சாகத்தோடு காதில் வைத்தேன். “தலைவா..!” என்று கொப்பளிக்கும் அந்த வழக்கமான உற்சாகம் இல்லை. “நான் பாலு பேசுறேன்...” என இற்றுப்போன குரல் கேட்டது. “என்ன சார்...” என்றேன். “தலைவா, நா சிவகாசியில மதி ஆஸ்பத்தியில அட்மிட் ஆகியிருக்கேன்.” என்று சொல்லி வைத்து விட்டார். பதறிப்போய், சிவகாசி அருகில் இருந்த திருத்தங்கல் கிளைக்கு போன் செய்து கணேசனிடம் விஷயத்தைச் சொல்லி, உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் விசாரித்து தகவல் தரச் சொன்னேன். காமராஜ், சங்கருக்கெல்லாம் தெரியப்படுத்தயபடி, பாதியில் நின்றிருந்த ஒரு வேலையை அவசரமாய் முடித்துக்கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரத்தில் கணேசன் போன் செய்தார். “அண்ணே, பேங்குக்கு பைக்ல போகும்போது தலைசுத்திட்டு வந்திருக்கு. உடனே பைக்க நிறுத்திட்டு, ஆட்டோவப் பிடிச்சு அவரே ஆஸ்பத்திரியில வந்து அட்மிட் ஆகியிருக்கார். வீட்டுக்கும் பேசியிருக்கார். வீட்டுக்காரம்மாவும், பையனும் இப்ப வந்துட்டாங்க. ஐ.சியில வைச்சிருக்காங்க.  பிரஷர் கொறைஞ்சிருக்கு. ஆனா வயிறு வலிக்குன்னு சொல்றாரு.” என்று வேகமாய்ச் சொன்னவர், கொஞ்சம் நிறுத்தி, “சொன்னா கேக்குறாரா, ரொம்பத் தண்ணிண்ணே” என்றார்.

சிவகாசிக்குக் கிளம்பினேன். மதியம் பனிரெண்டரை மணிக்குப் போல போய்ச் சேர்ந்தேன். அந்தக் கனத்த உடல் எம்பி எம்பி துடித்துக்கொண்டு இருந்தது. மூக்கு வாய், மணிக்கட்டு, வயிறு என பல இடங்களில் இருந்து டியூபு டியூபுகளாய் நீண்டிருந்தன. பாலு சாரின் கண்கள் கலங்கி பரிதாபமாய் இருந்தன. அவரது மனைவியும், ஒன்பதாம் வகுப்பு படிக்கிற மகனும் அவரைத் தடவிக்கொடுத்துக்கொண்டு கட்டிலின் அருகில் நின்றிருந்தனர். அந்தப் பக்கம் வந்த கவிஞர் திலகபாமா என்னைப் பார்த்ததும் வந்து விசாரித்தார். அவர்களது ஆஸ்பத்திரிதான். அவரது கணவர்தான் டாக்டர். அறிமுகப்படுத்தி வைத்தார். பாலு சாரைப் பற்றிக் கேட்டேன். “பிரஷர் இப்போது நார்மலா இருக்கு. கணையம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஓவர் டிரிங்க்ஸ். மதுரை வடமலையான் ஆஸ்பத்திரிக்கு ரெஃபர் செஞ்சிருக்கேன். சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள அங்க இருக்கணும். வயித்து வலிக்கு இஞ்செக்‌ஷன் போட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார். பாலு சாரின் தம்பி, மச்சினன் எல்லோரும் வந்திருந்தார்கள். வேனை அமர்த்தி மதுரைக்குப் புறப்பட்டோம். பாலு சார் வலியடங்கி படுத்திருந்தார்.

கண்கள் சுருங்க, குலுங்கி குலுங்கி சிரிக்கும் பாலு சார்தான் இப்படிக் கிடக்கிறார் என்னும் பிரக்ஞை உறுத்திக்கொண்டே இருந்தது. பார்த்ததும், “தலைவா” என பெருங்குரல் எழுப்பி, கைகளை விரித்து நிற்கிறவர் எப்படி ஒரே நாளில் குன்றிப் போய் விட்டார். தினம் தினம் பார்த்துப் பழகிய பாலுசார் நிற்பது, நடப்பது, உட்கார்ந்திருப்பது எல்லாம் ஒரு ஒழுங்கில்லாமல் வந்து போய்க்கொண்டு இருந்தன.

