பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 13

vadakke-muri-alima

நாவல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உலகெங்கும் தன் வரலாற்றையே நாவலாக்கிப் பார்த்தனர் எழுத்தாளர்கள். அதன் எல்லை தன் ஊர், தன் குடும்பம், தன் குலவழியின் பல்வேறு கிளைகள் என்ற அளவில்தான் பயணித்தது. எழுத்தாளர்களின் எழுத்துக்கான கச்சாப்பொருளை தன்னிலிருந்து உருவாக்கி அதனை அடுக்கி, அடுக்கி புனைவாக்கிடும் சக்கரவாட்டச் சுழற்சிக்கு உலகின் எந்த மொழியும் தப்பித்ததில்லை. மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.

இரண்டாயிரத்துக்குப் பிறகான காலத்தின் மிக முக்கியமான எழுத்துலகப் பிரதிநிதித்துவம் ஜாகிரினுடையது. அவருடைய நான்கு நாவல்களுமே இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி எனும் மூன்று இலக்கியப் பிரதிகளும் எளிய மொழியில் தனித்த தமிழ் இஸ்லாமிய வாழ்வினைப் பதிவு செய்திருந்தன. ஒரு வகையில் அவை யாவும் கூட தன் ஊரின், தனித்த மனிதர்களின் அகலாத ஞாபகங்கள்தான். வேறு எந்த இஸ்லாமிய நாவல்களும் காட்டியிராத அல்லது காட்டத் தயங்கியவற்றின் மீது தன் எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு பெரும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியவர் ஜாகிர். “அலிமா” முற்றிலும் வேறானதொரு படைப்பு. ஒரு நாவலுக்கான வெளிப்பாட்டு முறையை எழுத்தாளன்தான் முடிவு செய்கிறான் என்ற போதும் படைப்பு முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்ள எழுத்தாளன் எடுத்திடும் முயற்சியும் கூட நாவலுக்கான வடிவத்தை தீர்மானிக்கிறது.

அலிமாவின் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கவில்லை. தன் பால்யத் தோழனான கெபூருடனான கபுறுகளி ஆட்டத்தில் துவங்கி, முஸ்லியாருடன் உடன் போதல், மம்முதுடன் வெளியேறுதல், அக்கம்மாவான செய்யதலி பாத்திமாவுடனான நெருக்கம், எழுத்தாளர், நடிகை என வேறு வேறு அவதாரம் எடுத்தல் என்பது எல்லாப் பெண்களுக்கு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை ஒழுங்கிற்குள் சாத்தியமில்லை. அதுவும் வளமான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படியான வாழ்க்கை அமைந்திட வாய்ப்பே இல்லை. பள்ளிக்கு படிக்கப் போவது, குரான் ஓதிட மதரஸாவிற்குச் செல்வது, பிற ஆடவர் பார்வையில் படும்போது தலையில் முக்காடிட்டுக் கொள்வது, திருமண வயது நெருங்குவதற்கு முன்பாகவே நிக்காஹ் நடந்தேறுவது இவைதான் இஸ்லாமிய பெண்ணிற்கான வாழ்வியல் ஒழுக்கங்கள். இஸ்லாமிய பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை அலிமாவைக் கொண்டு கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். எனவேதான் வடக்கே முறி அலிமா நேர்கோட்டுத் தளத்திற்குள் இயக்கம் பெறவில்லை. மாறாக ஒரு பின் நவீனத்துவப் பிரதியாக வடிவம் பெற்றிருக்கிறது.

வடக்கே முறி அலிமா இஸ்லாமியத் தளத்திற்குள் இயங்குகிற போதும் கூட அவள் நடிகை, எழுத்தாளர் என பரிணாமம் கொள்கிற போது முற்றிலும் வேறு ஒரு பிரதியாக வடிவம் கொள்கிறது. அதிலும் குறிப்பாக அவளுடைய எழுத்து என்பது கழிவறைச் சுவர்களில் இருந்துதான் பிரதியெடுத்து புத்தகமாக்கப்பட்டது என்பது உச்சபட்ச பகடியாகும். எழுத்தாளப் பெருந்தகைகளைப் பகடித்து கேள்விக்கு உள்ளாக்கிடும் எழுத்தே கழுதைக்கு (பத்திரிகை) அலிமா அளித்த பேட்டி என்பதை வாசகன் அறிந்திடுவான்.