 

பாண்டியன் கிராம வங்கியில் அலுவலராக பாலுசார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தாலும். 2004ம் வருடத்திற்குப் பிறகுதான் அவரோடு நெருங்கிப் பழக முடிந்தது. காமராஜ், சங்கர், கணேசன் ஆகியோருடன் அதற்கு முன்பே பழக்கமிருந்தது என்றாலும் நான் பட்டும் படாமலேயே இருப்பேன். அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி ஊழியர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர். நான் பணிபுரிந்துகொண்டு இருந்த சங்கரலிங்கபுரம் கிளையில் மேலாளராக வந்து சேர்ந்தபிறகுதான் எனக்கு பாலுசார் ஆனார். மதியத்திற்கு மேல் அரசியல், இலக்கியம் என உரையாடல்களும், விவாதங்களுமாய் இருக்கும். அப்படியொரு சூதுவாது இல்லாத மனிதரை பார்ப்பதே அபூர்வமானது. அவரும் சாத்தூர்தான் என்பதால், காலையில் அவரது பைக்கில் கூடவேச் செல்வேன். நான் கேஷியராய் இருந்தால், கணக்கு முடித்த பிறகு பணத்தை எண்ணிப் பார்க்கவே மாட்டார். “என்ன வழக்கம் இது. எண்ணி உள்ளே வைக்கலாமே” என்றால் “விடுங்க தலைவா. மனுஷங்களைத் தெரியாதா” என அலட்சியமாகச் சொல்வார். நலச்சங்கத்தின் நடவடிக்கைகளை விட, தொழிற்சங்க நடவடிக்கைகளில் அதிகமாய் கலந்துகொள்ள ஆரம்பித்தார். எங்கு சென்றாலும் கூடவே வருவார். என்னைத் தேடி வரும் கட்சித்தோழர்களிடம் பிரியமாய்ப் பேசுவார்.

ஆரம்பத்திலிருந்தே என்னை தலைவா என்றுதான் அழைப்பார். சங்கடமாயிருக்கும். “சார், மாதுன்னே கூப்பிடலாமே” என்பேன். கண்டுகொள்ளவே மாட்டார். பிடிக்காத அந்த வார்த்தையும், அவரது பிரியத்தில் பிடித்துப் போனது. எங்கள் சங்கத்திலிருந்து முன்னணித் தோழர்கள் அகில இந்திய மாநாட்டுக்கு புத்தகயா சென்றபோது, அவரும் வந்தார். உற்சாகமான அந்த பயணத்தில் எல்லோருக்கும் நெருக்கமானார். எதோ ஒரு விஷயத்தில் அவர் பேசியது பிடிக்காமல் போக, எனக்கு கோபம் வந்தது. சட்டென்று தெறித்த முன்கோபத்தில், கடுமையான வார்த்தைகளோடு சத்தம் போட்டேன். சுற்றியிருந்தவர்கள் குறுக்கிட்டார்கள். அவர் அமைதியாகிப் போனார். கஷ்டமாயிருந்தது. கொஞ்ச நேரம் கழித்து, பாலுசாரே “இதுல என்ன இருக்கு. நம்ம மாதுதானே பேசினார்” என்றார். அவர் ‘மாது’ என அழைத்து கேட்டது அப்போதுதான். கலங்கிப் போனேன். அவர் முன்னால் ரொம்ப சாதாரணமாகி விட்டிருந்தேன். “ஸாரி..” என்றேன். “விடுங்க தலைவா” எனக் கட்டிப் பிடித்துக் கொண்டார். குரல் வெடிக்க சுதியோடு அவர் பாடிய பட்டுக்கோட்டையின் பாடல்கள் அந்த ரெயில் பயணத்திற்கு பின்னரும் எங்களோடு கூடவே வந்தது.

பக்கத்தில் ஒருஊர்ப் பஞ்சாயத்துக் கணக்கு எங்கள் கிளையில் இருந்தது. அதன் தலைவராக ஒரு தலித் இருந்தார். ஆனால் வரவு செலவு எல்லாம் பார்ப்பது அந்த பஞ்சாயத்து கிளர்க்குத்தான். அந்த கிளர்க் கிளைக்கு வந்து மேனேஜர் முன்னால் வந்து அமர்ந்து செக்குகளை கொடுக்கவும், பணம் போடவுமாக இருப்பான். பஞ்சாயத்துத் தலைவரோ வங்கிக்கிளைக்கு எதிரே வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருப்பார்.  பாலுசாருக்குத்தான் இந்த விவகாரம் முதலில் தெரிந்தது. “பஞ்சாயத்து ஆபிஸிலும் இப்படித்தானாம். பஞ்சாயத்துத் தலைவர் தரையிலத்தான் உக்காரணுமாம்” என்று ஆத்திரத்துடன் சொன்னார். அடுத்தநாள் அந்த கிளர்க் வந்தான். “உங்க தலைவரக் கூப்பிடுங்க” என்றார் பாலுசார். “எதுக்கு?’ என்றான் அந்த கிளர்க் அவர் முன்னால் உட்கார்ந்தபடியே. “கூப்பிடுங்களேன்” என்றார் “ஏ..” என்று விளிப்போடு ஒருமையில் அழைத்தான். செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அந்த வயதான மனிதர் உள்ளே நுழைந்தார். “பெரியவரே, செருப்பை போட்டுட்டு உள்ள வாங்க. இது ஒண்ணும் கோயில் இல்ல..” என்றார். அவர் தயங்கினார். “அட வாங்கன்னு சொல்றேன்ல..” என இவர் அதட்டவும், அவர் செருப்பணிந்து உள்ளே வந்தார். தன் முன்னால் இருந்த இன்னொரு நாற்காலியில் “உக்காருங்க” என கைகாட்டினார். அவர் நின்றுகொண்டே இருந்தார். “சும்மா உக்காருங்க. இது ஒண்ணும் ஒங்க பஞ்சாயத்து ஆபிஸ் இல்ல” என்றார். அவர் பயந்துகொண்டே, இருக்கையின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்தார். அந்த பஞ்சாயத்துக் கிளர்க் இறுகிப் போய் உட்கார்ந்திருந்தான். “அப்ரைசர், நம்ம டீக்கடையில ரெண்டு டீ கொண்டு வரச் சொல்லுங்க” என்றார். எனக்கு பாலுசாரைப் போய் அப்படியேக் கட்டிப் பிடித்துக்கொள்ளத் தோன்றியது.

அவரோடு ஒன்றாகப் பணி புரிந்த இரண்டு வருடத்தில் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள். எதையும் முகத்துக்கு நேரில் பேசுகிற அவருக்கு புறம் பேசுவது என்பது தெரியாத ஒன்றாகவே இருந்தது. சனிக்கிழமைகளில் “என்ன தலைவா, சாப்பிடுவோமா” என சிரிப்பார். “இல்ல சார்” என முதலில் மறுத்து வந்த நான், பின்னாட்களில் அவ்வப்போது  அவரோடு மதுவருந்தி இருக்கிறேன். இரண்டு அல்லது மூன்று சுற்றோடு நிறுத்த அவருக்கு மனம் வராது. “என்ன சார் இது..” என்றால் அடங்க மாட்டார். அடிக்கடியும் சாப்பிடுவார். எங்காவது கூட்டங்களில், முக்கியமான வேலைகளில்  நான் இருக்கும்போதும், “தலைவா ஃபிரியா?” என போன் செய்வார். எரிச்சலாய் இருக்கும் அந்த நேரங்களில். “சார், குறைத்துக்கொள்ளுங்கள். சனி, ஞாயிறுகளில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.” என்ற என் புத்திமதிகளை “சரி, தலைவா, சரி தலைவா” என்று கேட்டு மட்டும் கொள்வார்.

சங்கரலிங்கபுரத்திலிருந்து நான் மாற்றலாகிச் சென்ற பிறகும் சாத்தூரில் அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். காலையில் நான் என் மகனை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் போது எதிரே, “தலைவா” என்று கை காட்டி அவர் தன் மகளை பள்ளிக்கு பைக்கில் அழைத்துச் செல்வார். சனி அல்லது ஞாயிறு ஊரில் இருந்தால் அவரோடு ‘சாப்பிடவும்’ செய்வேன். தொழிற்சங்கக் கூட்டங்களில் மட்டுமில்லாமல் இலக்கியக் கூட்டங்களுக்கும் ஆர்வமாய் வருவார் என்னோடு. கூட்டங்களில் பேசுவதற்கு ஆர்வம் கொள்வார். ஒரு பட்டி மன்றத்தில் கூட காமராஜும் அவரும் எதிரெதிர் அணியில் பேசினார்கள். நல்ல குரலில், தெளிவாகப் பேசினார்.