சாதாரணமானவர்களால் அசாத்தியமான பெரும் படைப்புகளை உருவாக்கிட முடியாது என வாசக மனங்களில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து இயல்பானதல்ல. அவற்றை கட்டமைத்ததில் தமிழ் இலக்கியத்திற்குள் காலம் தோறும் இயங்கி வருகிற சிறு பத்திரிகைகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. பேட்டியில் அலிமா சொல்கிறாள் “என் கழிப்பறை எழுத்திற்கு ஆதர்சம் காசிம்” உடனே பேட்டி எடுக்க வந்தவர் - “யார் அந்த காசிம்? புகழ்பெற்ற அரபு யாத்திரிகர் போல இருக்கிறதே” - வாசகனுக்கு மிக நன்றாகத் தெரியும். காசிம், அலிமாவின் வீட்டுச் சமையல்காரன். அவனுடைய கழிவறைக் குறிப்புகளாக உருப்பெற்ற விதவிதமான மனிதர்களின் குறிகள் எதன் குறியீடு என்பதையும் வாசகன் அறிந்திடும் வகையிலேயே நாவல் இயக்கம் பெற்றிருக்கிறது. ஆனாலும் கூட எழுத்தாளன் ஆதர்சம் பெறுவதற்கான ஆளுமையாக சமையல்காரனான காசிம் இருப்பதை நவீன இலக்கிய உலகம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.

அமைப்பியல் வாதம் விவாதத்திற்குள்ளான நாட்களில் “பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங்” எனும் எழுதுதல் முறை உலகெங்கும் விவாதத்திற்குள்ளானது. தமிழிலும் கூட தமிழவன் “சரித்திரத்தின் மீது படிந்த நிழல்கள்” எனும் தன்னுடைய முழு நாவலையும் பாலிம் ஸெஸ்ட் பிரதியாகத்தான் உருவாக்கியிருந்தார். பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங் என்றால் நடந்திருக்கும் நிகழ்வுகளின் மீது எழுத்தாளர் தன்னுடைய புனைவை எழுதுகிறபோது நிஜமும், புனைவும் கலங்கி வேறு ஒன்றாக வெளிப்படும் என்பதுதான். அப்படியான புனைவுப் பிரதிகள் பகடியாக வெளிப்படுவதை ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அப்படியான பெரும் பகடிகளின் தொகுப்பாகவும் நாவல் வெளிப்படுகிறது. வாசகனின் கவனத்திற்கென ஒன்றிரண்டை ஞாபகமூட்டுவது சரியாக இருக்கும் என்று படுகிறது.

பதிப்பகத்தினர் குறித்த பகடியென்றே நான் கோழிக்கோடனைக் கருதுகிறேன். ஆலப்புழை நகராட்சிக் கழிப்பறைச் சுவரினைக் கண்ணுற்ற பிறகு அவர் அலிமாவைப் பின் தொடர்கிறார். மொத்தம் 3800 கக்கூஸ்களில் அலிமாவால் எழுதப்பட்ட ‘என்டெ யாத்ரா’ நூலாக வரும் போது 300 பக்கமாக்கப்பட்டது. 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவளின் காகிதம் கக்கூஸ் சுவர்; அவளின் பேனா விறகுக்கரி. இதைத் தொகுத்தே கோழிக்கோடன் “என்டெ யாத்ரா” - வாக்கிட அதற்கு “முட்டைச் சிம்னி” விருதும் கிடைக்கிறது. விருதின் பெயர்களைப் பாருங்கள் “கட்டஞ்சாயா”, “ஏத்தன் பழம்” இப்படிப் பலப்பல. தமிழில் தான் விரும்புகிற எழுத்துக்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும், வரைமுறையும் கைக்கொள்ளப்படாமல், அளிக்கப்படுகிற விருதுகளின் மீதான பகடியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக “முட்டைச் சிம்னி” - விருது நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற “விளக்கு”- விருதினை வாசகனுக்கு ஞாபகமூட்டத்தான் செய்கிறது.

தவிர்க்கவியலாமல் யார் இந்த அலிமா என்று எனக்குள் நான் கேட்டுக் கொண்டேதானிருக்கிறேன். அலிமா ஒரு நடிகையாக இருப்பதால் அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், அதிலும் கற்பு, ஒழுக்கம் என கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிற்கு மட்டுமேயான பாலியல் ஒழுங்குகளை கேள்வி கேட்பவளாக இருப்ப தால் வைத்து அலிமாவை நடிகை குஷ்புவாக்கிப் பார்க்கலாமா? என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார்? கேரளத்தில் பிறந்து, நடிகையாகி, எழுத்தாளராகவும் இருக்கிற அருந்ததிராயின் சாயலை அலிமாவிற்குள் தேடித் தோற்றேன். அலிமா தன்னை கலாச்சாரப் போராளியாக காட்டிடவில்லையே. இப்படியே வாசகா நீயும் கூட உனக்குள் அலிமாவைத் தேடிக் கண்டடையாமல் தவிக்கப் போவது நிஜம்.