வலைப்பக்கம் ஆரம்பித்து, இணையத்தில் நாட்கள் கடந்தபோது அவருடனான சந்திப்புகள் குறைய ஆரம்பித்தன. அவருக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டு, மிகவும் நெருக்கமாயிருந்த கணேசன் அண்ணனும் தண்ணி அடிப்பதை சுருக்கிக்கொள்ள, பாலுசார் தினமும் ‘சாப்பிட’ ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு நானும் அவரும் மட்டுமே இருந்த சந்தர்ப்பம் ஒன்றில் “சார், உங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வீடுன்னு ஒண்ணு இருக்கு.” என்றேன். “தலைவா... நீங்க எழுதுறீங்க.... படிக்கிறிங்க... எனக்கு வேற டைம் பாஸ் என்ன இருக்கு?” என்று குரல் தழுதழுத்துச் சொன்னார். ”சாயங்காலமானா எங்க வீட்டுக்கு வந்துருங்க. மாடியில யாருமில்ல. பேசிக்கிட்டு இருப்போம். நிறைய புத்தகங்கள் இருக்கு. படிக்கலாம்.” என்றேன். “ம்.. வரணும்” என்று நிறுத்தியவர், “ஒங்க கூட எனக்கு முன்னாலேயே பழக்கம் ஏற்பட்டு இருந்துச்சுன்னா நா எப்படியோ இருந்துருப்பேன். ஆமா, தலைவா, நானும் ஒங்கள மாதிரி ஒரு தலைவராயிருப்பேன். பெரிய பேச்சாளராயிருப்பேன். எல்லாம் எப்படி எப்படியோ மாறிப் போச்சு” என்று சொல்லும்போது அழத் துவங்கியிருந்தார். சங்கடமாயிருந்தது. நிறைய சமாதானங்கள் சொல்லி,  “ஒண்ணும் கெட்டுப் போகல... நாளைக்கு வீட்டுக்கு வாங்க..” சொல்லி வந்தேன்.

அடுத்தநாள் சொன்ன மாதிரி வீட்டுக்கு வந்தார். பேசிக்கொண்டு இருந்தோம். சில புத்தகங்களை எடுத்துச் சென்றார். காலையில் போன் செய்து ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிட்டதாகச் சொன்னார். சந்தோஷமாக இருந்தது. இரண்டு முறை இப்படி நிகழ்ந்தது. நான் வெளியூருக்குச் சென்ற ஒரு சந்தர்ப்பத்தில், அந்த வழக்கமும் விட்டுப் போனது. நானும் எனக்கான வேலைகளில் மூழ்கி இருந்தேன். கணேசன், “அண்ணா, இப்பல்லாம் பிராஞ்ச்ச விட்டு வீட்டுக்கு வரும்போதே பாலு குடிக்கிறார்” என்றார். நான், சங்கர், கணேசன் எல்லோரும் அவர் வீட்டுக்குச் சென்று பேசுவது என முடிவெடுத்தோம். அதுவும் தள்ளிப்போனது. பிறகு ஒருமுறை அவரை சந்தித்தபோது, “தலைவா எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணும். ஏற்பாடு செய்யுங்க. நானும் ஒங்கள மாதிரி பிளாக் ஆரம்பிக்கணும். எழுதணும். சொல்லித்தாங்க.” என்றார். “எப்போ வாங்கலாம்?” என்றேன். “2011 பிறந்ததும் festival advance போட்டு முதல் வேல அதுதான்” எனச் சொல்லி இருந்தார். இதோ நாளைக்கு 2011. இவர் இப்படி படுத்திருக்கிறார்.

ஏற்கனவே மதுரையில் உள்ள  சங்கத் தோழர்களுக்கு போன் செய்திருந்தேன். வடமலையான் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். ஆஸ்பத்திரியிலிருந்து வீல் சேர் கொண்டு வந்தார்கள். வேனிலிருந்து பாலுசார் அவரே இறங்க ஆரம்பித்தார். பதறினோம். “ஒண்ணும் இல்ல... தலைவா... எல்லம் சரியாய்ட்டு. இப்ப நல்லாயிருக்கேன்” என்றார். வீல்சேரில் உட்கார வைத்து டாக்டர் தாயுமானவரிடம் அழைத்துச் சென்றார்கள். டாக்டரிடம் பாலுசாரின் மனைவி தன் கணவரைப் பற்றிச் சொல்லி அழ ஆரம்பிக்க, “அம்மா, அழக்கூடாது. இதுக்கு முன்னாலக் கோபப்பட்டிருக்கணும். இதுக்கு அப்புறம் கூட கோபப்படுங்க. இப்ப அவர் பேஷண்ட். அமைதியாயிருங்க”  என்று பரிசோதித்தார். அட்மிட் செய்ய அனுமதித்துவிட்டு, “இன்றைக்கு அப்சர்வேஷனில் இருக்கட்டும். நாளைக்கு டெஸ்ட் செய்து ட்ரிட்மெண்ட் ஆரம்பிப்போம்” என்றார்.

தோழர்கள் எல்லோரும் அவரோடு இருந்தோம். பாலுசார் எங்களோடு சிரித்துப் பேச ஆரம்பித்தார். “சார், இரண்டு பேருக்கு மேல பேஷண்ட் ரூம்ல இருக்கக் கூடாது.” என்று ஆஸ்பத்திரியில் கறாராக சொல்ல ஆரம்பித்தார்கள். கூட இருப்பதாக அவரது மனைவியும், அவரது மகனும் சொன்னார்கள். அவரது மனைவியிடம், மதுரைத் தோழர்கள் போன் நமபர்களைக் கொடுத்து “எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்” எனச் சொல்லி, இரவு எட்டு மணிக்கு மேல் சாத்துருக்குப் புறப்பட்டோம்.  “தலைவா, நியு இயரைக் கொண்டாடுங்கள்.” என்றார் பாலுசார் கைகொடுத்தபடி. வழியெல்லாம் 2011க்கான பரபரப்புகளையும், கொண்டாட்டங்களையும் காண முடிந்தது.

 

தொலைக்காட்சியில் வினாடிகள் ஒட அரம்பித்து, பனிரெண்டு மணியானதும், குழந்தைகளும், மனைவியும்  “ஹேப்பி நியு இயர்” என உற்சாகமடைந்தனர். நானும் லேசாய் புன்னகைத்தேன். செல்போன் அழைக்க ஆரம்பித்தது. “balu sir calling.."  என்றிருந்தது. சாத்தூருக்குத் திரும்பி ஒன்றரை மணி நேரம்தான் ஆகியிருந்தது. மறுமுனையில் பாலுசாரின் மனைவி பேசினார்கள். “சார், அவங்களுக்கு திடீர்னு நாக்கு இழுத்துக்கிட்டு. உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க. எனக்கு பயமாயிருக்கு சார்..” என்றார்கள் நடுங்கியபடி. “ஒன்றும் ஆகாது... ஒன்றும் ஆகாது.. பயப்படாதீங்க.” என்று எனக்கும் சேர்த்துச் சொல்லி விட்டு, மதுரைத் தோழர்களுக்குப் போன் செய்தேன். “ஆமா, கேள்விப்பட்டோம். அங்கதான் போய்ட்டு இருக்கோம்” என்றனர். பத்து நிமிடங்கள் இருக்கும். திரும்பவும் ‘balu sir calling....'. எடுத்தேன். “சார், அவங்க இறந்துட்டாங்க..” என்று விம்மி அழும் சத்தம் கேட்டது. வெளியே பட்டாசுகள் வெடித்துக்கொண்டு இருந்தன. சில இளைஞர்கள் தெருவில் பைக்கில் பெரும் ஆர்ப்பரிப்போடு “ஹேப்பி நியூ இயர்” எனக் கத்திச் சென்றனர். நான் காமராஜ் வீட்டுக்கு விஷயத்தைச் சொல்லச் சென்றேன். தொண்டை அடைத்து நாக்கு வராமல் தவித்தேன். சட்டென உடைந்து “தோழா..  தோழா” எனச் சத்தம் போட்டேன். காமராஜ் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, “என்ன மாது” என்றான். “நம்ம பாலு சார் இறந்துட்டார்” என்றேன். “அய்யோ..” என்றான்.

மதுரைத் தோழர்கள் இரவு இரண்டு மணிக்கு போன் செய்தார்கள். “கிளம்பிட்டாங்க. நாலு மணிக்குப் போல பாடி சாத்தூருக்கு வந்துரும்...” என்றார்கள். “பாடி”.