அலிமா கமலாதாஸா, குஷ்புவா, அருந்ததிராயா என்கிற யாதொரு குழப்பமும் இல்லாமல் வடக்கே முறி அலிமாவாக மட்டுமே வெளிப்படுகிற இடங்கள் இரண்டு. ஒன்று அவள் ஆடும் கபுறுகளி ஆட்டம். மற்றொன்று சினிமா நடிகையானதால் ஏற்பட்டுள்ள விழுப்புண்ணிற்கு களிம்பு தடவியபடி லாட்ஜ் அறைச் சிறுவனின் முகத்தில் தன்னுடைய கபுறுகளி ஆட்டத் தோழனான “கெபூரைத் தேடிடும் இடத்திலும்தான். அதிலும் கபுறுகளி ஆட்டம் இந்த நாவலின் உச்சம்.

எல்லா மதங்களும் மறுமை குறித்த பயத்தின் மூலமாகவே இம்மையை நிர்பந்திக்கின்றன. மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதாக நம்பப்படுகிற எல்லா நடவடிக்கைகளுக்குள்ளும் மைய இழையாக ஓடிக் கொண்டிருப்பது சொர்க்கம், நரகம் குறித்த கட்டமைப்புகளே. இம்மையில் நன்மை செய்ததாக நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை சாட்டையால் விளாசி அலிமா எழுப்பும் கேள்விகளும், அந்த கபர்ஸ்தான் காட்சிகளும் மிகுந்த செவ்வியல் தன்மையிலான பதிவாகும். “மய்யத்துகளின் அருகில் நின்று அலிமாவும், கபூரும் கேள்வி எழுப்புவார்கள். “கலிமா சொல்லுங்கோ”, தொழுதியளா? காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா?” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு?” . . . . ஹராமெனும் சொல் இஸ்லாமிய கலைச் சொற்களிலேயே மிகுந்த தனித்துவமான சொல். அது குறித்த தர்க்கத்தையே கபுறுகளி ஆட்டத்தின் போது அலிமா நிகழ்த்துகிறாள். இஸ்லாமியப் பெண்களுக்கு பொதுப்பள்ளி வாசலில் தொழுதிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை. இப்போது தான் பெண்களுக்குத் தனியான தொழுகையிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கபர்ஸ்தானுக்குப் போகிற மரண ஊர்வலத்தில் பங்கேற்றிட தமிழ்ச்சாதிகளில் இருப்பதைப் போலவே பெண்களுக்கு இஸ்லாத்திலும் இடம் இல்லை. ஆனால் நம்முடைய அலிமா கபுறு குழிகளையே கேள்வி கேட்கிறாள். இறுகிய மத அடிப்படை வாதத்தின் மீது கேள்வி எழுப்புகிற வல்லமை கொண்ட எழுத்தாளனே ஜாகிர் என்பதற்கான பல சாட்சியங்களை வாசகன் கண்டடைவதற்கான சாத்தியம் கொண்டதாகவே வடக்கே முறி அலிமாவை மதிப்பிடத் தோன்றுகிறது.

மனப்பிறழ்வு குறித்த தர்க்கங்களும், ஏர்வாடி மனப்பிறழ்வாளர்களின் வாழ்விடம் குறித்த காட்சித் சித்திரங்களும் “வதை முகாமிலிருந்து கேட்கும் குரல்” என்ற பகுதியிலும், அலிமாவின் பேட்டியிலும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் கோபி கிருஷ்ணன் “உள்ளேயிருந்து சில குரல்கள்” - எனும் மனப்பிறழ்வின் துயரத்தை நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த எழுத்துப் பிரதியாகும். அலிமாவிற்குள்ளும் ஆழமும், அழுத்தமுமாக தர்க்கித்து மனப்பிறழ்வு களின் நுட்பங்கள் பதிவு பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக செய்யதலி பாத்திமா எனும் அக்கம்மாவிற்கு அலிமா எழுதும் கடிதம் கவித்துவ உச்சமாகும்.

சாதாரணர்களின் உலகில் அசாதாரணமானவளான அலிமா மனப்பிறழ்விற்கு உள்ளானவளாகத்தான் தென்படுவாள். எழுத்தாளச் சித்தப்பன் எழுதியபடியே நகர்கிறது. அலிமாவின் வாழ்க்கை என்கிற புனைவு வசீகரமான சோகமாக வாசக மனதினில் படிகிறது. எல்லாம் முடிந்தபிறகும் கூட கபூருடன் பட்டாம் பூச்சிகளை கபர்ஸ்தானில் துரத்தியலைகிற அலிமாவைக் கலைக்கிற பள்ளி வாசலின் வாங்குச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!