நான், கணேசன், காமராஜ், பிரியா கார்த்தி நான்கு பேரும் அந்த இரவில் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். பாலுசாரை எந்த இடத்தில் தவறவிட்டோம்? 

நேற்று முழுவதும், பாலுசாரின் வீட்டிலிருந்தோம். சாயங்காலம் பூக்களை சிந்தியபடி முன்னால் சென்று கொண்டிருந்தார் கல்லறைக்கு. வெறுமையோடு, அலைக்கழிக்கிற நினைவுகளோடும் இரவு வந்தது. இன்று காலை பஜாருக்குச் சென்ற போது, பாலுசார் பைக்கில் வந்த வீதிகள், அவரோடு பேசிய டீக்கடை, அவரோடு நடந்து வந்த பஸ் ஸ்டாண்ட் என ஒவ்வொன்றாய் அவர் இல்லாத சாத்தூரில் எதிரே வந்துகொண்டு இருந்தன. 

கருத்துகள்

14 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பாலு சார் இயற்கை எய்தியமைக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

    நா. கணேசன்

    பதிலளிநீக்கு
  2. அவருக்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

    குடி குடியை கெடுக்கும்பாங்க. நிறைய நேரில் பார்ப்பதால் இன்னும் ரொம்ப வருத்தமாக இருக்குங்க.

    இத்தருணத்தில் உங்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்து சொல்ல சங்கடமாக இருக்கு. இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான எத்தனையோ மனிதர்களை அந்தச் 'சாப்பிடும் பழக்கம்' முன் தேதியிட்டுக் கணக்கு முடித்துக் கொண்டு போய்விடுவதை பாலு சார் மறைவு அருகில் இருந்து நினைவு படுத்துகிறது.

    நடுத்தர வர்க்க மனிதர்கள், இளமைக் காலத்தின் கனவுகளும், பிந்தையக் குடும்பப் பொறுப்புகளும் சந்திக்கும் முடிச்சில் மிகவும் திணறுகின்றனர். பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவும் இயலாமல், சொல்வதற்கான பதில்களுக்கான துணிச்சலும் இல்லாமல் அவர்கள் நிற்கிற அந்தக் கணத்தில், அவர்களது காலியான குவளைகளில் மதுவை ஊற்றுவது யார் என்று எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது....அறிவுரைகளால் மட்டுமே எந்த மனிதரது நிரம்பிய குவளையையும், வெற்றிடமான மனத்தின் அறையையும் பறித்து விட முடியாது.

    அன்பு மறுக்கப் பட்டவர்கள் மட்டுமல்ல, அன்பால் குளிப்பாட்டப் பட்டவர்களும் ஏன் மதுவின் தோழர்கள் ஆகின்றனர்...மருத்துவ உண்மைகளோ, அடுத்தவர்க்கு நேர்ந்த அதிர்ச்சி முடிவுகளோ, வீட்டில் இருப்போர் மிரட்டல்களோ எதுவும் பாலு சார் போன்றோரை மீட்க ஏன் உதவுவதில்லை என்பதற்கு, மாதவ் உங்களது உணர்ச்சிபூர்வமான அஞ்சலிக் கட்டுரையிலேயே நிறைய விடைகள் தட்டுப் படுகின்றன. சமூகவயமாதல் தொடங்கும் புள்ளியாக இன்றைய இளைய தலைமுறையும் தங்களது எல்லாக் கொண்டாட்டத்தின் ஆதார சுருதியாக மது அருந்துதலை அடையாளப் படுத்தும் சூழல் எங்கே தவறுகிறோம் என்பதை இன்னும் தீர்க்கமாக தொட்டுக் காட்டுகிறது. வேறென்ன சொல்ல....

    புத்தாண்டின் துவக்கத்தில் வலைப்பூவின் புதிய பதிவராகக் கிடைத்திருக்க வேண்டியவர் உங்கள் வலைப்பூவின் பதிவாக முடிந்துவிட்ட சோகம் விவரிக்க இயலாதது....நேற்று மாலை உங்களை அழைத்தபோது, இறுக்கமான குரலில் அப்புறம் அழைக்கிறேன் தோழர் என்று நீங்கள் சொன்ன மூன்று சொற்களின் பொருள் இத்தனை விபரீத நேரமானது என்று அறிந்து வேதனையுறுகிறேன்.

    பாலு சார் என்ற உன்னத மனிதரை, மனித நேயரை, பொறுமையோடு தனது இடறல்களின் பின்புலத்தில் இருந்து அடுத்தவர் கோபத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ளப் பக்குவம் கற்றிருந்த அசாத்திய தோழரை, தலித் பஞ்சாயத்துத் தலைவருக்கு சுயமரியாதையை நிலை நாட்டிய விடுதலை நெஞ்சரை....ஐயோ...இழந்துவிட்டோமே....

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  4. ஐயோ என்று வருகிறது மாது..

    பாலு சாருக்கு என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  5. Sir,
    Kindly convey my Hearty Condolences to Balu Sir's family members.
    Alcohol must be banned. If one addicts for Alcohol; for my knowledge they end their life before 50 years.
    Sorry Sir.

    பதிலளிநீக்கு
  6. காமராஜ் சார் கூறினார் ...மீண்டும் படிக்கும் போது கனம் ஜாஸ்தியாய் உள்ளது.போனவர்கள் போய்விடுகிறார்கள் ...இருப்பவர்களை இனி வாழ் நாள் முழுதும் புத்தாண்டே கொண்டாட இயலாதபடி செய்து விட்டு ...இதை படிப்பவர்களாவது இந்த புத்தாண்டில் இருந்து கொஞ்சம் மனம் மாறி குடியின் பிடியில் இருந்து வெளி வரட்டும் ....
    தன குடும்பம் பற்றி நினைக்கத் தவறி விட்டாரே பாலு தோழர் !
    இவர் ஒரு பாடம் தான் மாதவராஜ் சார்
    அவர் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
    RIP BALU SIR .

    பதிலளிநீக்கு
  7. இயற்கை எய்தியவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  8. அவருக்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

    ரொம்ப வருத்தமாக இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  9. நட்பை விவரிக்கும் போது மனம் கனத்து போகிறது. தங்களின் துக்கத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. குடி என்ப‌தை அறியாத‌ த‌ல‌முறையைக் க‌ண்ட‌ த‌மிழ‌கம், எழுப‌துக‌ளில், இழவெடுத்த‌ சில‌ரால்
    குடிமூழ்கிப் போன‌து. சூழ‌ல்க‌ள் ம‌ற்றும் ச‌முதாய‌ மாற்ற‌ஙகளில் மிக அதீத‌ சுய‌ க‌ட்டுப்பாடுக‌ள்
    குடும்ப‌ச்சூழ‌ல் கொண்ட‌வ‌ர்க‌ளால் ம‌ட்டுமே இந்த‌ குடியைத் தவிர்த்து அல்ல‌து கொஞ்ச‌ம் த‌ள‌ர்த்தி வாழ‌ முடிகிற‌து. அர‌சின் வ‌ருவாய்க்கான த‌வ‌றான வியாப‌ர‌ங்க‌ள் இப்ப‌டி எத்த‌னையே ம‌க்க‌ளின் க‌ண்களை கட்டி விள‌யாடி விட்டு ம‌யானங்க‌ளுக்குள் தள்ளிவிடுகின்ற‌ன‌.ஏதாயினும் செய்ய‌ வேண்டும் இத‌ற்கு. அன்னாரின் குடும்ப‌த்தின‌ருக்கு எனது ஆறுதல்க‌ளை தெரிவியுங்க‌ள் மாது.

    பதிலளிநீக்கு
  11. என்ன கிடைக்கிறது இந்தக் குடியில்.. இதற்கு மரியாதை வேறு .' சாப்பிடும்' என்றும் தண்ணி என்றும் . அநியாமாய் எத்தனை உயிர்கள். எத்தனை குடும்பங்கள் .

    பதிலளிநீக்கு
  12. நல்ல மனிதர் பழக்கத்திற்கு எளியவர் இனியவர் அவரின் மறைவு அவர் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல நமக்கும் கூட பேரிழப்பு தான்.

    பதிலளிநீக்கு
  13. எங்களோடு இந்த துயரத்திலும், இழப்பிலும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் வணக்கங்கள்.

    தோழர் வேணுவின் செய்தியில், கவனிக்கப்பட வேண்டியதும், உணர வேண்டியதும் நிறைய இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  14. counselling, de-addiction,friends guidance, family support, might have helped?

    So sad to loose someone dear to alochol.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!